Published:Updated:

அத்திவரதர் தரிசன நேரம் மீண்டும் அதிகரிப்பு! - காஞ்சியில் குவியும் பக்தர்கள்

JAYAVEL B

அத்திரவரதர் தரிசன நேரத்தை அதிகரித்த காஞ்சி மாவட்ட ஆட்சியர்

அத்திவரதர்
அத்திவரதர்

தேசம் முழுவதிலிருந்தும் அத்திவரதரைக் காண பக்தர்கள் காஞ்சிபுரத்தில் குவிந்து வருகிறார்கள். நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம் அதிகரிப்பதால் அத்திவரதரை தரிசனம் செய்வதற்கான நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மக்கள் கூட்டம்
மக்கள் கூட்டம்

காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோயிலில் கடந்த ஜூலை 1-ம் தேதி அத்திவரதர் வைபவம் தொடங்கியது. 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் வைபவம் என்பதால் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் காஞ்சிபுரத்திற்கு வந்தவண்ணம் இருக்கிறார்கள். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாரி சாரியாக மக்கள் வீதிகளில் செல்வதைப் பார்க்க முடிகிறது. சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவிற்கு மக்கள் கால் கடுக்க நின்றே தரிசனம் செய்கிறார்கள்.

`சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவிற்கு மக்கள் கால் கடுக்க நின்றே தரிசனம் செய்கிறார்கள்'

அத்திவரதர் வைபவம் தொடங்கிய முதல் நாளில் சுமார் 90000 பேர்வரை தரிசனம் செய்தார்கள். ஆனால் அடுத்தடுத்த நாள்களில் 75,000, 65,000, 45,000 எனக் கூட்டம் குறையத் தொடங்கியது. 5 - ம் தேதி 85 ஆயிரம் பேர் தரிசனம் செய்தனர். கடந்த 5 - ம் தேதி தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டது. அதன்படி காலை 5 மணி முதல் இரவு 8 மணி நேரம் வரை இடைவேளையின்றி தொடர்ந்து 15 மணி நேரம் மக்கள் அத்திவரதரை தரிசனம் செய்தனர்.

அத்திவரதர் தரிசன நேரத்தை அதிகரிக்க வேண்டும்
பொதுமக்கள்

மேலும் 11.07.2019 (ஆனி உற்சவம்) மற்றும் 18.08.2019 (ஆடி உற்சவம்) ஆகிய தேதிகளில் மட்டும் மாலை ஐந்து மணிவரை மட்டுமே தரிசனம் செய்ய முடியும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து 6 தேதியிலிருந்து தினமும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள். பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் சுமார் 3 மணி நேரம் கழித்தே பொதுமக்கள் அத்திவரதரை தரிசனம் செய்ய முடிந்தது. ஆகவே அத்திவரதர் தரிசன நேரத்தை அதிகரிக்க வேண்டும் எனப் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

தரிசன நேரம் இரண்டு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது
மாவட்ட ஆட்சியர் பொன்னையா

இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பொன்னையா அத்திவரதர் தரிசன நேரம் இரண்டு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக இன்று தெரிவித்துள்ளார். “அதிகாலை 4.30 மணிக்குக் கிழக்கு கோபுர வாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். 5 மணியிலிருந்து அத்திவரதரை பக்தர்கள் தரிசிக்கலாம். மேலும் இரவு 9.30 மணிக்குக் கிழக்கு கோபுர வாயில் மூடப்படும். 9.30 குள் வந்த பக்தர்கள் இரவு 10 மணிவரை அத்திவரதரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்” என மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவித்திருக்கிறார்.

பக்தர் கூட்டம்
பக்தர் கூட்டம்

மேலும் கிழக்கு கோபுரத்தில் நுழையும் பக்தர்கள் அத்திவரதர் தரிசனம் முடிந்த பிறகு மேற்கு கோபுரம் வழியாக மட்டுமே வெளியேற முடியும். ஆகவே பொதுமக்கள் தங்கள் காலணிகளைத் தங்களின் வாகனங்களிலேயோ, பார்கிங் பகுதியிலேயோ, பேருந்து நிலையங்களிலேயோ வைத்துவிட்டு வரவும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.