மற்ற எபிசோடுகள்
Published:Updated:

பாபாயணம் - 17

சாய் பாபா
பிரீமியம் ஸ்டோரி
News
சாய் பாபா

சச்சிதானந்த சத்குரு ஸ்ரீசாயிநாதரே சரணம்!

நானே அனைத்து ஜீவராசிகளிலும் நிறைந்திருக்கிறேன்

நான் எவரையும் வெறுப்பதில்லை

உன் மனதுக்குள் அன்பை நிறைத்துக்கொள்

அப்போது என்னை நீ காணலாம்.

- பாபா

பாபாயணம் - 17

ஷீர்டியில் பக்தர்கள் அன்போடு சமர்ப்பிக்கும் எதையும் மறுக்காமல் ஏற்றுக்கொண்டார் பாபா. சிலரிடம் தட்சிணை கேட்டு வாங்குவார். அவருக்குக் குறைவாகக் கொடுத்தவர்கள், அதிகமாகப் பெற்றுக்கொண்டனர். அதுதான் பரப்பிரம்மத்தின் சுபாவம். ‘ஏக வில்வம் சிவார்ப்பணம்’ என்று ஒரு வில்வ இலையைச் சமர்ப்பிப்பதாலே திருப்தியடைகிறார் மகாதேவனான சிவபெருமான் என்கிறது லிங்காஷ்டகம். ஒரு பிடி அவலோடு வந்த குசேலருக்கு குபேரனளவு செல்வம் கொடுத்தார் கிருஷ்ண பரமாத்மா. பாபாவும் அப்படித்தான். அவர் தனக்கென்று எதையும் வேண்டுவதில்லை. அப்படியே அவர் யாரிடமாவது வேண்டினால், அது அவர்களின் வினையை அறுக்கும் விளையாட்டாகவே இருக்கும்.

பாபா தினமும் பிச்சைக்குச் செல்வார். அனைத்து வீடுகளுக்குமல்ல, குறிப்பிட்ட சில வீடுகளுக்கு மட்டுமே. அவ்வாறு அவருக்குக் கிடைக்கும் பிச்சையையும் அனைவருக்கும் பகிர்ந்தளித்துவிடுவார். தனக்கென்று எதையும் வைத்துக்கொள்ளாத தயாளன் பாபா.

பாபாவின் புகழ் நாடெங்கும் பரவி, பலரும் தரிசனம்செய்ய ஷீர்டி வந்தனர். ஞானிகளை வெறுங்கையோடு வந்து தரிசனம் செய்யக்கூடாது என்பது ஐதிகம். அதனால் ஏதேனும் தட்சிணையைச் சமர்ப்பிப்பது வழக்கம். அப்படி, வந்தவர்கள் ஒரு காசு வைத்தால், பாபா அதை எடுத்துத் தன் பைக்குள் போட்டுக்கொள்வார். அதுவே இரண்டு காசுகள் என்றால், அவற்றைத் திரும்ப எடுத்துக்கொள்ளச் சொல்லிவிடுவார்.

இதுவரை தரிசித்திராத சாயிபாபா திருவுருவப் படங்கள் புதிய பரிமாணங்களில். வாரந்தோறும் பாதுகாக்கத் தயாராகுங்கள்!

‘பாபாவுக்குக் கொடுக்கும் தட்சிணை என்பது வெறும் தட்சிணை அல்ல, அது தம் பாவம் போக்கும் வழி’ என்பதை அனைவரும் புரிந்துகொண்டனர். சில நேரங்களில் அவர் கேட்கும் தட்சிணை வித்தியாசமான அனுபவங்களையும் வாழ்க்கை மாற்றங்களையும் நிகழ்த்திவிடும்.

