மற்ற எபிசோடுகள்
Published:Updated:

பாபாயணம் - 10

sai baba
பிரீமியம் ஸ்டோரி
News
sai baba

சச்சிதானந்த சத்குரு ஸ்ரீசாயிநாதரே சரணம்!

நீ இப்பிறவிக்குச் சாட்சி. நானோ உன் பூர்வஜென்மங்கள்

அனைத்திற்கும் சாட்சி. உன் செயல்கள் வெளிமுகமாக

இருக்கின்றன. என் செயல்களோ மறைமுகமானவை.

உன் கர்ம வினைகளை நான் கரைத்த உடனே உனக்கு

யோகம் தானே கைகூடும்.

- பாபா

நாம் எடுக்கும் பிறவிதோறும் நம் குரு நம்முடனேயே வருகிறார். ‘நீ செய்யும் அனைத்திற்கும் நானே சாட்சி’ எனக் கூறும் அவர், துக்கங்களின் வலியை நாம் பெரிதாய் உணராமல் இருக்கத் துணை நிற்கிறார். நமக்குத் தேவை பொறுமை மட்டுமே... ‘பாபா இருக்கிறார்’ என்ற நம்பிக்கை மட்டுமே. அந்த நம்பிக்கை சாந்த்பாய் பாடீலிடம் இருந்தது. தன் வீட்டுக்கு சாயி வந்தால் தனக்கு சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும், தன் கிராமமும் நலமுடன் இருக்கும் என்று பாடீல் நம்பினார். அதேபோன்று பாபா வந்தபிறகு அவர் வீட்டில் வளமை பொங்கியது. நோய்கள் தீர்ந்தன. கிராமம் மகிழ்ச்சியில் திளைத்தது.

பாபாயணம் - 10

ஆனால் பாபா வந்து சேரவேண்டிய இடம் தூப்கேடா அல்ல, ஷீர்டி. பாபா, ஷீர்டியை நோக்கிச் செல்லும் வழியையும் தானே ஏற்படுத்திக் கொண்டார். சாந்த்பாய் பாடீலின் தங்கை மகனுக்கு வெகுநாளாகத் திருமணம் தள்ளிப் போனது. பாபா வந்த நேரம் அவனுக்கு ஷீர்டியைச் சேர்ந்த வரன் அமைந்தது.

தடபுடலாய்த் திருமண ஏற்பாடுகள் நடந்தன. கிராம நிர்வாக அதிகாரியான பாடீல் மிகப்பெரும் பணக்காரர். எனவே கிராமமே திருமணத்துக்குக் கிளம்பியது. கூண்டு வண்டி கட்டிக்கொண்டு கிளம்பினார்கள். காட்டுப்பகுதியில் கொள்ளையர்கள் அதிகம் என்பதால் பாடீல் பயந்தார். பாபாவைத் தங்களுடன் துணையாக வருமாறு அழைக்கிறார். ஒரு குறும்புப் புன்னகையுடன் கிளம்பினார் பாபா.

சச்சிதானந்த சத்குரு ஸ்ரீசாயிநாதரே சரணம்!
சச்சிதானந்த சத்குரு ஸ்ரீசாயிநாதரே சரணம்!

முதல் வண்டியில் பாபா ஏறி உட்கார்ந்தார். இடையூறுகள் ஏதுமின்றி திருமண கோஷ்டி பத்திரமாக ஷீர்டி வந்து சேர்ந்தது. வண்டியிலிருந்து இறங்கிய பாபாவைக் கண்டு மகல்சாபதி சந்தோஷத்தில் பூரித்தார். குதூகலம் பொங்க ‘யா, சாயி’ என்று அழைத்து இருகை விரித்து ஓடிவந்தார்.

நான்கு வருடத்திற்கு முன் அவரைக் கடவுள் என்று உணர்ந்தவர் மகல்சாபதி. பாபா இல்லாமல் தவித்துப்போனவர், ‘என்றேனும் ஒருநாள் மீண்டும் வருவார்’ என்று நம்பியவர். அதுவரை எந்தப் பெயரும் இல்லாமலிருந்த பாபாவுக்கு அன்று முதல் ‘சாயி’ என்ற திருநாமம் உண்டாயிற்று.

குரு என்பவர் படித்தவராக, பண்டிதராக, சாஸ்திரத்தில் கரைகண்டவராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏன், போதனைகளோ உபதேசங்களோகூடத் தேவையில்லை. தன்னை நம்பி வந்தவரைக் கைவிடக் கூடாது என்று காத்து ரட்சிப்பதுவே குருவின் அடிப்படைத் தகுதி. ஒருவரை குருவாக வரித்துக்கொண்டால் அந்த நம்பிக்கையே சகல அனுக்கிரகங்களுக்கும், சகல சௌபாக்கியங்களையும் பெறுவதற்கும் காரணமாகிறது.

