மற்ற எபிசோடுகள்
Published:Updated:

பாபாயணம் - 18

சாய் பாபா
பிரீமியம் ஸ்டோரி
News
சாய் பாபா

சச்சிதானந்த சத்குரு ஸ்ரீசாயிநாதரே சரணம்!

பாபாயணம்
பாபாயணம்

உன் வாழ்க்கை என்னால் புதுப்பிக்கப்படும் என்பதை நம்பு.

உன்னுடன் நான் வந்துவிட்டேன் என்ற நம்பிக்கையுடன்

உன் கடமையைச் செய்.

- பாபா

இருட்டில் செல்பவனுக்கு ஒளிதரும் விளக்கு பாபா.

ஒருமுறை ஷீர்டியில் பிளேக் நோய் பரவிக்கொண்டிருந்தது. இறந்துபோன எலிகளிலிருந்து உருவான கிருமிகள் அந்த நோய் பரவக் காரணமாயின. நோயால் பாதிப்படைந்தவர் கடுமையான காய்ச்சலுக்காளாகி, உயிர் இழக்கும் அபாயமும் உருவானது. மரணம் குறித்த அச்சம் அந்த ஊரை ஆட்டிப்படைத்தது.

மக்கள் ஓடிச் சென்று மசூதியில் அமர்ந்திருந்த பாபாவின் பாதங்களில் சரணடைந்தனர்.

“பாபா, நீங்கள்தான் எங்களைக் காக்க வேண்டும்” என்று முறையிட்டனர்.

பாபா அவர்களுக்கு ஆறுதல் கூறி, அனுப்பிவைத்தார்.

மறுநாள் பாபா கடைவீதிக்குச் சென்றார். நிறைய கோதுமை வாங்கினார். மசூதியில் ஒரு திருகை இருந்தது. அங்கு ஒரு சாக்கை விரித்து பாபா அமர்ந்துகொண்டார். கொஞ்சம் கொஞ்சமாக கோதுமையை இட்டு அரைக்க ஆரம்பித்தார். அரைக்கும்போது யாரையோ விரட்டுவது போன்ற ஒலியை எழுப்பியபடி பாபா அரைத்துக்கொண்டிருந்தார்.

சாய் பாபா
சாய் பாபா

பாபா மாவு அரைக்கும் விஷயத்தையும், அவர் எழுப்பிய விநோதச் சத்தத்தையும் குறித்த செய்தி ஷீர்டி முழுக்கப் பரவியது. மசூதியின் முன்பாக ஆண்களும் பெண்களும் கூடினர்.

‘எதற்காக பாபா மாவு அரைக்கிறார்... அவருக்கு எதற்கு மாவு... அவரின் உணவு என்னவோ ஐந்து வீடுகளில் எடுக்கும் பிட்சைதான். அப்புறம் யாருக்காக இவ்வளவு மாவை அரைக்கிறார்... ஒருவேளை ஊர் மக்களுக்குப் பங்கிட்டுக் கொடுப்பதற்காக இவ்வாறு செய்கிறாரோ...’

ஒவ்வொருவருக்குள்ளும் பல கேள்விகள். அதே நேரம், பாபா இப்படிச் சிரமப்பட்டு மாவு அரைப்பதைப் பார்த்த பெண்கள் மனம் வருந்தினர்.

அவர்களில் சில பெண்கள் துணிவுடன் பாபாவின் முன்வந்து அவரை நகரச் சொல்லிவிட்டு கோதுமையை அரைக்க ஆரம்பித்தனர். முதலில் அவர்களின் உதவியை மறுத்த பாபா, பிறகு அதை ஏற்றுக்கொண்டார். கைவசமிருந்த கோதுமை முழுவதையும் அரைத்து முடித்தனர். பாபா மாவைத் தங்களுக்குதான் கொடுக்கப்போகிறார் என்று எண்ணி, அதை நான்கு பாகமாகப் பிரித்து அந்தப் பெண்கள் அவர்களுக்குள் பங்கிட்டுக்கொண்டனர். அதைப் பார்த்த பாபா ஆவேசமடைந்தார். கோபத்துடன் அவர்களைப் பார்த்துக் கத்தினார்.

“இதைக் கொண்டு போய் இந்த ஊரின் நான்கு எல்லைகளிலும் தூவிவிட்டு வாருங்கள்” என்று உத்தரவிட்டார். இதைக் கேட்ட மக்கள் அதிர்ச்சியடைந்தார்கள். `இவ்வளவு கோதுமையை வாங்குவானேன்... அதை வேலை மெனக்கெட்டு அரைப்பானேன்... பிறகு அதை இப்படி ஊர் எல்லையில் கொண்டுபோய்க் கொட்டுவானேன்...’

ஆனால் பாபாவின் உத்தரவை யாரால் மீற முடியும்... அந்தப் பெண்கள் வருத்தத்துடன் மாவைக் கொண்டுபோய் ஊர் எல்லைகளில் தூவிவிட்டு வந்தார்கள்.

