Published:Updated:

பாலர் தோஷம் போக்கும் பைரவ வழிபாடு

பைரவ வழிபாடு
பிரீமியம் ஸ்டோரி
News
பைரவ வழிபாடு

கே.குமாரசிவாச்சார்யார்

ஒரு குழந்தை எந்தவிதமான குறைபாடு களும் இல்லாமல் ஆரோக்கியமாகப் பிறக்க வேண்டுமானால், பெற்றோர்களின் ஜனன ஜாதகத்தில் சத்புத்திரயோகம் இருக்க வேண்டும்.

அப்படியில்லாமல் கருவில் உருவான குழந்தை கை கால்கள் ஊனத்துடனோ, மன வளர்ச்சி இல்லாமலோ பிறக்கும் நிலையில், பெற்றோர்களுக்கும் பிள்ளைக்கும் பாலாரிஷ்டம் உள்ளதென்று சொல்லலாம். பால - குழந்தைப் பருவம்; அரிஷ்டம் - நோய் என்று பொருள்.

பாலர் தோஷம் போக்கும் 
பைரவ வழிபாடு

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

குழந்தை பிறக்கும்போது ஏற்படக்கூடிய உடல் குறைபாடு மற்றும் மனவளர்ச்சிக் குறைபாடு மட்டும்தான் பாலாரிஷ்ட தோஷம் என்பது இல்லை. வளரும் பருவத்தில் விபத்து மற்றும் அதிர்ச்சிகளின் காரணமாக ஏற்படக்கூடிய உடல் குறைபாடு, மனச்சிதைவு போன்றவற்றுக்கும்கூட காரணம் பாலாரிஷ்ட தோஷம்தான்.

பாலாரிஷ்ட தோஷத்துக்கான அறிகுறிகள்...

 சுய நினைவில்லாமலும் பால் குடிக்காமலும் அழாமலும் அமைதியாக இருத்தல்.

 கண்கள் செருகியது போன்று இருத்தல். கால்கள் மடங்கி, உட்கார முடியாமல் கஷ்டப்படுதல்.

 வயிற்றுப் பக்கம் சுருக்கமாகி, உடல் அமைப்பு வளைந்திருப்பது போல காணப்படுதல்.

 சுயநினைவு இல்லாமல், பால் அருந்தாமல், பிரக்ஞை இல்லாமல் படுத்துக்கிடக்கும் நிலை.

 மூன்று மாதங்கள் ஆன பிறகும் இமைகளைத் திறக்காது, கண்களில் வெண்மையாகக் காணப்படுதல்.

 வாய் பேச இயலாமை, காது கேளாமை.

 கைகள் இல்லாமல், காதுகள் உள்சுருங்கி, தலை பள்ளமாகி அமைந்திருத்தல்.

இவ்வாறு இன்னும் 76-க்கும் மேற்பட்ட பாலாரிஷ்ட தோஷங்கள் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

பாலர் தோஷம் போக்கும் 
பைரவ வழிபாடு

பொதுவாக, பாலாரிஷ்ட தோஷங்களில் 1. அங்க ஹீன பாலாரிஷ்ட தோஷம், 2. ஜன்ம அரிஷ்டம், 3. சந்ததி விருத்தியா பாலாரிஷ்ட தோஷம் என மூன்று வகைகள் இருக்கின்றன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இதுபற்றி கவலைபடவேண்டியதில்லை. உரிய பரிகாரங்களைச் செய்து பலன் பெற முடியும்.

பாலாரிஷ்டம் வரும் கிரக நிலைகள்

சூரியன், புதன், கேது, சிம்மத்தில் அமர்ந்து குரு நீசம் பெற்றிருந்தாலும், நவாம்சத்தில் குருவும் கேதுவும் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் இருந்தாலும், புதனும் குருவும் 12-ல்; ஞானகாரகன் கேது 5-ம் இடத்தில் இருந்தாலும் இந்நிலை ஏற்படக்கூடும்.

பாலர் தோஷம் போக்கும் 
பைரவ வழிபாடு

புத்திரகாரகனான குரு, பெற்றோர்களது ஜனன ஜாதகத்தில் பலவீனமாக அமைந்தாலும் குழந்தைக்குப் பாலாரிஷ்ட தோஷ நிலை தாக்கக் கூடும் என்கின்றன ஜோதிட விதிகள்.

பாலாரிஷ்ட தோஷம் நீங்க...

