மற்ற எபிசோடுகள்
Published:Updated:

பாபாயணம் - 20

சாய் பாபா
பிரீமியம் ஸ்டோரி
News
சாய் பாபா

இதுவரை தரிசித்திராத சாயிபாபா திருவுருவப் படங்கள் புதிய பரிமாணங்களில். வாரந்தோறும் பாதுகாக்கத் தயாராகுங்கள்!

உன் நன்மைக்காகவே நான் இந்த உலகிற்கு வந்திருக்கிறேன்.

பாபா நீ விரும்பியதை நடத்தவில்லை என்று எண்ணுகிறாய்.

அதைவிட உனக்கு எது நல்லதோ அதையே நான் செய்கிறேன்.

- பாபா

முகஸ்துதியே ஒருவனை அழிக்கும் வல்லமை வாய்ந்தது. முகஸ்துதி அகங்காரத்தை உண்டு பண்ணுகிறது. அகங்காரம் நம்மை உண்மைக்குத் தொலைவிலேயும் அஞ்ஞானத்துக்கு அருகிலும் இட்டுச் செல்கிறது. அஞ்ஞானம் மீட்பேயில்லாத இறுதியை நோக்கி நம்மைத் தள்ளிவிடுகிறது.

கிருஷ்ணர் வாழ்ந்த காலத்தில் பௌண்ட்ரகன் என்னும் மன்னன் வாழ்ந்துவந்தான். மற்றவர்களால் புகழப்படும் மனிதனாக வாழ வேண்டும் என்பது அவன் விருப்பம். அப்போது மனிதர்களில் பேரும் புகழும் உடையவராக விளங்கியவர் கிருஷ்ணரே. மக்கள் அவரை வாசுதேவன் என்று போற்றினர். வாசுதேவன் என்பது உயரிய புகழ்ச்சி. பௌண்ட்ரகன், தானும் வாசுதேவன் என்று புகழப்பட வேண்டும் என விரும்பினான்.

பாபாயணம் - 20
பாபாயணம் - 20

கிருஷ்ணரைப்போலவே தன்னை அலங்கரித்துக்கொள்வான் பௌண்ட்ரகன். பட்டுப்பீதாம்பரம், துளசிமாலை, தலையில் மயிற்பீலி என கிருஷ்ணனின் சகல அலங்காரங்களையும் அவன் செய்துகொள்வான். கொஞ்சம் செல்வம் உள்ளவர்களையே சுற்றிவந்து புகழ ஒரு கூட்டம் இருக்கும்போது, மன்னனைப் புகழவா ஆட்களைத் தேடவேண்டும்? பௌண்ட்ரகனைச் சுற்றியிருப்பவர்கள் அவனை வாசுதேவன் என்றே புகழ ஆரம்பித்துவிட்டார்கள்.

இதில் பௌண்ட்ரகனுக்கு அகங்காரம் தலைக்கேறியது. நானே கிருஷ்ணன் என்றும், நானே கடவுள் என்றும் சொல்லிக் கொண்டிருந்தான். அதோடு நின்றாலும் பரவாயில்லை. ‘நானே வாசுதேவன். எனக்கு நீ அடிமை’ என்று கிருஷ்ணருக்கே ஓலை அனுப்பினான்.

மனிதர்கள் அகங்காரத்தில் ஆடும்போது கடவுள் அதை அனுமதிப்பார். அகந்தையின் உச்சத்துக்குச் செல்லும்போது அதை அழித்து ஒழிப்பார். பௌண்ட்ரகனின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போனது. எதுவரைக்கும் என்றால், கிருஷ்ணருடன் போர்புரிய வரும் அளவுக்கு. போரில் பௌண்ட்ரகன் வீழ்ந்து மடிந்தான். உண்மையில் அவன் அகந்தையே அவனை வீழ்த்தியது.

சாய் பாபா
சாய் பாபா

அகந்தையை விட்டுவிடுவதே ஞானத்தின் உச்சம். ஞானிகளும் மகான்களும் அப்படித்தான் வாழ்வார்கள். ஞானிகளின் சந்நிதானத்துக்கு வந்து அவர் சரணங்களில் சரணாகதி செய்துகொண்டால் அகந்தை அழிந்து ஞானம் சித்திக்கும். சாமானியர் களுக்கு வாய்க்கும் இந்த அரிய பாக்கியம் சில நேரங்களில் கற்றறிந்த பண்டிதர்களுக்கு வாய்ப்பதில்லை.

மராட்டிய மாநிலம் அஹமத் நகரைச் சேர்ந்தவர் ஜவஹர் அலி. இறைக்கல்வியில் மெத்தப் படித்தவர். சமயநூல்களை முழுமையாகக் கற்று அறிந்தவர். அவரால் எந்தப் பொருள்குறித்தும் விளக்கமாகப் பேச முடியும். மக்கள் அவரை ஆன்மிகவாதியாகக் கொண்டாடினர். ஊரே அவரின் அறிவைப் புகழ்ந்துபேசியது. மக்கள் திரளாக வந்து அவரைச் சந்தித்து ஆசிகள் பெற்றுச்சென்றனர். புகழ் சேரும்போது பணிவு பெருக வேண்டும். மாறாக அவருக்கோ கர்வம் பெருகியது.

