தொடர்கள்
Published:Updated:

சனிப்பெயர்ச்சி பரிகாரங்கள்!

சனிப் பெயர்ச்சி பரிகாரங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
சனிப் பெயர்ச்சி பரிகாரங்கள்

திருக்கணித சனிப்பெயர்ச்சி பரிகார வழிபாடுகள் ஜோதிடர் பாரதிஶ்ரீதர்

ஒன்பது கிரகங்களில், சனி பகவானும் ஒருவர். சனைச்சரன் என்றும், மந்தன் என்றும் குறிப்பிடுவர். ‘சனை’ என்றால் மெள்ள, அதாவது மெதுவாக என்று அர்த்தம். ஒரு ராசியில் தனது பயணத்தைச் சுமார் இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்கிறார் சனி பகவான். மற்ற கிரகங்களைவிட இவருடைய பயணம் மெதுவாக இருப்பதால், சனைச்சரன் என்ற பெயரே பொருந்துகிறது இவருக்கு!

ஜோதிடர் பாரதிஶ்ரீதர்
ஜோதிடர் பாரதிஶ்ரீதர்
சனிப்பெயர்ச்சி பரிகாரங்கள்!

விண்வெளியில் சனி பகவான் பயணிக்கும் பாதை, எல்லா கிரகங்களையும் தாண்டி இருக்கும். விண்வெளியில் வெகு தொலைவில் இருப்பவர், இவர்! சனி பகவானைக் கடந்து இருப்பது நட்சத்திர மண்டலம். அவரிடமிருந்துதான் கிழமைகளின் தோற்றமும் வரிசைகளும் உருவாயின.

ராசி மண்டலத்தை ஒருமுறை வலம் வருவதற்கு, சனி பகவானுக்கு 30 வருடங்கள் தேவை. அதாவது, ஒருவரது வாழ்நாளில், சனி பகவான் மூன்று முறை வலம் வருகிறார். முதல் வலத்தை மங்கும் சனி; அடுத்ததைப் பொங்கும் சனி; மூன்றாவதை போக்கு சனி என்பர்!

சூரியன் ஆன்மா; சந்திரன் மனம். ஆன்மா மற்றும் மனம் இரண்டுடனும் இணைந்திருப்பவர் சனி பகவான். சூரியனின் ‘சாரம்’ சனி; சூரியனிடமிருந்து வெளிவந்தவர்; சூரியனின் புதல்வன் என்றும் ஜோதிடம் தெரிவிக்கிறது. அப்பாவின் சாரம், பிள்ளையாக உருவெடுத்தது என்கிறது வேதம். மனதுடன் தொடர்புகொண்டவர் சனி. மனதுள் உறைந்திருக்கும் சிந்தனையைத் தட்டி எழுப்பிச் செயல்பட வைக்கிற தமோ குணம் அவரிடம் உண்டு.

ஆன்மா ஒன்று; மனமும் ஒன்று. ஆகவே, 12 ராசிகளில் சூரியன் சந்திரன் ஆகிய இருவருக்கும் ஒரு வீடு மட்டுமே உண்டு. புலன்கள் இரண்டாக இருப்பதால், மற்ற ஐந்து கிரகங்களுக்கும் இரண்டு வீடுகள் இருக்கும். அந்த வகையில் மகரத்துக்கும் கும்பத்துக்கும் சனி அதிபதியாக அமைந்துள்ளார்.

`சனி’ என்றதுமே எல்லோருக்குள்ளும் ஒருவித பயம் எழும். அது தேவையில்லை. அவர் ஒரு நீதிதேவனாக நம் வினைகளுக்கு ஏற்ற பலன்களைத் தந்து நல்வழிப்படுத்துபவர். நாம் எதற்காக இந்தப் பூமிக்கு வந்தோம், நம் இலக்கு எது என்பதை நமக்கு உணரவைப்பவர்.

வாழ்க்கையில் சகலவிதமான பிரச்னைகளையும் எதிர்கொள்ளும் வல்லமையையும் அனுபவத் தையும் தருவாறே தவிர, எந்தச் சூழலிலும் ஒரு மனிதனைக் கீழே போகச் செய்யமாட்டார்.

