திருக்கதைகள்
திருத்தலங்கள்
ஜோதிடம்
Published:Updated:

புதையல் யோகம் யாருக்குக் கிடைக்கும்?

புதையல் யோகம்
பிரீமியம் ஸ்டோரி
News
புதையல் யோகம்

ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன்

புதையல் என்றால் மண்ணுக்கு அடியில் புதைத்துவைக்கப்பட்ட பழம்பெரும் செல்வங் களைக் குறிக்கும்.

அது தங்கமாகவோ, முத்து மணிகளாகவோ, வைர வைடூரியங்களாகவோ, தெய்வ விக்ரகங்களாகவோ, ஏடு குறிப்புகளாகவோ அல்லது வேறு ஏதாவது தொன்மைவாய்ந்த சிறப்புக்குரிய பொருளாகவோ இருக்கலாம்.

புதையல் யோகம்
புதையல் யோகம்

பண்டைக் காலத்தில் நம்முடைய மூதாதையர் பல அரும்பெரும் பொக்கிஷங்களையும் தங்களுடைய செல்வங்களையும் பாதுகாக்க வழியில்லாத காரணத்தால் அவற்றை மண்ணுக்குள் புதைத்துவைத்து, ஏதேனும் ஓர் அடையாளக் குறியீட்டின் கீழ் மறைத்து வைத்தனர்.

புதையல் என்றாலே நம் கண்கள் உடனே விரிந்து அதைத் தேட ஆரம்பித்துவிடும், புதையல் தங்கமாக இருந்தால், அவர்களுடைய மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. அதுவே வேறு ஏதாவது அறிவு சார்ந்த பொருளாக இருந்தால், அதை ஏற்றுக்கொள்ள மனம் சற்றுத் தடுமாறும்.

புதையல் ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் திடீர் தன யோகத்தைக் கொடுத்துவிடும். இப்படியான புதையல் யோகம் ஒருவருக்கு எப்போது கிடைக்கும்? இந்தப் பதத்துக்கான பொருள் காலத்துக்குக் காலம் மாறுபட்டது எனலாம். தற்காலத்தில் குதிரைப் பந்தயம், பங்குச் சந்தை, திடீர்ச் சொத்து சேர்க்கை ஆகியவற்றையும் புதையல் யோகமாகக் கொள்ளலாம். இவையெல்லாமே திடீரென வாய்க்கும் அதிர்ஷ்டம்தான். அதேபோல திடீர் அதிகாரமும் திடீர்ப் பதவியும்கூட கிடைக்கும். அதுவும் ஒருவகையில் புதையல்தான்.

புதையல் யோகம்
புதையல் யோகம்

`இப்படியான யோகம் நம் ஜாதகத்தில் உள்ளதா, எப்போது வேலை செய்யும்’ என்கிற கேள்வி எல்லோர் மனத்திலும் எழும். இதை ‘நிஷ்கலா கலா யோகம்’ என்று ஜோதிடத்தில் குறிப்பிடுவர்.

ஒருவரின் ஜாதகத்தில் எந்த லக்னமாக இருந்தாலும், அதில் 4-ம் வீட்டு அதிபதியும் 10-ம் வீட்டு அதிபதியும் ஒருவருக்கொருவர் தொடர்பில் இருந்தாலோ, ஒன்றாக ஒரே வீட்டில் சேர்ந்திருந்தாலோ, ஒருவருக்கொருவர் பார்வை பலம் பெற்றிருந்தாலோ.... இப்படி ஒரு யோகம் அமையும். மேலும், அவை அமைந்திருக்கும் இடத்தைப் பொறுத்து, அந்தப் புதையல் கிடைக்கும் முறையை நாம் அறியலாம்

அதுவே 2-ம் வீடாகவும் 11-ம் வீடாகவும் அமைந்துவிட்டால் நிச்சயமாகப் பொன், பொருள், செல்வம் குவியும். 3-ம் இடமாக அமையும்போது சகோதரன் வழியிலான ஆதாயத்தைக் கொடுக்கும்.

