Published:Updated:

சூரிய கிரகணத்தோடு கொரோனா குறையுமா... ஜோதிடம் சொல்வது என்ன?

கிரகணம்
கிரகணம்

நாளை நிகழ இருக்கும் சூரியகிரகணம் ஓர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கொரோனாவால் ஏற்படும் பாதிப்புகள் கிரகணத்துக்குப் பின் குறைந்துவிடும் என்று அணுவிஞ்ஞானி ஒருவர் சொல்ல அது வைரலானது. உண்மையில் இதற்கான ஜோதிடரீதியான சாத்தியம் என்ன?

சூரிய கிரகணம்... அற்புதமான வானியல் நிகழ்வு. இந்த உலகின் உயிர்களை எல்லாம் வாழவைக்கும் கண்கண்ட கடவுளான சூரிய பகவான் தன் ஒளி நீங்கி இருள் சூழ்ந்திருக்கும் நேரம். வழக்கமாக இரவும் பகலும் உண்டாகும் நேரத்தை உலகின் உயிர்களெல்லாம் அறியும். ஆனால், அவ்வாறு இல்லாது திடீர் என்று சூரியன் மறையும்போது அவை ஒரு கணம் தடுமாறும். எனவே, மனிதர்கள் மட்டுமல்ல இந்த உலக உயிர்கள் அனைத்துக்கும் சூரிய கிரகணம் ஓர் அற்புதம். இத்தகைய நிகழ்வு வரும் 21-ம் தேதி நிகழவிருக்கிறது.

கிரகண நேரம் : 21.6.2020 காலை 10.22 முதல் மதியம் 1.50 வரை பரிகாரம் செய்துகொள்ள வேண்டிய நட்சத்திரங்கள்: சித்திரை, மிருகசீரிடம், திருவாதிரை, அவிட்டம், ரோகிணி பரிகாரம் : கோதுமை தானம்
சூரிய கிரகணம்
சூரிய கிரகணம்

வழக்கத்தைவிட அதிகமான எதிர்பார்ப்பை இந்த ஆண்டு சூரிய கிரகணம் ஏற்படுத்தியிருக்கிறது. காரணம் இன்றைய உலகத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலை. கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட சூரிய கிரகணத்திலிருந்தே இந்த நிலை தோன்றியது என்கின்றனர் ஜோதிடர்கள்.

கடந்த டிசம்பர் மாதம் தனுசு ராசியில் ஆறுகிரக சேர்க்கை ஏற்பட்டது. அதன் காரணமாகப் பல்வேறு இயற்கை சீற்றங்கள் நிகழும் என்று பலராலும் ஆருடம் சொல்லப்பட்டது. ஆனால், அவ்வாறு நிகழவில்லை. அந்தக் கால கட்டத்தில்தான் கொரோனா நோய்த்தொற்று பரவத் தொடங்கி அடுத்த ஓரிரு மாதத்தில் உலகம் முழுவதும் பரவியது என்கின்றனர். எனவே, ஒரு சூரிய கிரகணத்தில் தோன்றிய நோய்த் தொற்று அடுத்த சூரிய கிரகணத்தில் மறைந்துவிடும் என்று பலர் சொல்லத் தொடங்கினர். அணுவிஞ்ஞானி ஒருவரே இந்தக் கருத்தை முன்வைக்கப் பலரும் அதைப் பரப்பத் தொடங்கிவிட்டனர். உண்மையில் இந்தச் சூரியகிரகணத்தோடு கொரோனா பிரச்னை முடிந்துவிடுமா... இந்தப் பிரச்னை குறித்து ஜோதிடம் என்ன சொல்கிறது என்பது பற்றி விஞ்ஞான ஜோதிடர் ஆம்பூர் வேல்முருகனிடம் கேட்டோம்.

ஜோதிடர் ஆம்பூர் வேல்முருகன்
ஜோதிடர் ஆம்பூர் வேல்முருகன்

கடந்த ஆண்டு நிகழ்ந்த சூரிய கிரகண காலகட்டத்தில் கொரோனோ நோய்த் தொற்று உருவாகி இன்றளவும் உலகம் ஸ்தம்பித்துப் போய் நிற்கிறது. இதுதான் அடுத்த சூரிய கிரகணம் பற்றிய ஆர்வத்தை உருவாக்கியிருக்கிறது. பொதுவாக கிரகண காலத்தில் இதுபோன்ற நோய்கள் உருவாகலாம் என்பதால்தான் அந்தக் காலத்தில் முன்னோர்கள் கிரகண காலத்தில் நாம் செய்ய வேண்டியவை செய்யக் கூடாதவை என்பன குறித்து நமக்கு வகுத்துக் கொடுத்திருக்கிறார்கள்.

