மற்ற எபிசோடுகள்
Published:Updated:

பாபாயணம் - 21

சாய் பாபா
பிரீமியம் ஸ்டோரி
News
சாய் பாபா

இதுவரை தரிசித்திராத சாயிபாபா திருவுருவப் படங்கள் புதிய பரிமாணங்களில். வாரந்தோறும் பாதுகாக்கத் தயாராகுங்கள்!

நான் உன்னுடன் இருக்கும்போது கவலை எதற்கு...

காத்திரு. சரியான நேரத்தில், சரியான இடத்தில்,

சரியான காரணத்துடன் அனைத்தும் நடக்கும்.

நடக்கப்போகும் அற்புதத்திற்கு நன்றி என்று மட்டும் சொல்.

- பாபா

மனித வாழ்வில் தேவைகளும் பிரச்னைகளுமே இறைவனைத் தேட வைக்கின்றன. நம்பிக்கையோடு இறைவனின் சந்நிதானத்தை அடைந்து தரிசனம் செய்த கணத்தில் மனம் ஆறுதல் அடைந்துவிடுகிறது. அதுவரை மனதை அழுத்திக்கொண்டிருந்த பெரும் பாரம் நீங்கியதுபோன்ற உணர்வு மேலிட்டுவிடுகிறது. பேருணர்வில் கண்ணீர் பெருகும். அதன்பின் வேண்டுதல்களெல்லாம் வெற்றுச் சடங்குகள்தான்.

பாபாயணம்
பாபாயணம்

ஸ்ரீராமரின் அரண்மனை வாசலுக்கு வந்தான் ஒருவன். வாசலிலேயே நின்று ‘ராமா... ராமா’ என்று கூக்குரலிட்டான். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருபவன் அல்லவா அந்த ரகுகுல திலகன்... அவனை அழைத்து ‘என்ன வேண்டும்?’ என்று கேட்டார்.

பதில் சொல்ல வேண்டியவனோ உதடுகள் துடிக்கக் கண்ணீர் மல்கி நின்றான். ராமரின் திருமுக தரிசனம் அவனை சிலிர்க்கச் செய்திருந்தது. சூரியனைக் கண்டதும் அல்லிகள் குவிவதைப்போல ராமனைக் கண்டதும் அவன் கைகள் குவிந்து நின்றன. தரிசனத்துக்குப் பிறகு பதில் சொல்லாமல் அவன் அங்கிருந்து புறப்பட்டான்.

இதே காட்சி தொடர்ந்து சில நாள்கள் அரங்கேறின. ராமருக்குப் புரிந்தது, பக்தியின் உச்சத்தில் இவன் வேண்டுதல்களை மறக்கிறான் என்று. அவன் தேவை என்ன என்பதை அறிந்துவர ரகசியமாக லட்சுமணனை அனுப்பி வைத்து, அதை நிறைவேற்றினார்.

இறைவன் பக்தனிடம் எதிர்பார்ப்பது பரிபூரண சரணாகதி. அப்படி சரணாகதி அடையும் ஒருவனை சிந்தனைக்கு எட்டாத அற்புதங்களைச் செய்து ஆதரிப்பதே பரப்பிரம்மத்தின் குணம். பாபா தன்னிடம் சரணடையும் பக்தர்களின் துயரைத் தேடிச்சென்று தீர்ப்பார். தூரத்தில் இருந்தாலும் பூமியின் மீதிருக்கும் பனியை நீக்கும் சூரியன்போல எங்கிருந்தாலும் தன் பக்தர்களின் துன்பத்தைத் துடைக்கும் பகலவன் பாபா.

சாய் பாபா
சாய் பாபா

ஜாம் நகர் என்னும் ஊரில் நானா சந்தூர்க்கர் என்பவர் வாழ்ந்துவந்தார். நானாவுக்கு சகலமும் பாபாதான். பாபாவின் மீது அதீத நம்பிக்கை கொண்டவர். நானாவின் மகள் கர்ப்பமாய் இருந்தாள். பிரசவ காலம் நெருங்கிக் கொண்டிருந்தது. அவளுக்கு வைத்தியம் பார்த்த செவிலியரோ, பிரசவம் சிக்கலாக இருக்கலாம் என்று சொன்னார். அதேபோன்று அவளும் வலியால் துடிக்க ஆரம்பித்தாள். மகளின் கதறலைப் பொறுக்கமுடியாத நானா, பாபாவை தியானித்தார். தன் மகளைக் காப்பாற்றும்படி உடலும் உயிரும் அதிரும்படி கதறி வேண்டினார்.

பள்ளங்களை நோக்கிப் பாயும் வெள்ளம்போல பக்தனை நோக்கியே பாயும் வெள்ளம் பாபா. நானாவின் குரல் அவருக்குக் கேட்டது. நிலைமையின் தீவிரத்தை அறிந்தார். அது பக்தர்களுக்கு ஆசி வழங்கும் நேரம். ஜலகானிலிருந்து வந்திருந்த ராம்கீர்புவா என்னும் பக்தர் சாயியை நமஸ்கரித்தார். சாயி ஓர் உதிப் பொட்டலத்தை அவரிடம் தந்து, “இதை ஜாம்நகர் நானாவிடம் தந்துவிடு” என்றார்.

