Published:Updated:

கத்தரிவெயில் காலகட்டத்தில் திருமணம் செய்யலாமா... அக்னி நட்சத்திரம் குறித்து ஜோதிடம் சொல்வது என்ன?  

Representational Image
Representational Image

அக்னி நட்சத்திரம் என்றால் என்ன என்பது குறித்தும் அந்த நாள்களில் நாம் செய்ய வேண்டியவை செய்யக் கூடாதவை என்னென்ன என்பது குறித்தும் `விஞ்ஞான ஜோதிடர்' ஆம்பூர் வேல்முருகனிடம் கேட்டோம்.

சித்திரை முதல் இளவேனில் காலம் தொடங்குவதாக இலக்கண நூல்கள் தெரிவிக்கின்றன. பெயரில் இளவேனில் என்று கொண்டிருந்தாலும் அடிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் அக்னி நட்சத்திரம் என்னும் கத்தரி வெயில் தொடங்கிவிட்டால் அவ்வளவுதான். வெப்பமும் வியர்வையும் பெருகிவழியும். குறிப்பாக வெயில்காலத்தில் எந்த நாள்களில் வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும் என்பதை நம் முன்னோர்கள் வானியல் அறிவினால் கணக்கிட்டு அந்த நாள்களைக் குறித்துக் கொடுத்திருக்கிறார்கள். மேலும் இந்த நாள்களில் என்னென்ன காரியங்கள் செய்யலாம், எவை எவை செய்யக் கூடாது என்பன குறித்தும் நமக்கு விளக்கியிருக்கிறார்கள்.

கன்னியாகுமரி சூரிய உதயம்
கன்னியாகுமரி சூரிய உதயம்

அக்னி நட்சத்திரம் தோன்றியது குறித்துப் புராணம் சொல்லும் காரணம் மகாபாரதத்தில் உள்ளது. ஒருமுறை அக்னிதேவன் யாகத்தில் இடப்பட்ட நெய் அதிகமாக உண்டுவிட்ட காரணத்தால் அதனால் உண்டான கொழுப்பை அழிக்கப் பெருங்காடு ஒன்றை எரித்துச் சாம்பலாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் காண்டவ வனத்தை அக்னிபகவான் அழிக்க முயல வருணபகவான் பெருமழையைப் பொழிந்து தீ பரவாது தடுத்தார். இதனால் செய்வதறியாத அக்னிதேவன் கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனனைச் சரணடைந்தார். மாறுவேடம் பூண்டு, `தனக்குப் பசி என்றும் அதைத் தீர்க்க வேண்டும்’ என்றும் கேட்க, வந்திருப்பவர் அக்னி தேவனே என்பதை அறிந்த கிருஷ்ணர், ``நீ விரும்புவதைத் தருகிறோம்” என்றார். அக்னிதேவர் தன் சுயரூபம் கொண்டு காண்டவ வனத்தைத் தனக்கு இரையாகத் தருமாறு வேண்டினார். உடனே அர்ஜுனன் தன் அம்புகளை மழைபோல் பொழியச் செய்து வனத்துக்கு மேல் ஒரு கூரை ஒன்றை உருவாக்கினார்.

இதனால் மழைத்தண்ணீர் கீழே இறங்க முடியாத நிலை ஏற்பட்டது. உடனே அக்னி அந்தக் காட்டை முழுமையாக உண்டு முடித்தான். அக்னி காட்டை உண்ட அந்த நாள்களே அக்னி நட்சத்திர தினங்கள் என்று சொல்வதுண்டு. இது குறியீட்டளவில் அக்னி நட்சத்திரம் அதிக வெப்பமான தினங்கள் என்பதைக் குறிப்பதாகவே கொள்ள வேண்டும்.

அக்னி நட்சத்திரம் என்றால் என்ன என்பது குறித்தும் அந்த நாள்களில் நாம் செய்ய வேண்டியவை செய்யக் கூடாதவை என்னென்ன என்பது குறித்தும் விஞ்ஞான ஜோதிடர் ஆம்பூர் வேல்முருகனிடம் கேட்டோம்.

சூரியன்
சூரியன்

``தமிழர்களின் புத்தாண்டு சூரியனை அடிப்படையாகக் கொண்டது. சூரியபகவான் மேஷ ராசியில் சஞ்சரிக்கும் மாதமே புத்தாண்டின் தொடக்கம். அதனால்தான் சித்திரை நட்சத்திரத்துக்கு மேஷ மாதம் என்றுகூடப் பெயர். மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். நவகிரகங்களில் செவ்வாய் பஞ்ச பூதங்களில் ஒன்றான அக்னியின் தன்மையைப் பெற்றது. சூரிய பகவானும் நெருப்பு வடிவானவர் என்பதால் அவர் மேஷ ராசியில் சஞ்சரிக்கும்போது உச்சம் பெறுகிறார். உச்சம் என்றால் பலம் கூடி இருத்தல் என்று பொருள். சூரியனின் பலம் கூடி வெப்பம் அதிகமாக வெளிப்படும் காலமாக இந்த மாதம் அமைகிறது. அதிலும் பரணி நட்சத்திரத்திலும் கிருத்திகை நட்சத்திரத்திலும் ரோகிணி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதம்வரையிலும் சூரிய பகவான் சஞ்சரிக்கும் காலமே அக்னி நட்சத்திர காலமாகும். இதில் பரணி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலத்தை முன் கத்தரி என்றும் ரோகிணி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதம்வரை சஞ்சரிக்கும் காலத்தைப் பின்கத்தரி என்றும் சொல்கிறோம். நடுவில் இருக்கும் கிருத்திகை நட்சத்திர காலமே கத்தரி வெயிலின் மிக அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தும் நாள்களாகும். இந்த ஆண்டு மே 4-ம் தேதி தொடங்கி மே 28-ம் தேதிவரை அக்னி நட்சத்திர தினங்களாகும். இது குறித்துப் பார்ப்போம்.

