மற்ற எபிசோடுகள்
Published:Updated:

பாபாயணம் - 22

சாய் பாபா
பிரீமியம் ஸ்டோரி
News
சாய் பாபா

சச்சிதானந்த சத்குரு ஸ்ரீசாயிநாதரே சரணம்!

உன்னோடு நான் இருக்கிறேன். நீ விரும்பும் வாழ்வை

உனக்கு அளிப்பேன் என்று நம்பு.

- பாபா

பாபா நம் இல்லத்தில் வாழ்கிற கண்களுக்குப் புலனாகாத ஓர் உறவு. நம் உள்ளம் உணரக்கூடிய அந்தராத்மா. செயல்கள் ஒவ்வொன்றையும் கூடவே இருந்து ஆசீர்வதிக்கிறவர். அவர் அருளாலேயே அவரின் தாள் பணியும் பாக்கியமும் நமக்கு வாய்த்தது. நன்மையே வடிவமான பாபா நமக்குள் அந்தர்மியாக உள்ளத்துள் இருக்கும்போது நல்ல எண்ணங்கள் மட்டுமே அங்கு உருவாகின்றன. தீய எண்ணங்கள் சிதறி ஓடுகின்றன. அவரின் சங்கல்பத்தினாலேயே ஒவ்வொன்றும் நிகழ்கிறது. அவர் நம்மோடு இருப்பது நம் உரிமையல்ல; அவரின் கருணை. அதனாலேயே நாம் அவரோடு தொடர்புடையவர்களாக இருக்கிறோம்.

சாய் பாபா
சாய் பாபா

நாம் பாபாவை அறியாமல் இருக்கலாம். அவரோ நம்மை ஜென்ம ஜென்மங்களாக அறிந்திருக்கிறவர். அதன்படி தன் அடியவர்களைத் தேடிச் சென்று ஆட்கொள்கிறவர். அப்படி அவர் தேடி ஆட்கொண்ட மனிதர்தான் நானா சாந்தோர்க்கர், அஹமத் நகரின் மாவட்டத் துணை ஆட்சியர். நல்ல அறிவாளி. இறைநம்பிக்கை கொண்டவர். நல்ல பண்புகள் கொண்டவர். அவர் பாபாவைப் பற்றிக் கேள்விப்பட்டதில்லை. ஆனால் பாபாவோ நானாவை அறிவார். ஷீர்டிக்கு வரும்படி ஆள் அனுப்பி நானாவை அழைத்தார். ஒருமுறையல்ல... நான்கு முறை.

“சந்நியாசி அழைத்தால் ஒரு கலெக்டர் வரவேண்டிய அவசியம் என்ன?” என்று ஆரம்பத்தில் மறுத்தார் நானா. ஆனால் பாபாவின் தொடர் அழைப்பு அவரை ஒருமுறை ஷீர்டிக்குப் போய்விட்டு வந்தால்தான் என்ன என்று யோசிக்க வைத்தது. ஷீர்டிக்குச் சென்றார். அங்கு பாபாவின் தரிசனம் அவரைச் சிலிர்க்க வைத்தது. ஏற்கெனவே அவரை தரிசனம் செய்திருப்பதுபோன்ற உணர்வு மேலிட்டது. பாபா புன்னகையோடு அவரை நோக்கினார்.

இதுவரை தரிசித்திராத சாயிபாபா திருவுருவப் படங்கள் புதிய பரிமாணங்களில். வாரந்தோறும் பாதுகாக்கத் தயாராகுங்கள்!

“நானா, நீ நினைப்பது சரிதான். நாம் நான்கு ஜென்மங்களாக இணைந்தே பிறந்திருக்கிறோம். அந்த பந்தம் விட்டுப்போய்விடக் கூடாது என்றுதான் உன்னை அழைத்தேன். நேரம் கிடைக்கும்போதெல்லாம் இங்கு வந்து போய்க் கொண்டிரு நானா” என்றார். நானாவுக்கு அனைத்தும் புதிதாகிவிட்டதைப்போலத் தோன்றியது. அதன்பின்பு பாபாவை நினைத்தே சகலத்தையும் செய்யத் தொடங்கினார்.

பாபா ஒருமுறை நானாவிடம், “உனக்கு என்ன இக்கட்டு நேர்ந்தாலும் என்னை நினை. உடனே நான் அங்கு வருவேன்” என்று உறுதி அளித்தார். அது வெற்று வார்த்தை என்று நானாவுக்குத் தோன்றவில்லை. நானா அந்த வார்த்தைகளை நம்ப ஆரம்பித்தார்.

நானாவுக்குப் புண்ணியத் தலங்களுக்குப் பயணம் செய்வது பெரும் விருப்பம். அப்படி ஒருமுறை தன் நண்பர்கள் ஒருசிலரை அழைத்துக் கொண்டு ஹரிச்சந்திரா மலையிலிருக்கும் துர்கை ஆலயத்துக்குச் செல்லத் தொடங்கினார்.

