
சச்சிதானந்த சத்குரு ஸ்ரீசாயிநாதரே சரணம்!
புற உலகை நம்பியிருக்கும்வரை துன்பம் இருந்து கொண்டுதான் இருக்கும்.
உன் வெளிமுகப் பார்வையை உதறித் தள்ளி
உள்முகமாக என்னை தரிசி...
உனக்கு நான் துணையாக இருப்பேன்.
- பாபா
“தோஷமில்லாத தூய எண்ணத்துடன் என்னை நம்பு. எங்கும் நானே நிறைந்துள்ளேன். உனக்கும், எனக்கும் உள்ள இணைப்புப் பாலம் விசுவாசமே. என் சொல்படி நட. அப்போது நான் உன்னைக் காப்பேன்” என்கிறார் பாபா.

ஒருமுறை தீபாவளிப் பண்டிகை களைகட்டிக்கொண்டிருந்தது. பாபா நெருப்பின் அருகில் அமர்ந்து குளிர்காய்ந்து கொண்டிருந்தார். பிரகாசமாக எரிந்து கொண்டிருந்த நெருப்பில் விறகை ஒவ்வொன்றாக நுழைத்துக் கொண்டிருந்தவர் சட்டென்று தன் கையை நெருப்புக்குள் நுழைத்துவிட்டார். கை வெந்துவிட்டது.
இதைக் கண்டு அலறிய மாதவராவ் தேஷ்பாண்டே “தேவா, என்ன இது...” என்று ஓடிவந்து அவரை இடுப்பில் கைகொடுத்துப் பின்னுக்கு இழுத்தார். சுற்றியிருந்த பக்தர்கள் பதறினர். பாபா தன் உணர்வுக்கு வரக் கொஞ்சநேரம் எடுத்தது. உடனடியாக சிறு வைத்தியம் செய்து கட்டுப்போட்டனர். சிறிது நேரத்துக்குப் பின் பாபா தன் திருவாய் மலர்ந்து அருளினார்.

“அவள் என் பக்தை. தொலைதூரத்தில் உள்ள கிராமத்தில் வாழ்கிறாள். எப்போதும் அவளுக்கு என் நாம ஜபம்தான். அவள் கணவன் ஒரு கொல்லன். அவனுக்கு உதவிக்கொண்டிருந்தாள் அவள். துருத்தியை வேகமாக அழுத்தி அக்னிச் சுவாலையை அதிகப்படுத்திக்கொண்டிருந்தாள். அந்த நேரத்திலும் அந்தப் பெண், கண் மூடி என் நாமத்தைச் சொல்லிக்கொண்டேயிருந்தாள். அவளுக்குத் தவழும் ஒரு சிறு பிள்ளை உண்டு. சுடர்விடும் நெருப்பைப் பூ என்று நினைத்துக் கொண்டதோ அல்லது அந்த அனுமன்போல நல்ல பழம் என்று நினைத்துக்கொண்டதோ தெரியவில்லை. நெருப்பை நோக்கிப் பாய்ந்தது. இவளோ கண்மூடி என்னை ஜபம் செய்து கொண்டிருக்கிறாள். இப்போது சொல்லுங்கள், நான் என்ன செய்யட்டும்... என்னை நம்பிக்கையோடு துதிக்கும் அவளின் பிள்ளையைக் காப்பாற்ற வேண்டியது என் கடமையல்லவா... அதைத்தான் நான் செய்தேன். நெருப்புக்குள் வீழ்ந்த அந்தக் குழந்தையை என் கரங்களில் தாங்கி அதை ஒரு மலர்போலக் கசங்காமல் பாதுகாத்து அந்தப் பெண்ணிடம் ஒப்படைத்துவிட்டேன்” என்றார்.
அங்கிருந்தவர்கள் எல்லாம் ஒரு கணம் மனம் விம்மினர். எங்கிருந்தாலும் தன் அடியவர்களின் நலன் பாபாவின் கருத்தில் இருக்கும் என்பதை உணர்த்த இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும்.
இந்த உலகில் பிறப்பினால் உயர்ந்தவரும் இல்லை; தாழ்ந்தவரும் இல்லை. அனைவருக்குள்ளும் இருப்பது பரப்பிரம்மமே. பாபா, இதைத் தன் வாழ்வு முழுவதும் உணர்த்தியபடியேயிருந்தார். உயிர்களுக்குள் பேதமில்லை என்பதுதான் அவரின் போதனையாக இருந்தது.
பாரதப் போர் முடிந்தது. கிருஷ்ணர் தன் அரண்மனைக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். வழியில் உதங்க முனிவரைச் சந்தித்தார். முனிவரைக் கண்டு வணங்கி மரியாதை செய்த கிருஷ்ணர், ‘தாங்கள் வேண்டும் வரம் என்ன?’ என்று கேட்டார். அதற்கு முனிவரும், ``துறவியான எனக்குத் தேவை என்று எதுவுமில்லை... தாகம் எடுக்கும்போது அருந்தத் தண்ணீர் கிடைத்தால் போதும். அதையே வரமாகக் கொடு” என்றார். கிருஷ்ணரும் அதற்குச் சம்மதித்தார்.

