மற்ற எபிசோடுகள்
Published:Updated:

பாபாயணம் - 13

sai baba
பிரீமியம் ஸ்டோரி
News
sai baba

சச்சிதானந்த சத்குரு ஸ்ரீசாயிநாதரே சரணம்!

தைரியமாகப் போய்க்கொண்டிரு. உனக்கான

இலக்கை நோக்கிச் செல். நான் உன்னுடன்

உன் நிழலாக வந்துகொண்டிருக்கிறேன்.

- பாபா

‘குருவை நாம் தேடிப்போய்க் கண்டடைய வேண்டும்’ என்கிறது முண்டக உபநிஷத். ஆனால் பாபாவோ தன் பக்தர் களைத் தானே நாடிவந்து ஈர்க்கிறார். காரணம் அவர் அன்பின் வடிவம்.

பாபாயணம் - 13

‘அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்

அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே’ என்கிறது திருமந்திரம்.

அன்பாய் சிவமாய் ஷீர்டியின் மசூதியில் அமர்ந்திருந்தார் பாபா. அவரை தரிசிக்க உள்ளப் பிணியோடும் உடல் பிணியோடும் பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். பாபாவைப் பார்த்ததும் பாவங்கள் தீர்ந்தன. நோய்கள் விலகின.

அப்போது தொழுநோயின் தாக்கம் தீவிரமாக இருந்தது. தீர்க்க முடியாத நோய் என்று மக்கள் பயந்தனர். அந்நோயினால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களைக் கண்டு மக்கள் பதறினர். அழுகும் அவர்களின் உடல் உறுப்புகளைக் கண்டு அருவருத்தனர். திக்கற்றவர் களுக்கு தெய்வம் தானே துணை. மனிதர்களால் கைவிடப்பட்டவர்கள் தெய்வத்தின் அனுக்கிரகம் நாடி வந்தனர். ஷீர்டியின் சந்நிதியில் சரணடைந்தனர்.

பாபாயணம்
பாபாயணம்

பாபாவுக்கு பேதமில்லை. தன்னை நாடி வருபவர்கள் அனைவரையும் ஒன்றுபோல் நேசிக்கும் மனம் பாபாவுடையது. நோயாளிகளைப் பார்த்ததுமே முகம் கோணும் பக்தர்கள் சூழ்ந்திருக்க தன்னைத் தொழுத தொழுநோயாளிகளை ஆரத் தழுவினார். தன் வீடுதேடிவந்த விருந்தினராய் உபசரித்தார். அந்த அன்பும் ஆறுதலுமே அவர்களைப் பாதி குணமாக்கியது.

சாயியின் தீண்டுதலே மருந்துதான் என்றபோதும் நோயாளிகள் மனம் தேற கொஞ்சம் மருந்தும் தருவார். பாபாவின் இந்த அன்புச் சிகிச்சைக்கு முன்பாக எந்த நோய் பீடித்திருக்க முடியும்! சேர்ந்துகிடந்த குப்பைகளை வெள்ளம் அடித்துப்போவதுபோல பாபாவின் கருணை வெள்ளம் அவர்களின் நோய்களைக் கழுவி சுத்தம் செய்தது. ஷீர்டி மக்கள் இந்த ஆச்சர்யத்தை விழிவிரியக் கண்டு போற்றினார்கள்.

இதுவரை தரிசித்திராத சாயிபாபா திருவுருவப் படங்கள் புதிய பரிமாணங்களில். வாரந்தோறும் பாதுகாக்கத் தயாராகுங்கள்!

“போற்றுவது கிடக்கட்டும், இதேபோன்று ஆதரவற்றவர்களை என்னிடம் கூட்டி வாருங்கள்” என்று அன்புக் கட்டளையிட்டார்.

