மற்ற எபிசோடுகள்
Published:Updated:

பாபாயணம் - 11

பாபாயணம்
பிரீமியம் ஸ்டோரி
News
பாபாயணம்

சச்சிதானந்த சத்குரு ஸ்ரீசாயிநாதரே சரணம்!

பாபாயணம் - 11

எந்த நேரத்தில் உனக்கு எது தேவையோ

அது நிச்சயம் கிடைக்கும். உனக்குத் தேவை

பொறுமை மட்டுமே.

- பாபா.

“ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்

ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள்

ஆசைப் படப்பட ஆய்வரும் துன்பங்கள்

ஆசை விடவிட ஆனந்த மாமே” என்கிறார் திருமூலர். ஆனால் ‘ஆசைப்படு’ என்கிறார் பாபா. காரணம், அவர் நம் மனத்தில் இருக்கும்போது நாம் விரும்புவது அவரால் உருவாக்கப்படுவதே. மனத்தில் ஏராளமான ஆசைகளை வைத்துக்கொண்டு அந்த நினைவில் உழன்றுகொண்டிருப்பதைவிட, நியாயமான ஆசைகளை ஏற்படுத்திக்கொண்டு அவை நிறைவேற சாயியை நம்புவது நல்லது.

“கண்கள் என்னைப் பார்த்துக்கொண்டு மனம் வேறு எங்கேயோ அலைபாய்ந்துகொண்டிருந்தால் என் தரிசனத்தின் பலன் உனக்கு எப்படிக் கிடைக்கும்? உன் சிந்தனை என்னைப் பற்றியதாக இருக்க வேண்டும். அப்போது உனக்கு சுபம் உண்டாகும். நீ என்னைச் சிரத்தையுடன் பார்த்துக்கொண்டிருந்தால் நான் உன்னை இரு மடங்கு சிரத்தையுடன் பார்ப்பேன்” என்கிறார் சாயிராம்.

பாபாயணம் - 11

பாபா அன்பின் அடிமை. தன் ஆழ்ந்த அன்பினால் கட்டிப்போட்டவர்கள் பாபாவைச் சூழ்ந்திருந்தவர்கள். அவர்களில் முதன்மையானவர் பாயாஜி பாய். ஷீர்டியைச் சேர்ந்த தாத்யா கோத்தே என்னும் அடியவரின் தாய், பாயாஜி பாய்.

வேப்பமரத்தினடியில் அமர்ந்திருந்த பாபாவைத் தேடி மக்கள் அலையலையாக வந்தனர். ஆனால் அவர் யாரிடமும் எதையும் கேட்கவில்லை. உணவுக்காக யாரிடமும் கை ஏந்தவில்லை. பாயாஜி பாயின் தாயுள்ளம் தவித்தது. ஒவ்வொரு வேளையும் பாபாவுக்கான உணவைக் கொண்டுவந்து கொடுத்து அவர் உண்ணும் அழகைக் கண்டு மகிழ்ந்தார்.

ஆனால் பாபாவைப்போன்ற சித்தர் போக்கை யார் அறிவார்? பகல்நேரங்களில் காட்டுக்குள் போய்விடும் பாபா அங்கு தியானத்தில் மூழ்கி விடுவார். கூடையில் உணவோடு வேப்பமரத்தடி வரும் பாயாஜி பாய் அங்கு பாபாவைக் காணாது திகைப்பார். உணவுவேளை கடந்துபோவதில், உணவுக்கூடையைப்போலவே அவள் மனமும் கனக்கத்தொடங்கும்.

இதுவரை தரிசித்திராத சாயிபாபா திருவுருவப் படங்கள் புதிய பரிமாணங்களில். வாரந்தோறும் பாதுகாக்கத் தயாராகுங்கள்!

ஒருநாள் காட்டுக்குள் சென்ற பாபா ஆழ்ந்த தியானத்தில் மூழ்கினார். வெகுநேரமாகியும் ஊருக்குள் திரும்பவில்லை. பாயாஜி காட்டுக்குள் பாபாவைத் தேடி நுழைந்தார். வழித்தடம் ஏதுமற்ற இருண்ட காட்டில் அவள் தன் பாசத்தின் தடத்தைப் பற்றிக்கொண்டு நடக்கலானாள். நீண்ட நடையில் அவள் தளர்ந்த கணத்தில் பாபா அவள் கண்ணில் பட்டார். அடர்ந்து வளர்ந்த அந்த மரத்தினடியில் சித்தார்த்தனைப்போல நெடிய தவத்தில் மூழ்கியிருந்தார் பாபா.

பாயாஜிக்குக் கண்ணீர் பெருகியது. தாய் என்றாலும் தவத்தைக் கலைக்க ஏது உரிமை? பாபா கண்மலரக் காத்திருந்தார். பாபா மெள்ளக் கண்கள் திறந்தார்.

