Published:Updated:

`ஜாதகத்தில் செல்வ கேந்திரங்கள்!'

செல்வ யோகம்!
பிரீமியம் ஸ்டோரி
செல்வ யோகம்!

ஜோதிடர் முருகேசன்

`ஜாதகத்தில் செல்வ கேந்திரங்கள்!'

ஜோதிடர் முருகேசன்

Published:Updated:
செல்வ யோகம்!
பிரீமியம் ஸ்டோரி
செல்வ யோகம்!

ஜன்ம ஜாதகத்தில் ஒவ்வொரு இடத்துக்கும் குறிப்பிட்ட பண்பும் பொறுப்பும் உண்டு என்கிறது ஜோதிடம். உதாரணமாக 7-ம் இடம் களத்திர ஸ்தானம் என்றால், பத்தாம் இடம் கர்ம ஸ்தானம்; 11-ம் இடம் லாப ஸ்தானம்; 12-ம் இடம் விரயத்தைக் குறிக்கும். இப்படி ஒவ்வொரு ஸ்தானமும் ஜாதகத்தில் முக்கியத்துவம் பெறும். அதேபோல் முக்கிய கேந்திரங்கள் குறித்தும் ஜோதிடம் விவரிக்கும்.

`ஜாதகத்தில் செல்வ கேந்திரங்கள்!'

ஜாதகத்தில் 1, 4, 7, 10 ஆகிய இடங்கள் முதன்மைக் கேந்திரங்கள். இவற்றுக்கு அடுத்தபடியாக 2, 5, 8, 11 எனும் செல்வ கேந்திரங் களைக் குறிப்பிடுவார்கள். இந்த இடங்கள்தான் ஜாதகரின் பண வரவுகளைப் பற்றி விவரிக்கும். இந்த இடங்களின் சிறப்புகளைத் தெரிந்து கொள்வோமா?

இரண்டாம் இடம்: இந்த இடத்தை `தனஸ்தானம்’ என்பார்கள். தனம், குடும்பம், வாக்கு எனும் மூன்று விஷயங்களைக் குறிப்பிடுவது லக்னத்துக்கு 2-ம் இடம். செல்வ நிலையைப் பற்றியும் 2-ம் இடம் மூலம் அறியலாம்.

ஒருவரின் வாழ்க்கை செல்வச் செழிப்புடன் அமையுமா அல்லது வறுமையில் கஷ்டப்பட நேரிடுமா என்பதை இந்த இடத்தைக் கொண்டே அறியலாம். மேலும், ஒருவருக்கு சுயதொழில் மூலம் செல்வச் சேர்க்கை ஏற்படுமா அல்லது உத்தியோகத்தின் மூலம் செல்வச் சேர்க்கை ஏற்படுமா என்பது பற்றியும் இந்த இடத்தைக் கொண்டு அறியலாம். அதேபோல் வாழ்க்கைத் துணைவர் வழியில் செல்வயோகம் உண்டா, அதிர்ஷ்ட வாய்ப்புகள் எப்படி என்பது குறித்தும் 2-ம் இடம் விவரிக்கும்.

இந்த இடத்தில் சுபகிரகங்களான சந்திரன், குரு, புதன், சுக்கிரன் இருந்தால், குடும்பத்தில் சந்தோஷத்துக்கும் செல்வகடாட்சத்துக்கும் குறை இருக்காது. இந்தக் கிரகங்கள் ஆட்சி, உச்சம், நட்பு, சமம் என்ற நிலையில் இருந்தால் அதிக நன்மைகள் உண்டாகும்.

ஐந்தாம் இடம்: இதை `பூர்வபுண்ணிய ஸ்தானம்’ எனச் சிறப்பிப் பார்கள். தாய்மாமன், மாமன்மார் உறவு, தந்தைவழி உறவுகள், குழந்தைச் செல்வம், பூர்வபுண்ணியம், சென்ற பிறவியில் பெற்ற நன்மை- தீமைகள் ஆகியவற்றைப் பற்றித் தெரிவிக்கும் இடம் இது.

