மற்ற எபிசோடுகள்
Published:Updated:

பாபாயணம் - 16

பாபாயணம்
பிரீமியம் ஸ்டோரி
News
பாபாயணம்

சச்சிதானந்த சத்குரு ஸ்ரீசாயிநாதரே சரணம்!

சாதாரணமாக என்னை நினைத்தாலும்

நான் கவனத்துடன் உன் குறைகளைக் கேட்பேன்.

உனக்காகவே நான் உன்னுடன் எப்போதும் இருக்கிறேன்.

- பாபா

சூரியனின் ஒளியாலேயே உயிரினங்கள் வாழ்கின்றன. விவசாயம் செழிக்கிறது. உலகம் வாழ்கிறது. ஒளிதான் ஓர் இடத்தை நிறைவாக்குகிறது.

“அனைத்திற்கும் மேலானது பிரம்மம். அந்த பிரம்மம் பேரொளி வடிவில் உள்ளது. ஒளி இருக்கும் இடத்தில் நிறைவு இருக்கும். முழுமையும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். உலகில் உள்ள உயிரினங்கள் வாழ வழிசெய்ய இயற்கை தயாராக இருக்கிறது. அதற்கு அதை வழிபட வேண்டும். அதன் ஆதாரமான ஒளியை ஆராதிக்க வேண்டும்” என்கிறார் பாபா.

பாபாயணம் - 16

ஒருமுறை பாண்டவர்களும் கௌரவர்களும் திருதிராஷ்டிரனின் அரண்மனையில் கூடியிருந்தபோது அங்கு கிருஷ்ணர் வந்தார். அப்போது துரியோதனன், தன் மனதில் நீண்ட நாளாக இருந்த வருத்தத்தை வெளிப்படுத்தும் விதமாக, “கிருஷ்ணா, நீங்கள் எப்போதும் பாண்டவர்களையே போற்றுகிறீர்களே, அது ஏன்?” என்று கேட்டான். தர்மர் உள்ளிட்ட பாண்டவர்களும் இந்தக் கேள்வியைக் கேட்டு ஆச்சர்யம் அடைந்ததோடு பகவான் சொல்லப் போகும் பதிலை அறிந்துகொள்ளவும் ஆர்வமாக இருந்தனர். ஆனால் பகவானோ கேள்விக்கு பதில் சொல்லாமல் தர்மரையும் துரியோதனனையும் தன்னருகே அழைத்தார்.

“நாளை நான் உங்கள் வீட்டிற்கு வருகிறேன். வீட்டை நிறைத்து என்னை வரவேற்கக் காத்திருங்கள்” என்றார். கிருஷ்ணரை மகிழ்விக்க இது ஒரு வாய்ப்பு என்று நினைத்த துரியோதனன், அவரை வியப்படையச் செய்ய வேண்டும் என்று அலங்காரங்களாலும் விலையுயர்ந்த பொருள்களாலும் தன் அரண்மனையை நிரப்பினான்.

தர்மரோ தன் அரண்மனை முழுவதும் அழகிய விளக்குகளை ஏற்றிவைத்துக் காத்திருந்தார். சொன்னபடி கிருஷ்ணர் இருவரின் வீடுகளுக்கும் சென்றார். தர்மரின் வீடு, ஒளி நிறைந்து, காண்பதற்கு ஓர் ஆலயம்போல விளங்கியது. அங்கு கிருஷ்ணர் எழுந்தருளியதும் அது வைகுண்டமாகவே மாறிவிட்டது. அடுத்து துரியோதனனின் அரண்மனைக்குப் போனார். அங்கே பொருள்கள் நிறைந்து கிடந்தன. கிருஷ்ணன் அவற்றைக் கண்டு ஆச்சர்யம் அடைவான் என்று எண்ணிய துரியோதனன், “பார் கண்ணா, வீடு முழுதும் பொருள்களால் நிறைத்து வைத்துள்ளேன்...” என்றான் ஆணவத்துடன். பகவானுக்குச் சிரிப்பு வந்தது.