ராம்கீர்புவாவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

“பாபா, நான் ஜலகான் வரைதான் செல்கிறேன்” என்றார்.

பாபா சிரித்தபடியே, “நீ ஜலகான் போ. அங்கே உனக்காக ஒரு குதிரைவண்டி காத்திருக்கும்” என்று கூறினார்.

சாயியின் கட்டளையை யார்தான் மீற முடியும்... ராம்கீர் உதியை எடுத்துக்கொண்டு ரயில் ஏறினார். நள்ளிரவில் ரயில் ஜலகானை அடைந்தது. ராம்கீர் மட்டுமே அந்த ரயில்நிலையத்தில் இறங்குபவராக இருந்தார். பாபா சொன்னதுபோல அங்கே ஒரு குதிரைவண்டி நின்றிருந்தது.

வண்டிக்காரன் ராம்கீரிடம், ‘ஜாம்நகர் நானாவைச் சந்திக்கத்தானே வந்திருக்கிறீர்கள்?’ என்று கேட்டான். ராம்கீர் தலையசைக்க, அவரை வண்டியில் ஏற்றிக்கொண்டு ஜாம்நகரை நோக்கி விரைந்தான். பயணத்தில் ராம்கீர் சிறு உறக்கமிட்டுக் கண் விழித்தபோது ஜாம்நகர் வந்திருந்தது. அங்கே நானாவை அடையாளம் காட்டினான் வண்டிக்காரன்.

சாய் பாபா
சாய் பாபா

ராம்கீர் உதிப் பிரசாதத்தை அவர் கையில் கொடுக்க, நானா பாபாவின் கருணையை எண்ணி நெகிழ்ந்தார். உடனே அதைத் தண்ணீரில் கரைத்துத் தன் மகளுக்குக் கொடுத்தார். அதுவரை துடித்துக்கொண்டிருந்தவளின் வலி கொஞ்சம் மட்டுப்பட்டதுபோலானது. அடுத்த சில நிமிடங்களில் அவளுக்குப் பிரசவ வலி உண்டாகி அழகான ஆண்குழந்தை பிறந்தது.

நானாவின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. சாயியைப் பாடிப் போற்றித் துதித்தார். உதிப் பிரசாதம் கொண்டு தந்த ராம்கீரின் கைகளைப் பற்றிக்கொண்டு நன்றி செலுத்தினார். ராம்கீரோ, “நான் என்ன செய்தேன்... பாபா பிரசாதம் கொடுத்தனுப்பினார். நீங்களோ ரயிலடிக்கே வண்டியை அனுப்பினீர்கள். நான் சுகமாகத் தானே வந்தேன்” என்றார்.

‘என்னது நானா...’ என்று திகைத்தார் நானா. “நான் யாரையும் அனுப்பவில்லையே....” என்று சொல்லவும் “அப்படியானால் இந்தக் குதிரைவண்டி யாருடையது” என்று ராம்கீர் வண்டி நின்ற இடத்தைக் காண்பிக்கவும், இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். உண்மையில் அங்கு எந்த வண்டியும் இல்லை. அங்கு குதிரை வண்டி நின்றதையோ ஒரு குதிரைக்காரன் இருந்ததையோ யாருமே கண்டிருக்கவில்லை. ராம்கீரும் நானாவும் சிலிர்த்துப்போயினர். அவர்களுக்குப் புரிந்துவிட்டது. சாயியின் லீலைகளை எண்ணி இருவரும் கண்ணீர் சிந்தினர். சாயி தூரத்தில் இருந்தாலும் பயமில்லை. தேவைப்படும்போது தன் அருள்கரங்களை நீட்டி நம் கண்ணீரைத் துடைப்பார்.

(தரிசனம் தொடரும்)

வாசகர் அனுபவம்

“25 ஆண்டுகளுக்கு முன்பே என் பெற்றோர் இறந்துவிட்டனர். கஷ்டப்பட்டுப் படித்து ஒரு வேலையில் சேர்ந்தேன். அது வெளிநாட்டு நிறுவனம் என்றபோதும் சொற்ப சம்பளம். அப்போது ஒரு வாய்ப்பு வந்தது. அந்த நிறுவனமே ஆஸ்திரேலியா அனுப்பி, பயிற்சி கொடுத்து, பிறகு இங்கே பணி நிரந்தரம் செய்ய ஆட்கள் எடுத்தனர். நானும் விண்ணப்பித்திருந்தேன். ஆனால் என் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. காரணம் கேட்டபோது, என் குடியிருப்புப் பகுதியில் விசாரித்தபோது யாரும் சரியான அடையாளம் சொல்லவில்லை என்று சொன்னார்கள். நான் மனம் நொந்துபோனேன். அப்போதுதான் என் நண்பர் பாபாவிடம் வேண்டிக்கொள் என்றார். மயிலாப்பூர் வந்து பாபாவை தரிசனம் செய்து வேண்டிக்கொண்டேன். அடுத்த வாரம் அலுவலகத்திலிருந்து ஒரு சர்க்குலர் வந்தது. வெளிநாடு செல்லும் நபர்களை நுழைவுத் தேர்வு மூலமே சேர்க்கப்போகிறோம் என்றும், புதிய விண்ணப்பம் வேண்டும் என்றும் கேட்டார்கள். மீண்டும் விண்ணப்பித்துத் தேர்வு எழுதியதில் நான் முதல் மதிப்பெண் எடுத்துத் தகுதிபெற்றேன். இன்று அந்த நிறுவனத்தில் மேலாளராக இருக்கிறேன். எல்லாம் பாபாவின் கருணை.”

