மற்ற எபிசோடுகள்
Published:Updated:

பாபாயணம் - 19

சாய் பாபா
பிரீமியம் ஸ்டோரி
News
சாய் பாபா

ஓவியம்: பிரேம் டாவின்ஸி

ஞானத்தைப் பெற்ற பின்னும் அகங்காரத்தில் மூழ்கினால்

மீண்டும் அதோகதியில் வீழ்ந்து அஞ்ஞானமே கிடைக்கும்.

தாழ்வடையும் நிலை ஏற்படாமல் இருக்க,

சத்குருவையே சார்ந்திருக்க வேண்டும்.

- பாபா

“எனக்காகவே பரிதவிக்கிறவர்களை, என்னையே முழுமனதாக நினைப்பவர்களை விட்டு நான் என்றும் தூர விலகிப் போகமாட்டேன். அவர்களின் துயரங்களைத் தீர்த்து, மற்றவர்களைவிட நெருக்கமாக இருப்பேன்” என்கிறார் பாபா.

பாபா தன் வாழ்வில் புரிந்த அற்புதங்கள் பலவும் இந்தக் கூற்றை மெய்ப்பித்திருக்கின்றன. அவர் தன்னை நோக்கிக் கூப்பிடும் குரல்களை அடையாளம் கண்டு அவர்களை முழுமையாகக் காக்கிறார்.

பாபாயணம்
பாபாயணம்

மொரேஸ்வர் பிரதான் பாபாவின் பக்தர். ஒரு வயதில் அவருக்கொரு மகன் இருந்தான். மானைப்போலத் துள்ளி விளையாடிக்கொண்டிருந்த குழந்தைக்கு ஒரு நாள் நல்ல காய்ச்சல். சாதாரணக் காய்ச்சல்தானே என்று கைவைத்தியம் செய்துபார்த்தார்கள். அப்போதும் அவனுக்குக் குணம் ஏற்படவில்லை. குழந்தையின் உடல்நிலை மேலும் மோசமடைந்தது. ‘இது தெய்வக் குற்றத்தால் நேர்ந்திருக்கலாம்’ என்று நினைத்தார் பிரதான்.

பிரதான் குடும்பத்துக்கு வழக்கமாக பூஜைகள் செய்யும் சாஸ்திரியை அணுகினார், பிரதானின் மனைவி. ஏற்கெனவே அந்த சாஸ்திரிக்கு, பிரதானும் அவர் குடும்பமும் பாபாவை வணங்குவது குறித்த வருத்தம் இருந்தது. சகல நோய்களையும் தீர்க்கக்கூடிய தத்தாத்ரேயரை வணங்காமல் ஒரு முஸ்லிமை வணங்குவானேன் என்று கோபத்தில் இருந்தார். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு தன் மந்திர தந்திரங்கள் மூலமும் ஜபதபங்கள் மூலமும் குழந்தைக்கு குணம் உண்டாக்கிவிட வேண்டும் என்று நினைத்தார். அவ்வாறு செய்வதன் மூலம் பாபாவிடமிருந்து இவர்களைப் பிரித்துவிட முடியும் என்று எண்ணினார். ஆனால், அவரின் மந்திரங்கள் ஒன்றும் பலிக்கவில்லை. குழந்தை ஆபத்துக்கட்டத்தை அடைந்தது.

இதுவரை தரிசித்திராத சாயிபாபா திருவுருவப் படங்கள் புதிய பரிமாணங்களில். வாரந்தோறும் பாதுகாக்கத் தயாராகுங்கள்!

என்ன செய்வதென்று அறியாத சாஸ்திரி, பிரதானின் வீட்டுக்கு வந்தார். வீட்டு வாசலில் நீண்ட அங்கி தரித்துக் கையில் தடியோடு ஒரு பக்கிரி நின்றார். சாஸ்திரிகளுக்கு அது ஒரு தோற்றமயக்கமோ என்று இருந்தது. ஆனால் கண்முன் நிற்கும் அந்தத் திருவுருவை விட்டுக் கண்களை எடுக்க முடியாமல் திண்டாடினார்.