“துரியோதனா, ஒரு வீட்டின் முழுமை என்பது பொருள்களால் அமைவது அல்ல; ஒளியால் நிறைவது. அந்த ஒளியே அங்கு வசிப்பவர்கள் உள்ளத்தில் அன்பு, நேர்மை, பணிவு, கருணையாக மாறுகிறது. எண்ணங்களால் உருவாவதுதான் வாழ்க்கை” என்றார்.

“உன்னைச் சுற்றியும், உனக்குள்ளும் இருக்கும் இருளை அகற்றி, ஒளியைப் பரப்பு. ஒரு தீய எண்ணம் பல தீய செயல்களுக்குக் காரணமாகும். ஆனால் ஒரு தீபத்திலிருந்து அழகிய எண்ணற்ற தீபங்கள் ஏற்ற முடியும். அதன் ஒளியால் உலகமே ஜோதி வடிவமாக இருக்கும்” என்று உபதேசித்தார் பாபா.

ஆன்மிக ஒளியை உலகெங்கும் பரப்ப உதித்த சூரியன் பாபா. அவர், தன்னைச் சுற்றி எப்போதும் ஒளி பரவிப் பிரகாசமாக இருப்பதையே விரும்பினார். மசூதியில் நிறைய அகல் விளக்குகளை ஏற்றிவைத்து அந்த ஒளியின் நடுவில் பேரொளியாய் அவர் அமர்ந்திருப்பார்.

சச்சிதானந்த சத்குரு ஸ்ரீசாயிநாதரே சரணம்!
சச்சிதானந்த சத்குரு ஸ்ரீசாயிநாதரே சரணம்!

தினமும் விளக்கு ஏற்ற ஷீர்டியில் உள்ள எண்ணெய் வியாபாரிகளிடம் சென்று எண்ணெய் வாங்கி வருவார் பாபா. ஒரு தகரக் குவளையை எடுத்துச் செல்வார். அது நிரம்பும் அளவுக்கு அங்குள்ள மூன்று வியாபாரிகளும் எண்ணெய் ஊற்றுவார்கள். பாபா மகிழ்வோடு திரும்பிவந்து மசூதி மற்றும் சாவடி முழுமையும் விளக்குகளை ஏற்றுவார்.

இதுவரை தரிசித்திராத சாயிபாபா திருவுருவப் படங்கள் புதிய பரிமாணங்களில். வாரந்தோறும் பாதுகாக்கத் தயாராகுங்கள்!

அன்று தீபாவளி.

சாதாரண நாளிலேயே விளக்கொளியில் மிளிரும் மசூதி, தீபத்திருநாளில் எப்படி ஜொலிக்க வேண்டும். பாபா, பல நூறு சுடர்களால் மசூதியை மின்னச் செய்ய வேண்டும் என்று தீர்மானித்தார். அதற்காக ஏற்கெனவே அவர் அகல் விளக்குகளைச் சேகரித்தும் வைத்திருந்தார். தீபமேற்ற எண்ணெய் வேண்டி, தன்னிடமிருக்கும் தகரக்குவளையோடு தானம் கேட்கக் கிளம்பினார்.

வியாபாரிகளோ ‘இவருக்கு எண்ணெய் வழங்குவதால் நமக்கென்ன கிடக்கிறது...’ என்று தங்களுக்குள் புலம்பிக்கொண்டனர். அடுத்தமுறை பாபா வந்துகேட்டால் எண்ணெய் தருவதில்லை என்று உறுதியாகச் சொல்ல வேண்டும் என்று தீர்மானம் எடுத்திருந்தனர்.