மேலும் உயர்கல்வி பாக்கியம், மொழியில் மேன்மை, பேச்சாற்றல், தாத்தாவின் நிலை ஆகியவற்றுக்குக் காரகத்துவம் வகிப்பதும் இந்த 5-ம் இடம்தான். குருபகவானின் நிலையையும் 5-ம் இடத்தையும் அறிந்து, குழந்தைச் செல்வம் குறித்த விவரத்தை அறியலாம். பூர்வ புண்ணியஸ்தானத்தில் குரு அமைந்திருப்பது மிகவும் சிறப்பானது. இந்த இடத்தில் சுக்கிரன் நல்லமுறையில் அமைந்திருந்தால், பூர்வீகச் சொத்துக்களைப் பெற்றிருப்பதுடன் தேவைக்கேற்ப பணம் கிடைத்துக்கொண்டே இருக்கும்.

புதனையும் 5-ம் இடத்தையும் அறிந்து ஜாதகரின் கல்வி வாய்ப்பு குறித்து அறியமுடியும். பங்கு வர்த்தகம் மூலம் வருமானம் ஈட்ட முடியுமா என்பதையும் இந்த ஐந்தாம் இடம் மூலம் அறிய முடியும். 5-ம் இடத்தில் சந்திரன் இருப்பின் நல்ல கல்வி, பரம்பரைச் சொத்து, சுய சம்பாத்தியம், கலைகளை நேசிப்பதிலும் கற்பதிலும் ஆர்வம், அரசியலில் ஈடுபட்டு அமைச்சராகும் யோகம், உயர்பதவிகளைத் திறம்பட நிர்வகிக்கும் ஆற்றல் போன்ற பலன்கள் ஏற்படும்.

8-ம் இடம்: இது `ஆயுள்ஸ்தானம்’ ஆகும். ஒருவரின் ஆயுள் விவரத்தைத் தெரிவிப்பது. கருத்து மோதல்கள், அஞ்ஞாதவாசம், அதிகமாக ஏற்படும் வீண் செலவுகள் குறித்தும் அறியலாம். இந்த இடத்தில் சூரியன் இருந்தால் எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்பு உண்டாகும். புதன் பலத்துடன் இருந்தால், செல்வமும் புகழும் உண்டாகும். குரு வல்லமையுடன் இருந்தாலும் நன்மையே. சுக்கிரன் அமைந்திருந்தால் செல்வம், செல்வாக்குடன் அதிகாரத்தையும் பெற்றுத் தருவார். சனி பகவான் அமர்ந்திருந்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும். மற்ற கிரகங்களின் நிலையையும் கணித்துப் பலனறிய வேண்டும்.

11-ம் இடம்: இது லாப ஸ்தானம் ஆகும். இந்த இடத்தில் உள்ள கிரகங்களின் தசா புக்திகளில், ஒருவருக்குத் தொழில் மூலம் வரும் லாபம், மறைமுக வருமானம், ஒன்றுக்கும் மேற்பட்ட இனங்களில் வருமானம், இன்ஷூரன்ஸ் மூலம் வருமானம், ஓய்வூதிய வருமானம் ஆகியவற்றை அறியலாம். மேலும் 11-ம் இடத்தைக் கொண்டு மூத்த சகோதரர்கள், சேவை செய்யும் வாய்ப்பு, செய்தொழிலில் கிடைக்கும் லாபம் குறித்தும் தெரிந்துகொள்ள முடியும்.

வியாபாரம் யோகம் தருமா?

புதனுக்கு மிதுனமும் கன்னியும் பலம் மிகுந்த வீடுகளாகும். இந்த ராசிகளில் ஏதேனும் ஒன்றில் புதன் இருக்க, புதனுக்குச் சுபக்கிரகச் சேர்க்கையோ பார்வையோ ஏற்படும்போது, ஜாதகருக்கு வியாபார நுணுக்கங்கள் தெரியவரும். அதன்மூலம் வியாபாரத்தில் கொடிகட்டிப் பறப்பார். லாபமும் பன்மடங்கு உயரும்.

தொழில் ஸ்தானம் என்பது 10-ம் இடம் ஆகும். லக்னத்துக்கோ, சந்திர ராசிக்கோ, சூரிய ராசிக்கோ 10-ல் புதன் இருந்தால், மனத்தில் வியாபார சிந்தனை உருவாகும். 10-ல் புதன் வலுப்பெற்றிருந்தால், வியாபாரம் பிடித்த தொழிலாக அமையும். அதன் மூலம் அதிக லாபமும் பெறமுடியும்.