இந்தூரைச் சேர்ந்தவர் சம்பத்ராவ் தேஷ்முக், மோட்டார் வண்டி ஓட்டுபவர். அவருக்குத் தொழுநோய் தொற்றிக்கொண்டது. பாபாவே நம்பகமான வைத்தியர் என்பதை அறிந்து அவரிடம் சரணடைந்தார் தேஷ்முக். நம்பியவர்களைக் காப்பதுதானே சாயிநாதனின் செயல். தேஷ்முக்கின் நோய் தீர்ந்தது. மீண்டும் தன் பணிக்குத் திரும்பினார். தன்னைப்போல இந்த நோயினால் பாதிக்கப் பட்டவர்களை ஷீர்டி நோக்கி ஆற்றுப்படுத்தினார்.

அந்த நாள்களில் பாபாவின் கருணைப் பார்வை தங்கள் மேல் பட வேண்டும் என்று அனைத்து நோயாளிகளும் மசூதிக்கு முன்பு வந்து நிற்பார்கள். பிறவிப் பிணி தீர்க்கும் பரம்பொருளுக்கு உடல்பிணி தீர்ப்பதுவா பெரிய விஷயம்? பாபா அவர்களைக் கண்ணாரக் கண்டு மனமார ஆசி வழங்குவார். உதவி தேவைப்படுபவர்களைக் கண்டடைந்து உதவுவார்.

அப்படி பாபாவின் அற்புதங்களைக் கேள்விப் பட்டு அவரை நாடி வந்தார் ஒரு தொழுநோயாளி. நோய் முற்றிவிட்டது. கடைசி முயற்சியாய் சாயி. வெறும் கையோடு மகானை தரிசிப்பதெப்படி என்று அந்த நோயாளியின் மனம் துடித்தது. கைவசம் இருந்த சில்லறைகளைக் கொண்டு ஒரு பீடா வாங்கினார். தன் இடுப்பு வேட்டியில் வைத்துச் சுருட்டி பத்திரப்படுத்தி, சாயியின் சந்நிதானத்தை அடைந்தார்.

சச்சிதானந்த சத்குரு ஸ்ரீசாயிநாதரே சரணம்!
சச்சிதானந்த சத்குரு ஸ்ரீசாயிநாதரே சரணம்!

அன்று மசூதியில் நிறைய கூட்டம். சாயிக்கு பக்தர்கள் அன்புமிகுதியால் எத்தனையோ இனிப்புகளை சமர்ப்பித்து நமஸ்கரித்தனர். அவர் முன் குவியும் காணிக்கைகளைக் கண்டவருக்குத் தன் இடுப்பிலிருக்கும் பீடா நினைவு வந்தது. மலையின் அருகில் சிறு மணல் துகளை வைக்கலாமா... மலர்கள் நிறைந்த மாலைகளுக்கு நடுவில் மணமற்ற ஒரு முள்ளுக்கு என்ன மரியாதை இருக்கும்... நாம் தந்து பெற்றுக்கொள்ள வேண்டுமா இந்த தயாளன் என்று தனக்குள் வாடினார். சாயியின் புண்ணிய பார்வை அவர்மேல் பட்டது. மின்சாரம் பாய்ந்ததுபோன்ற அந்தப் பார்வை அவரை ஏதோ செய்தது. உடல் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் துயர முடிச்சுகளை அவிழ்த்துக்கொள்வதுபோன்று உணர்ந்தவர், பாபாவின் காலடிகளில் விழுந்து வணங்கி, பிரசாதம் பெற்றுக்கொண்டு அங்கிருந்து புறப்படத் தயாரானார். உடலை மட்டும் பார்க்கிறவரா பாபா, உள்ளத்தையும் அல்லவா பார்க்கிறவர்.

“எனக்குத் தருவதற்காகக் கொண்டு வந்த பீடாவைத் தராமல் செல்கிறாயே...” என்றார்.

இதைக் கேட்ட மாத்திரத்தில் அவர் கண்கள் கலங்கின. அனைத்தும் அறிந்தவரிடம் நாம் மறைக்க முயன்றது எத்தகைய பைத்தியக்காரத்தனம் என்று தன்னையே நொந்துகொண்டார். பீடாவை எடுத்து நீட்டினார். பாபா அதை வாங்கி மகிழ்வோடு உண்டார். ஷீர்டி இந்த அற்புதங்களை யெல்லாம் கண்ணாரக் கண்டது.