ஷீர்டிக்கு மறுநாள் காலை புதிதாக விடிந்தது. பிளேக் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடையத் தொடங்கினார்கள். `இறந்து விடுவார்கள்’ எனக் கருதப்பட்ட பலர் பிழைத்து எழுந்தனர். நோய்த்தொற்று ஷீர்டியிலிருந்து முற்றிலும் ஒழிந்தது.

பிளேக் நோயைப் போக்கியது எது... அரைத்துக் கொட்டப்பட்ட கோதுமை மாவா... வெறும் மாவில் என்ன இருக்கிறது... அதை சாயி அல்லவா தன் மகிமை பொருந்திய கரங்களால் தொட்டு மருந்தாக்கினார்... மக்கள் சாயியை நாடி அவர் பாதம் பணிந்தனர். சாயி, கடவுளாகவும் காவலராகவும் நம்மோடு இருந்து நம்மைக் காக்கிறார்.

இதுவரை தரிசித்திராத சாயிபாபா திருவுருவப் படங்கள் புதிய பரிமாணங்களில். வாரந்தோறும் பாதுகாக்கத் தயாராகுங்கள்!

“உன்னைக் காக்கவே நான் வந்திருக்கிறேன். ஆனால் அதை நீ உணரவில்லை. நம்பிக்கையோடு என்னை அழையுங்கள். உன் வீட்டின் காவலனாக நான் இருப்பேன்” என்கிறார் பாபா.

குரு ஒருவர், தன் சீடன் எதற்கெடுத்தாலும் பயந்து நடுங்குவதைக் கண்டு வருந்தினார். அவனுக்கு நம்பிக்கை அளிக்க விரும்பினார். அவனை அழைத்து ஓர் உபாயத்தைச் சொன்னார்.

“உனக்கு பயம் வரும்போதெல்லாம் `கிருஷ்ணா... கிருஷ்ணா...’ என்று சொல். கிருஷ்ணன் உன்னைக் காக்க ஓடிவருவான்” என்றார். அதேபோல் அவனும் பயம் வரும்போதெல்லாம் கிருஷ்ணனின் நாமத்தைச் சொல்லித் தன் பயத்தைப் போக்கிக்கொண்டான். ஒருநாள் அவன் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துப்போனபோது திடீரென்று ஒரு புலி வந்துவிட்டது. மாடுகள் பயந்து திசைக்கொன்றாக ஓடின. அவன் அச்சத்தில், ‘கிருஷ்ணா... கிருஷ்ணா...’ என்று அலறினான்.

ஒரு மரத்தின் மீது ஏறிக்கொண்டான். புலியோ அந்த மரத்தடியிலேயே படுத்துக்கொண்டது.

இரவு வந்தது. மாடுகள் பற்றிய கவலையும், பசி, பயம் போன்ற உணர்வுகளும் கவ்விக்கொள்ள அவன் மரத்தின் மீது படுத்து அப்படியே தூங்கிவிட்டான். கண்விழித்தபோது பாம்பு ஒன்று மேல் கிளையிலிருந்து ஊர்ந்து வருவதைக் கண்டான். அதைப் பார்த்ததும் அவன் பயம் மேலும் கூடியது. பிரச்னை எதுவானாலும் தீர்வு கிருஷ்ணன் நாமம்தானே...

“காளிங்க நடனம் புரிந்த கண்ணா, என்னைக் காப்பாற்று...” என்று வாய்விட்டுப் புலம்பினான்.

கீழே புலி, மேலே பாம்பு. உயிர் போனால் போகட்டும் என்று எண்ணி கிருஷ்ண நாமம் ஜபித்துக்கொண்டிருந்தான். அப்போது எங்கிருந்தோ ஒரு வேடன் விட்ட அம்பு புலியைத் தாக்க, அது அம்பு பட்ட அச்சத்தில் அங்கிருந்து ஓடி மறைந்தது. அதே நேரம் மரக்கிளையிலிருந்து பாம்பு நழுவிக் கீழே விழுந்து, நகர்ந்து மறைந்தது.

சாய் பாபா
சாய் பாபா

காலையில் அவனைத் தேடி வந்த குரு நடந்த சம்பவங்களைக் கேட்டு வியப்படைந்தார். ‘நீ எப்படித் தப்பித்தாய்?’ என்று அவர் கேட்க, ‘கிருஷ்ணர்தான் வந்து என்னைக் காத்தார்’ என்றான் சீடன். வேடனாக வந்து அவனைக் காத்தது கிருஷ்ணனே என்று அவன் உறுதியாக நம்பினான். உண்மையில், அவனுடைய நம்பிக்கைதான் அவனைக் காத்தது என்பதை குரு புரிந்துகொண்டார். இத்தகைய நம்பிக்கைதான் நம்மை இறைவனிடம் நெருங்க வைக்கிறது. நாமும் பாபாவின் மீது அத்தகைய நம்பிக்கையை வைக்க வேண்டும். துன்ப காலத்தில் நம்பிக்கையோடு நாம் பாபாவை அழைத்தால், பாபா ஏதோ ஒரு வடிவில் வந்து நம்மைக் காப்பார் என்று நம்பினால் போதும். நாம் எங்கிருந்தாலும் நிச்சயம் ஓடி வந்து காப்பார்.

