மற்ற எபிசோடுகள்
Published:Updated:

பாபாயணம் - 15

பாபாயணம்
பிரீமியம் ஸ்டோரி
News
பாபாயணம்

சச்சிதானந்த சத்குரு ஸ்ரீசாயிநாதரே சரணம்!

ஒருவன் என் நாமத்தை உச்சரிப்பானாகில்

அவனை எல்லாத் திக்கிலிருந்தும் காப்பேன்.

அவனுடைய ஆசைகளைப் பூர்த்தி செய்து பக்தியை அதிகப்படுத்துவேன்.

நம்பிக்கையுடன் என்னைச் சார்ந்திருந்தால் எல்லையற்ற திருப்தியை அளிப்பேன்.

- பாபா.

பாபா மனிதர்களின் ஆன்மாவை உணர்ந்தவர். மாயையில் சிக்கி மோகத்தில் மூழ்கியிருக்கும் மனிதர்களைத் தன்னிடம் இழுத்து அவர்களின் ஆத்ம தீபத்தைத் தூண்டி ஒளிரச் செய்கிறவர். சாதி, மதம், இனம், மொழி என்று எந்தப் பாகுபாடும் அவரிடம் இல்லை.

பாபாயணம் - 15

“ராமரும் ரஹீமும் ஒன்றுதான். மதத்தை முன்னிலைப்படுத்தி உங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளாதீர்கள். சண்டையிட்டால் நீங்கள் மனிதப் பிறவி எடுத்ததன் அர்த்தமே போய்விடும்.

வெவ்வேறு கருத்துகள் இருந்தாலும் அன்பையே மதங்கள் போதிக்கின்றன. எல்லோரையும் நேசி என்றுதான் கூறுகின்றன. பின் ஏன் சண்டை... இறைவனை அறிவதே மதத்தின் நோக்கம். அதுவே தெய்விகம்’ என்று, தன்னிடம் வரும் சகல மதத்தினருக்கும் உபதேசித்தார் சாயி.

அவர் புரியும் அற்புதங்கள் மக்களை அவரை நோக்கி இழுத்தன. ஆனபோதும் மக்களுக்கு அவர் என்ன மதம் என்று அறியும் ஆவல் நீங்கவில்லை. அவரோ திருக்குரானை முழுமையாக அறிந்தி ருந்தார். அதே வேளையில் கீதை, உபநிடதங்கள் போன்றவற்றுக்கும் உரிய விளக்கங்கள் கூறினார். பக்தர்களை விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்ய உபதேசித்தார்.

சச்சிதானந்த சத்குரு ஸ்ரீசாயிநாதரே சரணம்!
சச்சிதானந்த சத்குரு ஸ்ரீசாயிநாதரே சரணம்!

பாபாவின் கீதை விளக்கங்கள் சுவையானவை. ஒருநாள் நானா, கீதை வாசித்துக்கொண்டிருந்தார். இடை நிறுத்திய பாபா ஸ்லோகம் ஒன்றைக் கேட்டு அதற்கு விளக்கம் தருகிறார்.

“ ‘தத்வித்தி ப்ரணிபாதேண பரிப்ரச்னேன சேவயா’ என்பதற்குப் பொருள் என்ன என்று தெரியுமா? ‘வெறும் சாஷ்டாங்க நமஸ்காரம் மட்டும் போதாது. மனம், உடல், ஜீவன் எல்லாவற்றையும் சேர்த்து ‘தான், தனது’ என்ற அகங்காரத்தை அழித்து, பூரண சரணாகதி அடைய வேண்டும். சேவை பிரயோஜனப்பட வேண்டுமானால் பரிபூரணமாய் குருவுக்கு சமர்ப்பணம் செய்துவிட்டு குருவின் சேவைக் காகவே இந்த உடல் உள்ளது என்று எண்ண வேண்டும்” என்றார் பாபா.

இதுவரை தரிசித்திராத சாயிபாபா திருவுருவப் படங்கள் புதிய பரிமாணங்களில். வாரந்தோறும் பாதுகாக்கத் தயாராகுங்கள்!

இஸ்லாமியர்கள் அவர்முன் வந்து தொழுகை நடத்தி, தேங்காய், சர்க்கரை கலந்த பிரசாதம் கொடுத்தார்கள். சாயி அதை விருப்பத்துடன் வாங்கிச் சாப்பிடுவார். அடுத்த நிமிடமே இந்துக்கள் அங்கு வந்து அவருக்கு சந்தனம் பூசி, குங்குமம் இட்டு, பாத பூஜை செய்து கற்பூர ஆரத்தி காட்டி வழிபடுவார்கள்.

அவரோ மசூதியில் யாக குண்டம் வளர்த்தார். சிதிலமடைந்திருந்த பல கோயில்களைச் சீரமைத்து பூஜைகள் நடக்க வழி செய்தார். அவரின் தோட்டத்தில் துளசிச்செடிகளை வளர்த்தார்.

