திருக்கதைகள்
Published:Updated:

நீங்கள் இப்படித்தான்!

லக்ன பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
லக்ன பலன்கள்

லக்னப்படி உங்களின் எதிர்காலம் எப்படி?

நீங்கள் சொந்தத் தொழிலில் பிரகாசிக்க முடியுமா, முன்னேற்றம் எப்படி, வேலை வாய்ப்பு எந்தத் துறையில்... இதுபோன்று உங்கள் வாழ்க்கை சார்ந்த பல விஷயங்களை, உங்களின் குணாதிசயங்களை லக்னத்தின் அடிப்படையில் விளக்குகின்றன ஜோதிட நூல்கள். அவ்வகையில், 12 லக்னங்களைச் சேர்ந்த அன்பர்களுக்கான விளக்கங்கள் இங்கே...

நீங்கள் இப்படித்தான்!

மேஷ லக்னம்: மேஷம் செவ்வாயின் வீடு. இந்த லக்னத்துக்கு உரிய அதிபதி செவ்வாய். இது சூரியனின் உச்ச வீடு. இதில் பிறந்தவர்கள், மிகுந்த துணிச்சல் உடையவர்கள். நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் கொண்டவர்கள். கருமையான தலைமுடி, செவ்வரியோடிய கண்கள், மனம் திறந்து பேசவும் விவாதிக்கவும் செய்யும் பண்பு கொண்டவர்கள். ஆனால், பிடிவாத குணமும் கொண்டவர்கள். இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சூரியன், செவ்வாய், குரு ஆகியோர் யோகம் தரும் கிரகங்கள் ஆவர். இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் காவல், ராணுவம் போன்ற துறைகளில் பிரகாசிக்கக்கூடும்.

ரிஷப லக்னம்: இந்த லக்னத்தின் அதிபதி சுக்கிரன். சுக்கிரனை சுபிட்சத்துக்கு அதிபதி என்று சொல்வார்கள். ஒருவருக்கு தாம்பத்ய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க சுக்கிரனின் அருள் தேவை. இந்த லக்னத்துக்கு அதிபதி சுக்கிரன் என்பதாலும், இந்த ராசியில் சந்திரன் உச்சம் பெறும் அமைப்பாலும் இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் அழகும் மற்றவர்களைக் கவரும் தோற்றப்பொலிவும் கொண்டிருப்பார்கள்.

சாதுர்யமாகவும், மற்றவர்களைக் கவரும் வண்ணம் பேசுவதிலும் வல்லவர்களாக இருப்பார்கள். கலைகளில் ஆர்வமும் தேர்ச்சியும் கொண்டிருப்பதுடன் மற்றவர்களுக்கு வலியப் போய் உதவி செய்யும் குணம் கொண்டவர்களாகவும் திகழ்வர். இசை, சினிமா போன்ற துறைகளில் பிரசித்திபெற்று விளங்குவார்கள்.

மிதுன லக்னம்: இந்த லக்னத்தின் அதிபதி புதன். இதில் பிறந்தவர்கள் அழகான கண்களைக் கொண்டவர்களாக இருப்பார் கள். வளர்பிறை அஷ்டமிச் சந்திரனைப் போல் பரந்த நெற்றியும், நீண்டு கருத்த புருவமும் கொண்டவர்கள். இவர்களிடம் சற்றே பெண்மையின் நளினம் காணப்படும்.

சூழ்நிலைக்குத் தக்கபடி அனைவருடனும் இணக்கமாகவும் இனிமையாகவும் பழகும் பண்பு உள்ளவர்கள். உடலளவில் பலவீனமாக இருந்தாலும் மனதளவில் உறுதியானவர்கள். இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு அதிபதி புதன் என்பதால் பேச்சில் வல்லவர்களாக இருப்பார்கள். இவர்கள் பத்திரிகையாளர்களாகவும், எழுத்தாளர்களாகவும், கணக்குத் தணிக்கைப் பிரிவில் நிபுணர்களாகவும் புகழ் பெற்று விளங்க முடியும்.

கடக லக்னம்: கடகம் சந்திரனின் ஆட்சி வீடு. கடக லக்னத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களை அப்படியே நண்டுப் பிடியாகப் பிடித்துக்கொள்வார்கள். கூர்மையான பார்வை கொண்ட இவர்கள், விடாமுயற்சி, பிடிவாதம் கொண்டிருப்பார்கள். தெளிந்த அறிவும் சிந்திக்கும் திறனும் மிக்கவர்கள்.

இந்த லக்னத்தில் பிறந்தவர்களின் அதிபதியான சந்திரன் மனதுக்கு அதிபதி. ஆகவே, கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்குச் சந்திரன் நல்ல நிலையில் அமைந்திருக்கவேண்டும். இல்லையென்றால் மனம் எப்போதும் சஞ்சலத்தால் அலைபாய்ந்தபடி இருக்கும். பிறக்கும் போது மெல்லிய உடல மைப்பு கொண்டிருந்தாலும் நடுத்தர வயதில் உடல் பருக்கக்கூடும். இசையில் நாட்டம் கொண்டிருப்பார்கள். இவர்கள் பெரும்பாலும் அரசியலில் ஈடுபட்டு பொறுப்பான பதவி யில் அமர்ந்து புகழ் பெறக்கூடியவர்களாக இருப்பார்கள்.