சித்தர்கள், ஆன்மிகவாதிகள், கடைநிலை ஊழியர்கள், தொண்டர்கள், சமூக சேவகர்கள், பொதுத்துறை நிறுவனங்களின் வழியாக மக்கள் சேவை ஆகியவற்றுக்குக் காரணகர்த்தாகத் திகழ்பவரும் சனி பகவானே.

சனிப்பெயர்ச்சி பரிகாரங்கள்!

கரம், கும்பம் ஆகிய இரண்டு லக்னங்களுமே சனியின் ஆட்சி வீடுகள். அருகிலேயே இருக்கும் இரண்டு லக்னங்களில் ஆட்சி பெறும் கிரகம் சனி மட்டுமே. துலாம் ராசியில் உச்சமடையும் இவர், மேஷ ராசியில் நீசம் அடைகிறார்.

ஒருவரின் ஜாதகத்தில் சனி நீசம் அடைவது ஒருவிதத்தில் யோகப் பலனாகவே பார்க்கப்படுகிறது. கடினமான உழைப்பையும் அலைச்சலையும் தரக்கூடிய கிரகம். இவர் நீசம் அடைந்து பலமிழந்து போனால், அந்த ஜாதகர் சொகுசான வாழ்க்கையைப் பெறும் வாய்ப்பைப் பெறுவார். சனி நீசமாகி குருவின் பார்வை பெற்ற பலர், கோடீஸ்வரர்களாக இருக்கிறார்கள்.

கருப்புத் தானியங்கள், பெட்ரோல், சினிமா போன்றவற்றுக்கும் சனியே காரகத்துவம் பெறுகிறார். ஜாதகத்தில் சனிபகவான் வலு குறைந்திருந்தால், ஜாதகருக்கு ஆயுள் குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஜாதக பலன்களைக் காண்பதற்கு லக்னத்தை முதன்மையாகச் சொல்வது போன்று, கோசார பலன் காண்பதற்கு ஜாதகத்தில் சந்திரன் நின்ற ராசியை முதன்மையாகக் கொண்டு பலன் சொல்ல வேண்டும். அவ்வகையில் சனி ராசிக்கு 12, 1, 2 ஆகிய இடங்களில் வரும் காலத்தை `ஏழரைச் சனி’ என்கிறோம்.

சனி பகவான் ராசிக்கு 4-ம் இடத்துக்கு வரும்போது அர்த்தாஷ்டம சனி ஆகும்; 7-ம் இடத்துக்கு சனி வந்தால், கண்டச் சனி; 8-ல் வரும்போது அஷ்டமச் சனி என்ற நிலை உண்டாகும்.

கோசாரப்படி சனி பகவான் 5, 9, 10 ஆகிய இடங்களுக்கு சனி வரும் காலத்தை, சனி பகவானால் மத்திம பலன்கள் ஏற்படும் காலமாகச் சொல்லலாம். அவர் 3, 6, 11-ம் இடத்துக்கு வரும் காலத்தில் யோக பலன்கள் கூடிவரும்.

இந்த அடிப்படையில், (திருக்கணிதப்படி) நிகழவுள்ள சனிப் பெயர்ச்சியில்... தனுசு ராசிக்கு 3-ம் இடத்துக்கும், கன்னி ராசிக்கு 6-ம் இடத்துக்கும், மேஷ ராசிக்கு 11-ம் இடத்துக்கும் பெயர்ச்சியாகும் சனி பகவான், இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை அருள் வார் என எதிர்பார்க்கலாம்.

துலாம் ராசிக்கு ஐந்திலும், ரிஷபத்துக்கு 10-ம் இடத்திலும், மிதுனத்துக்கு 9-ம் இடத்திலும் சனி பகவான் வருகிறார். இந்த மூன்று ராசிகளுக்கும் மத்திம பலன்கள்; கடந்த காலத்தைவிட சுபபலன்கள் உண்டாகும்.