இதற்கு முன்பு பலமுறைகள் கிரகணம் வந்து போயிருக்கிறது. ஆனால், கடந்தமுறை நிகழ்ந்தபோது தனுசு மாதத்தில் தனுசு ராசியில் ஆறுகிரக சேர்க்கை ஏற்பட்டு ராகு- கேது ஆகிய இரு சாயா கிரகங்களுக்கு நடுவே அனைத்துக் கிரகங்களும் சிக்கிக் கொண்டன. அதன் விளைவாகவே இதுபோன்ற நோய்த் தொற்றும் உண்டானது. அந்தச் சூரிய கிரகணத்தில் தோன்றிய பிரச்னை இந்தச் சூரிய கிரகணத்தில் தீர்ந்துவிடுமா என்றால் அப்படிச் சொல்ல முடியாது. நோய்த் தொற்று குணமாவதற்கான மருந்துகள் இனி கண்டுபிடிக்கப்படலாமே தவிர முழுமையாக நோய் இல்லாமல் போய்விடும் என்று சொல்வதற்கில்லை. அதற்கு சாதகமான கிரக நிலவரங்கள் தற்போது இல்லை.

சிவராஜ பட்டர்
சிவராஜ பட்டர்

செப்டம்பர் 1-ம் தேதி நிகழும் ராகு - கேது பெயர்ச்சிக்குப் பின் இந்த நோய்த் தொற்று கொஞ்சம் கொஞ்சமாகக் குறையலாம். டிசம்பர் மாதத்துக்குப் பின் இந்த நோய் வீரியமிழக்கும். அடுத்த சில ஆண்டுகளில் இந்த நோய் இல்லாமல் போய்விடும் என்று நம்பலாம். 

இந்த உலகில் உயிர்கள் வாழ்வதற்கு அவசியமானவர் சூரிய பகவான். அவருக்கு நிகழும் கிரகணமானது நிச்சயம் எல்லோருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அனைவரும் சில விதிகளைப் பின்பற்ற வேண்டும். கிரகணம் தொடங்குவதற்கு முன்பாகக் குளித்து இறைவழிபாட்டில் ஈடுபட வேண்டும். இறைவனின் நாமத்தைச் சொல்ல வேண்டும். அதன் மூலம் உங்களுக்குப் பல்வேறு நன்மைகள் உண்டாகும். யாருக்கெல்லாம் ஜாதகத்தில் கிரகண தோஷம் உள்ளதோ அவர்கள் கட்டாயம் பரிகாரம் செய்துகொள்ள வேண்டும்” என்றார் ஜோதிடர் வேல்முருகன்.

கிரகண காலம் எப்போது, எந்த எந்த ராசிக்காரர்கள் பரிகாரம் செய்ய வேண்டும் என்பது குறித்து சங்கரன்கோவில் சிவராஜ பட்டரிடம் கேட்டோம். 

``நிகழும் சார்வாரி வருடம் ஆனி மாதம் 7-ம் தேதி மிருகசீரிட நட்சத்திரத்தில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. நேரம் காலை 10.22 ல் இருந்து மதியம் 1.50 வரை. இதில் பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரங்கள் என்றால் சித்திரை, மிருகசீரிடம், திருவாதிரை, அவிட்டம், ரோகிணி இந்த ஐந்தையும் சொல்லலாம். இவர்கள் சூரிய கிரகணம் முடிந்ததும் நீராடிவிட்டு அருகில் இருப்பவர்களுக்கு கோதுமையை தானம் செய்ய வேண்டும். சூரியனுக்கு உகந்த தானியம் கோதுமை என்பதால் அதை தானமாகத் தர வேண்டும்.

சிவ பூஜை
சிவ பூஜை

கிரகண காலத்தில், சிவபூஜை, வேல்பூஜை, சுப்பிரமண்ய பூஜை ஆகியவற்றைத் தொடர்ந்து செய்துவருபவர்கள் கிரகண காலத்தில் அதைச் செய்யலாம். பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்பவர்கள் பூஜைக்கு முன்பாக அதைச் செய்துவிட வேண்டும். 10.22 க்கு முன்பாக நீராடிப் பின் தர்ப்பணம் செய்து அதன்பின் பூஜைகளைத் தொடங்க வேண்டும். பின் தெரிந்த மந்திரங்களை உச்சரிக்கலாம். மந்திர உபதேசம் இல்லாதவர்கள் தங்களின் இஷ்ட தெய்வத்தின் நாமத்துக்கு முன்பாக ஓம் என்பதையும் பின் நமஹ என்பதையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். நமசிவாய மந்திரம் சொல்வது மிகவும் சிறப்பு. கிரகண காலத்தில் செய்யும் பூஜைகள், மந்திர ஜபங்கள், தானங்கள் ஆகியன அனைத்தும் லட்சம் முறை செய்த பலனைத் தரும்.

ஜூன் 21 நிகழ இருக்கும் சூரிய கிரகண காலத்தில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை, பரிகாரம் செய்துகொள்ள வேண்டிய நட்சத்திரங்கள், பரிகாரம் ஆகியன குறித்து விளக்குகிறார் சங்கரன்கோவில் சிவராஜ பட்டர்.

Posted by Sakthi Vikatan on Friday, June 19, 2020

கிரகண காலங்களில் தூங்கக் கூடாது. தேவையில்லாமல் வெளியே நடமாடக் கூடாது. சூரிய ஒளியை நேரடியாகப் பார்க்கக் கூடாது” என்று தெரிவித்தார் சிவராஜ பட்டர். 

அனைவரும் இந்த சூரிய கிரகண காலத்தில் இறைவனை வழிபட்டு நம் இன்னல்கள் நீங்கப் பெறுவோம்.

அடுத்த கட்டுரைக்கு