சிசுவின் ஜனன ஜாதகத்தில் ஆயுள் காரகனாகிய சனியின் அஷ்டவர்க்கம்வரை உள்ள ஸ்தான நிலை, குழந்தையின் தசாபுக்தி காலம் என்ன, நட்சத்திரப்படி கோள்களின் அசைவுகள் என்ன சொல்கின்றன, குழந்தை பிறந்தபோது பெற்றோருக்கு நடைபெற்ற தசா காலம்... இவற்றுக்குத் தக்கபடி, செய்ய வேண்டிய பரிகாரங்கள் உள்ளன. சூரிய தசை - ராகு, கேது புக்திகளில் அதற்குரிய பூஜா க்ரமங்களைச் செய்துவிட வேண்டும்.

செவ்வாய் தசையில் ராகு அல்லது கேது புக்தி, சனி தசையில் ராகு அல்லது கேது புக்தி, ராகு, கேது தசையில் புதன் புக்தி போன்ற காலங்களில் பாலாரிஷ்ட பாதிப்புக்குள்ளான குழந்தைகள் கடுமையான சோதனைகளைச் சந்திக்க நேரிடும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரட்சை சக்கரம்
ரட்சை சக்கரம்

வழிபடும் முறை

குழந்தை பிறந்த நட்சத்திர தினத்தன்று (கரி நாள் இல்லாத) அல்லது சனி, செவ்வாய்க்கிழமைகளில் உன்மத்த பைரவரை அவருடைய சக்தி தேவியான வராஹியுடன் சேர்த்து வழிபட வேண்டும்.

இரண்டு தெய்வங்களையும் கலசத்தில் வர்ணித்து, ஒன்பது செங்கற்களால் யக்ஞ மண்டலமிட்டு, 108 யாகக் கூட்டுப் பொருளால் உன்மத்த பைரவ மூர்த்தியை அவரது காயத்ரி மற்றும் மூலமந்திரத்தால் விசேஷ ஆவர்த்தி செய்து, பெற்றோர் மடியில் குழந்தையை வைத்து கலச நீரை மங்கல ஸ்நானம் செய்துவிட வேண்டும். பராக்கியம், வாருண பத்ததி ஆகிய நூல்களில் அசிதாங்க பைரவர், குரு பைரவர், சண்ட பைரவர், குரோத பைரவர் வரிசையில், உன்மத்த பைரவர் 5-வது மூர்த்தியாக வீற்றுள்ளார்.

முதலில் விக்னேஸ்வர பூஜை, குரு வந்தனத்தைச் செய்த பிறகு, ‘மமபுத்திர பாலாரிஷ்ட தோஷ நிவாரணார்த்தம் ஆரோக்ய திடகாத்ரதா சித்யர்த்தம், பாலக்ரஹ துர்தசாகால சாந்தியர்த்தம், பாலஹிஷ்ட நிக்ரஹ ப்ரார்த்தனா காலே உன்மத்த பைரவ பூஜாம் கரிஷ்யே!’ என்று சங்கல்பம் செய்து, கலசத்தில் பைரவரை வரிக்கவும். தொடர்ந்து...

`ஓம் உன்மத்த பைரவாய நம:

ஓம் பூதபாவநாய நம:

ஓம் க்ஷேத்ர பாலாய நம:

ஓம் கால சமனாய நம:

ஓம் த்ரிநேத்ராய நம:

ஓம் அரிஷ்ட நிக்ரஹாய நம:

ஓம் கங்கானாய நம:

ஓம் வராஹி சக்தி சகிதாய நம:

ஓம் கட்க பாணினே நம;

ஓம் பசுபதயே நம: ஓம் சாந்திதாய நம:

ஓம் நாகஹாராய நம:

ஓம் வைத்யாய நம:

ஓம் துஷ்டபூத நிவேவிதாய நம:

ஓம் சர்வாபத்தாரணாய நம;

ஓம் அஷ்ட மூர்த்தயே நம: என்று அர்ச்சனை செய்து, கை கூப்பியபடி தியான மந்திரம் கூறுக.

அருள்மிகு உன்மத்த பைரவ தியானம்

த்ரிநேத்ரம் வரதம் சாந்தம் குமாரஞ்ச திகம்பரம்

ஹேம வர்ணம் மகாதேவம் அஸ்வவாஹன சுஸ்திதம்

கட்கம் கபாலம் முசலம் ததந்தம் கேடகம் ததா

வராகி சக்தி சகிதம் வந்தே உன்மத்த பைரவம்:

இந்த மூலமந்திரத்தால் எளிய யாக முறை செய்து, தூப தீபம் காட்டி மிளகு வடை, பேரீச்சம்பழம், மிளகு சாதம், கொண்டைக்கடலை சுண்டல், தயிர் சாதம், கறிவேப்பிலை சாதம் இவற்றில் ஏதேனும் ஒன்றை நிவேதனம் செய்து, ஆரத்தி செய்ய வேண்டும்.