கணபதிராவ் போடஸ் என்ற நாடக நடிகர் பாபாவைச் சந்திக்க ஷீர்டி வந்தார். பாபா அவரிடம் தட்சிணை கேட்டார். கணபதி ராவ், தன் பணப்பையைத் திறந்து பாபாவுக்குத் தட்சிணை தந்தார். பாபா சில நிமிடங்கள் கழித்து மீண்டும் தட்சிணை கேட்டார். இப்படி, கணபதிராவின் பணப்பையே காலியாகும் அளவுக்குத் திரும்பத் திரும்பக் கேட்டுப் பெற்றுக்கொண்டேயிருந்தார் பாபா. கணபதிராவும் முகம் கோணாமல் தந்து தன் பணப்பையை காலிசெய்தார். ஆனால் என்ன அதிசயம், ‘தன் வாழ்வில் அதன் பின்பு எப்போதும் பணத் தட்டுப்பாட்டில் சிக்கியதே இல்லை’ என்றும், ‘ஷீர்டி சென்று திரும்பியதிலிருந்து ஏராளமான பணம் என்னிடம் வந்து சேர்ந்தது’ என்றும், வாழ்க்கை முழுவதும் பாபாவின் புகழுக்கு சாட்சி சொல்லிக்கொண்டேயிருந்தார் அந்த நடிகர்.

சச்சிதானந்த சத்குரு ஸ்ரீசாயிநாதரே சரணம்!
சச்சிதானந்த சத்குரு ஸ்ரீசாயிநாதரே சரணம்!

ஒருமுறை நார்கே என்பவர் பாபாவை தரிசனம்செய்ய வந்தார். பாபா அவரிடம், ‘பதினைந்து ரூபாய் தட்சிணை கொடு’ என்று கேட்டார். ஆனால் நார்கேவிடம் அவ்வளவு பணம் இல்லை. தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்பதைச் சொல்லி பாபாவின் பாதங்களை அவர் சரணடைந்தபோது, ‘அது எனக்குத் தெரியும். அதற்கு பதிலாக யோக வசிஷ்டத்திலிருந்து சில நீதிகளை எனக்கு தட்சிணையாகக் கொடு’ என்றார். நார்கேக்கு ஆச்சர்யம். நார்கே, பாபாவின் சந்நிதியில் அதைப் பாராயணம் செய்தார். ‘பாபாவுக்கு நீதி நூல்கள் எதற்கு..? அவர் அறியாத நீதியா..? நான் நீதிகளை அறிந்துகொள்ளும்பொருட்டே பாபா அவ்வாறு கேட்டார். நீதியின் வழியில் நடப்பதுதான் நான் அவருக்குத் தரும் தகுந்த தட்சிணை’ என்றார் நார்கே.

ஒருமுறை திருமதி தர்கட்டிடம் ஆறு ரூபாய் தட்சிணையாகக் கேட்டார் பாபா. அவர் தன்னிடம் பணம் இல்லை என்று சொன்னபோது, தர்கட் அவரைத் தடுத்து, ‘பாபா உன்னிடம் வேண்டுவது 6 ரூபாயை அல்ல. காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் ஆகிய ஆறு உட்பகை வர்களையே தன்னிடம் சமர்ப்பிக்கும்படி கூறுகிறார் அவர்’ என்று விளக்கம் அளித்தார். இதனால் குழப்பமடைந்த திருமதி தர்கட், பாபாவை அதுபற்றிக் கேட்டபோது, புன்னகை பூத்தபடி அதை ஆமோதித்தார் அவர்.

நாந்தேடைச் சேர்ந்தவர் ரத்தன்ஜி ஷாபூர்ஜி வாடியா. மிகப்பெரிய செல்வந்தர். நிலங்கள், கால்நடைகள், வேலையாட்கள் என்று ஏராளம் இருந்தாலும், மனதில் திருப்தியோ மகிழ்ச்சியோ இல்லாமலிருந்தார். அவருக்கு வாரிசு இல்லை. அந்த ஏக்கம் அவரை அல்லும் பகலும் வாட்டியது. அவரின் உள்ளக் கவலை அகல ஷீர்டி நோக்கிச் செல்லுமாறு, சாயியின் பரம தாசரான தாஸ்கனு மகராஜ் பரிந்துரைத்தார். அதன்படி ரத்தன்ஜி ஷீர்டிக்கு வந்தார். பாபாவுக்குப் பூமாலைகள் சாத்தி அவரை வழிபட்டார் ரத்தன்ஜி. அவரின் பாத கமலங்கள் அருகே அமர்ந்து மௌனமாகத் தன் கோரிக்கையைப் பிரார்த்தித்தபடி அமர்ந்திருந்தார்.