தாயினும் சாலப்பரிந்து எனையாளும் சாயி.

உன்நாமமே எனை ஆளும் நாளுமே.

(தரிசனம் தொடரும்)

வாசகர் அனுபவம்

நான் ஷீர்டி சாயியின் பக்தன். திருமலைக்கும் ஷீர்டிக்கும் ஆண்டுக்கொரு முறையேனும் சென்று தரிசனம் செய்யவேண்டும் என்பது என் லட்சியம். 2007-ம் ஆண்டு மனைவிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு தண்டுவடத்தில் அறுவை சிகிச்சை செய்ய புகழ்பெற்ற மருத்துவமனை ஒன்றில் அனுமதித்திருந்தோம். பாபாவிடம் நல்லபடியாக எல்லாம் முடிய வேண்டுமே என்று பிரார்த்தனை செய்து அவர் மேல் பாரத்தைப் போட்டேன். அறுவை சிகிச்சைக்கு ஒரு நாள் இருக்கும்போது, தலைமை மருத்துவர் வந்து சந்தித்தார். “அறுவை சிகிச்சை வேண்டாம். வீட்டுக்குச் செல்லுங்கள், சரியாகிவிடும்” என்றார். அவர் முகத்தைப் பார்த்தால் எங்களுக்கு பாபாவையே தரிசனம் செய்வதுபோல் இருந்தது. அது நாள்வரை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொல்லிவந்த மருத்துவர்கள், வேண்டாம் என்று சொல்வது ஆச்சர்யமாக இருந்தது. பாபா அல்லவா நம்மை வழிநடத்துகிறார். நம்பிக்கையோடு வீடு திரும்பினோம். மனைவி விரைவில் நலம் பெற்றார். இப்படி எங்கள் வாழ்வில் பாபா ஒரு முறையல்ல, பலமுறை எங்களைக் காத்து வழிநடத்தியிருக்கிறார்.

-நா. கருணாமூர்த்தி, சென்னை 54.

பாபாவும் நானும்

‘’என் கணவர் சாய்ராமின் பெற்றோருக்கு ஒரே ஒரு பெண் குழந்தை இருந்தது. ஆனால், அதன் பிறகு ஏழெட்டு வருடங்களுக்குக் குழந்தை இல்லை. என் மாமியார் விமலாமணி ‘ஒரு ஆண் குழந்தை வேணும். அப்படி பொறந்துச்சுனா உன் பெயரையே வைக்கிறோம்’னு ஷீர்டிக்கு போய் பாபாகிட்ட வேண்டிகிட்டாங்க. அந்தப் பிரார்த்தனைக்குப் பிறகுதான் என் கணவர் பிறந்தாராம். அதனால அவருக்கு `சாய்ராம்’னே பேர்வெச்சுட்டாங்க. என் பதினெட்டாவது வயதில் அவரை நான் திருமணம் செய்துகொண்டபோது இந்த விஷயத்தை அவரே எனக்குச் சொன்னார்.

அருணா சாய்ராம்
அருணா சாய்ராம்

அவரும் நானும் மயிலாப்பூர் பாபா கோயிலுக்கு அடிக்கடி போவோம். வருடத்துக்கொரு முறை எப்போ வாய்ப்பு கிடைக்குதோ அப்போ ஷீர்டி போவோம். திருமணம் ஆனதும் நாங்க முதல்முறையாகப் போன இடம் ஷீர்டிதான். ஷீர்டியில் அதிகாலையில் நடக்கும் பூஜையில் கலந்துக்கறது ரொம்ப விசேஷமானது. அதுல கலந்துக்கிட்டா ரொம்ப சந்தோஷமாகவும், மனசுக்கு நிம்மதியாகவும் இருக்கும். எனக்கு எப்போ பிரச்னை வந்தாலும், `சாயி சத் சரித’த்தை எடுத்து ஏழு நாள்களுக்குத் தொடர்ந்து படிப்பேன். நான் எங்கே போனாலும், கார்ல `சாய் சத் சரித்திரம்’ என் கூடவே பயணம் செய்யும். நான் பாடும்போது குரல் என்னுடையது; அதில் மற்றவர்களுக்குக் கிடைக்கும் பரவசமும் ஆனந்தமும் பாபாவினுடையது.’’

வாசகர்களே!

சாயிபாபா உங்கள் வாழ்க்கையில் நிகழ்த்திய அற்புதங்களை உங்கள் புகைப்படத்துடன், ஆனந்த விகடன், 757 அண்ணாசாலை, சென்னை-2 என்ற முகவரிக்கோ, saibaba@vikatan.com மின்னஞ்சலுக்கோ எழுதி அனுப்புங்கள். சிறந்த அனுபவங்கள் வெளியிடப்படும்.