குறைவில்லாத அன்பு பாபாவு டையது. அந்த அன்புதான் நோய்களைத் தீர்த்து, அற்புதங்கள் செய்தது. அகங்காரத்தை அழித்துத் தன்னிடம் ஈர்த்துக்கொண்டது. ஷீர்டியில் பக்தி சாம்ராஜ்ஜியத்தை நிறுவியதும் அந்த அன்புதான்.

(தரிசனம் தொடரும்)

பாபாவும் நானும்

2003-ம் ஆண்டு நான் அடையாறு இசைக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன். அதற்காக, அப்போது ராஜா அண்ணாமலைபுரத்தில் அறை எடுத்துத் தங்கியிருந்தேன். மயிலாப்பூர் சாயிபாபா கோயிலுக்கும் ராஜா அண்ணாமலைபுரத்துக்கும் இரண்டு கிலோ மீட்டர்தான் இடைவெளி இருக்கும்.

அடிக்கடி நான் அந்த வழியாகப் பலமுறை சென்றிருக்கிறேன். அப்போதெல்லாம் சாயிபாபா படத்துடன் ரிக்‌ஷாவில் ‘ஓம் ஸ்ரீசாயி ராம் சாயி சாயிராம்’ என்ற பாடலுடன் ஊர்வலமாகச் செல்பவர்கள் அந்தக் கோயிலின் அருகே தங்கி இளைப்பாறுவதைப் பார்த்திருக்கிறேன். ‘ஏதோ நிழலுக்காக அவர்கள் அங்கு இருக்கிறார்கள்’ என்றுதான் நினைத்தேனே தவிர, அங்கு ஒரு சாயிபாபா கோயில் இருக்கிறது என்பதை நான் அறியவில்லை.

பாடகர் வேல்முருகன்
பாடகர் வேல்முருகன்

இப்படியாக ஐந்து ஆறு ஆண்டுகள் கழிந்தன. என் நண்பர் ஒருவர் சீரியலில் நடித்து வந்தார். அவரின் சீரியலுக்கு நான் பாடல்கள் பாடியதுண்டு. அப்போது ஏற்பட்ட பழக்கம் நட்பாக மாறியது. அவர்தான் முதன்முதலில் சாயி பாபா பற்றி என்னிடம் கூறினார். ‘பாபா பக்தரான பிறகு பெரிய பெரிய மெகா சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றேன், நீங்களும் அப்படிச் செய்தால், பாபா உங்களுக்கும் கருணை காட்டுவார்’ எனக் கூறினார். அவர்தான் என்னையும் சாயிபாபா கோயிலுக்கு அழைத்துப்போனார். அங்கு போன பிறகுதான் நான் உணர்ந்தேன். ‘அட, இந்த இடத்துக்கு நான் அடிக்கடி வந்திருக்கிறோமே. இப்படி ஒரு கோயில் இருப்பது தெரியாமல் போய்விட்டதே’ என நினைத்தேன்.

சாயியிடம், மனம்விட்டு நீங்கள் எதை நினைத்து வேண்டிக் கொண்டாலும் அதை உடனே உங்களுக்கு நிறைவேற்றித் தருவார். ‘உங்கள் மனதில் என்ன ஆசைப்படுகிறீர்களோ அதை எண்ணி வேண்டிக்கொள்ளுங்கள்’ என்று கூறினார். அப்படியே என் மனதில் ‘நான் இதுவரை வீடு இல்லாமல் இருக்கிறேன். ஒரு நல்ல வீடு அமைய வேண்டும்’ என்று பாபாவிடம் வேண்டிக்கொண்டேன். மள மளவெனத் திரைப்பட வாய்ப்புகளையும் ஏராளமான கச்சேரிகள் செய்யக்கூடிய வாய்ப்புகளையும் பெற்றேன்.