இந்த யோகம் 4-ம் வீட்டில் அமைந்திருந்தால் கல்வி மற்றும் கற்ற வித்தைகளின் மூலமாகவோ, பெற்ற தாயாரின் மூலமாகவோ அல்லது தாய்வழி உறவுகளின் மூலமாகவோ ஆதாயம் கிடைக்கும்.

புதையல் யோகம்
புதையல் யோகம்

இந்த யோகம் லக்னத்துக்கு 5-ம் வீட்டில் அமையப் பெற்றிருந்தால், குழந்தைகளின் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ தங்கள் மூதாதையரின் பொக்கிஷங்களைக் கண்டெடுக்கும் அமைப்பு நிச்சயம் உண்டு.

லக்னத்துக்கு 6-ம் வீட்டில் அமையப் பெற்றிருந்தால், அவர்களுக்குக் கடன் தள்ளுபடி, வட்டி தள்ளுபடி மூலம் திடீர் வருவாய் வரும்; அதன் மூலம் சொத்து நிலைக்கும் அமைப்பு உண்டாகும்.

லக்னத்துக்கு 7-ம் வீட்டில் அமையப் பெற்றிருந்தால், வாழ்க்கைத்துணை மூலமாக ஆதாயங்கள் திடீரென்று கிடைக்கும்.

லக்னத்துக்கு 8-ம் வீட்டிலும் 12-ம் வீட்டிலும் இருந்துவிட்டால், கவலைகொள்ள வேண்டியதில்லை. அது விபரீதராஜ யோகத்தின் அடிப்படையில் திடீர் தன யோகத்தைக் கொடுக்கும்.

லக்னத்துக்கு 9-ம் வீட்டில் மேற்சொன்ன யோக அமைப்பு இருந்தால், தகப்பனாரின் பெயர் சொல்லி வாழும் பிள்ளையாகவே அந்த ஜாதகர் இருப்பார்.

லக்னத்துக்கு 10-ம் வீட்டில் அமையப் பெற்றவர்கள் உலக பிரயாணங்களுக்கும், பாராட்டுகளுக்கும், புகழுக்கும் உரித்தாவார்கள். இவர்களுக்கு இந்த யோகம் வேற்று நாடு, வேற்று மனிதர்கள், வேற்று இனத்தினரின் மூலமாகக் கிடைக்கும்.

புதையல் யோகம்
புதையல் யோகம்

இந்த நிஷ்கலா கலா யோகம் ஒருவரின் ஜாதகத்தில் இருந்துவிட்டால், அதை ஏற்படுத்திய கிரகத்தின் தசா புத்திகள் நடக்கும் காலத்தில் அல்லது அந்த கிரகங்கள் கோச்சாரத்தில் அமையும்போது, திடீர் தன யோகமோ, புதையல் யோகமோ வாய்க்கும்.

அது தங்கமாகவோ, பணமாகவோ, உறவினர்களின் சொத்தாகவோ, வாழ்க்கைத்துணை வழியில் கிடைக்கும் ஆதாயமாகவோ அல்லது உத்தியோகம் மற்றும் அரசியலில் திடீர் பதவியாகவோ அமையும்.

எனவே, புதையல் யோகம் என்றதும் பூமிக்கு அடியில் கிடைக்கும் தங்கம் என்று எண்ணாமல், அதைத் தேடி அலையாமல், அதற்காகக் குறுக்குவழியைத் தேடாமல் அதை அரசாங்கத்தின் விதிமுறைகளுக்கு விட்டுவிடுவது நல்லது.

நமக்கு அப்படி ஒரு விதி ஜாதகத்தில் இருக்கும் என்றால், இந்தப் புதையல் காலத்துக்கேற்ற வகையில் பணமாகவோ, பொருளாகவோ நிச்சயம் நம்மைத் தேடி வரும்.