அத்தனை கணமும் அமைதியாய் அமர்ந்திருந்த பாயாஜி, பாபா கண்விழித்ததும் உணவை எடுத்து பாபாவுக்கு ஊட்டத் தொடங்கினார்.

“தாயே, நீங்கள் சாப்பிட்டுவிட்டீர்களா..?” என்று கேட்டார் பாபா.

“நீ சாப்பிடாமல் எப்படி மகனே நான் சாப்பிடுவேன்?” என்றார் பாயாஜி பாய்.

பாபாயணம் - 11

அடியவர்களின் அன்பிற்குக் கட்டுப்பட்டு அவர்கள் இருக்கும் இடம் தேடிப்போய் அருளும் சாயி, அன்னையின் துயர் அறிந்து நெகிழ்ந்தார்.

“அம்மா இனி உங்களை நான் கஷ்டப்படுத்த மாட்டேன். என்னைத் தேடிக் காடுகளில் இனி நீங்கள் அலைந்து திரிய வேண்டாம். இனி எப்போதும் வேப்ப மரத்தடியிலேயே உங்களுக்காக நான் இருக்கிறேன்” என்று உறுதி அளித்தவர். வாக்களித்தபடி அதன்பின் அவர் அந்த மரத்தடியிலேயே தங்கிவிட்டார். அந்த இடத்தை பக்தர்கள் குருஸ்தான் என்று அழைத்தார்கள்.

1859-ம் ஆண்டு. பலத்த மழை பெய்யத் தொடங்கியது. மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஊரெங்கும் வழிந்தோடியது. மக்கள் வீடுகளுக்குள்ளாகவே அடைந்து கிடந்தார்கள். ஓரிரு நாள்கள் மழை விட்டு வெள்ளம் வடியத் தொடங்கிய அன்று மகல்சாபதி பாபாவைத் தேடி ஓடிவந்தார்.

வேப்ப மரத்தடியில் சிறு மணல்குன்று உருவாகியிருந்தது. மகல்சாபதி பதறினார். அந்த மணல்குன்றைத் தன் கைகளால் அள்ளி வீசிக் கலைத்தார். உதவிக்குச் சில மக்களும் சேர்ந்துகொண்டனர். உள்ளே எந்தச் சலனமும் இன்றி பாபா தியானத்தில் இருந்தார். வெள்ளமும் மழையும் அவரின் தியானத்தைக் கலைக்கவேயில்லை. சத்குண பிரம்ம நிலையிலிருந்து அந்த மகான் கண்விழித்தபோது ஒட்டுமொத்த ஷீர்டி கிராமமும் அவர்முன்பாக நின்றுகொண்டு அதிசயத்துப் பார்த்துக் கொண்டிருந்தது. மகல்சாபதி அவர் கால்களில் விழுந்து வணங்கினார். ‘இனி வேப்ப மர வாசம் வேண்டாம்’ என்றும் ‘அருகிலிருக்கும் பழைய மசூதிக்கு இடம்பெயர்ந்துவிடுங்கள்’ என்றும் கோரிக்கை வைத்தார்.

அந்த மசூதியின் கூரையும் கொஞ்சம் சிதைந்துதான் இருந்தது. ஆனாலும் பாபா மகிழ்வுடன் அந்த மசூதிக்குள் குடியேறினார். இரவில் அந்த மசூதியிலும், பகலில் வேப்ப மரத்தடியில் தங்குவதையும் வழக்கமாகக் கொண்டார் பாபா. பக்தர்கள் தேசமெங்குமிருந்து ஷீர்டி நோக்கி வரத் தொடங்கினர்.

(தரிசனம் தொடரும்)

ன் மகனுக்குத் திருமணமாகி நீண்ட காலம் கழித்துக் குழந்தை பிறந்தது. அதுவும் எட்டு மாதத்திலேயே. குழந்தையை இன்குபேட்டரில் வைத்துவிட்டார்கள். ஒருநாள் மருத்துமனையிலிருந்து போன் வந்தது. குழந்தையின் நிலைமை மோசமாகிவிட்டதென்று. எல்லோரும் அலறியடித்துக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார்கள். நானோ பாபா கோயிலுக்கு ஓடினேன். குழந்தை உடல்நலம் சரியாகும்வரை நான் இங்கிருந்து நகரப்போவதில்லை என்று அங்கேயே அமர்ந்துவிட்டேன். அடுத்த ஒரு மணிநேரத்தில் என்னைத் தேடி வீட்டிலிருந்து வந்தார்கள். குழந்தையின் உடல்நிலை மிகவும் முன்னேற்றமடைந்துவிட்டதாகவும், நாளையே இன்குபேட்டரிலிருந்து எடுத்துவிடலாம் என்ற அளவுக்குத் தேறிவிட்டதாகவும் சொன்னார்கள். நான் பாபாவின் பாதங்களைப் பற்றிக் கண்ணீரால் நன்றி செலுத்தி வீடு திரும்பினேன்.

