Published:Updated:

வாக்கியம், திருக்கணிதம்... சனிப்பெயர்ச்சி குறித்து ஜோதிடர்கள் சொல்வது என்ன?

சனிப்பெயர்ச்சி
சனிப்பெயர்ச்சி

திருக்கணித முறைப்படி நாளை சனிப்பெயர்ச்சி நடைபெறுகிறது. இரு பஞ்சாங்கங்களின் அடிப்படையில் சாதாரணமாக ஓரிரு மாத இடைவெளிகளில் நிகழும் சனிப்பெயர்ச்சிகளுக்கிடையே ஏன் இந்த முறை ஏறக்குறைய ஓராண்டு கால இடைவெளி?

ஒரு நாளைத் தொடங்குவதற்கு முன் அந்த நாள் எப்படி அமையும் என்று அறிந்துகொள்வதில் அனைவருக்கும் ஆர்வம் இருக்கும். அதனடிப்படையில்தான் அதிகாலையில் தொலைக்காட்சிகளிலும் இணையதளங்களிலும் ஜோதிடர்கள் தோன்றி ராசிபலன் சொல்கிறார்கள்.

சனிபகவான்
சனிபகவான்

நம்பிக்கை இருப்பவர்கள் இல்லாதவர்கள் என்று வேறுபாடின்றி அனைவரும் அதை விரும்பிக் கேட்கவும் வாசிக்கவும் செய்கின்றனர். அதேபோன்று முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் குறித்தும் அறிந்துகொள்ளும் ஆர்வம் அனைவருக்கும் உண்டு. குறிப்பாக, குருப்பெயர்ச்சி, ராகு -கேதுப் பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி ஆகிய பெயர்ச்சிகள் மிகவும் முக்கியமானவை. குரு ஆண்டுக்கொருமுறையும் ராகு -கேது ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறையும் சனி இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறையும் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சி ஆவார்கள்.

அவ்வாறு பெயரும் நாள் ஒவ்வொரு பஞ்சாங்கத்தின் அடிப்படையிலும் மாறுபடும். சில நாள்களோ, ஓரிரு மாதங்களோ வித்தியாசப்படும். ஆனால், இந்த முறை சனிப்பெயர்ச்சி குறித்த பஞ்சாங்கக் குறிப்புகள் கிட்டத்தட்ட ஓராண்டு இடைவெளியைக் காட்டுகின்றன. திருக்கணிதப்படி நாளை (24.1.2020) சனிப்பெயர்ச்சி. வாக்கியப் பஞ்சாங்கப்படி 26 டிசம்பர் 2020 அன்று சனிப்பெயர்ச்சி நடைபெற உள்ளது. எதனால் இவ்வளவு கால வித்தியாசம் ஏற்படுகிறது, என்பதை அறிந்துகொள்ள பஞ்சாங்கங்கள் குறித்து அறிந்துகொள்ள வேண்டும்.

திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில் 
திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில் 

பஞ்சாங்கம் என்றால் என்ன?

பஞ்ச அங்கங்கள் சேர்ந்த குறிப்பே பஞ்சாங்கம். ஒருநாளுக்குரிய வாரம், திதி, கரணம், நட்சத்திரம், யோகம் ஆகிய ஐந்து பற்றிய அடிப்படைக் குறிப்புகளே பஞ்சாங்கம் எனப்படும்.

ஒவ்வொரு நாளும் கிரகங்களின் இருப்பிடம் அவற்றின் நகர்வு ஆகியனவற்றைக் கணக்கிட்டு ஒருவரின் ஜாதகம் கணிக்கப்படுகிறது. இதில் கிரக நிலவரங்களை அறிந்துகொள்ள பஞ்சாங்கத்தையே ஜோதிடர்கள் நாடுகிறார்கள். அப்படி ஜோதிடர்கள் பயன்படுத்தும் பஞ்சாங்கங்கள் பல உள்ளன. இவற்றுள் வாக்கியப் பஞ்சாங்கம் பழைமையானது என்று கருதப்படுகிறது. இதை உருவாக்கியவர்கள் ரிஷிகள் என்று கருதப்படுகிறது. ஆற்காடு ஸ்ரீ சீதாராமையர் சர்வ முகூர்த்த பஞ்சாங்கம், திருநெல்வேலி பஞ்சாங்கம், ராமநாதபுரம் வாக்கியப் பஞ்சாங்கம், 28-ம் நம்பர் பாம்புப் பஞ்சாங்கம், ஸ்ரீ காஞ்சி மடத்து பஞ்சாங்கம், சிருங்கேரி மடம் பஞ்சாங்கம், ஸ்ரீரங்கம் வாக்கிய பஞ்சாங்கம், ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப் பெருமாள் தேவஸ்தான வாக்கியப் பஞ்சாங்கம், திருக்கோயில் அனுஷ்டான பஞ்சாங்கம் என்பவை புகழ்பெற்ற வாக்கியப் பஞ்சாங்கப் புத்தகங்களாகும். தமிழகத்தில் பெரும்பாலான ஆலயங்களில் வாக்கியப் பஞ்சாங்கமே பின்பற்றப்படுகிறது.

