Published:Updated:

12 ராசிக்காரர்கள் இந்த விஜயதசமியில் தொடங்க உகந்த தொழில்கள்... பரிகாரங்கள்!

விஜயதசமி நாளில் ஏடு எடுத்து குழந்தைகளுக்குக் கல்வி தொடங்குதல், புது தொழில் தொடங்குதல் ஆகியவற்றுக்கு உகந்த நாளாகக் கருதப்படுகிறது. இந்த வருடம் விஜயதசமியில் எந்தெந்த ராசிக்காரர்கள், எந்தெந்த தொழிலைத் தொடங்கலாம் என்று கணித்துக் கூறியிருக்கிறார் பைரவ குருஜி ஜி.கே. முத்து குருக்கள்.

விஜயதசமி
விஜயதசமி ( Pixabay.com )

விஜயதசமி என்றால் வெற்றி தருகிற நாள் என்று பொருள். `எதைத் தொடங்கினாலும் பலமடங்கு பலன்களைத் தரும் அற்புதமான நாள்’ விஜயதசமி. மகிஷாசுரனுடன் நடந்த போரில் ஒன்பதாவது நாளில் தான் துர்கை தேவி வெற்றிபெற்றாள். அடுத்த நாள் தசமியில்தான் அந்த வெற்றி தேவர்களால் கொண்டாடப்பட்டது. அன்றுதான் சக்தி தேவி ராஜராஜேஸ்வரியாக அனைவருக்கும் அருள்பாலித்தாள். இதே விஜயதசமி நாளில்தான் ராம பகவானும் ராவணனுடன் நடந்த போரில் வெற்றிபெற்றார். அதனால், வெற்றிதரும் நாளாக அனைவராலும் கொண்டாடப்படுகிறது விஜயதசமி. 8.10.19 அன்று விஜய தசமி கொண்டாடப்படுகிறது. இந்தவருடம், செவ்வாய்க் கிழமை திருவோண நட்சத்திரத்தில் விஜயதசமி வருகிறது. இது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

விஜயதசமியன்று குழந்தைகளுக்கு ஏடு தொடக்குதலை ஏன் தொடங்க வேண்டும்? வெற்றித் திருநாளான விஜயதசமியன்று எந்தச் செயலைச்...

Posted by Sakthi Vikatan on Saturday, October 5, 2019

விஜயதசமி நாளில் ஏடு எடுத்து குழந்தைகளுக்குக் கல்வி தொடங்குதல், புது தொழில் தொடங்குதல் ஆகியவற்றுக்கு உகந்த நாளாகக் கருதப்படுகிறது. இந்த வருடம் விஜயதசமியில் எந்தெந்த ராசிக்காரர்கள், எந்தெந்த தொழிலைத் தொடங்கலாம் என்று கணித்துக் கூறியிருக்கிறார் பைரவ குருஜி ஜி.கே. முத்து குருக்கள்...

மேஷ ராசி

தன்னம்பிக்கை மற்றும் தைரியத்துடன் இருப்பவர்கள், மேஷ ராசிக்காரர்கள். முயற்சி ஸ்தானம் எனப்படும் 3 -வது ஸ்தானத்தில் ராகு பகவானும், 6-வது ஸ்தானத்தில் சூரிய பகவானும் செவ்வாய் பகவானும் சேர்ந்து சஞ்சரிக்கிறார்கள். இதுவொரு அருமையான கிரக அமைப்பாகும். தடைப்பட்ட அரசு சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். கல்வி தொடர்புடைய தொழில்களைத் தொடங்குபவர்களுக்கு விஜய தசமி மிகச்சிறந்த பலனைக் கொடுக்கும். நகைக் கடை, ஜவுளித் தொழில், ஆடம்பரப் பொருள்கள் விற்கும் தொழில் ஆகியவற்றைத் தொடங்குவது அருமையான அனுகூலத்தைக் கொடுக்கும். குருப் பெயர்ச்சிக்கும் பிறகு சிறந்து விளங்குவார்கள்.

செவ்வாய்க்கிழமை விரதமிருந்து முருகப் பெருமானை வழிபட்டால் அபரிமிதமான அனுகூலத்தைப் பெறமுடியும்.

ரிஷப ராசி

ஆடம்பரப் பொருள்கள் மீது பிரியமாக இருப்பார்கள், ரிஷப ராசிக்காரர்கள். லாப ஸ்தானாதிபதியாக இருக்கும் குரு பகவான் சஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அஷ்டம ஸ்தானத்தில் சனி பகவானும், கேது பகவானும் சஞ்சரிப்பதால் கடன் வாங்காமல் தொழிலைத் தொடங்குவது நல்லது. ரிஷப ராசிக்காரர்கள் கல்வி தொடர்பான தொழில்களைத் தொடங்கினால் ஏற்றம் கிடைக்கும்.

சனிக்கிழமையன்று விரதமிருந்து நவகிரகங்களுக்கு நல்லெண்ணெய் விளக்கேற்றி வழிபட்டால் அனுகூலம் கிட்டும்.

