
சச்சிதானந்த சத்குரு ஸ்ரீசாயிநாதரே சரணம்!
ஆத்மாவைத் தூய்மையாக வைத்திருக்கும் ஒவ்வொருவரும் நிம்மதியுடன் வாழ முடியும். அதுவே தெய்விகம். தெய்வம் எங்கோ இருக்கிறது என்று நினைக்காதே. அது உன்னுடன், உனக்குள்ளேயே இருக்கிறது.
- பாபா
ஆத்மாவை விழிப்புறச் செய்ய இடைவிடாத தியானம் அவசியம். குரு தன் ஆத்மாவை அறிந்தவர். உள்ளுக்குள் தெய்விகம் நிரம்பியவர். தனக்கென்று எந்த ஆசையும் இன்றி, தன்னை நம்பி வந்தவர்களின் நலனுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்பவர்.

பாபா அத்தகைய தெய்விகம் நிரம்பியவராகத் தன் பக்தர்களால் போற்றப்படுகிறார். அவருடைய அற்புதங்களையும் பெருமைகளையும் கேட்பதாலேயே தங்கள் பாவங்கள் நீங்கி, விரும்பியது நடக்கிறது என்று நம்புகிறார்கள் பக்தர்கள்.
பாபா தரிசன மாத்திரத்திலேயே நம்மைக் கவரக்கூடியவர். பல்வேறு கருத்து வேறுபாடுகளுடன் ஷீர்டி வருபவர்களையும் பாபாவின் தரிசனம் மாற்றிவிடும். அவர்களின் கர்ம வினைகளை அழித்து பாபா அவர்களுக்குள் நீக்கமற நிறைந்துவிடுவார். இதற்கு சாயி சரிதத்தில் பல்வேறு சாட்சியங்கள் உண்டு. அப்படி ஒரு சாட்சியம்தான் கங்காகீருடனான பாபாவின் சந்திப்பு.
பாபாவைக் காண அவரை சோதித்தறிய ஞானிகள் பலரும் ஷீர்டி நோக்கி வரத் தொடங்கினர். அப்படி வந்தவர்தான் புண்தாம்பே என்ற நகரைச் சேர்ந்த ‘கங்காகீர்’ என்னும் ஞானி. கங்காகீர் சிறந்த ஞானி. ஆனாலும் அவர் மனதின் ஓரத்தில் சிறு தற்பெருமையும் கர்வமும் கொண்டவர்.
கங்காகீரின் வரவு ஷீர்டி மக்களுக்குப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. பாபாவின் மகிமைகள் குறித்து சந்தேகம் கொண்டிருந்த பலரும் கங்காகீரின் வருகை நிச்சயம் பல உண்மைகளை வெளிப்படுத்தும் என்று எண்ணினர். காரணம், ஞானிகள் இருவர் சந்தித்தால் அவர்களுக்குள் ஆன்மிக தர்க்கம் நிகழும். அதன்மூலம் உண்மையான ஞானம் வெளிப்படும் என்று எதிர்பார்த்தனர்.

பாபா சாமானியனையும் மதிக்கும் பண்பாளர். ஞானிகள் என்றால் விட்டுவிடுவாரா? கங்காகீரை நன்கு வரவேற்று உபசரித்தார். கங்காகீருடன் ஜானகி தாஸ், தேவி தாஸ் ஆகிய ஞானிகளும் வந்திருந்தனர். ஷீர்டியே போற்றும் பாபா தன்னை வரவேற்றதால் கங்காகீருக்குக் கொஞ்சம் கர்வமும் நிறைய ஆச்சர்யமும் உண்டானது. மேலும், பாபாவின் அழுக்கான தோற்றத்தைக் கண்டவர், ‘ஒருவேளை இவரைத் தொட்டுவிட்டால் தீட்டு உண்டாகிவிடுமோ’ என்று எண்ணத்தொடங்கினார்.
மனிதர்கள் முகத்தையும் உடலையும் பார்த்து முடிவு செய்கிறார்கள். ஆனால் பாபாவோ உள்ளத்தைப் பார்க்கிறவர். கங்காகீர் நினைப்பதை பாபா அறிந்துகொண்டார். கங்காகீரின் அறியாமை பாபாவுக்குள் புன்னகையை ஏற்படுத்தியது. சுத்தமான பாலில் வீழ்ந்திருக்கும் சிறு அழுக்கை நீக்குவதுபோல அந்த ஞானியின் மனதில் இருந்த கர்வத்தை நீக்க பாபா முடிவு செய்தார். பாபா கங்காகீரை நோக்கித் தன் கரங்களை நீட்டினார். அடுத்த கணம் அவர் கரங்களிலிருந்து கங்கையாக நீர் தோன்றிப் பாய்ந்தது. பாபா அந்தப் பிரவாகத்தை ஞானியின் கால்களில் விட்டார். அடுத்த கணம் கங்காகீர் மெய் சிலிர்த்தார். உடன் இருந்த ஜானகி தாஸும் தேவி தாஸும் அதிசயித்தனர். மூவரும் மறு சிந்தனையின்றி பாபாவின் கால்களில் விழுந்து சரணடைந்தனர்.