ஒருமுறை முனிவர் பாலைவனத்தில் நடந்துவந்துகொண்டிருந்தார். அவருக்கு தாகம் அதிகரித்தது. அப்போது கண்ணன் கொடுத்த வரம் நினைவுக்கு வர, ‘கண்ணா எனக்கு அருந்தத் தண்ணீர் வேண்டும்’ என்று வேண்டுகிறார். அப்போது முனிவரைச் சோதிக்கும் வண்ணம் இந்திரன் ஓர் அழுக்கான மனிதனாக மாறி, கையில் அமிர்த குடத்தை எடுத்துக்கொண்டு அவர்முன் வந்தார்.
அவரைக் கண்டதும் முனிவருக்கு, ‘இவன் யாராய் இருப்பான்... இவன் குலம் என்னவாக இருக்கும்...’ என்ற எண்ணங்கள் தோன்ற அவனிடமிருந்து துளி நீர்கூட வேண்டாம் என்று முடிவு செய்து பேசாமல் இருந்துவிட்டார். கஷ்டத்தோடு கஷ்டமாக அந்தப் பாலைவனத்தைக் கடந்துவந்தார்.
இதுவரை தரிசித்திராத சாயிபாபா திருவுருவப் படங்கள் புதிய பரிமாணங்களில். வாரந்தோறும் பாதுகாக்கத் தயாராகுங்கள்!
பின்பு ஒரு நாள் கிருஷ்ணரைச் சந்தித்தபோது “கிருஷ்ணா, நான் தண்ணீர் கேட்டும் நீ தரவில்லை” என்று வருத்தப்பட்டுக்கொண்டார். கிருஷ்ணன் புன்னகை பூத்தபடியே, “முனிவரே, நீர் முற்றும் துறந்தவர். உம்மிடம் பேதம் இருக்காது என்று நினைத்தேன். ஆனால் நீ குலபேதம் பார்த்து உம்மைத் தேடிவந்த அமிர்தத்தையே இழந்துவிட்டீர்” என்றார்.
உயிர்களுக்குள் பேதம் இல்லை என்று கருதுவதுதானே ஞானம்.. நெருப்பில் வெந்த பாபாவின் கையைக் குணப்படுத்த பாபாவின் சீடர் நானா, பம்பாயிலிருந்து டாக்டர் பரமானந்த் என்பவரை அழைத்து வந்தார். ஆனால் பாபாவோ பிடிவாதமாக மறுத்துவிட்டார். மசூதிக்குத் தன் நோய் தீர நாடி வந்த பாகோஜி ஷிண்டே என்பவரை அழைத்துத் தனக்கு வைத்தியம் செய்யச் சொன்னார். ஷிண்டேவுக்குத் தொழுநோய். அவர் அருகில் செல்லவே யாவரும் அருவருத்தனர். பாபா அவரைத் தனக்கு வைத்தியம் செய்யத் தெரிவு செய்தார். தினமும் பாபாவின் கைப்புண்ணுக்கு நெய் இடுவது, பாபா சொல்லும் பச்சிலைகளைக் கொண்டுவந்து அரைத்துப் பூசிக் கட்டுப்போடுவது ஆகிய சேவைகளைச் செய்ய அனுமதித்தார். தோட்டத்துக்குப் போகும்போது பாபாவுக்குக் குடை பிடிக்கவும் ஷிண்டேவுக்குத்தான் அனுமதி.
பாபா பேதங்களற்ற பாற்கடல். அதில் மூழ்கி முத்தெடுக்க பக்தி என்னும் பக்குவம் இருந்தால் போதும்.
(தரிசனம் தொடரும்)
பாபாவும் நானும்
“பள்ளி, கல்லூரிப் படிப்பு முடிந்ததும் நான் சென்னைக்கு வந்துவிட்டேன். சட்டக்கல்லூரி முதுகலை படிக்கும்போது சக மாணவிகளுடன் மயிலாப்பூரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்தேன். ஒருமுறை அறுபத்துமூவர் திருவிழாவில் கலந்துகொள்ளும்போதுதான் பாபா கோயிலைப் பார்த்தேன். அதன் பிறகு அடிக்கடி அங்கே போக ஆரம்பித்தேன். நாங்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து நடந்தே போய்விடலாம். அப்போதெல்லாம் இத்தனை கூட்டமிருக்காது. உள்ளே போய் உட்கார்ந்தால், ரொம்ப அமைதியாக இருக்கும். மனசுக்கும் நிம்மதி கிடைக்கும். அதன் பிறகு எனக்குத் திருமணமானது. ‘சென்னையில் எனக்கு ஒரு நல்ல வீடு அமையணும்’ என்று ஒரு முறை பாபாவிடம் வேண்டிக்கொண்டேன்.