கடக ராசிக்காரர்களுக்கு அஷ்டமச் சனி, சிம்ம ராசிக் காரர்களுக்கு கண்டச் சனி, விருச்சிக ராசிக் காரர்களுக்கு அர்த்தாஷ்டமச் சனி, மகர ராசிக்காரர்களுக்குப் பாதச் சனி எனும் நிலை ஏற்படுகிறது. மீன ராசிக்காரர்களுக்கு ஏழரைச் சனி ஆரம்பம். இந்த ராசிக் காரர்கள் பரிகாரம் செய்வது சிறப்பு. அதற்காக பயமோ, பதற்றமோ தேவையில்லை. சனி பகவானை உரிய முறையில் வழிபட்டு, சங்கடம் நீங்கப் பெறலாம்.

பரிகாரங்கள்... வழிபாடுகள்...

னிக்கிழமை விரதம் இருந்து, எள் எண்ணெய் தேய்த்து ஸ்நானம் செய்து, சனிபகவானுக்கு உகந்த எள் எண்ணெய் விளக்கிட்டு, எள் சாதம் படைத்து, சனி கவசம் ஓதி வழிபடுவது சிறந்த பரிகாரமாகும்.

வெள்ளிக்கிழமை இரவு, எள் தானியத்தை கரும்பட்டுத் துணி அல்லது கருமை நிற காகிதத்தில் வைத்து மடித்துத் தலையணைக்குக் கீழ் வைத்து படுத்துறங்கவும். மறுநாள் காலையில் எள் எண்ணெய் தேய்த்துக் குளித்து, முதல்நாள் மடித்து வைத்த எள்ளை வடித்த சாதத்தோடு கலந்து நைவேத்தியம் செய்து காக்கைக்கு வழங்க நன்மை ஏற்படும்.

வெள்ளிக்கிழமைதோறும் அதிகாலை நீராடி அருகம்புல் மாலை சாற்றி, அரசமர பிள்ளையாரை சுற்றி வந்து முறையாக வழிபட்டால் சீரும் சிறப்பும் நாடி வரும். சங்கடஹர சதுர்த்தி தினத்தில், விநாயகப் பெருமானுக்கு எட்டு சிதறு தேங்காய்களை உடைத்து வழிபட்டால், சனியின் பாதிப்புகள் குறையும்.

சனிபகவானின் தானியம் எள். அந்த எள் எண்ணெயில் (நல்லெண்ணெய்) அவருக்கு விளக்குப் போடுவது நன்மைகள் பலவற்றைத் தரும். சனீஸ்வரருக்கு எள் சாதம் சமர்ப்பிப்பதும் காகத்துக்கு எள் சாதம் வைப்பதும் உன்னதமான பரிகாரங்கள்.

சனிபகவானுக்கு உகந்த நாளான சனிக்கிழமை அன்று விரதம் கடைப்பிடித்தால், நீண்ட ஆயுளுடன் வாழலாம். வாரம்தோறும் சனிக் கிழமைகளில் பெருமாள் ஆலயங்களுக்குச் சென்று வழிபடுவதும், விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வதும் சிறந்த பலனைப் பெற்றுத் தரும்; சனி தோஷ பாதிப்புகள் குறையும்.

சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷ புண்ணிய தினத்தில், சிவா லயங்களில் வில்வ இலையால் அர்ச்சனை செய்து வழிபடுவது மிகவும் சிறப்பு.

இயன்றபோதெல்லாம் அனுமனுக்கு வடைமாலை சாத்தி, துளசி மாலை அணிவித்து, வெண்ணெய் அர்ப்பணித்து வழிபட்டு வந்தால், பாதிப்புகள் நீங்கும். சனிக்கிழமையில் வடைமாலை சாற்றுவது விசேஷம். அதேபோன்று நளபுராணம் படிப்ப தாலும், நேரம் கிடைக்கும்போதெல்லாம் ராம நாமத்தை உச்சரிப்பதாலும் பாதிப்புகள் நீங்கி பயன் அடையலாம்.

அன்றாட வாழ்வில் சந்திக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவை யான உதவிகளைச் செய்தும் சனி பகவானின் அருளை மிகப்பெரிய அளவில் பெறலாம். அதுவே ஆகச்சிறந்த சனி ப்ரீத்தியாகவும் அமையும்.