பாபா அறியாத பிரார்த்தனைகள் ஏது?! பாபா ரத்தன்ஜியை நோக்கி, ‘நான் உன் உள்ளத்தின் ஆசையைப் பூர்த்தி செய்வேன்’ என்று கூறினார். ரத்தன்ஜி அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. உடனே பாபா அவரோடு விளையாடத் திருவுளம் கொண்டார். அவரிடம் பாபா, ‘எனக்குரிய ஐந்து ரூபாய் தட்சணையைக் கொடு’ என்றார். மேலும், ‘அதில் மூன்று ரூபாய் பதினான்கு பைசாவை முன்பே தந்துவிட்டாய். எனவே மீதியை மட்டும் தந்தால் போதும்’ என்றார்.

ரத்தன்ஜிக்கு ஐந்து ரூபாய் பெரிய விஷயமில்லை. ஆனால், பாபா ஏற்கெனவே மூன்று ரூபாய் பதினான்கு பைசாவைப் பெற்றுக்கொண்டதாகக் கூறுவதுதான் குழப்பமாக இருந்தது. பாபாவைத் தான் சந்திப்பது இதுவே முதன்முறை என்றும், அதனால் இதற்கு முன்பு எப்படிக் கொடுத்திருக்க முடியும் என்றும் யோசித்தார். பாபா கேட்ட தட்சிணையைக் கொடுத்துவிட்டு ஊர் திரும்பினார்.

வீட்டில் மேசையின்மீது நிறைய தாள்கள் இருந்தன. அவற்றிலெல்லாம் ரத்தன்ஜி கணக்குகள் எழுதிவைத்திருந்தார். சும்மா அவற்றைப் புரட்டிக்கொண்டிருந்தபோது, ஒரு செலவுச் சீட்டு அவர் கண்ணில்பட்டது. அது ‘மௌலா சாஹேப்’ என்னும் இஸ்லாமிய முனிவர் ஒருவர் ரத்தன்ஜி வீட்டுக்கு விஜயம் செய்தபோது அவருக்கு ஏற்பாடு செய்த விருந்துக்கான கணக்கு. என்ன ஆச்சர்யம்... அதன் மொத்தச் செலவுத் தொகை மூன்று ரூபாய் பதினான்கு பைசா என்றிருந்தது.

sai baba
sai baba

ரத்தன்ஜி சிலிர்த்துக்கொண்டார். அவர் நாவில் சாயிநாதனின் நாமமும் கண்களில் கண்ணீரும் பெருகி வழிந்தன. இந்த உலகில் மகான்களில் யாருக்குச் செய்த சேவையையும் தனக்கே செய்ததாக பாபா ஏற்கிறார். இதுதான் தனக்கு பாபா சொல்லாமல் சொன்ன உபதேசம் என்று புரிந்துகொண்டார் ரத்தன்ஜி. அடுத்த ஆண்டே ரத்தன்ஜி பாபாவின் சரணத்தில் வைத்த வேண்டுதல் நிறைவேறியது என்பதைச் சொல்லவும் வேண்டுமா என்ன!

பாபாவின் கருணையைப் பெற நம் பக்தியையும் நம்பிக்கையையும் தட்சிணைகளாகத் தருவோம். அவர் சகல வினைகளிலிருந்தும் நம்மை விடுவிப்பார்.

(தரிசனம் தொடரும்)

பாபாவும் நானும்

`என் மனைவி பிரியங்கா ஷீர்டி சாயி பாபாவின் பக்தை. என்னை ரொம்ப நாளாக பாபா கோயிலுக்குக் கூப்பிட்டுக்கிட்டு இருந்தாங்க. மேரேஜுக்கு அப்புறம், என்னடா லைஃப், இதே ஸ்டேஜ் புரொகிராம், இதே மைக், இதே மிமிக்ரின்னு போயிட்டிருக்கு. ஏதாவது மாற்றம் வராதான்னு இருந்தேன். அப்போதான் விஜய் டி.வியில ஜோடி நம்பர் ஒன் புரொகிராம்ல கலந்துக்கிற வாய்ப்பு வந்துச்சு. ஆனா, அதுல என்னால வெற்றிபெற முடியலை. மூன்றாம் இடம்தான் கிடைச்சது. அப்போ என் மனைவி ‘ஒருமுறை நீங்க பாபா கோயிலுக்கு வந்து உங்க மனசுல உள்ளதைச் சொல்லுங்க. அப்புறம் பாருங்க’ன்னு சொன்னாங்க. ‘இதுவரைக்கும் யாருன்னு தெரியாத ஒருத்தர்மேல என்னால எப்படி பக்தி செலுத்தமுடியும்’னு கேட்டேன்.