‘என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாய்? இந்த வீட்டுக்கு நானே எஜமானன்’ என்று அந்த பக்கிரி சாஸ்திரிகளிடம் மிரட்டினார். சாஸ்திரிக்கு சகலமும் புரிந்துவிட்டது. அந்த பக்கிரி வேறுயாருமல்ல, ஷீர்டி மசூதியில் வாசம் செய்யும் அந்த பாபாவே என்று புரிந்துகொண்டார்.இப்போதும் அவருக்கு சரணாகதி செய்துகொள்ள வேண்டும் என்று தோன்றவில்லை. மாறாக அவரோடு தர்க்கம் செய்தார்.

சாய் பாபா
சாய் பாபா

‘பாபா, உங்களை அனைவரும் சத்புருஷர் என்கிறார்கள். அப்படி நீங்களே அனைத்தும் என்றால் இந்தக் குழந்தையை சுகப்படுத்துங்கள். நோயால் இந்தக் குழந்தை பாதிக்கப்பட்டு பால்கூட அருந்தாமல் வாடுகிறது. இப்போது இந்தக் குழந்தை உடல்நலம் தேறிப் பால் அருந்தினால் நான் நேரடியாக வந்து உம்மை தரிசனம் செய்கிறேன். உமக்கு 125 ரூபாயைக் காணிக்கையாக்குகிறேன்’ என்றார்.

மகாபாரதத்தில் ஒரு சம்பவம். கிருஷ்ணன் தன் பால்யத்தில் சாந்தீபனி முனிவரின் குருகுலம் சென்று கல்வி பயின்றான். கல்வி முடிந்து கிருஷ்ணன் தன் வீடு திரும்பும் முன்பாக, ‘குருவே தங்களுக்கு நான் என்ன தட்சிணை தரவேண்டும்?” என்று கேட்டான்.

பரப்பிரம்மத்தை அறிந்தவரே குருவானவர். கிருஷ்ணனே பரப்பிரம்மம் என்பதை அவருக்கு யாரும் உபதேசிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த உலகில் யாராலும் தனக்கு அளிக்க முடியாத தட்சிணையை அவர் கிருஷ்ணனிடம் கேட்டார்.

‘கிருஷ்ணா, என் மகன் கடலில் விழுந்து மறைந்துபோனான் என்பதை நீ அறிவாய். அவன் எனக்கு வேண்டும்’ என்றார். கிருஷ்ணனிடம் கேட்டாலே கிடைக்கும். அதையும் குருதட்சிணையாகக் கேட்கும்போது கிருஷ்ணன் அதை மறுப்பானா என்ன!

‘அவர் மகன் ஏற்கெனவே கடலில் விழுந்து மாண்டுபோனான். அப்படியிருக்க இது எப்படி சாத்தியம்..?’ என்று பலராமன் கிருஷ்ணனிடம் வாதிட்டான். ஆனால் கிருஷ்ணனோ, ‘என்னால் முடியும் என்று என் குரு நம்புகிறார். குருவின் நம்பிக்கை பொய்ப்பதில்லை பலராமா’ என்று சொல்லி, தன் மனதால் சமுத்திரராஜனை அழைத்தான். உடனே அவன் முன் தோன்றினான் சமுத்திரராஜன்.

கிருஷ்ணன் அவனிடம், ‘நீ அறியாமல் இது நடந்திருக்க இயலாது, குருவின் புதல்வனுக்கு என்ன ஆனது என்று சொல்...’ என்று கேட்டான். அதற்கு சமுத்திரராஜன், ‘கிருஷ்ணா, பஞ்சஜனன் என்ற அரக்கனே முனி குமாரனைச் சிறைபிடித்து வைத்திருக்கிறான். அவனை வென்றால் குமாரனை மீட்கலாம்’ என்று சொல்லி மறைந்தான்.

கிருஷ்ணன் உடனே பஞ்சஜனனின் இருப்பிடம் அறிந்து, அங்கு சென்று யுத்தம் செய்து அவனைக் கொன்றான். முனிவரின் குமாரனை மீட்டு குருவிடம் தன் தட்சிணையைச் செலுத்தினான். இங்கு வென்றது கிருஷ்ணன் அல்ல, கிருஷ்ணனால் இயலும் என்று நம்பிய குருவின் நம்பிக்கை.