பாபா கையில் தகரக் குவளை ஏந்தி எண்ணெய் தானம் கேட்டு வந்தார். அந்த வியாபாரிகள் பாபாவின் முகத்துக்கு நேராக எண்ணெய் தர மறுத்தனர். புன்னகை மாறாத முகத்தோடு சாயி மசூதிக்குத் திரும்பினார். ‘இல்லை’ என்று சொன்ன கோபத்தில் பாபா தங்களைத் திட்டுவார் என்று எண்ணிய வியாபாரிகள் வியப்படைந்தனர். இந்த சாயி எப்படி சாயங்காலம் விளக்கேற்றுகிறார் என்று பார்க்கலாம் என்று அவரைப் பின் தொடர்ந்தனர். பாபா மசூதியை அடைந்தார். தகரக் குவளையுள் ஒரே ஒரு துளி எண்ணெய் இருந்தது. அதைத் தன் வாயில் விட்டுக்கொண்டார். பின்பு அந்தக் குவளை முழுவதும் நீரால் நிரப்பினார்.

பாபாயணம்
பாபாயணம்

பார்த்துக்கொண்டிருந்த வியாபாரிகளுக்கு வேடிக்கையாய் இருந்தது. ‘இருந்த ஒரு துளி எண்ணெயையும் அருந்திவிட்டு அதில் நீர் நிரப்பி இந்த சாயி என்ன செய்யப்போகிறார்’ என்று பார்த்தனர். அவரோ குவளை நீரை விளக்குகளில் வார்த்தார்.

‘இந்த பாபாவுக்கு என்ன ஆனது...’ என்று கேலியாய்ச் சிரித்தனர். பாபா விளக்குகளை வரிசையாக்கி அதில் திரிகளை இட்டார். பின்பு ஏற்கெனவே இருந்த தீபத்திலிருந்து சுடர் எடுத்து ஒவ்வொரு விளக்காக ஏற்றத்தொடங்கினார்.

என்ன ஆச்சர்யம்... சாயி ஏற்றிய விளக்குகள் எல்லாம் சுடர் விட்டுப் பிரகாசிக்க ஆரம்பித்தன. தண்ணீரில் விளக்குகள் எரியக் கண்டு வியப்பும் நடுக்கமும் கொண்டனர் வியாபாரிகள். ஓடிச் சென்று சாயியின் காலடியில் விழுந்து புலம்பினர். சரணடைந்தவர்களின் பிழைகளைப் பொறுத்தருளும் சாயி, அவர்களை ஆசீர்வதித்து “இனி இப்படிச் செய்யாதீர்கள்” என்று அறிவுரை கூறி அனுப்பிவைத்தார்.

(தரிசனம் தொடரும்)

பாபாவும் நானும்

``எங்க அப்பா ஷீர்டி சாயிபாபா பக்தர்ங்கிறதால எனக்கும் பாபா மேல ரொம்பப் பிரியமும் பக்தியும் உண்டு. என் மனைவியும் நானும் திருமணத்துக்கு முன், ‘ஷீர்டி வந்து நேர்த்திக்கடன் செலுத்துவோம்’னு வேண்டிக்கிட்டோம். கல்யாணமானதும் ஷீர்டிக்குப்போய் பாபாவை தரிசனம் பண்ணிட்டு வந்தோம்.

ஷீர்டி பாபா கோயில்ல எனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயம் மனசுக்கு ஒரு நிம்மதி கிடைக்குங்கிறது தான். பொதுவா, கோயிலுக்குப் போனாலே கடவுள் நமக்கு எல்லாத்தையும் செஞ்சுடுவார்னு அர்த்தம் கிடையாது. அங்கே போயிட்டு வந்தா நம்ம மனசுக்கு நிம்மதி, சாந்தி, சமாதானம் எல்லாம் கிடைக்கும், அதுதான் முக்கியம். அவர் மனிதர்களுடைய மனசை மட்டும்தான் பார்ப்பார்.