சிம்ம லக்னம்: ராசிகளில் அரசன் என்ற பெருமைக்கு உரிய ராசி சிம்ம ராசி. இந்த லக்னத்தின் அதிபதி சூரியன். ஆத்மகாரகன் என்றும் பித்ருகாரகன் என்றும் போற்றப்படுபவர் சூரியன். இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் நடுத்தர, சற்றே தடிமனான உடலமைப்பைப் பெற்றிருப்பார்கள். வட்ட வடிவமான முகம் பெற்றிருப்பார்கள்.

இவர்கள், முன்கோபம் மிக்கவர்கள். அதேநேரம், நியாய தர்மத்துக்குக் கட்டுப்பட்டவர்கள். மற்றவர்களிடம் பணிந்து போக விரும்பாதவர்கள். நேரம் தவறாமையைக் கண்டிப்புடன் பின்பற்றுபவர்களாக இருப்பார்கள். தேவைக்கேற்ப பணம் இருந்த படி இருக்கும். இவர்கள் சுயமுயற்சியினால் மிக உயர்ந்த நிலையை அடைவார்கள். அரசாங்கத்தில் உயர் பதவி வகிப்பார்கள். சிலர் கலைத்துறையில் பெயரும் புகழும் பெற்று வாழ்வார்கள்.

கன்னி லக்னம்: கன்னி லக்னத்தில் பிறந்தவர்களின் அதிபதி புதன். கன்னி ராசியில் புதன் ஆட்சி மட்டுமல்ல உச்சமும் பெறுகிறார். இந்த லக்னத்தில் பிறந்தவர்கள், பெண்களைப் போன்றே அழகான தோற்றம் கொண்டிருப்பார்கள். நினைவாற்றல் மிக்கவர்கள். முதிய வயதிலும் இளமைத் தோற்றத்துடன் காணப்படுவார்கள்.

இவர்கள் பேச்சாற்றல் உள்ளவர்கள். பூமிக்கு வலிக்காதபடி மெதுவாக நடப்பார்கள். நடுத்தர உயரம் கொண்டிருப்பார்கள். அறிவுக்கூர்மை மிக்கவர்கள். மற்றவர்களிடம் அன்புடன் பழகும் குணம் கொண்டவர்கள். எவரையும் சார்ந்திருக்காமல் தனித்தன்மையுடன் செயல்படவே விரும்புவார்கள். சுயதொழிலில் முன்னேற்றம் காண்பார்கள். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர் களாகவும் புகழ் பெற முடியும்.

நீங்கள் இப்படித்தான்!

துலாம் லக்னம்: இந்த லக்னத்துக்கும் அதிபதி சுக்கிரன்தான். இவர்களுக்கு ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களின் இயல்புகள் ஓரளவு பொருந்திப் போகக்கூடும். தராசைப் போல் மற்றவர்களைச் சரியாக எடை போடுவதில் வல்லவர்கள். நீதி, நேர்மை ஆகியவற்றுக்குக் கட்டுப்பட்டு நடப்பர்; மற்றவர்களும் அப்படியே நடக்கவேண்டும் என்பதில் கண்டிப்பாக இருப்பார்கள். மற்றவர்களுக்குக்

கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதில் உறுதி யாக இருப்பார்கள். மற்றவர்கள் துன்பப்படும்போது தன்னால் ஆனமட்டும் அவர்களின் துன்பத்தைப் போக்க உதவி செய்வார். தராசின் ஏற்ற இறக்கம் போல் வாழ்க்கையில் பல பிரச்னைகளைச் சந்தித்து முன்னேற்றம் பெறுவார். எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் கொண்டிருப் பார்கள். அரசு நிர்வாகத்தில் சிறந்து விளங்குவார்கள்.

விருச்சிக லக்னம்: இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் செவ்வாயின் ஆதிக்கத்துக்கு உட்பட்டவர்கள். பிடிவாதக் குணம் மிகுந்தவர்கள். நடுத்தரமான உயரம் கொண்ட இவர்கள், எதையும் தெரியாதவர் போல் காட்டிக்கொண்டாலும், ஆகவேண்டிய காரியத்தில் குறியாக இருப்பார்கள். ஒளிவு மறைவு இல்லாமல் பேசும் சுபாவம் கொண்டவர்கள். கேலிப் பேச்சிலும் இவர்கள் வல்லவர்களே.

போட்டிகளில் பிறருக்கு விட்டுக்கொடுக்க மாட்டார்கள். எந்தக் காரியமாக இருந்தாலும் அதனால் தனக்கு என்ன ஆதாயம் என்று நினைத்தே செயல்படும் மனம் கொண்டவர்கள். கொஞ்சம்கூட சோர்வில்லாமல் உழைப்பார்கள். அரசாங்கத்தில் உயர்பதவி வகிக்கக்கூடிய வாய்ப்பு ஏற்படும். ராணுவத்தில் சேர்ந்து தேசத்துக்கு சேவை செய்யும் மனம் கொண்டவர்கள்.