ஒருமுறை ஷீர்டிக்கு வந்த ஜவஹர் அலி, ஷீர்டியில் மக்கள் பாபாவை ஆராதிப்பதைக் கண்டு வியந்தார். பாபாவுக்கு நடக்கும் பூஜைகள், ஆரத்திகள், ஆராதனைகள் அவருக்கு வெறுப்பைத் தந்தன. அவரால் பாபாவின் புகழைத் தாங்க முடியவில்லை. எல்லோரும் தன்னையே புகழ வேண்டும், வணங்க வேண்டும் என்று விரும்பும் ஜவஹர் அலி, எப்படி பாபாவை ஏற்பார்? பாபாவைக் காண மசூதிக்குச் சென்றார்.

பாபா அவரை வரவேற்று வணக்கம் தெரிவித்தார். மசூதியில் அவருக்கு முழு மரியாதை அளித்தார். அதைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட ஜவஹர், “ஆன்மிகத்தில் நீ இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியது அதிகம் இருக்கிறது. எனவே நீ எனக்குச் சீடனாக இருந்து பணிவிடைகள் செய். நான் உன்னை மேலான நிலைக்கு உயர்த்துகிறேன்” என்று பாபாவிடம் கூறினார்.

இதுவரை தரிசித்திராத சாயிபாபா திருவுருவப் படங்கள் புதிய பரிமாணங்களில். வாரந்தோறும் பாதுகாக்கத் தயாராகுங்கள்!

பாபாவின் லீலைக்கு எல்லையேது..! மறுக்காமல் புன்சிரிப்புடன் அதை ஏற்றுக்கொண்ட பாபா, ஜவஹர் அலி சொன்ன அனைத்து வேலைகளையும் செய்தார். பாபாவை அழைத்துக்கொண்டு ஜவஹர் அலி ராஹதா கிராமத்திற்கு வந்தார். அங்கு ஜவஹர் அலி என்ன உத்தரவு போட்டாலும் முகம் சுளிக்காமல் செய்தார் பாபா. ஷீர்டி மக்கள் தாயைப் பிரிந்த கன்றுபோல வாட ஆரம்பித்தனர்.

பாபாவை ஷீர்டிக்கு வருமாறு அழைத்தனர் மக்கள். அப்போது அங்குவந்த ஜவஹர் அலி கடுமையாகப் பேசினார். பெரும் வாக்குவாதமே நடந்தது. ஷீர்டி மக்கள் இருவரையும் ஷீர்டிக்கு அழைத்து வந்தனர். மீண்டும் பாபாவை மசூதியில் அமரவைத்து மனமார ஆரத்தி எடுத்து ஆராதனைகள் செய்தனர். இவற்றையெல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாத ஜவஹர் அலி மீண்டும் வாக்குவாதம் செய்தபோது ஷீர்டி மக்கள் அவரை, அங்கிருந்த ஆஞ்சநேயர் கோயிலில் வாழ்ந்துவந்த தேவிதாஸ் என்பவரிடம் கொண்டுவந்து விட்டனர். ஜவஹர் அலி தேவிதாஸோடு வாதம் செய்யவேண்டும் என்று வற்புறுத்தினர். அடக்கத்தோடு வாதம் புரிந்த தேவிதாஸிடம் அகந்தையோடு வாதம் செய்த ஜவஹர் அலி தோற்றார். அந்த அவமானத்தில் அங்கிருந்து புறப்பட்டு பீஜப்பூர் சென்றுவிட்டார்.

சாய் பாபா
சாய் பாபா

ஆண்டுகள் சில கடந்தன. ஜவஹர் அலி மீண்டும் ஷீர்டி வந்தார். இந்த முறை பாபாவை பக்தியோடும் தாழ்மையோடு பணிந்துகொண்டார். பாபாவின் சரணங்களைப் பற்றிக்கொண்டு கதறினார். யார் பாதங்களைப் பற்றிக்கொண்டால் கவலைகள் அழியுமோ, எவரின் பாதங்களைப் பற்றிக்கொண்டால் பாவங்கள் விலகுமோ, எந்தத் திருவடிகள் ஒருவருக்கு உண்மையான ஞானத்தை அருளுமோ அந்தத் திருவடிகளை ஜவஹர் அலி தன் கண்ணீரல் அபிஷேகித்து, தன் பழைய செயல்களுக்காக மன்னிப்பு கேட்டார். காலம் முழுமைக்கும் பாபாவின் சீடனாக இருக்க நேர்ந்துகொண்டார்.