அதே வேளை இஸ்லாம் பெரியவர்கள் அவரைச் சந்திக்க வரும்போது அவர்களுடன் குரான் பற்றி உரையாடுவார். அவர்களுடன் சேர்ந்து அராபிய மொழிப் பாடல்களைப் பாடி காலில் சலங்கை கட்டிக்கொண்டு ஆடுவார். சந்தனக்கூடு திருவிழாவைச் சிறப்பாக நடத்தினார்.

மகான்களுக்கு ஏது மதம்? ஆனால் அதை அனைவராலும் சரியாகப் புரிந்துகொள்ள முடிவதில்லை. ‘மதம் பிடித்தவர்கள்’ சிலருக்கு அவர்மேல் கோபம் வந்தது.

sai baba
sai baba

ஒருமுறை ரோஹிலா என்பவன் பாபாவின்மேல் கோபம் கொண்டு அவரைக் கொல்ல முயன்றான். அந்தக் கணம் பாபா அவனைப் பார்த்தார். பாபாவைத் தாக்க உயர்ந்த அவனின் கரங்கள் அப்படியே அந்தரத்தில் உறைந்துவிட்டன. பாபா அவன்மேல் அன்புகொண்டு அற்புத தரிசனம் காட்டியருளத் திருவுளம் கொண்டார்.

பரம்பொருள் தன் விஸ்வரூபத்தை எப்போதாவதுதான் காட்டியருள்வார். வானளாவ எழுந்து நிற்பது மட்டுமல்ல விஸ்வரூபம். தனக்குள்ளேயே அத்தனையும் இருக்கின்றன என்பதைக் காட்டி உணர்த்துவதுதான் விஸ்வரூபம். மண்ணைத் தின்ற கண்ணன் யசோதைக்கு வாயில் உலகத்தையே காட்டியது விஸ்வரூபமன்றி வேறு என்ன!

பாபா ரோஹிலாவிடம் தன் இரு உள்ளங்கை களையும் விரித்துக் காட்டினார். கண்ணன் யசோதைக்குத் தன் சின்னஞ்சிறு வாயில் அகில உலகங்களையும் காட்டியதுபோல, ரோஹி லாவுக்கு பாபா தன் கரங்களில் மெக்காவும் மதீனாவும் புனித குரான் வாசகங்களையும் காட்டியருளினார். திகைத்துப் போனார் ரோஹிலா. தன்முன் நிற்பது பிரபஞ்சத்தின் பேரருள் என்பதை அறிந்து அந்தப் பேரருளின் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டான். இனி, தான் வாழ வேண்டிய புண்ணியத் தலம் அதுவே என்பதை முடிவு செய்து நிரந்தரமாக பாபாவுடன் மசூதியிலேயே தங்கிவிட்டான்.

ஷீர்டியில் கொண்டாடப்பட்ட திருவிழாக் களில் முக்கியமானவை ராமநவமி மற்றும் சந்தனக்கூடு.

‘தாமு அண்ணா’ என்பவருக்கு வாழ்வில் சகலமும் இருந்தும் வாரிசு இல்லை என்ற குறை வாட்டி வந்தது. பாபாவின் சந்நிதானத்துக்கு வந்து வேண்டிக்கொண்டார். அடுத்த ஆண்டுகளில் அவருக்கு அடுத்தடுத்து புதல்வர்கள் பிறந்தனர். அதற்கு நன்றிக்கடனாக தன் இஷ்ட தெய்வமான ராமபிரானின் பிறந்த தினமான ராம நவமியை ஷீர்டியில் கொண்டாட விரும்பினார். பாபாவும் அதற்கு அனுமதி கொடுத்தார். தாமு அண்ணா ராமநவமித் திருவிழாவிற்குக் கொடி தயாரித்துக் கொடுத்தார்.

இதேநாளில்தான் முகமதிய ஞானியரை கௌரவிக்கும் சந்தனக்கூடு ஊர்வலமும் நடைபெறுவது வழக்கம். பகலில் ராமநவமி ஊர்வலம், இரவில் சந்தனக்கூடு. இந்த அற்புதம் சாயியின் சந்நிதானத்தைத் தவிர வேறு எங்கு சாத்தியம்... மத வேறுபாடுகள் கடந்த அற்புதமான மகான் பாபா.

எங்கே உண்மையும் நியாயமும் அன்பும் இருக்கிறதோ அங்கே பாபா இருப்பார். அவர் இருக்கும் இடத்தில் சகல வளமும் வாழ்க்கையும் இருக்கும்.

(தரிசனம் தொடரும்)

வாசகர் அனுபவம்

ண்பர்களின் அழைப்பினால், என் மகனுக்கு ஷீர்டி செல்லும் வாய்ப்பு கிடைத்தது. ரயில் டிக்கெட் உறுதியாகாத நிலையிலேயே புறப்பட்டார். என் மனதில் ஏதோ ஒன்று உறுத்த, `உன் மனைவியையும் அழைத்துச் செல்' என்றேன். `எனக்கே பயணச்சீட்டு உறுதியாகவில்லை. அவளை எப்படி அழைத்துச் செல்லமுடியும்?' என்று பதிலுரைத்தான். `பாபா உறுதி செய்வார்' என்று கூறி அனுப்பி வைத்தேன்.அரைகுறை மனதுடன் புறப்பட்டுப் போனார்கள். அந்த ரயில் நிலையத்தில் கண்காணிப்பாளராகப் பணியாற்றும் என் உறவினரிடம் சென்று தயக்கத்துடனே செய்தியைக் கூறியுள்ளனர். `கொஞ்சம் இருங்கள்' என்று கூறியவாறே மடிக்கணினியைத் தட்டிவிட்டுப் பார்த்தார்.