நீங்கள் நம்பினாலும் சரி, நம்பாவிட்டாலும் சரி... அய்யப்பன்தாங்கலில் எனக்கிருந்த ஒரு காலிமனையில் நான் வீட்டைக் கட்டத் தொடங்கிவிட்டேன். அந்த வீட்டின் பணிகளெல்லாம் சிறப்பான முறையில் ஓராண்டிலேயே நிறைவேறி, சாவி கைக்கு வந்தது.

இது பாபாவின் மகிமையே அன்றி வேறென்ன சொல்ல முடியும்? பாபாவின் பொற்பாதங்களில் சாவியை வைத்து வணங்கிவிட்டு கிரகப்பிரவேசத்தை நடத்தினேன். எண்ணியதை எண்ணியாங்கு திண்ணியமாய் முடிக்கும் தெய்வமாக ஷீர்டி சாயி திகழ்கிறார் என்பதற்கு இதைவிட உதாரணமாக வேறு எதை நான் சொல்ல முடியும். அதுமுதற்கொண்டு சாயிபாபா பக்தராக நான் முழுவதும் மாறிப்போனேன். சாயிபாபா பாடல்கள் பலவற்றைப் பாடியிருக்கிறேன்.

சமீபத்தில்கூட நான் பாடிய பாபா பாடல் மிகவும் பிரபலமானது. ஷீர்டிக்கு அடிக்கடி நான் பயணித்து வருவது வழக்கம். சாயிபாபா பக்தரான பிறகு வாழ்க்கையில் மிகப்பெரிய தெம்பும் தைரியமும் உற்சாகமும் வரத் தொடங்கிவிட்டது. எப்போதும் அவர் அருகில் இருந்து நம்மை வழிநடத்துவதுபோன்ற ஒரு நம்பிக்கை நம் மனத்தில் இருப்பதை எவரும் மறுக்க முடியாது.

-த.கதிரேசன்

வாசகர் அனுபவம்

நான் சொந்தமாக கார் வைத்துள்ளேன். அதை ஒரு டிராவல்ஸில் இணைத்து, ஓட்டிவருகிறேன். நான்கு மாதங்க ளுக்கு முன், சக ஓட்டுநரின் விடுப்பு காரணமாக கூடுதல் ட்ரிப் போக வேண்டி வந்தது. இரவு 2 மணிக்கு ட்ரிப் முடிந்து, ஷார்ஜாபூர் வழியாக ஓசூருக்குச் சென்று கொண்டிருந்தேன். சில மணித்துளிகள் கண்ணயர்ந்து விட்டேன். திடீரென்று என் காதருகில் ஒரு சத்தம்.

பாபாயணம் - 13

அலறியடித்து விழித்துப்பார்க்கையில் கார் சாலையை விட்டு விலகி, கட்டுப்பாடிழந்து சென்று கொண்டிருந்தது. சில விநாடி தாமதித்திருந்தாலும் பெரும் விபத்து நடந்திருக்கும். இன்றுவரை அந்தச் சத்தம் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. ஏனெனில், என்னைத் தவிர காரில் யாரும் கிடையாது. என்னுடைய காரில் ஷீர்டி சாயிபாபாவின் டாலர் போட்டோ ஒன்று எப்போதும் ஊஞ்சல் ஆடியபடி இருக்கும். எல்லாம் சாயிநாதனின் அருள்!

- M .R .ரமேஷ் குமார். ஓசூர்

வாசகர்களே!

சாயிபாபா உங்கள் வாழ்க்கையில் நிகழ்த்திய அற்புதங்களை உங்கள் புகைப்படத்துடன், ஆனந்த விகடன், 757 அண்ணாசாலை, சென்னை-2 என்ற முகவரிக்கோ, saibaba@vikatan.com மின்னஞ்சலுக்கோ எழுதி அனுப்புங்கள். சிறந்த அனுபவங்கள் வெளியிடப்படும்.