இதுவரை தரிசித்திராத சாயிபாபா திருவுருவப் படங்கள் புதிய பரிமாணங்களில். வாரந்தோறும் பாதுகாக்கத் தயாராகுங்கள்!

ராமானந்தரிடம் ராம நாம உபதேசம் பெற வேண்டும் என்று கபீர் விரும்பினார். ஆனால் ஹிந்துவாகப் பிறந்து முஸ்லிம் வீட்டில் வளர்ந்த தன்னை சீடனாக ஏற்பாரா என்று தயக்கம் கபீரின் மனத்தில் ஏற்பட்டது. எனவே ராமானந்தர் பிரம்ம முகூர்த்தத்தில் கங்கையில் குளிக்க வரும்போது படிக்கட்டில் படுத்துவிட்டார் கபீர். குளிக்க வருகையில் கபீரின் மேல் பாதம் பட்டுவிட ராமானந்தர் பதறி ‘ராமா, ராமா ‘ என்கிறார். அந்த ‘பாத தீட்சை’ போதும் என்று ராம நாமத்தை உபதேசமாக ஏற்றுக்கொள்கிறார் கபீர்.

மகல்சாபதியும் கபீரைப் போலவேதான். குருபக்தியில் நிறைந்து எப்போதும் ‘சாயி’, ‘சாயி’ என்றே நினைத்துக்கொண்டிருந்தார். திருமணம் முடிந்து அந்த கோஷ்டி தங்கள் கிராமத்திற்குக் கிளம்பிவிட, பாபா ஷீர்டியிலேயே தங்கிவிட்டார். ஆனால் எங்கு தங்குவது என்பது மட்டுமே அவரின் சிந்தனையாக இருந்தது. கண்டோபா கோயிலின் அமைதியும் தனிமையும் அவரைக் கவர்ந்தன. ஆனால் பாபா அங்கு தங்குவதை மகல்சாபதி ஏற்கவில்லை.

“சாயி, உங்கள் பாதம் பட்டதால் இந்த ஷீர்டி புனிதம் பெற்றது. ஆனால் கோயிலில் தங்குவது சரியாக இருக்காது. இந்த ஊர் மக்கள் அதிகம் பக்குவம் பெறாதவர்கள். நீங்கள் ஹிந்துவா, முஸ்லிமா என்ற சந்தேகம் இன்னும் அவர்கள் மனத்தில் இருக்கிறது. எல்லோரும் உங்களைத் தேடி வந்து பயன்பெற வேண்டும். எனவே நீங்கள் வேறு இடத்தில் தங்குவதே சிறந்தது” என்று உறுதியாகக் கூறிவிட்டார்.

பாபாயணம்
பாபாயணம்

அவர் கூறியதைச் சரி என்று ஏற்றுக் கொண்ட பாபா, முன்பு தான் தங்கியிருந்த வேப்பமரத்தடிக்கே வந்துவிட்டார். அந்த மரம் மீண்டும் புனிதம் பெற்றது. தன்னைப் பின் தொடர்ந்த ஷீர்டி மக்களை அவரவர் வீட்டிற்குச் செல்லுமாறு கூறிவிட்டு அந்த மரத்தினடியில் தியானத்தில் ஆழ்ந்துவிட்டார் பாபா.

அவரின் இருப்பிடமாக அமைந்த வேப்பமரம் அதிசயமாக மாறியது. அவர் வருவதற்கு முன் அந்த வேப்ப மரத்தின் அனைத்து இலைகளும் கசப்பாக இருந்தன. இப்போதோ அவர் இருக்கும் பக்கம் இனிப்பாகவும், மறுபக்கம் கசப்பாகவும் மாறிவிட்டது. இது பாபாவின் அற்புதம் என்றே மக்கள் கருதினார்கள். பாபா நம் வாழ்க்கையில் வரும்வரை அது கசப்பாக இருந்திருக்கலாம். பாபா வந்தபின்பு அது இனிக்கத் தொடங்கிவிடும்.

உன் அருள் ஒன்றே உண்மை பாபா

நீ இருக்கும் இடமே சொர்க்கம் பாபா!

(தரிசனம் தொடரும்)

ரட்டையரான நாங்கள் மருத்துவம் படித்துவருகிறோம். முதலாமாண்டுத் தேர்வில் நாங்கள் இருவரும் ஒரு தேர்வை சரியாக எழுதவில்லை. ‘பாபா இருவரையும் கண்டிப்பாகத் தேர்ச்சி பெறச்செய்வார்’ என்று நான் நம்பினேன். தேர்வு முடிவுகள் ஒரு வியாழன் அன்றுதான் வெளியாகின.