“நீங்கள் மூவரும் மிகப்பெரிய ஞானிகள். அதை உலகுக்கு உணர்த்தவே நான் கங்காகீரின் கால்களை கங்கை நீரால் கழுவினேன். ஞானிகளுக்குள் உயர்வு தாழ்வு இல்லை. இறைவனின் சபையில் அனைவருமே சமம்” என்றார். பாபா தன்னடக்கத்துடன் அப்படிச் சொன்னாலும் தன்னுடலில் கங்கையை ஏந்தியிருக்கும் அவர் யார் என்பது ஞானிகளுக்குத் தெரியாமலா போகும்! அவர்கள் பணிவோடு அவர் பாதங்களைப் பணிந்தனர். கங்காகீர் கண்ணீர் வழிய சாயிநாதனைப் பலவிதமாகப் போற்றத் தொடங்கினார்.

“உங்களுக்கு நிகராக அருளை வெளிப்படுத்த இப்போது யாரும் இல்லை. உங்களால் ஷீர்டி புனிதம் அடைகிறது, இன்று நாங்களும் உங்கள் பார்வை தீட்சை பெற்றுப் புனிதம் அடைந்தோம். உமது அருளால் பலரும் தீமையில் இருந்து காப்பாற்றப்படப் போகிறார்கள். உமக்கு நிறைந்த மங்களம் உண்டாகட்டும்” என்று வாழ்த்திய கங்காகீர் அங்கிருந்து கிளம்பும்போது ஷீர்டி மக்களைப் பார்த்து ஒரு வேண்டுகோள் விடுத்தார்.
“ஷீர்டி மக்களே, ஓர் அருமையான மாணிக்கம் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. கோகுலவாசிகளுக்குக் கண்ணன் கிடைத்ததுபோல முன் வினைப்பயனால் இவர் உங்களுக்குக் கிடைத்திருக்கிறார். இவரைப் பித்தர் என்று நினைத்து ஒதுக்கிவிடாதீர்கள். இவர் மிகப்பெரிய மகான்... இறை அவதாரம்... ஏன் அந்த இறைவனும் இவர்தான் என்று நம்புங்கள். இவரின் பாதங்களைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள்” என்று வணங்கிக் கேட்டுக்கொண்டார்.
இதுவரை தரிசித்திராத சாயிபாபா திருவுருவப் படங்கள் புதிய பரிமாணங்களில். வாரந்தோறும் பாதுகாக்கத் தயாராகுங்கள்!
அதுவரை சாயி குறித்து அசட்டையாய் இருந்தவர்களும் இந்த நிகழ்வுக்குப் பிறகு பாபாவை நோக்கி ஓடிவந்தனர். பாபா அவர்களுக்குத் தன் நிகரில்லாத அருளை வாரிவழங்கினார். அவர் அளித்த திருநீறும் தீர்த்தமுமே பல நோய்களுக்கு மருந்தானதை அவர்கள் உணர்ந்தார்கள். அவரைத் தூற்றியவர்களும் அங்கிருந்து அவரை விரட்ட முயன்றவர்களும்கூட பாபாவை அணுகிப் பலன் பெற்றனர். பாபாவின் பரிபூரண அன்பு அவர்களை வசப்படுத்தியது.
மகான்கள் பகை உணர்ச்சி கொள்வதில்லை. மனித குலத்துக்கு வாழ்நாள் முழுவதும் சேவை செய்வது மட்டுமே அவர்களின் குறிக்கோள்.
“கேயம் கீதா நாம ஸஹஸ்ரம்
த்யேயம் ஸ்ரீபதிரூபம் அஜஸ்ரம்
நேயம் ஸஜ்ஜன ஸங்கே சித்தம்
தேயம் தீநஜநாய ச வித்தம்” என்கிறார் ஆதிசங்கரர்.
‘கீதையைச் சொல். சஹஸ்ரநாமம் சொல். விடாமல் லட்சுமி பதியான மகாவிஷ்ணுவை தியானம் செய். சத்சங்கத்தில் மதி ஈடுபடுத்து’ என்றெல்லாம் சொல்லும் ஆதிசங்கரர் கூடவே, ‘ஏழை எளியவர்களுக்கு தான தர்மம் செய். அனைத்தையும்விட மிகப் புண்ணியம் அது’ என்றார்.
பாபா, நாள்தோறும் பிச்சை எடுத்தார். தினமும் அவருக்கு தட்சணை சேர்ந்தது. பாபா தனக்கென்று எதுவும் வைத்துக்கொள்ளவில்லை. அவற்றை மற்றவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்துவிடுவார். இரவு உறங்கச் செல்லும்போது மீண்டும் அவர் ஏதுமற்ற பழைய பக்கிரி ஆகி விடுவார். இரவில் பழைய மசூதியில்தான் படுத்துறங்குவார். ஒரு சாக்குத்துணியே அவரின் ஆசனம். ஆனாலும் அவர் சத்குருவாக ஷீர்டி மக்களின் மனதில் நிரந்தர சிம்மாசனமிட்டு அமர்ந்துகொண்டார்.