சனிப்பெயர்ச்சி பரிகாரங்கள்!

சனைச்சரர் திருத்தலங்கள்

திருச்சி- உறையூர் வெக்காளி அம்மன் திருக்கோயிலில் தனிச் சந்நிதி கொண்டு, நின்ற நிலையில் கிழக்கு நோக்கி அருள் புரியும் சனி பகவான், பொங்கு சனியாக அருள்கிறாராம்.

விழுப்புரம்- திருக்கோவிலூர் சாலையில் விழுப்புரத்திலிருந்து சுமார் 15 கி.மீ. தூரத்தில் உள்ளது கல்பட்டு கிராமம். இங்குள்ள சுயம்பிரகாச ஆசிரமத்தில், நின்ற கோலத்தில் பிரமாண்ட வடிவில் சனீஸ்வரன் அருள் புரிகிறார்.

தென்காசி- மதுரை சாலையில் தென்காசியிலிருந்து சுமார் 10 கி.மீ. தூரத்தில் உள்ளது இலத்தூர். இங்குள்ள ஶ்ரீமதுநாதர் சமேத ஶ்ரீஅறம்வளர்த்த நாயகி கோயிலில் தனிச் சந்நிதியில் எழுந்தருளியுள்ள சனி பகவான், அபய ஹஸ்த முத்திரையுடன் காட்சி தருகிறார்.

கும்பகோணம் அருகில் உள்ள சூரியனார்கோவிலில் சனி பகவான் மனைவியர் இருவருடன் தனிச் சந்நிதியில் அருள்கிறார். இங்கு இவருக்கு வாகனம் இல்லை.

மயிலாடுதுறை அருகில் உள்ள கூறைநாடு எனும் ஊரில்,  ஶ்ரீபுனுகீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இங்கு சனி பகவானுக்கு தனி விமானம், தனி கும்பம், தனிச் சந்நிதி உண்டு. இவர், இங்கு சிவப்பு நிறக் கல்லில் காட்சி தருகிறாராம்.

கும்பகோணம்- கதிராமங்கலம் சாலையில் உள்ளது திருக் கோடிக்கா எனும் திருத்தலம். இங்குள்ள திருக்கோயிலில் சனி பகவான் பால சனீஸ்வரராக காட்சி தருகிறார்.ஏழரைச் சனி காலத்தில் புதிய சொத்துகள் வாங்கலாமா?

ஏழரைச்சனி நடக்கும் காலத்தில் தாராளமாக வீடு- மனை வாங்கலாம். இரண்டாவது சுற்றுச் சனியை ‘பொங்கு சனி’ என்பார்கள். ஜாதகரது அடிப்படைத் தேவைகளை‌ப் பூர்த்தி செய்வதுதான் இவரது வேலை. திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, மனை, வாகன வசதிகள் என எல்லாவற்றையும் இந்த பொங்கு சனி கொடுப்பார். அதனால் தைரியமாக வீடு- மனை வாங்கலாம்.

அதேநேரம் முன்வினைப் பலன்கள் பாதகமாக இருந்தால், அத்தகைய அன்பர் களுக்குப் பொருள் இழப்புகள் ஏற்படலாம். எனவே பிளாட் அப்ரூவல், வில்லங்க சர்ட்டிஃபிகேட் போன்ற விஷயங்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்பதை ஒருமுறைக்கு இருமுறை கவனமாகப் பார்த்துக்கொள்வது அவசியம்.

சனி பகவான் கொடுத்த இரண்டு வரங்கள்!

கும்பகோணத்துக்குத் தெற்கே சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள வைணவத் தலம் திருநறையூர். இங்கு ஶ்ரீநிவாசப் பெருமாள் கோயில் மற்றும் சித்தநாத சுவாமி ஆலயம் ஆகியவற்றுக்கு இடையே அமைந்துள்ளது ஶ்ரீபர்வதவர்த்தனி உடனுறை ஶ்ரீராமநாத ஸ்வாமி திருக்கோயில்.