இங்கு சாஸ்திரிகள் வெளிப்படையாக பாபாவின் மேல் நம்பிக்கை வைக்கவில்லை. ஆனால் வேண்டுதல் வைத்தார். உண்மையில் சாஸ்திரிகள் பாபாவை பக்கிரியாய் தரிசித்த கணத்திலேயே பாபாவின் மேல் தன்னையுமறியாமல் நம்பிக்கையை வைத்துவிட்டார். சாஸ்திரிகள், பிரதானின் வீட்டுக்குள் சென்றார். குழந்தை சோர்ந்து படுத்திருந்தது. அதனருகில் கவலையோடு தாயும் தந்தையும் இருந்தனர்.

sai baba
sai baba

சாஸ்திரிகள் தன் நிறைந்த மனதோடு, ‘இப்போது குழந்தைக்குப் பால் கொடுங்கள்’ என்றார். சாஸ்திரிகளின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு பிரதானின் மனைவி குழந்தைக்குப் பால் கொடுத்தாள். தூக்கத்திலிருந்து எழுந்துகொண்டதுபோல குழந்தை புத்துணர்வோடு பால் அருந்தியது. தாயின் கண்களில் கண்ணீர் பெருகியது.

குழந்தை விரைவாக உடல்நலம் தேறி ஆரோக்கியமானது. சாஸ்திரிகளோ மனதுள் பாபாவை நினைத்துக்கொண்டார். சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேண்டும் என்று சாயியைக் காண மசூதி சென்றார். சாயியின் கால்களில் விழுந்து நமஸ்கரித்துக்கொண்டார். வேண்டிக்கொண்டபடி, பையிலிருந்து 125 ரூபாயை எடுத்து தட்சிணையாகக் கொடுத்தார். ‘

(தரிசனம் தொடரும்)

வாசகர் அனுபவம்

2015-ம் ஆண்டு. நான் குடியிருந்த வீடு பழசாகிவிட்டதால் அதை நிச்சயம் புதுப்பித்தே ஆகவேண்டும் என்னும் நிலை. பழைய வீட்டை இடித்துவிட்டு, அந்த இடத்தில் ஒரு அப்பார்ட்மென்ட் கட்டினால் வசதியாக இருக்கும் என்று தோன்றியது. அதற்காக ஒப்பந்ததாரரிடம் ஒப்பந்தமும் போட்டோம். ஆனால் அவர் வீட்டை இடித்ததோடு சரி, மேற்கொண்டு பணிகளைச் செய்யாது இழுத்தடித்து வந்தார். இதனால் எனக்கு மன உளைச்சல் அதிகமானது.

2017-ம் ஆண்டு இறுதியில் இந்த மனக்கவலைகளை மறக்க, மும்பையில் இருக்கும் என் மகள் வீட்டுக்குப் போய் சில நாள்கள் தங்கினேன். மகளும் மாப்பிள்ளையும் எங்களை 2017 கிறிஸ்துமஸ் அன்று ஷீர்டி அழைத்துப்போயினர். சாயியின் திவ்யமான தரிசனம் கிடைத்தது. ‘நானிருக்கிறேன், பயமேன்’ என்று பாபா சொல்வது போலிருந்தது. மனம் அமைதி யில் நிறைந்தது. அந்த அமைதி யோடு சென்னை திரும்பினேன். 2018 ஜனவரி முதல் வாரத்திலேயே பழைய ஒப்பந்ததாரர் தானே விலகிக் கொண்டார். புதிய ஒப்பந்ததாரர் அறிமுகமானார். சில மாதங் களிலேயே கட்டடம் எழும்பி விட்டது. எல்லாம் சாயியின் கருணை!