(தரிசனம் தொடரும்)
நான் சாயியின்மீது மிகப்பெரிய பக்தியோ ஈடுபாடோ இல்லாமல்தான் இருந்தேன். 2010-ம் ஆண்டு நண்பர்கள் வற்புறுத்தி ஷீர்டி அழைத்துச் சென்றனர். 2014-ம் ஆண்டு ஒருநாள் காலை கண்விழித்ததிலிருந்து மனம் நிலைகொள்ளாமல் தவித்தது. கணவரை அழைத்துக்கொண்டு கோவை பீளமேட்டில் இருக்கும் சாயி கோயிலுக்குச் சென்று வணங்கினேன். என்ன அற்புதம், அந்தக் கணம் மனம் அமைதியடைந்தது. அன்று மாலை லண்டனிலிருந்து என் மகன் போன் செய்தான். ஒரு பெரிய மரம் அவன் ஓட்டிச்சென்ற காரின் மீது விழுந்து விபத்து ஏற்பட்டுவிட்டது என்றான். விபத்தில் கார் முற்றிலும் சேதமடைந்த நிலையில் மகனோ சிறு சிராய்ப்புகளோடு தப்பியிருக்கிறான். விபத்தைப் பார்த்தவர்கள் ‘அந்தக் கடவுள்தான் உன்னைக் காப்பாற்றினார்’என்று சொன்னார்களாம். எனக்கு அந்தக் கடவுள் என் சாயிநாதனே என்று புரிந்தது.
- வி.பாப்பாத்தி, கோவை
பாபாவும் நானும்
``ஒரு முறை அமெரிக்காவில் தேவி ஸ்ரீபிரசாத் தலைமையில் இசைக் கச்சேரிகள் நடக்க ஏற்பாடாகியிருந்தது. அட்லாண்டாவில் இசை நிகழ்ச்சியை முடித்துவிட்டு எல்லாரும் கிளம்பி லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குப் போய்க்கிட்டி ருந்தோம். சீக்கிரம் ஃப்ளைட்டைப் பிடிக்க வேண்டிய அவசரம். முதுகில் ஒரு பேக், கையில் பெரிய சூட்கேஸ் என இரண்டையும் எடுத்துக்கொண்டு ஓடினேன். எனக்குப் பின்னால் வந்த சீனியர் ஆர்ட்டிஸ்ட் ஒருவர் `என்கிட்டே கொடும்மா பேக்கை, எடுத்துக்கிட்டு வர்றேன்'னு சொன்னார். விமானத்தில் என்னுடன் வந்த சீனியர் முன் வரிசையில் உட்கார்ந்திருக்க, நான் கடைசியில் உட்கார்ந்திருந்தேன்.
விமானம் லாஸ் ஏஞ்சல்ஸில் இறங்கும்போது தான் தெரிந்தது. அவர் என் பையை அட்லாண்டா விமான நிலையத்திலேயே மறந்துவிட்டு வந்த விஷயம். நான் மீண்டும் அட்லாண்டா விமான நிலையம் வந்தேன். போலீஸிடம் புகார் செய்தும் என் பை கிடைக்கவில்லை. அந்தப் பையிலிருந்த பாக்ஸில்தான் நான் முதன்முதலாகப் பாட ஆரம்பித்தபோதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்த பணத்தில் வாங்கிய தங்க நகைகள் மற்றும் வைர வளையல்கள், வைர மூக்குத்தி ஆகியவை இருந்தன. சென்னை வந்த பிறகும் என் மனம் ஆறவில்லை. இந்த வருத்தம் எனக்கு நீண்ட நாள்கள் இருந்தது.

ஒரு நாள் நான் குளித்துக்கொண்டிருந்தபோது அசரீரியாக ஒரு குரல் கேட்டது. 'நகைதானே போச்சு. கவலைப்படாதே, நான் இருக்கேன்' எனும் பாபாவின் குரல் என் காதுகளில் ஒலித்தது. அப்படி ஓர் அமானுஷ்யமான குரலை அதற்கு முன்பும் சரி, பின்பும் சரி, நான் கேட்டதே இல்லை. அந்த இரண்டு வாக்கியங்கள் என் இதயத்தில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி, எனக்கு மனமாற்றத்தைத் தந்தன. இதை பாபாவின் இறைசக்தி என்றுதான் சொல்ல முடியும்.”
வாசகர்களே!
சாயிபாபா உங்கள் வாழ்க்கையில் நிகழ்த்திய அற்புதங்களை உங்கள் புகைப்படத்துடன், ஆனந்த விகடன், 757 அண்ணாசாலை, சென்னை-2 என்ற முகவரிக்கோ, saibaba@vikatan.com மின்னஞ்சலுக்கோ எழுதி அனுப்புங்கள். சிறந்த அனுபவங்கள் வெளியிடப்படும்.