மயிலாப்பூரில் எங்கு பார்த்தாலும் கோயில்கள்... இங்கு இருக்கும் கடைகள்... இங்கு இருக்கும் மனிதர்கள்... இவை எல்லாமே நம் மனதில் ஓர் ஈர்ப்பை ஏற்படுத்தும். இங்கு வசித்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றும். ஆனால், அப்போதிருந்த சூழ்நிலையில் எங்களால் மயிலாப்பூரில் வீடு வாங்க முடியும் எனத் தோன்றவில்லை. அதனால் வேளச்சேரி, அடையாறு, திருவான்மியூர் பகுதிகளில் வீடு தேடிக்கொண்டிருந்தோம். பாபாவின் அன்பினாலும் அருளாசியாலும் அவர் இருக்கிற இடத்துக்குப் பின்னால் மந்தைவெளியில் எனக்கு வீடு அமைந்தது. சொல்லப் போனால் அவரின் மடியிலேயே ஒரு செல்லப்பிள்ளை மாதிரி உட்கார்ந்திருக்கக்கூடிய வாய்ப்பு கொடுத்தார் பாபா. ஷீர்டிக்கு நானும் என் கணவரும் போய் நன்றி சொன்னோம். 2014-ம் ஆண்டு போகும்போது பாரத தேசத்துக்கு மோடி பிரதமராக வேண்டுமென்று வேண்டிக்கொண்டேன். வேண்டுதல் பலித்ததும் மறுபடியும் ஷீர்டிக்குப்போய் பாபாவுக்கு நன்றி சொன்னேன்.”
வாசகர் அனுபவம்
டிசம்பர் 2018-ல் ஷீர்டி செல்வதென அலுவலகத் தோழிகள் சிலர் முடிவெடுத்து டிக்கெட் புக் செய்திருந்தோம். பயணம் மேற்கொள்ள 10 தினங்கள் இருந்தன. பாபாவின் தரிசனம் பெற இன்னும் 10 நாள்கள் இருக்கின்றனவா என்று உள்ளூர வருத்தம் தோன்றியது.

ஆனால், அன்றிலிருந்து ஓர் அதிசயம் நிகழ்ந்தது. நான் செல்லும் இடமெல்லாம் பாபாவின் திருவுருவம் தெரிய ஆரம்பித்தது. முதல் நாள் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தபோது எதேச்சையாக பக்கத்தில் திரும்பிப் பார்த்தால், பூ விற்கும் பெண்ணின் சிறிய கடையில் பாபாவின் உருவச்சிலையும் அதனருகில் அந்த மதிய வேளையில் அகல் விளக்கும் எரிந்துகொண்டிருந்தது. அதன்பின்பு நான் பார்க்கும் வாகனங்களில், கடைகளில் செல்லுமிடங்களிலெல்லாம் பாபாவின் திருவுருவம் காட்சியளித்தது.
- ஜெ.ஜான்ஸிராணி
வாசகர்களே!
சாயிபாபா உங்கள் வாழ்க்கையில் நிகழ்த்திய அற்புதங்களை உங்கள் புகைப்படத்துடன், ஆனந்த விகடன், 757 அண்ணாசாலை, சென்னை-2 என்ற முகவரிக்கோ, saibaba@vikatan.com மின்னஞ்சலுக்கோ எழுதி அனுப்புங்கள். சிறந்த அனுபவங்கள் வெளியிடப்படும்.