சனி
சனி

வாக்கியப் பஞ்சாங்கத்தைப் போன்றே முக்கியத்துவம் வாய்ந்த பஞ்சாங்கங்களாகக் கருதப்படுவது திருக்கணிதப் பஞ்சாங்கம். சந்திரனின் அயனாம்சத்தின் அடிப்படையில் கணிக்கப்படும் இந்தத் திருக்கணித முறையும் பழங்காலத்திலிருந்தே உருவானது என்றும் வாக்கியப் பஞ்சாங்கத்தில் காணப்படும் குறைகள் நீக்கப்பட்டு 15-ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது. திருக்கணிதத்திலும் பல்வேறு பஞ்சாங்கங்கள் காணப்படுகின்றன. வாக்கியத்துக்கும் திருக்கணிதத்துக்கும் ஒருநாளில் அதிகபட்சமாக 17 நாழிகை வரை வேறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு. அதாவது 6 மணி 48 நிமிஷம் வரை இந்த வேறுபாடு ஏற்படும். திருக்கணிதமே திருத்தப்பட்ட துல்லியமான பஞ்சாங்கம் என்று சொல்கிறார்கள் இதைப் பின்பற்றுபவர்கள்.

அத்தகைய திருக்கணித முறைப்படி நாளை சனிப்பெயர்ச்சி நடைபெறுகிறது. இரு பஞ்சாங்கங்களின் அடிப்படையில் சாதாரணமாக ஓரிரு மாத இடைவெளிகளில் நிகழும் சனிப்பெயர்ச்சி ஏன் இந்த முறை ஏறக்குறைய ஓராண்டுக்கால இடைவெளியைக் காட்டுகின்றன. இந்த ஆண்டு சனிப்பெயர்ச்சி குறித்து ஜோதிட வல்லுநர்கள் சிலரிடம் கேட்டோம்.

ஆதித்ய குருஜி
ஆதித்ய குருஜி

ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி, ஏன் திருக்கணிதத்தைப் பின்பற்ற வேண்டும் என்று நம்மோடு பகிர்ந்துகொண்டார்.

1935-ம் ஆண்டு காஞ்சிப் பெரியவர் ஒரு வித்வத் சதஸினைக் கூட்டினார். `சதஸ்' என்றால் `விவாதிக்கும் சபை' என்று பொருள். அந்தச் சபையில் வாக்கியப் பஞ்சாங்கம் திருக்கணிதப் பஞ்சாங்கம் குறித்த விவாதம் நடைபெற்றது. அதில் இந்தியா முழுவதுமிருந்து ஜோதிடர்கள் கலந்துகொண்டு விவாதம் செய்தனர். அந்த சதஸின் முடிவில் மகாபெரியவா திருக்கணிதப் பஞ்சாங்கமே சரி என்று தீர்ப்பு சொன்னார்.

அன்று முதல் காஞ்சி ஶ்ரீமடத்தில் திருக்கணிதப் பஞ்சாங்கமே பின்பற்றப்பட்டுவருகின்றது. இந்தியாவின் அண்டை மாநிலங்கள் அனைத்துமே திருக்கணிதப் பஞ்சாங்கத்தையே பின்பற்றுகின்றன. வாக்கியப் பஞ்சாங்கம் தமிழ்நாட்டில் மட்டுமே பின்பற்றப்படுகிறது. மத்திய அரசு அங்கீகரித்துள்ள ராஷ்ட்ரிய பஞ்சாங்கம் திருக்கணிதத்தால் ஆனது. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமலை திருப்பதி தேவஸ்தானமும் திருக்கணிதப் பஞ்சாங்கத்தை ஏற்றுக்கொண்டு கடைப்பிடித்துவருகிறது.

கிரக இருப்பை மிகச் சரியாகப் பூமியில் நாம் உணர உதவுவது கிரகணம். நிழல் கிரகங்களான ராகு - கேது பூமியை மறைக்கும்போதுதான் கிரகணங்கள் உருவாகின்றன. ராகு கேதுவின் இருப்பு நிலை பற்றிய கணக்குகள் தவறானால் கிரகண தினங்கள் நேரங்கள் குறிப்பதில் சிக்கல் ஏற்படும். இந்தக் கணிதம் திருக்கணிதப் பஞ்சாங்கத்தில் மிகத் துல்லியமாகக் கணக்கிடப்படுவதை நாம் அறிவோம். இதை ஏன் சொல்கிறோம் என்றால், திருக்கணிதப் பஞ்சாங்கமே சரி என்று வாதிடுவதற்காக அல்ல, குறிப்பிட்ட பெயர்ச்சி நாளில் பக்தர்கள் ஆலயங்களுக்குச் சென்று இறைவனை வழிபட வேண்டும் என்பதற்காகவே சொல்கிறோம்.

இந்த ஆண்டு சனிப்பெயர்ச்சி திருக்கணிதப்படி 24.1.2020 அன்று காலை 10.03-க்கு நடைபெறுகிறது. சனிபகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்குள் செல்கிறார். எனவே, பக்தர்கள் இந்த நாளில் ஆலய வழிபாடு செய்வது மிகவும் சிறந்தது.