பாபாயணம் - 10

நாங்கள் இருவரும் குறிப்பிட்ட அந்தப் பாடத்தில் ஒரே மதிப்பெண் (110) பெற்றுத் தேர்ச்சி பெற்றோம். அன்று இரவு உறங்கச் செல்வதற்கு முன் என் கைப்பேசிச் செயலியில் நான் ஒரு மேற்கோள் படித்தேன். ‘சாயிபாபாவை மறக்காதே. நீ 100 எதிர்பார்த்தால் அவர் 110-ஆகத் தருவார்’ என்றது வாசகம்.

- மு.வர்ஜிதி ரீமா

பாபாவும் நானும்...

``என் சித்தப்பா ஜெயராமன்தான் முதன்முதலா பாபா பத்தி என்கிட்ட சொன்னார். அதுக்குப்பிறகு நான் பாபாவோட தீவிர பக்தையா மாறிட்டேன்.

மயிலாப்பூர் பாபா கோயிலில் இருந்த செல்வாங்கிறவர், ‘எவ்வளவோ பேர் பாபா மேல பாட்டெழுதித் தந்திருக்காங்க. நீங்க பாடகியா இருக்கீங்க, அதை வைத்து ஒரு கேசட் போடக் கூடாதா?’ எனக் கேட்டார். அதற்கு முன்பே எனக்கும் ‘எல்லா சாமிகளையும் பற்றிப் பாடியிருக்கோம். பாபா பத்திப் பாடினதில்லையே’ன்னு வருத்தமா இருந்துச்சு. இதை நல்ல வாய்ப்பாப் பயன்படுத்தி ‘அன்பே சாயி’ன்னு ஓர் இசை ஆல்பம் வெளியிட்டோம்.

அனுராதா ஸ்ரீராம்
அனுராதா ஸ்ரீராம்

ஒருமுறை ராஜஸ்தானுக்கு நானும் என் கணவரும் போயிருந்தோம். அங்கு பளிங்குச் சிலைகள் மட்டுமே விற்கக்கூடிய கடைகள் ஏராளம் இருந்தன. ஒரு கடையில் முழுக்க பாபா சிலைகள் மட்டுமே இருந்துச்சு. அதுல ஒரு பாபா சிலை ஒண்ணு ஒண்ணரை அடிதானிருக்கும். ரொம்ப அழகா இருந்துச்சு. ஆனா ஒரு லட்ச ரூபாய் விலை என்று வாங்காமல் வந்துட்டோம்.

சென்னைக்கு வந்து ஒரு மாசம் ஆயிடுச்சு. ஒரு நாள் நல்லா மழைபெய்ஞ்சுக்கிட்டிருந்துச்சு. அப்போ ஒரு பையன் பாபா சிலையைக் கையில வெச்சுக்கிட்டு வாசலில் நின்றுகொண்டிருந்தான். ‘சென்னையில் பலருக்கும் பாபா சிலைகளை நாங்கதான் விற்பனை செய்றோம். எங்க முதலாளி இதை உங்கள் வீட்டில் கொடுத்திடச் சொன்னார். அவங்க என்ன கொடுக்கிறாங்களோ அதைமட்டும் வாங்கிட்டு வான்னு சொன்னார். காசே கொடுக்கலைன்னாலும் பரவாயில்ல. அவங்ககிட்ட கொடுத்திடுன்னு சொன்னார்’னு சொன்னான். ஒரே ஆச்சர்யமா இருந்துச்சு. அப்போதான் ஞாபகம் வந்தது, கண்காட்சியில் எங்க பேரையும் முகவரியையும் கொடுத்துட்டு வந்த விஷயம். என் கணவர் அதுக்கப்புறம் ஜெய்ப்பூருக்குப் பேசிட்டு ஒரு தொகையைக் கொடுத்து வாங்கிக்கிட்டார். ‘நாம் எங்க இருந்தாலும் பாபா நம்மைத் தேடிக்கிட்டு வந்துட்டார்’னு எனக்கு ஆச்சர்யம், இன்னொரு பக்கம் ஆனந்தம்.”

வாசகர்களே!

சாயிபாபா உங்கள் வாழ்க்கையில் நிகழ்த்திய அற்புதங்களை உங்கள் புகைப்படத்துடன், ஆனந்த விகடன், 757 அண்ணாசாலை, சென்னை-2 என்ற முகவரிக்கோ, saibaba@vikatan.com மின்னஞ்சலுக்கோ எழுதி அனுப்புங்கள். சிறந்த அனுபவங்கள் வெளியிடப்படும்.