திருத்தலங்கள்
தொடர்கள்
Published:Updated:

‘வெளிநாட்டு யோகம் உண்டா?’

வெளிநாட்டு யோகம்
பிரீமியம் ஸ்டோரி
News
வெளிநாட்டு யோகம்

ஜோதிடர் செய்யனூர் ரா.சுப்பிரமணியன்

வெளிநாடுகளில் வேலை என்பது இளைஞர்கள் பலரின் கனவாக உள்ளது. பெரியோர்களில் பலருக்கும்கூட வெளி நாடுகளில் வசிக்கும் பிள்ளைகளோடு சேர்ந்து வசிக்கலாமே என்ற எண்ணம் உண்டு. ஆனால், ஆசைப்படும் எல்லோருக்கும் வெளிநாட்டு யோகம் அமைவதில்லை. யார் யாருக்கெல்லாம் வெளிநாட்டில் வசிக்கும் - வேலை பார்க்கும் யோகம் உள்ளது என்பதை, அவரவர் ஜாதக அமைப்பின் மூலம் அறியலாம் என்பது ஜோதிட வல்லுநர்களின் கருத்து.

‘வெளிநாட்டு யோகம் உண்டா?’
Boarding1Now

ஜாதகத்தில் ஜன்ம லக்னத்திலிருந்து எண்ண வரும் 9-ம் வீடு, கடல் கடந்து பயணிக்கும் நிலையைக் குறிக்கும். இந்த 9-ம் இடமே வெளிநாட்டுப் பயணத்தை எடுத்துக்காட்டும் என்பார்கள்.

ஆக, 9-ம் வீடு மற்றும் இந்த வீட்டின் அதிபதி பலமாக இருக்கவேண்டும். இந்த இடமும் அதற்கான அதிபதி கிரகமும் பலமிழந்து இருந்தால், வெளிநாட்டு யோகம் அமையாது.

சரி, எப்படியான ஜாதக அமைப்புகள் சாதகமானது என்பதை முதலில் முதலில் அறிந்துகொள்வோம்.

‘வெளிநாட்டு யோகம் உண்டா?’
shylendrahoode

ஒன்பதாம் வீடும் வெளிநாட்டு யோகமும்

ஜாதகத்தில் 9-ம் வீட்டு அதிபதி ஆட்சி மற்றும் உச்சம் பெற்றிருப்பது பலம் ஆகும்.

சுப கத்திரி யோகம் பெறுதல்... அதாவது முன், பின் வீடுகளில் சுப கிரகங்கள் அமையப் பெற்றிருப்பது சாதகமான நிலையாகும்.

அதேபோல் வர்க்கோத்தமம் பெற்றிருக்கும் நிலையும் (ராசி - அம்சச் சக்கரங்களில் ஒரே வீட்டில்) சாதகம் ஆகும்.

குறிப்பிட்ட 9-ம் வீட்டு அதிபதி கிரகம், கேந்திர திரிகோண வீடுகளில் இருத்தல் (1, 5, 9 மற்றும் 4, 7, 10 வீடுகள்).

சுப கிரகங்களின் தொடர்பு மற்றும் பார்வையைப் பெறுதலும் நலம்.

இத்தகைய அமைப்பு இருந்தால், குறிப்பிட்ட ஜாதகருக்கு வெளிநாட்டு யோகம் அமையும். மேலும், பலம் பெற்ற ஒன்பதாம் வீட்டு அதிபதி கிரகம், ஜல (நீர்) ராசிகளான கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய ஒன்றில் அமைவது சிறப்பு என்றும் கூறப்படுகிறது.

இனி, பாதக நிலைகளை அறிவோம்.

9-ம் வீட்டு அதிபதியானவர் நீசம் மற்றும் பகை வீடுகளில் அமைதல்.

அசுப கத்திரி யோகம் பெறுதல் (முன்பின் வீடுகளில் அசுப கிரகங்கள்).