இந்த ஆண்டு திருக்கணிதப்படி சனிப்பெயர்ச்சி ஏன் இத்தனை பெரிய இடைவெளி என்ற கேள்வியை ஜோதிட மாமணி முருகு. பாலமுருகன் முன் வைத்தோம்.

``பொதுவாக வாக்கியப் பஞ்சாங்கத்துக்கும் திருக்கணிதத்துக்கும் இடையிலான சனிப்பெயர்ச்சி குறித்த இடைவெளி பொதுவாக ஒருசில மாதங்கள் மட்டுமே இருக்கும். இந்த ஆண்டு பன்னிரண்டு மாத இடைவெளிக்குக் காரணம் 2017-ம் ஆண்டு நிகழ்ந்த சனிப்பெயர்ச்சி.

முருகு. பாலமுருகன்
முருகு. பாலமுருகன்

வாக்கியப்படி டிசம்பர் 19, 2017-ல் தான் நிகழ்ந்தது. ஆனால், திருக்கணிதப்படி 2017-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதியே சனி பகவான், மூல நட்சத்திரம் தனுசு ராசிக்குப் பெயர்ச்சி ஆகிவிட்டார். அதன் பிறகு, 2017 ஜூன் 21-ம் தேதி வக்கிரமாகி விருச்சிக ராசிக்கு வந்த சனிபகவான் மீண்டும் தனுசு ராசிக்கு அக்டோபர் மாதம் பெயர்ச்சியாகிவிட்டார்.

திருக்கணிதப்படி சனிப்பெயர்ச்சி  பலன்கள்

பொதுவாக, ஒரு ராசியிலிருந்து சனிபகவான் முதல்முறை எப்போது பெயர்ச்சியாகிறாரோ அதுவே பெயர்ச்சிக் கணக்கு. எனவே, 2017 ஜனவரியிலேயே சனிப்பெயர்ச்சி நிகழ்ந்துவிட்டது. ஆனால், இந்தமுறை மகர ராசிக்குள் பிரவேசிக்கும் சனிபகவான் வக்கிரமாகி தனுசுக்கு வராமல் மகரத்திலேயே தங்கிவிடுகிறார். அதனாலேயே இந்தப் பன்னிரண்டு மாத வேறுபாடு நமக்குத் தெரிகிறது.

இந்த ஆண்டு திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 24.1.2020 அன்றுதான் சனிப்பெயர்ச்சி. திருக்கணிதத்தை நம்புபவர்கள் அன்றுதான் சனிப்பெயர்ச்சிக்குரிய வழிபாடுகளைச் செய்ய வேண்டும். தமிழகக் கோயில்களில் பெரும்பாலும் வாக்கியப் பஞ்சாங்கமே கடைப்பிடிக்கப்படுவதால், அன்று சிறப்பு வழிபாடுகள் கோயில்களில் நடைபெறாது என்பது கொஞ்சம் வருத்தம்தான். இதை நாம் குறை சொல்லவே முடியாது" என்றார்.

ஆஸ்ட்ரோ முரளி
ஆஸ்ட்ரோ முரளி

வாக்கியப் பஞ்சாங்கம் என்பது ரிஷிகளின் வாக்கு என்கிறார் ஆஸ்ட்ரோ முரளி. அவரிடம் இதுகுறித்துக் கேட்டோம்.

``திருக்கணிதம் துல்லியமானது என்கிறார்கள். சில நேரங்களில் அது சரியாகவும் இருக்கிறது. ஆனால், வாக்கியப் பஞ்சாங்கம் என்பது ரிஷிகளின் வாக்கு. இந்த உலகில் அறிவியலும் வானியலும் கண்டுபிடிக்கப்பட்ட காலத்துக்கு முன்பாக இந்தப் பிரபஞ்சத்தில் இயக்கத்தையும் கிரக நிலவரங்களையும் கண்டு தெளிந்தது. எனவே, அதை அவ்வளவு எளிதாகப் புறந்தள்ள முடியாது. மேலும், எனது 25 ஆண்டுக்கால ஜோதிட வாழ்வில் வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி கணிக்கப்பட்ட ஜாதகங்கள் துல்லியமான பலன்கள் தருவதைப் பார்த்திருக்கிறேன். ரிஷிகளின் வாக்கு என்பதால்தான் இன்றளவும் கோயில்களில் வாக்கியப் பஞ்சாங்கமே பின்பற்றப்படுகிறது. தனிப்பட்ட முறையில் எந்தப் பஞ்சாங்கத்தைப் பின்பற்றுவது என்பது அவரவர் விருப்பம். நான் வாக்கியத்தை மதிக்கிறேன். எனக்குத் திருநள்ளாறில் என்று சனிப்பெயர்ச்சியோ அன்றுதான் சனிப்பெயர்ச்சி" என்று முடித்துக்கொண்டார்.

பஞ்சாங்கங்கள் பலவாயினும் பரம்பொருள் ஒருவரே. அவரை வழிபட்டு நல்லருளைப் பெறுவோம்.

அடுத்த கட்டுரைக்கு