 ரோபோ சங்கர்
ரோபோ சங்கர்

‘இந்த முறை மட்டும் வாங்க’ன்னு, ஒரு வியாழக்கிழமை வளசரவாக்கத்துல இருக்கிற ஏ.எம்.ரத்னம் சாரோட விஸ்வரூப ஷீர்டி பாபா கோயிலுக்குப் போனோம். அங்க போனதுமே மனசுல ஒரு சாந்தம், சமாதானம், நிதானம் வந்துடுச்சு. முழுத்திருப்தியோடு வெளியில வந்தோம். அப்போதே டைரக்டர் ஏ.வெங்கடேஷ் சார்கிட்டேயிருந்து போன். அவர் டைரக்ட் பண்ற படத்துல லீடு ரோல்ல நடிக்கக் கேட்டார். இதுவரைக்கும் ஸ்டேஜ் பர்ஃபாமன்ஸ் சின்னச் சின்ன வேடங்களில் நடித்திருந்த எனக்கு நல்ல ரோல். அந்தப் படம் சுமாராதான் போச்சு. ஆனா, என்னைத் திரைத்துறையினர் பலரும் கவனிக்க ஆரம்பிச்சாங்க. தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்தன. பாலாஜி மோகனின் `மாரி ‘ திரைப்படம் எனக்குப் பெரிய மாற்றத்தைத் திரைத்துறையில் கொண்டுவந்தது. கிட்டத்தட்ட 60 படங்கள்வரை நடித்துவிட்டேன். சொந்தமா ஒரு வீடும் வாங்கிட்டேன். என் மகள் இந்திரஜாவுக்கும் ‘பிகில்’ படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. எல்லாம் பாபாவின் அருள்தான்.’’

வாசகர் அனுபவம்

சென்ற வருடம் கோடை விடுமுறையில் குடும்பத்தோடு ஷீர்டி சென்றோம். நல்ல கூட்டம். பாபாவின் தரிசனம் சிறப்பாக அமைந்தது. மனம் அமைதியில் திளைத்தது. அங்கிருந்த கடை ஒன்றில் பாபா விக்கிரகம் ஒன்றை வாங்க என் கணவர் தன் பர்ஸைத் தேடினால், காணவில்லை. அதிர்ச்சியாக இருந்தது. அதில்தான் ஐடி கார்டு, ரிட்டர்ன் டிக்கெட், பணம், ஹோட்டல் ரசீது என சகலமும் இருந்தன. வருத்தத்தோடு நின்றோம். அப்போது அங்குவந்த துறவி போன்ற ஒருவர், ``இது ஷீர்டி, புண்ணியபூமி. இங்கு யாருக்கும் தீங்கு நடக்காது" என்று இந்தியில் சொல்லிவிட்டு விறுவிறுவெனப் போய்விட்டார். நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்குத் திரும்பினோம். சில மணி நேரத்தில் ஹோட்டல் ரிசப்ஷனிலிருந்து போன். `பெண் போலீஸ் ஒருவர் உங்களின் பர்ஸைக் கொடுக்க வந்திருக்கிறார்' என்றார்கள். பர்ஸில் இருந்த ஹோட்டல் ரசீதை வைத்து வந்ததாகச் சொன்னார் அந்தக் காவலர். கண்ணீரோடு நன்றி தெரிவித்தோம். அப்போது, அந்தத் துறவி சொன்ன வார்த்தைகள் எங்கள் காதுகளில் எதிரொலித்தன.

- எஸ்.பானுமதி சுப்பிரமணியன்

வாசகர்களே!

சாயிபாபா உங்கள் வாழ்க்கையில் நிகழ்த்திய அற்புதங்களை உங்கள் புகைப்படத்துடன், ஆனந்த விகடன், 757 அண்ணாசாலை, சென்னை-2 என்ற முகவரிக்கோ, saibaba@vikatan.com மின்னஞ்சலுக்கோ எழுதி அனுப்புங்கள். சிறந்த அனுபவங்கள் வெளியிடப்படும்.