கத்தரி தீவிரமடையும் நாள்கள்

மே  4 முதல் 10 தேதி வரை சூரியபகவான் பரணி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். அதன்பின் 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை கிருத்திகை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். பிறகு அக்னி நட்சத்திரத்தின் இறுதிப் பகுதியான ரோகிணி நட்சத்திரத்தில் 25 -28 தேதி வரை சஞ்சரிக்கிறார். இதில் இடைப்பட்ட மே 11 முதல் 24 -ம் தேதிவரை கத்தரி வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். காரணம் கிருத்திகை நட்சத்திரம் என்பது சூரியனின் சொந்த நட்சத்திரம். யாரும் சொந்த வீட்டில் இருக்கும்போது அதிக பலத்தோடு விளங்குவது இயல்பு.

இந்த நாள்களில் வழக்கத்தைவிட வெப்பம் அதிகமாக இருக்கும். வெப்பம் அதிகரிக்கும்போது இயல்பாகவே மனித சக்தி அதிகமாகச் செலவாகும். எனவே, உடல் உழைப்பை அதிகம் கோரும் சில செயல்களை நம் முன்னோர்கள் இந்த நாள்களில் செய்வதைத் தடை செய்தனர். குறிப்பாகக் கிணறு வெட்டுதல், பூமிபூஜை செய்வது, கட்டுமானப் பணிகளில் ஈடுபடுவது, விதை விதைப்பது, மரம் வெட்டுவது, குழந்தைகளுக்குக் காதுகுத்தி மொட்டை போடுவது ஆகியனவற்றைக் கட்டாயம் செய்யக் கூடாது என்று வகுத்துள்ளனர். இவற்றுக்கான ஜோதிட ரீதியிலான காரணங்கள் பல இருந்தாலும் யதார்த்தமான காரணங்களையும் நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

கத்தரி வெயில் காலத்தில் திருமணம் செய்யலாமா?

கத்தரி வெயில்காலம் என்பது அசுப காலம் அல்ல. இந்த நாள்களில் சில சுபகாரியங்களைத் தாராளமாகச் செய்யலாம். வீடு கட்ட உகந்ததல்லவே தவிர ஏற்கெனவே கட்டி முடித்துத் தயாராக உள்ள வீட்டில் குடியேறத் தடையேதுமில்லை. வாடகை வீட்டை மாற்றவும் புதிய வீட்டுக்குக் குடிபோகவும் இந்த நாள்கள் உகந்தவையே. மேலும், உபநயனம், பெண்பார்த்தல், நிச்சயதார்த்தம், சீமந்தம் ஆகிய சுப காரியங்களையும் செய்யலாம். குறிப்பாகத் திருமணம் செய்யலாமா என்று கேட்டால் கட்டாயம் இந்த நாள்களில் திருமணம் செய்யலாம். இந்த மாதத்தில் வரும் 7 முகூர்த்த நாள்களும் அக்னி நட்சத்திர காலகட்டத்தில்தான் வருகின்றன. எனவே, இந்த நாள்களில் கட்டாயம் திருமணம் செய்யலாம். அதனால் தோஷங்கள் இல்லை. மேலும், தோஷங்கள் தீர்க்கும் ஹோமங்கள் செய்யவும் இந்த நாள்கள் மிகவும் உகந்தவை.

கட்டாயம் செய்ய வேண்டியவை

அக்னி நட்சத்திர காலகட்டம் என்பது தானம் செய்ய வேண்டிய காலம். குறிப்பாக வறியவர்களுக்கு, உணவு, நீர், உடை ஆகியனவற்றைக் கட்டாயம் தானம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் தானம், மிகுந்த புண்ணிய பலனை ஏற்படுத்தும். குறிப்பாக இன்று நாடு இருக்கும் நிலைமையில் நாம் நம்மாலான உதவியை மற்றவர்களுக்குச் செய்ய வேண்டியது மிகவும் அவசியம். அவ்வாறு செய்வதன் மூலம் நமக்குப் புண்ணிய பலம் கிடைக்கும் என்பதோடு மனநிறைவும் உண்டாகும்.

ஜோதிடர் ஆம்பூர் வேல்முருகன்
ஜோதிடர் ஆம்பூர் வேல்முருகன்

இந்தக் காலகட்டத்தில் நாம் சிவபெருமான், சூரியபகவான், அக்னி பகவான் ஆகியோரை வழிபடுவதோடு அவரவர்கள் வாழும் எல்லையிலிருக்கும் மாரியம்மன் முதலிய பெண் தெய்வங்களையும் வழிபடுவது நல்லது. ஆலயங்கள் மூடியிருந்தாலும் நாம் இருக்கும் இடத்திலிருந்து மனதார வேண்டிக்கொள்ள தெய்வங்களின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும்” என்றார் ஜோதிடர் வேல்முருகன்.

அடுத்த கட்டுரைக்கு