இந்தக் கோயிலில் சனிபகவான் தன் மனைவியர் மந்தாதேவி- ஜேஷ்டாதேவி மற்றும் மகன்கள் மாந்தி-குளிகன் ஆகியோ ருடன் குடும்ப சமேதராக- மங்கல சனியாக அருள்புரிகிறார். `ரோஹிணி சகட பேதம்’ எனும் நிலையால் உண்டாகக்கூடிய கடும் பஞ்சத்தைத் தவிர்க்கும் வகையில் சனி பகவானை விசேஷ ஸ்லோகம் கூறி வழிபட்டார் தசரதர். அவரிடம் ‘‘திருநறையூர் வந்து என்னை வழிபட்டால், நான் மங்கல சனியாக தரிசனம் தந்து, மகத்தான இரண்டு வரங்கள் தருகிறேன்!’’ என்றார்.

அதன்படிதிருநறையூருக்கு வந்து வழிபட்ட தசரதருக்குக் குடும்ப சமேதராகக் காட்சி தந்த சனீஸ்வரர், இரண்டு வரங்கள் தந்தார். `ரோஹிணி சகட பேதம் காலத்தில் எவருக்கும் எவ்வித கஷ்டமும் கொடுப்பதில்லை’ என்பது முதல் வரம். `இந்த ஆலயத்துக்கு வந்து என்னை தரிசிப்போருக்கு மற்ற எட்டு கிரகங்களால் ஏற்படும் தீய பலன்களை முற்றிலுமாக நீக்குவேன்’ என்பது இரண்டாவது வரம்.

இந்த ஆலயத்தில் சனீஸ்வரர் தம்பதி சமேதராக அருள, அருகில் தசரதரும் கைகூப்பிய படி காட்சி தருகிறார். இங்குள்ள சனி பகவானுக்கு பாலபிஷேகம் செய்தால், உடம்பிலிருந்து வழியும் பால் நீல வண்ணத்துடன் வழிவது அதிசயம். இந்த சனீஸ்வரரை தரிசிக்க சகல விதமான சனிதோஷ பாதிப்புகளும் விலகும்.

விசாக நட்சத்திரத்தில் சனீஸ்வர தரிசனம்!

துரை மாவட்டத்தில் உள்ள சோழவந்தான் கிராமத்தில் வைகை ஆற்றின் கரையோரம் அமைந்திருக்கிறது, சோழவந்தான் படித்துறை சனீஸ்வரர் ஆலயம்.

இங்கே, மாவிலங்க மரத்தடியில் சுத்தம் செய்துகொண்டிருந்த பாலகன் ஒருவன் மூலம் வெளிப்பட்ட சனீஸ்வரர் திருமேனியைப் பிரதிஷ்டை செய்து, காஞ்சி மகாபெரியவரின் வழிகாட்டுதலைப் பெற்று ஆலயம் அமைத்தார்களாம். இங்கு அருளும் சனி பகவான் அனுமனைப் போன்று கையில் கதாயுதம் வைத்திருப்பது விசேஷம். பக்தர்களின் துன்பங்களை கதாயுதம் கொண்டு விரட்டி அடிப்பார் என்பது நம்பிக்கை. இங்கு அன்னதானம் செய்யும் பக்தர்களின் வாழ்வில் குறைகள் நீங்கும்; நினைத்த காரியங்கள் கைகூடும் என்பது நம்பிக்கை. குழந்தையின்மை, சொத்துப் பிரச்னை, உறவுச் சிக்கல்கள், வறுமை போன்ற சகலவிதமான துன்பங்களையும் நீக்கும் அனுக்கிரக மூர்த்தியாக படித்துறை சனீஸ்வரர் அருள்கிறார்.

பகவான் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது ஒரு விசாக நட்சத் திர நாளில் என்பதால், விசாக நட்சத்திரக்காரர்கள் இங்கு வந்து வழிபட்டால் வினைகள் எல்லாம் தீரும். விசாக நட்சத்திர நாளில் இங்கு 11 வகை அபிஷேகங்கள் நடைபெறும். சனிக் கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த வைபவங்களில் கலந்து கொள்வது மிகவும் விசேஷம்!