பாலாரிஷ்ட ரட்சை ஒன்றை கலசம் நடுவில் செய்து வைத்து, அதில் ஜவ்வாது புனுகு தடவவும்.

பூஜை முடிந்ததும் `ஓம் ------------ (குழந்தை பெயர்) பாலகம் ரக்ஷ: ரக்ஷ:’ என்று 108 முறை ஜபம் செய்ய வேண்டும். பிறகு, கீழ்க்காணூம் பாடலை மூன்று முறை சொல்லி வணங்கி, கலச நீரில் பெற்றோரும் குழந்தையும் குளித்தல் வேண்டும்.

தெருட்கபரு நலன வாவித்

தீவிர தலத்துற்றோர்க்கு

மருட்பெரு மாயை நூறி வல்வினைப் படலங்கீறி

கருட்பெருங் கொடிய துக்க நிவர்த்தியும்

அகத்தின் பேறும்

அருட்பெருஞ்செயலா நல்கும் வடுகனை

அடைந்து வாழ்வாம்.

பாலாரிஷ்ட ரட்சை செய்முறை

பனை ஓலையிலோ, தாமிரத் தகட்டிலோ இந்த ரட்சையைச் செய்யலாம். பனை ஓலையில் செய்வதானால் குங்குமப்பூ, கோரோசனை, பச்சைக் கற்பூரத்துடன் ஊமத்தை இலைச்சாறு விட்டுக் குழைத்து ரட்சைச் சக்கரத்தை குழந்தையின் நட்சத்திர நாளில் எழுதிக்கொள்ள வேண்டும்.

அன்றே, உன்மத்த பைரவரை தியானித்து பூஜை செய்து, வெள்ளி தாயத்தின் உள்ளே சக்கரத்தை வைத்து கழுத்திலோ, இடுப்பிலோ கட்டி விட வேண்டும். இதன் பலனாக, மன வியாதி, மந்த நிலை ஆகியன விரைவிலேயே விலகி குழந்தை ஆரோக்கியம் பெறும்.

ஜோதிடச் சொற்கள்...

ஜோதிட விளக்கங்களில் சில சொற்கள் அதிகளவு பயன்படுத்தப் படும். ஆனால், ஜோதிடம் அறிந்தவர்களைத் தவிர மற்றவர்களுக்கு அவற்றுக்கான பொருள் தெரியாது. அவர்களுக்காகச் சில ஜோதிட சொற்களும் பொருளும் இங்கே...

அபிஜித்: மூன்று நட்சத்திரங்களால் பிரதிநிதித்துவப் படுத்தப் படுகிறது. இவற்றில் வேகா எனும் நட்சத்திரம் ஒன்றாகும். இது, வடவரைக் கோளத்திலுள்ள ஒளிமிக்க நட்சத்திரமாகும். உத்திராட நட்சத்திரத்தின் 4-வது பாதம் மற்றும் திருவோணத்தின் முதல் பாதத்தில் - பதினைந்தில் ஒரு பங்கு அளவில் உள்ளது.

பாலர் தோஷம் போக்கும் 
பைரவ வழிபாடு

அனுஜன்ம நட்சத்திரம்: ஜன்ம நட்சத்திரத்திலிருந்து 10-வது நட்சத்திரம். உதாரணமாக அசுவினிக்கு அனுஜன்ம நட்சத்திரம் மகம்.

உச்சபலம்: கோள்களின் முழுமையான நற்சக்திகள் வெளிப்படும் ராசி அமைவு நிலை.

உப கிரகங்கள்: குறுங்கோள்கள், கண்ணுக்குத் தெரியாத கோள்கள் மற்றும் துணைக் கோள்கள். தூமன், வியதிபாதன், பரிவேடன், இந்தரதனுசு போன்றவை.

ஏகாதிபத்தியம்: சூரியன், சந்திரன் தலா ஒரு வீட்டுக்கு மட்டும் அதிபதியாக இருப்பது.

ஓரை: ராசி உதயம் முதல் ஒரு மணி நேரத்தினை இரண்டு சரிபாதி யாகப் பிரித்து, அது ஆண் ராசியாக இருந்தால் முதல் பாதியைச் சூரியனும் இரண்டாம் பாதியை சந்திரனும் ஆள்கிறார்கள். பெண் ராசிகளின் முதல் பாதியைச் சந்திரனும் 2-ம் பாதியை சூரியனும் ஆள்கிறார்கள். சூரியன் ஆள்வதைச் சூரிய ஓரை என்றும், சந்திரன் ஆள்வதைச் சந்திர ஓரை என்றும் சொல்வர்.