- ஈ. லட்சுமணன், சென்னை 90

பாபாவும் நானும்

‘`நான் எல்லா சாமியையும் கும்பிடுவேன். இயேசு எனக்கு ரொம்பப் பிடிச்ச கடவுள். காரணம், நான் சின்ன வயசுல கிறிஸ்துவப் பள்ளிக்கூடத்தில்தான் படிச்சு வளர்ந்தேன். எனக்கு நிறைய இஸ்லாமிய நண்பர்கள் உண்டு. அவங்ககூட தொழுகைக்கும் போயிருக்கேன். நான் ஒரு இந்துவாக இருந்தாலும் கடவுள் ஒருவர்தான் என்பது என் கொள்கை. பாபாவும் அதைத்தான் வலியுறுத்திச் சொல்றார்.

நிழல்கள் ரவி
நிழல்கள் ரவி

என்கூடப் படிச்ச நண்பர்களில் ஒருத்தன், சுரேஷ். அவன் வீடு கோவை, சாயிபாபா காலனியில் இருந்தது. அவனைப் பார்க்கிறதுக்காக சைக்கிள் எடுத்துக்கிட்டு அடிக்கடி போவேன். ஒருமுறை அவன் என்னை சாயிபாபா காலனியில இருக்கிற பாபா கோயிலுக்கு அழைச்சிட்டுப் போனான். அப்போ எனக்குப் பெரிதா நம்பிக்கை இல்லை. ‘சரி, போயிட்டு வருவோம்’னுதான் போனேன். அங்கே போனதுக்கு அப்புறம் மனசில் ஒரு அமைதியும் நம்பிக்கையும் ஏற்பட்டுச்சு.

நான் நல்லா படிக்கிற ஸ்டூடன்ட்தான். ஆனா, சினிமா ஆசையினால் வகுப்பை கட் பண்ணிட்டு சினிமாவுக்குப் போயிடுவேன். எனக்கு சினிமாவில பெரிய ஆளாகணும்னு மனசுக்குள்ள ஆசை. சினிமாவுக்குப் போகப் போறேன்னு வீட்டுல சொன்னதும், அப்பா அதிர்ச்சியாகிட்டார். அப்பா எல்.ஐ.சி-யில் சீனியர் டிவிஷனல் மேனேஜர். என்கூடப் பொறந்தவங்க எல்லாம் இன்ஜினீயரிங், ஆடிட்டிங்னு படிச்சு முடிச்சவங்க. கோவை பி.எஸ்.ஜி கலைக் கல்லூரியில பி.ஏ. எக்கனாமிக்ஸ் கடைசி வருடம் படிச்சுக்கிட்டிருந்தேன். எக்ஸாம் நெருங்கிடுச்சு. அஞ்சு பேப்பர்ஸ் அரியர்ஸ் எழுதியாகணும். எனக்கு ஒண்ணும் புரியலை. நேரா சாயிபாபா கோயிலுக்குப் போனேன். அவர் பாதங்களில் சாஷ்டாங்கமா விழுந்துட்டேன். ‘பாபா நீதான் இந்த இக்கட்டிலிருந்து என்னைக் காப்பாத்தணும்’னு வேண்டிக்கிட்டேன்.

இரவு விழுந்து விழுந்து படிச்சேன். நான் என்ன கேள்விகளைப் படிச்சேனோ அதே கேள்விகள்தான் மறுநாள் எக்ஸாம்ல வந்தது. எல்லா பேப்பர்களையும் க்ளியர் செய்து செகண்ட் க்ளாஸ்ல பாஸ் பண்ணினேன். டிகிரியும் கிடைச்சது. பாபாவே என்கூட வந்து எழுதின மாதிரி இருந்துச்சு. இதெல்லாம் 1978-ல் நடந்தது. இன்றைக்குப் பலரும் பாபா பக்தர்களா இருக்காங்க. நான் அப்போதிருந்தே சாயிபாபா பக்தன்.”

வாசகர்களே!

சாயிபாபா உங்கள் வாழ்க்கையில் நிகழ்த்திய அற்புதங்களை உங்கள் புகைப்படத்துடன், ஆனந்த விகடன், 757 அண்ணாசாலை, சென்னை-2 என்ற முகவரிக்கோ, saibaba@vikatan.com மின்னஞ்சலுக்கோ எழுதி அனுப்புங்கள். சிறந்த அனுபவங்கள் வெளியிடப்படும்.