மிதுன ராசி

மிதுன ராசிக்காரர்களுக்கு குருப் பெயர்ச்சிக்குப் பிறகு மிகப்பெரிய யோகம் ஏற்படப் போகிறது. அதனால், விஜய தசமியில் சுய தொழில்களைத் தொடங்கலாம். கிரக அமைப்பில், ராசி நாதனாக இருக்கக்கூடிய புதன் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உதவிகள் நிறைய கிடைக்கும். முயற்சி ஸ்தானாதிபதியான சூரிய பகவான் சதுர்கேந்திர ஸ்தானத்தில் லாப ஸ்தானாதிபதியுடன் சேர்ந்து சஞ்சரிப்பது கூடுதல் சிறப்பைக் கொடுக்கும். அதனால், மிதுன ராசிக்காரர்கள் புத்தகக் கடைகள், மீடியா தொடர்பான தொழிலில் ஈடுபடுவது உயர்வைக் கொடுக்கும். குடும்பத்தினருடன் ஆலோசித்து எடுக்கப்படும் முடிவுகள் சிறந்ததாக இருக்கும்.

மிதுன ராசிக்காரர்கள் புதன்கிழமை விரதமிருந்து பெருமாள் தரிசனம் செய்வது அனுகூலமாக இருக்கும்

கடக ராசி

கடக ராசிக்காரர்களுக்கு அருமையான கிரக அமைப்பு தென்படுகிறது. தன ஸ்தானாதிபதியாக இருக்கக்கூடிய சூரிய பகவான் முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிக்கும்போது பாக்யாதிபதி குருபகவான் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரித்திருப்பது அருமையான கிரக அமைப்பாகும். கடக ராசிக்காரர்கள் எதைத் தொட்டாலும் பொன்னாக மாறும் காலம் இது. திறமை, அனுபவத்தைக் கொண்டு சுய தொழில், உப தொழில் என்று எதைத் தொடங்கினாலும் சிறப்பானதாக அமையும். கடக ராசிக்காரர்களுக்கு அழகு சாதனப் பொருள்கள் விற்பனைத் தொழில், ஜவுளித் தொழில் உள்ளிட்டவை அமோகமாக இருக்கும்.

திங்கள் கிழமையன்று விரதமிருந்து சந்திர பகவானை தரிசித்து அர்ச்சனை செய்வது அனுகூலத்தைக் கொடுக்கும்.

சிம்ம ராசி

எதையும் சாதிக்கக்கூடிய ஆற்றல் உடையவர்கள் சிம்ம ராசிக்காரர்கள். ராசி நாதனாக இருக்கக்கூடிய சூரிய பகவான் விஜய தசமியின்போது ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். பாக்யாதிபதியான செவ்வாயும் சேர்ந்து தனஸ்தானத்தில் சஞ்சரிப்பது சிறப்பு வாய்ந்ததாகும். சகோதர சகோதரிகள் ஒன்று சேர்ந்து கூட்டுத் தொழில் மேற்கொள்வது சிறப்பானதாக இருக்கும். பூமி தொடர்பான வீடு, மனைகள் விற்கும் தொழில்கள் அமோகமாக இருக்கும்.

ஞாயிற்றுக்கிழமை காலையில் சூரிய பகவானை தரிசித்து வணங்குவது அபரிமிதமான பலத்தைக் கொடுக்கும்.

கன்னி ராசி

நல்ல மாற்றங்கள் மற்றும் ஏற்றங்களைக் கொடுக்கும் காலம் இது. ராசியிலேயே சூரிய பகவானும் செவ்வாய் பகவானும் சேர்ந்து சஞ்சரிக்கிறார்கள். இதனால் தன்னம்பிக்கை மற்றும் ஆற்றல் பெருகும். ராசி நாதனான புதன் பகவான் தனஸ்தானத்தில் சஞ்சரிப்பது மிகவும் அருமையான அமைப்பாகும். இது வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். கன்னி ராசிக்காரர்கள் அனுபவம் இருக்கும் துறைகளில் முதலீடு செய்து தொழில் தொடங்குவது மிகப்பெரிய ஏற்றத்தையும் வளர்ச்சியையும் கொடுக்கும். வீடுகள், மனைகள் வாங்கக்கூடிய வாய்ப்புகள் ஏற்படப்போகிறது.

புதன் கிழமையன்று பெருமாள் வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லதாகும்.

மைசூர் தசரா
மைசூர் தசரா

துலாம் ராசி

முயற்சி ஸ்தானாதிபதியான குரு பகவான் தனஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அதனால், துலாம் ராசிக்காரர்கள் எதிர்காலத்தைப் பற்றி சிந்திப்பதற்கு உகந்த காலம் இது. நகைகள், அணிகலன்கள் ஆகியவற்றில் முதலீடு செய்வது லாபத்தைக் கொடுக்கும். அதே நேரம் சிக்கனமாகச் செயல்படுவது நல்லது. ரசாயனம், இரும்பு தொடர்பான தொழில்களைத் தாராளமாக தொடங்கலாம்.