ஸ்ரீகாந்த்
ஸ்ரீகாந்த்

ஷீர்டிக்குப் போயிட்டு வந்தாலே போதும், நம்ம மனசுல இருந்த எல்லாக் குழப்பங்களும் நீங்கித் தெளிவும் உற்சாகமும் பிறக்கும். விரதமிருந்துதான் போகணும்னு இல்லை. ‘நல்லா வயிறாரச் சாப்பிட்டு, பொறுமையாக வந்து என்னைப் பார்த்துட்டுப் போங்க’ன்னு சொல்றார் பாபா. ‘நீ சமாதானத்தோடு வந்தால்தான் நிம்மதியாகப் போக முடியும்’னு சொல்வார். எந்த கண்டிஷனும் கிடையாது.

அது பாபாகிட்டே எனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயம். பாபாவுக்கு நாய்கள் என்றால் ரொம்பவும் பிடிக்கும். ஷீர்டியில நிறைய நாய்கள் அங்கும் இங்கும் போயிக்கிட்டே இருக்கும். யாருக்கும் எந்தத் தொந்தரவும் செய்யாது. அவ்வளவு அமைதியாக இருக்கும். ஷீர்டில எப்பவும் விவரிக்க முடியாத குளிர்ச்சியும் சாந்தமும் இருக்கும். அவை எல்லாமே நம்ம மனசுல நேர்மறையான எண்ணங்களை உருவாக்கும். அதுவே நாம் சிறப்பாகச் செயல்படுவதற்கு உதவியாய் இருக்கும்.

பாபா நமக்கு அற்புதங்கள் நிகழ்த்த வேண்டிய அவசியம் கிடையாது. நம்முடைய செயல்களால் திறம்படவும் சிறப்பாகவும் செயல்படுவதற்குரிய நம்பிக்கையையும் முயற்சியையும் அவரோட அருள் தரும். அதுதான் முக்கியம். குருவாகவும் நண்பனாகவும் கடவுளாகவும் ஒருவர் இருப்பது ரொம்ப அபூர்வம். அந்த விஷயத்திலும் பாபா நம்மோடு ஃபிரெண்ட்லியா இருக்கக்கூடிய கடவுள்.

வாசகர் அனுபவம்

நான் சாயிபாபாவின் பக்தை. ஒருமாதத்துக்கு முன்பு பிரதோஷ தினத்தன்று சென்னை சோழிங்கநல்லூரில் இருக்கும் பிரத்யங்கராதேவி கோயிலுக்குச் சென்றுவிட்டு, நானும் என் கணவரும் திரும்பி வந்து கொண்டிருந்தோம். அப்போது ஒரு விபத்து நிகழ்ந்தது. ஒரு கார் என் கணவர்மீது மோதிவிட்டது.

இதனால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மனம் பரிதவிக்க ஆம்புலன்ஸை வரவழைத்து அருகிலிருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றேன். அவசர சிகிச்சைப் பிரிவின் வாசலில் பாபாவின் சிலை இருந்தது. ‘நான் இருக்கிறேன், பயப்படாதே’ என அவர் ஆறுதல் சொல்வதுபோல் தோன்றியது. அதுவரை தவித்துக்கொண்டிருந்த மனம் கொஞ்சம் சமாதானம் அடைந்தது. அதேபோன்று கணவருக்கும் காலில் சிறு அறுவை சிகிச்சையோடு நலம்பெற்றார். இவை அனைத்தும் அந்த ஷீர்டி சாயிபாபாவின் கருணையால் என்று முழுமையாக நம்புகிறேன்.

- உஷா விட்டல், சென்னை 83

வாசகர்களே!

சாயிபாபா உங்கள் வாழ்க்கையில் நிகழ்த்திய அற்புதங்களை உங்கள் புகைப்படத்துடன், ஆனந்த விகடன், 757 அண்ணாசாலை, சென்னை-2 என்ற முகவரிக்கோ, saibaba@vikatan.com மின்னஞ்சலுக்கோ எழுதி அனுப்புங்கள். சிறந்த அனுபவங்கள் வெளியிடப்படும்.