- சத்திய நாராயணன், அடையாறு, சென்னை.

பாபாவும் நானும்

“என் மனைவி சாயிபாபா பக்தை. ஒருமுறை ஷீர்டிக்கு அழைச்சிட்டுப் போனாங்க. அதிலிருந்து பாபா மேல ரொம்ப பக்தி ஆயிடுச்சு. ‘நம்ம ஆபீஸுக்கு வரும்போது ஒரு பாபா சிலை இருந்துச்சுன்னா, அதை நாம் கும்பிட்டுட்டு ஆபீஸுக்குள் வரலாமே’ன்னு சொல்லி ஆசைப்பட்டாங்க. முதல்ல சிறிய அளவுல ஆபீஸ் பக்கத்துல வீட்டுக்கோயில் மாதிரி கட்டி சின்னதா ஒரு விக்கிரகம் வைக்கலாம்னு நினைச்சோம். அப்புறம் கொஞ்சம் பெருசா கட்டினா நல்லா இருக்கும்னு தோணுச்சு. அப்புறம் கொஞ்சம் பெரிய கோயிலா எல்லோரும் வந்து போகிற மாதிரி கட்டாலம்னு முடிவு பண்ணிக் கட்டினதுதான் இந்தக்கோயில். ‘பாபா ஓர் இடத்துக்குப் போறார்னா அவருக்கு விருப்பம் இருந்தாதான் போவார். இல்லைனா அங்க போக மாட்டார்’னு சொல்லுவாங்க. அந்த மாதிரி பாபா அவரே முடிவு பண்ணி இங்க வந்து உட்கார்ந்துகிட்டார்ங்கிறதுதான் உண்மை. இந்தக் கோயில் கட்டும்போது நான் சினிமாவுல இருக்கேன். யார் இந்தக் கோயிலைப் பாதுகாப்பா வெச்சுக்குவாங்க, தினம் பூஜை பண்ணுவாங்கன்னெல்லாம் எனக்கு ஒரே யோசனை. கோயில் கட்டுறதைவிட ரொம்ப முக்கியமான விஷயம், பூஜைகளை கர்ம சிரத்தையாக ஒவ்வொரு நாளும் செய்வது.

‘பாபா நீதான் பார்த்துக்கணும்’னு சொல்லி அவர்கிட்ட வேண்டிக்கிட்டேன். அதுக்குத் தகுந்த நபர் கிடைத்தார். ஷீர்டியில் நடக்கிறது மாதிரியே நான்குகால பூஜை ரொம்பச் சிறப்பா நம்ம கோயிலிலும் நடக்குது. ஷீர்டிபோலவே வருடத்தில் ஆறு நாள்கள் விழா இங்கே நடக்கும். இந்தப் பகுதிக்கே பாபா கோயில் பெரிய அடையாளமாக மாறிடுச்சு.

ஏ.எம்.ரத்னம்
ஏ.எம்.ரத்னம்

இந்த பாபா கோயில் அமைந்தது, என் மூலமாக நடந்ததுதானே தவிர, அது என்னால நடந்ததுன்னு ஒரு நாளும் சொல்ல மாட்டேன். பாபாவுக்கு நான் ஒரு கருவி, அவ்வளவுதான். இங்க வர்றவங்க சிலருக்கு பாபா நோய் தீர்க்கும் மருத்துவரா இருக்கார்; சிலருக்கு குருவா இருக்கார்; சிலருக்கு அப்பாவா இருக்கார்; யார் எப்படி நினைக்கிறாங்களோ அப்படியே அவங்ககூட பயணம் பண்றார். பக்தர்கள் தங்கள் அனுபவங்களைச் சொல்லிக் கேட்கும்போது நமக்கு ஓர் ஆத்ம திருப்தி உண்டாகுது.”

- எஸ்.கதிரேசன்

வாசகர்களே!

சாயிபாபா உங்கள் வாழ்க்கையில் நிகழ்த்திய அற்புதங்களை உங்கள் புகைப்படத்துடன், ஆனந்த விகடன், 757 அண்ணாசாலை, சென்னை-2 என்ற முகவரிக்கோ, saibaba@vikatan.com மின்னஞ்சலுக்கோ எழுதி அனுப்புங்கள். சிறந்த அனுபவங்கள் வெளியிடப்படும்.