அசுப வீடுகளில் இருத்தல் (6, 8, 12 வீடுகள்).

அசுப கிரக தொடர்பு மட்டும் பெறுதல்.

அஸ்தங்கம் அடைந்தல். (சூரியனுக்கு 10 டிகிரி தூரத்தில் இருத்தல்).

இப்படியான நிலைகள் பாதகமாகும்.

வெளிநாடு செல்வது பலவித காரணங்களுக் காக அமையலாம். உத்தியோகம், தொழில், மேற்படிப்பு, மருத்துவ சிகிச்சை போன்றவற்றுகாக வெளிநாட்டு பயணம் அமையலாம்.

9-ம் வீட்டு அதிபதியின் தொடர்பு ஜாதகத்தில் அமையும் நிலையைப் பொறுத்து, ஜாதகர் எதற்காக வெளிநாடு செல்ல நேரிடும் என்பதை அறிந்துகொள்ள முடியும்.

பத்தாம் வீட்டுடன் தொடர்பு எனில் உத்தி யோகம் காரணமாகும்.

ஏழாம் வீட்டு தொடர்பு எனில் தொழில் அபிவிருத்திக்காக செல்வார்.

நான்காம் வீட்டு தொடர்பு எனில், அந்த ஜாதகர் மேல் படிப்புக்காக வெளிநாடு செல்வார்.

ஆறாம் வீட்டு தொடர்பு எனில், ஜாதகர் அரசாங்கம் தொடர்பான பணிகளுக்காக வெளி நாடுகளுக்குப் பயணிப்பார்.

பன்னிரண்டாம் வீடு தொடர்பு எனில், ஜாதகர் மருத்துவச் சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும் நிலை ஏற்படும்.

ஜோதிட சாஸ்திரம் கூறும் பலாபலன்கள் இப்படியெனில், வெளிநாடு செல்லும் வாய்ப்புகள், காரண காரியங்கள் குறித்து ரேகை சாஸ்திரம் மூலமும் உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என்பது ஜோதிட மேதை ஷீரோவின் கருத்தாகும்.

‘வெளிநாட்டு யோகம் உண்டா?’

ரேகைகள் சொல்லும் விளக்கங்கள்

சுண்டு விரலுக்கு நேர் கீழே, மணிக்கட்டுக்கு மேலே அமையும் இடம் சந்திர மேடு. இந்த மேட்டில் தோன்றி, நேர் எதிரே கிளம்பிச் செல்லும் கிளை ரேகைகள் மூலம் வெளிநாடு பயணத்தை அறிந்துகொள்ளலாம்.

சுட்டுவிரலின் அடிப்பகுதியிலிருந்து புறப்பட்டு, அரை வட்டவடிவமாக கீழ்நோக்கி மணிக்கட்டு வரை செல்லும் ரேகையே ஆயுள்ரேகை ஆகும். இந்த ரேகைக்கு இணையாக அதன் அருகில் கிளை ரேகை அமைந்திருந்தால், வெளிநாட்டுப் பயணம் ஸித்திக்கும்.

மணிக்கட்டின் குறுக்கே அமையும் ரேகையே கங்கண ரேகை. இந்த ரேகையின் மேற்புறத்திலிருந்து மேல் நோக்கி செல்லும்படியாக கிளை ரேகைகள் அமைந்திருப்பின், வெளிநாட்டு யோகம் நிச்சயம் உண்டு.

மேற்கூறிய கிளை ரேகை அமைப்புகளில் நட்சத்திரக் குறி இருந்தால் வெளிநாடு பயணம் வெற்றிகரமாக இருக்கும். மாறாக வட்டக் குறி, தீவுக்குறி, சதுரக்குறி, பெருக்கல் குறி போன்றவை தென்பட்டால், வெளிநாட்டுப் பயணங்களில் சங்கடங்களை எதிர்நோக்கலாம் என்றும் அறியப்படுகிறது.