(தரிசனம் தொடரும்)

வாசகர் அனுபவம்

னது அப்பா தன் சொந்தக்காரர் ஒருவருக்கு ஜாமின் கொடுத்ததால் ஏமாற்றப்பட்டு சொத்துகள் அனைத்தையும் விற்கவேண்டியதாயிற்று. அப்பா அந்தக் கவலையிலேயே சில நாள்களில் இறந்துவிட்டார். நானும் அம்மாவும் வசித்துவந்த வீட்டின் உரிமையாளர் சாயி பக்தர். என்னையும் சாயிபாபாவை வணங்கும்படி வற்புறுத்தினார். அவருடன் கோயிலுக்குப் போனபோது பாபா, `பயப்படாதே, நான் இருக்கிறேன்’ என்று சொல்வது போல இருந்தது. அந்த வாரத்தில் எனக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைத்தது. மீண்டும் கோயிலுக்குச் சென்று என்னையும் அறியாமல் கண்ணீர் சிந்தி நன்றி செலுத்திவிட்டு வந்தேன். அன்று முதல் பாபாவை வணங்கிவருகிறேன். இன்று நல்ல பணி, அழகான குடும்பம், சென்னையில் சொந்த வீடு என அனைத்துமே பாபாவின் ஆசியால் கிடைத்தது என்பதை உறுதியாக நம்புகிறேன்.

ஆ.பிரணவ், திருநெல்வேலி

பாபாவும் நானும்

‘`சிறுவயதிலிருந்து எனக்கு ரொம்பப் பிடித்த கடவுள் பிள்ளையார்தான். என் தோழி சுலக்சனா ஆஸ்திரேலியாவில் இருக்கா. ஏழு வருடங்களுக்கு முன்பு அவதான் எனக்கு ஷீர்டி சாயிபாபாவைப் பத்தியும் அவர் நிகழ்த்தும் அற்புதங்கள் குறித்தும் என்கிட்ட நிறைய சொன்னா.

‘நீ ஒருமுறை பாபா கோயிலுக்குப் போய் அவர்கிட்ட ப்ரே பண்ணிட்டு வா. அதுக்குப் பிறகு பாரு’ன்னு சொல்லிட்டுப்போனா. அதேமாதிரி நானும் பாபா கோயிலுக்குப் போய் வேண்டிக்கிட்டேன். அவ சொன்னது மாதிரியே நான் வேண்டியது பலிச்சது. அதிலிருந்து பாபாவின் பக்தை ஆகிட்டேன்.

கீர்த்தி சாந்தனு
கீர்த்தி சாந்தனு

பாபா கோயிலுக்குப் போய் அவர் கண்ணைப் பார்த்து நம் பிரச்னை, ஸ்ட்ரெஸ் எதுவாக இருந்தாலும் சொன்னோம்னா, ‘பயப்படாதே நான் பார்த்துக்கிறேன்’னு அவர் சொல்ற மாதிரி இருக்கும். அவர் கண்ணைப் பார்த்துப் பேசும்போது ஒரு பதில் நம் மனசுக்குள்ள தோன்றும். சீக்கிரமே, நாம என்ன வேண்டிக்கொண்டோமோ அது அப்படியே நடந்திடும். அதனால் எனக்கு பாபா மேல பெரும் நம்பிக்கை வந்தது.

ஒவ்வொரு வியாழக்கிழமையும் விரதமிருப்பேன். முக்கியமான பிரார்த்தனைனா பாபாவுக்கு ஒன்பது வாரம்கூட விரதம் இருப்பேன். ஒரு முறை என் பிரார்த்தனை நிறைவேறினதால நான், சாந்தனு மற்றும் எங்க குடும்பத்தில் உள்ள எல்லோரும் சேர்ந்து ஒரு வியாழக்கிழமையன்று பாபா கோயிலுக்குப் போய் பக்தர்களுக்கு பிரசாதம் கொடுத்தோம். ரொம்ப சந்தோஷமாவும் திருப்தியாவும் இருந்தது.

ராணிப்பேட்டை பக்கத்தில் நெமிலிங்கிற இடத்தைத் தாண்டி சாயி ட்ரஸ்ட்டுக்குச் சொந்தமான ஒரு பாபா கோயில் இருக்கு. அந்த இடம் நிறைய பேருக்குத் தெரியாது. ரொம்ப அழகாவும் அமைதியாவும் இருக்கும். அங்க போய் ஒரு நாள் முழுவதும் இருந்துட்டு வந்தால்போதும்... மனசுக்கு ரொம்ப நிம்மதியாவும் சந்தோஷமாவும் இருக்கும். வருஷத்துக்கு ஒருமுறை ஷீர்டிக்குப் போய்ட்டு வருவேன். ஷீர்டியில் வாங்கின சாயிபாபா மோதிரத்தைக் கையோடு போட்டிருக்கேன். எந்த ஷூட்டிங், போட்டோ ஷூட்னாலும் அதைக் கழற்றமாட்டேன். எப்போதும் என் கையில் அந்த மோதிரம் இருக்கும். ராசியான மோதிரம்.”

வாசகர்களே!

சாயிபாபா உங்கள் வாழ்க்கையில் நிகழ்த்திய அற்புதங்களை உங்கள் புகைப்படத்துடன், ஆனந்த விகடன், 757 அண்ணாசாலை, சென்னை-2 என்ற முகவரிக்கோ, saibaba@vikatan.com மின்னஞ்சலுக்கோ எழுதி அனுப்புங்கள். சிறந்த அனுபவங்கள் வெளியிடப்படும்.