- பிரேமா வெங்கடேசன்

“நான் அறுபதுகளிலிருந்து பல மொழிப் படங்களுக்கும் எடிட்டராகப் பணிபுரிந்திருக்கிறேன். 1979-ம் ஆண்டு தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்பட பல மொழிப் படங்களையும் தமிழில் மொழிமாற்றம் செய்தும் புதிதாகத் தயாரித்தும் வெளியிட்டிருக்கிறேன்.

எடிட்டர் மோகன்
எடிட்டர் மோகன்

1986-ம் ஆண்டு ‘ சீர்டி சாய் பாபா மஹத்யம்’ என்ற தெலுங்குப் படத்தைப் பார்க்க ஒரு பிரிவியூ தியேட்டருக்குச் சென்றேன். படம் ஆரம்பமானது. முதன்முதலில் சாயிபாபாவின் தெய்விகத் தோற்றம் கண்டு மெய்சிலிர்த்துப்போனேன். படத்தின் ஒவ்வொரு வசனமும், மனத்தை வருடும் இளையராஜாவின் பின்னணி இசையும் பாடல்களும் என்னை மெய்மறக்கச் செய்தன. படம் முடிந்து வீட்டுக்கு வந்தேன். தூங்குவதற்காகச் சென்றேன். தூக்கம் வரவில்லை.

அப்போதும் அந்த மதமற்ற மகான் கூறிய ‘உங்களின் பாவங்களையெல்லாம் பிச்சையாகப் பெற்று, உங்களை நான் பாவங்களிலிருந்து காப்பேன். உங்களின் உள்ளத்தில் உள்ள மூர்க்கமான சாதிமதபேதங்களைக் களைந்து, சமாதானத்தோடு வாருங்கள். எல்லோருடைய கடவுளும் ஒன்றே’ என்ற வார்த்தைகள்தான் என் காதுகளில் ரீங்காரமிட்டுக்கொண்டே இருந்தன.

‘மதமற்ற மகான் ஷீர்டி சாயி பாபா’ படத்தைத் தமிழகம் முழுவதுமுள்ள மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கவேண்டும் என்று முடிவு செய்தேன். தெலுங்கைவிடத் தமிழில் வசனங்களும் பாடல்களும் சிறப்பாக அமைய வேண்டுமென்று கருதி, வசனத்துக்கு ஆரூர்தாஸ், பாடல்களுக்கு மருதகாசி, வைரமுத்து, காமகோடியான், பின்னணி பாட எஸ்.பி. பாலசுப்பிரமணியம், கே.ஜே.யேசுதாஸ், பி.சுசீலா, எஸ்.ஜானகி எனத் திரையுலக ஜாம்பவான்களைத் தேர்வு செய்து பெரும் செலவு செய்து படத்தைத் தயாரித்தேன். மொழிமாற்றுப் படம் போலில்லாமல், படத்தை மிக நல்ல முறையில் தயாரித்தேன். ‘பாபாவின் பாதங்களுக்கு இந்தப் படத்தைக் காணிக்கையாக்குகிறேன் என்று முடிவில் எழுதி படத்தை வெளியிட்டேன். படத்தை வாங்க யாரும் முன்வரவில்லை. தமிழகம் முழுவதும் நானே வெளியிடுவது என்று முடிவுசெய்தேன். படம் பார்க்க வருகிறவர்கள் சாயிபாபாவை தரிசிக்க வேண்டுமென்பதற்காக மிகப்பெரிய சாயிபாபா உருவச் சிலைகளைச் செய்து படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு எல்லாம் படப்பெட்டியுடன் சேர்த்து அனுப்பி வைத்தேன்.

முதல் காட்சிக்கு வரும் பெண்களுக்குக் கட்டணம் கிடையாது என அறிவித்தேன். இதற்கு முன்பு சாயிபாபா பற்றித் தமிழக மக்களுக்கு அத்தனை பரிச்சயம் இருந்ததில்லை. எங்களின் படம் வெளியான பிறகுதான் இப்படி ஒரு மகான் இருப்பதே பலருக்கும் தெரிய வந்தது என்பதைத் தன்னடக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

வாசகர்களே!

சாயிபாபா உங்கள் வாழ்க்கையில் நிகழ்த்திய அற்புதங்களை உங்கள் புகைப்படத்துடன், ஆனந்த விகடன், 757 அண்ணாசாலை, சென்னை-2 என்ற முகவரிக்கோ, saibaba@vikatan.com மின்னஞ்சலுக்கோ எழுதி அனுப்புங்கள். சிறந்த அனுபவங்கள் வெளியிடப்படும்.