வியாழக்கிழமை விரதமிருந்து குரு பகவானை வணங்குவதும், வெள்ளிக் கிழமையன்று திருமால் ஆலயங்களில் உள்ள மகாலட்சுமியை வணங்குவது அனுகூலத்தைக் கொடுக்கும்.

விருச்சிக ராசி

விருச்சிக ராசிக்காரர்களுக்கு கடந்த காலத் துன்பங்கள் நீங்கும் காலம் இது. தொழில் ஸ்தானாதிபதியான சூரிய பகவான் லாபஸ்தானத்தில் ராசி நாதனான செவ்வாய் பகவானுடன் சேர்ந்து சஞ்சரிப்பதால் பூமி, வீடு ஆகியவை வாங்கும் யோகம் வாய்க்கும். மளிகை கடை, ஆடம்பரப் பொருள்கள் விற்பது, சூப்பர் மார்கெட் உள்ளிட்ட தொழில் தொடங்குவது சிறப்பானதாக இருக்கும். குருப் பெயர்ச்சிக்குப் பிறகு படிப்படியான மாற்றம் ஏற்படும்.

விருச்சிக ராசிக்காரர்கள் வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் சென்று அங்காரகனை வழிபடுவது அனுகூலத்தைக் கொடுக்கும்.

தனுசு ராசி

தனுசு ராசிக்காரர்களுக்குத் தற்போது நடைபெறும் துயரமான காலம் மறைந்து ஏற்றமிகு காலம் வரப்போகிறது. ஜன்ம சனியின் தாக்கம் மற்றும் விரயஸ்தானத்தில் உள்ள குரு பகவானின் தாக்கம் இனி குறையும். வரும் காலத்தில் தொழில் ரீதியான வருவாய்கள் ஏற்படும். தற்போது செய்துகொண்டிருக்கும் தொழிலில் புதுப்புது வாய்ப்புகள், வசதிகள் ஏற்படும் காலம் இனி வாய்க்கும். தொழிலை விரிவுபடுத்த நினைப்பவர்கள் செலவுகளைக் குறைத்து, நிதானத்துடன் செயல்படுவது நல்லது.

பெரியவர்கள், மகான்கள், சித்தர்கள் ஆகியோருக்கு உதவிகளைச் செய்வது அனுகூலத்தைக் கொடுக்கும்.

மகர ராசி

விரயஸ்தானம் எனப்படும் 12-வது ஸ்தானத்தில் கேது பகவானும் சனீஸ்வர பகவானும் சேர்ந்து சஞ்சரிப்பதால் செலவுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் தற்போது திண்டாடிக்கொண்டிருப்பர். விரைவில் செலவுகள் குறைந்து பொருளாதாரம் மேம்படும். கூடுமானவரை புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. தற்போது செய்துகொண்டிருக்கும் தொழிலைத் தொடர்ந்து நடத்துவதிலேயே கவனம் செலுத்துங்கள். குழந்தைகளின் கல்விச் செலவுக்கு அதிக செலவுகளைச் செய்ய நேரிடும். அதனால், திட்டமிட்டுச் செயல்படுங்கள்

சிவதலங்களுக்குச் சென்று சிவ வழிபாடு செய்வது அனுகூலத்தைக் கொடுக்கும்.

கும்ப ராசி

கும்ப ராசி நேயர்களுக்கு இனிவரும் காலம் பொற்காலமாகும். ராசி நாதனாக இருக்கக்கூடிய மந்தகாரகன் லாப ஸ்தானத்தில் கேது பகவானுடன் சஞ்சரிக்கிறார். அதனால், வெளிநாடு தொடர்புடைய இறக்குமதி, ஏற்றுமதி தொழில்களில் இறங்குவது அனுகூலத்தைக் கொடுக்கும். இரும்பு தொடர்புடைய தொழில்களைச் செய்பவர்கள் அதை விரிவுபடுத்தலாம். வெற்றிகள், லாபங்கள் அதிகம் கிடைக்கும். இருந்தாலும், முதலீடு செய்யும்போது நிதானத்துடனும், சிந்தித்துச் செயல்படுவதும் நல்லது.

கும்ப ராசிக்காரர்கள் சனிக்கிழமையின்போது பெருமாளை வழிபடுவது அனுகூலத்தைக் கொடுக்கும்.

மீன ராசி

ராசி நாதனாக இருக்கக்கூடிய குருபகவான் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் குருபகவானின் பார்வை மீன ராசியின் மேல் விழுவதும் அருமையான கிரக அமைப்பைக் கொடுக்கிறது. மீன ராசிக்காரர்கள் குருப் பெயர்ச்சிக்கு முன்பே எதிர்காலம் பற்றி திட்டமிடுவது அனுகூலத்தைக் கொடுக்கும். சேமிப்பு மற்றும் கையிருப்பை முதலீடு செய்துவிடுவதும் அதிக லாபத்தைக் கொடுக்கும். எந்தத் தொழிலைத் தொடங்கினாலும் விஜய தசமியின்போது மீன ராசிக்காரர்கள் தொடங்கினால் மிகச் சிறப்பானதாக அமையும்.

வியாழக்கிழமையின்போது குரு பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது நல்லது.