என்ன ஓர் ஆச்சர்யம்! அந்த வண்டியில் ஷீர்டி செல்லவிருந்த பெண் பயணி ஒருவர் தன் பயணத்தை கேன்சல் செய்திருந்தார். அந்த டிக்கெட்டில் என் மருமகளை அழைத்துச் சென்றான் என் மகன்.

- இரா.கோதண்டபாணி, மதுரை.தண்டபாணி, மதுரை.

பாபாவும் நானும்

‘`தொடக்கத்தில் நான் புட்டபர்த்தி சாயிபாபா பக்தராதான் இருந்தேன். பத்திரிகைத் துறையிலிருந்த என் நண்பர் மறைந்த செல்லப்பாதான், ‘ஒருமுறை ஷீர்டி போயிட்டு வாங்க. அதன் பிறகு லைஃப்ல மாற்றம் எப்படி இருக்குன்னு பாருங்க’ன்னு சொன்னார். பார்க்கும்போதெல்லாம் சொல்லிக்கிட்டே இருப்பார்.

ஒரு நாள் குடும்பத்தோடு ஷீர்டி போனோம். தரிசனம் ரொம்ப சிறப்பா இருந்துச்சு. ‘ஷீர்டி போய் வந்தோம். உடனேயே நமக்குப் பலன் கிடைக்குமா?’ன்னு இருந்தேன். ‘அரச மரத்தைச் சுற்றிவிட்டு அடிவயிற்றைத் தொட்டுப் பார்க்கக்கூடாது’ என்பார்கள். ஆனால், உடனேயே கிடைத்தது. டி.வி விளம்பரப் படமொன்றில் நானும் நிழல்கள் ரவியும் நடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. நிழல்கள் ரவி வீட்டுக்குப் பக்கத்தில்தான் ஷூட்டிங்.

டெல்லி கணேஷ்
டெல்லி கணேஷ்

நானும் ரவியும் நீண்டகால நண்பர்கள். மதிய உணவுக்கு அவர் வீட்டுக்கு வரச் சொன்னார், போனேன். அங்கே பாபாவின் சிலை. மிகவும் அழகாக இருந்தது. அப்படியே பார்த்துக்கொண்டிருந்தேன். ரவியே அண்ணாநகரில் பாபா சிலைகளை விற்பனை செய்பவரின் முகவரியைக் கொடுத்துப் போய்ப் பார்க்கச் சொன்னார். நானும் என் மனைவியும் கிளம்பிப் போய்ப் பார்த்தோம். அச்சு அசலாக அதேபோன்ற சிலையைத் தேர்வு செய்தோம்.

அந்தக் கடையின் உரிமையாளர், ‘நான் உங்களின் ரசிகர். நீங்கள் எதுவும் தர வேண்டாம். அப்படியே இதை எடுத்துச் செல்லுங்கள். அதற்குமுன் நான் ஒரு வாரம் பூஜையில் வைத்திருந்து உங்களுக்குத் தருகிறேன். பாபா சிலையைக் கதவு போட்டு மூடியெல்லாம் வைக்கக்கூடாது. பூஜையறையிலோ ஹாலிலோ வையுங்கள்’ என்றார். பாபாவின் ஆசிகளே அப்படித்தான். அவரைத்தேடி நீங்கள் ஓரடி எடுத்துவைத்தால் உங்களை நோக்கி அவர் நான்கு அடிகள் எடுத்துவைத்து உங்களிடம் வந்துவிடுவார். பாபா வந்ததிலிருந்து இது நடந்தது. அது நடந்தது என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால், மனசுக்கு நிம்மதி வந்தது. எதைப் பற்றிய கவலையும் இல்லை.

இன்றைக்கு என்ன வேலையோ அதைச் செய்து முடிக்கும் மனம் வந்துவிட்டது. சந்தோஷத்தைவிட நிம்மதிதான் முக்கியம். பாபா நம் வீட்டுக்கு வந்துட்டார்னா அதற்கப்புறம் வாழ்க்கையைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. நம்முடைய வாழ்க்கையை அவர் பார்த்துக்குவார்.’’

வாசகர்களே!

சாயிபாபா உங்கள் வாழ்க்கையில் நிகழ்த்திய அற்புதங்களை உங்கள் புகைப்படத்துடன், ஆனந்த விகடன், 757 அண்ணாசாலை, சென்னை-2 என்ற முகவரிக்கோ, saibaba@vikatan.com மின்னஞ்சலுக்கோ எழுதி அனுப்புங்கள். சிறந்த அனுபவங்கள் வெளியிடப்படும்.