தனுசு லக்னம்: தனுசு லக்னத்தில் பிறந்தவர்கள் குருவின் ஆதிக்கத்துக்கு உட்பட்டவர்கள். உயரமான உடலமைப்புப் பெற்றிருப்பார்கள். அதிகாரத் தோரணையுடன் நடந்துகொள்வார்கள். சுறுசுறுப் பாகச் செயல்படுவார்கள். பழக்க வழக்கங்களில் ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பவர்கள்.

குருவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால் இவர்களிடம் இயல்பாகவே தெய்வ பக்தி நிறைந்திருக்கும். தெளிந்த அறிவும் சீரிய சிந்தனையும் கொண்டிருப்பார்கள். உதவி என்று வருபவர்களுக்குத் தன்னால் முடிந்த உதவியைச் செய்யத் தயங்க மாட்டார்கள். சுகபோகங்களுடன் வாழ நினைப்பவர்கள். இவர்கள் எந்த இடத் தில் இருந்தாலும் தலைமைப் பொறுப்பில்தான் இருப்பார்கள். சிலர் தணிக்கைத்துறையில் புகழ் பெற்று விளங்குவார்கள்.

மகர லக்னம்: மகரம் சனியின் ஆட்சி வீடு. இந்த லக்னத்தில் பிறந்தவர் களுக்கு அதிபதி சனிபகவான். நடுத்தர உயரம் கொண்டவர்கள். நெற்றி பரந்து அகன்று காணப்படும். யானையைப் போன்று சிறிய கண்கள் அமைந்திருக்கும். மனதில் கள்ளமோ, சூழ்ச்சியோ இல்லாதவர்கள்.

கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய்யத் தயங்கமாட்டார்கள். எந்த ஒரு காரியமாக இருந்தாலும் விடாமுயற்சியுடன் போராடி முடிப்பார்கள். உழைக்கத் தயங்கமாட்டார்கள். எந்த நிலையிலும் தான் கொண்ட கொள்கையில் இருந்து விலகமாட்டார்கள். வாதம் செய்வதில் வல்லவர் களாக இருப்பார்கள். இந்த லக்னத்தில் பிறந்தவர்களில் சிலர், பத்திரிகை யாளர்களாகவும், எழுத்தாளர்களாகவும், வழக்கறிஞர்களாகவும் புகழுடன் திகழ்வார்கள்.

கும்ப லக்னம்: இந்த லக்னத்தின் அதிபதியும் சனிபகவான்தான். இதில் பிறந்தவர்கள் உயரமான உடலமைப்பு கொண்டிருப்பார்கள். நேர்த்தியாக வரையப்பட்டது போன்ற புருவங்கள் இருக்கும். இதழ்களில் குறுநகையைத் தவழவிட்டபடி காட்சி தருவார்கள். மற்றவர்களின் நம்பிக்கைக்கு உரியவர்களாக இருப்பார்கள்.

எவருடைய வாழ்க்கையிலும் குறுக்கிடமாட்டார்கள். தனக்குப் பிடித்தவர்களிடம் மிகவும் அந்நியோன்யமாக நடந்துகொள்வார்கள். திறமைக்கு மதிப்பு தருபவர்கள். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் சரளமாகப் பேசும் ஆற்றல் கொண்டவர்கள். சீர்திருத்தக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டிருப்பார்கள். கடினமான வேலைகளில்கூட ஈடுபடத் தயங்கமாட்டார்கள். தொழிற்சாலை நடத்துபவர்களாகவும், நீதித்துறையில் பிரசித்தி பெற்றவர்களாகவும் விளங்குவார்கள்.

மீன லக்னம்: மீன லக்னத்தின் அதிபதி குரு. இவர்களின் கண்கள் சிறியதாகவும், பிரகாசமாகவும், கவர்ச்சியாகவும் இருக்கும். மென்மையாகப் பேசும் சுபாவம் கொண்டிருப்பார்கள். எடுப்பான மூக்கும் வரிசையாகப் பளிச்சிடும் பற்களும் கொண்டிருப்பார்கள். ஆயிரம்தான் கவலைகள் மனதை வாட்டினாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்கள். ரசனையாக ஆடைகள் அணிவதில் ஆர்வத்துடன் இருப்பார்கள்.

இரக்க மனம் கொண்டிருப்பார்கள். அதேநேரம் முன்கோபமும் சற்றுக் கூடுதலாகவே இருக்கும். இவர்களும் சுகபோகங்களுடன் வாழவே விரும்புவார்கள். எதுவாக இருந்தாலும் எளிதில் கற்றுக்கொள்ளும் ஆற்றல் பெற்றிருப்பார்கள். இவர்களில் சிலர் வழக்கறிஞர்களாகவும், ஆன்மிகப் பெரியோர்களாகவும் பிரபலம் அடைவார்கள்!