பாபாயணம் - 22

அது கடுமையான கோடை. எதிர்பார்த்ததை விட வெயில் மிகவும் உக்கிரமாக இருந்தது. பாதிமலைகூட ஏறியிருக்காத நிலையில் நானாவுக்கும் நண்பர்களுக்கும் தாகம் வாட்டியெடுக்க ஆரம்பித்தது. அங்கிருந்த பாறை ஒன்றில் சோர்ந்து அமர்ந்துவிட்டனர். நானாவின் மனம் பாபாவை நினைத்துக்கொண்டது.

“பாபா மட்டும் இதை அறிந்தால் எப்படியாகிலும் என் தாகத்தைத் தீர்த்துவைப்பார்’’ என்று நண்பர்களிடம் சொன்னார்.

நண்பர்களுக்குச் சிரிப்பும் கோபமும் வந்தன.

“வெயில்காலம் என்பதை அறியாமலா இங்கு வந்தோம். இந்த இடத்தில் பாபா அல்ல, வேறு யாருமே நீர் தர முடியாது. பேசாமல் மேலேறுவோம். முடியாதென்றால் கீழிறங்கிவிடுவோம்” என்று ஒரு நண்பர் கோபத்தில் சண்டைக்கு வந்தார்.

நானாவுக்கு நண்பனின் சொற்கள் வருந்தத்தைத் தந்தன. அவர்கள் பாபாவை அறியாததால் அப்படிப் பேசுகிறார்கள் என்று எண்ணிக்கொண்டு, “பரவாயில்லை வாருங்கள். நாம் தொடர்ந்து மலையேறுவோம். பாபா துணையிருப்பார்” என்றார். பாபா ஷீர்டியில் மசூதியில் அமர்ந்துகொண்டே இவற்றையெல்லாம் காட்சிகளாகக் கண்டார். பின்பு வாய்விட்டு, “பாவம் நானா, தாகத்தால் தவிக்கிறான்” என்று சொன்னார். இதைக் கேட்டு அவரைச் சுற்றியிருந்தவர்கள் ஆச்சர்யம் கொண்டனர். மலையில் நானா மீண்டும் புறப்படத் தயாரானபோது, அங்கு வேடன் ஒருவர் மலையிலிருந்து இறங்கிவந்தார்.

சோர்ந்துபோயிருந்த நானாவையும் அவர் நண்பர்களையும் பார்த்துப் புன்னகைத்தார். நானா அவரிடம், “ஐயா, தாகம் வாட்டுகிறது. இங்கு அருந்துவதற்கு நீர் கிடைக்குமா...” என்று கேட்டார். உடனே அந்த வேடரும், “நீர்மேல் அமர்ந்துகொண்டே நீரைக் கேட்கிறீர்கள்...” என்றார். நண்பர்கள் ஆச்சர்யமாக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

“நீங்கள் அமர்ந்திருக்கும் பாறைக்கு அடியிலேயே நீர் இருக்கிறது” என்றார் அவர். “பாறைக்கு அடியிலா...” என்று சொல்லிவிட்டு அனைவரும் பாறையைப் பார்த்தனர். பின்பு அனைவரும் சேர்ந்து அந்தப் பாறையைப் புரட்ட முயன்றனர். பளுவான அந்தப் பாறையைத் தள்ளுவது எளிதாக இல்லை. அவர்கள் முயற்சியைக் கண்ட வேடன் தானும் அதில் பங்குகொண்டார். அடுத்த கணம் அந்தப் பாறை புரண்டு ஓடியது. என்ன ஆச்சர்யம், கீழே தூய்மையான தண்ணீர் சிறு குட்டைபோலத் தேங்கியிருந்தது. நண்பர்கள் தாகம்தீர அள்ளிப் பருகினார்கள். நானா தாகம் தீர்ந்தபின்பு நன்றி சொல்ல அந்த வேடனைத் தேடினார். அந்த வேடன் அங்கில்லை.

வந்தவர் காட்டுவாசி என்று நண்பர்கள் நினைத்துக்கொண்டார்கள். நானாவோ அது பாபாவே என்று உறுதியாக நம்பினார். அதை அடுத்த சந்திப்பில் பாபாவும் உறுதி செய்தார். “நானா, கங்கை நீர் உன் தாகத்தைத் தீர்த்ததா?” என்று கேட்டார். நானா அந்த நீரின் குளுமையை மீண்டும் நினைத்துக்கொண்டு பாபாவின் சரணங்களைப் பணிந்துகொண்டார்.

(தரிசனம் தொடரும்)

வாசகர் அனுபவம்

நான் பாபாவின் தீவிர பக்தன். பாபாமீதான நம்பிக்கையே 2014-ம் ஆண்டு எனக்கு நேர்ந்த உடல் நலக் குறைவிலிருந்து மீள்வதற்குக் காரணமாக இருந்தது. மேலும் 2015-ம் ஆண்டு எனக்கு ஒரு வெளிநாட்டு வேலை வாய்ப்பு வந்தது. இது என் வாழ்க்கையை மாற்றும் என்று எண்ணினேன். ஆனால் விசா கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. ஒருநாள் மாலை நானும் என் மனைவியும் நடைப் பயிற்சிக்குச் செல்லும் பொது, இதைப் பற்றி அவளிடம் வருத்தப்பட்டேன். அதற்கு அவள் "எல்லாம் பாபா பார்த்துக் கொள்வார். கவலைப் படாதீர்கள்" என்றாள். அவள் சொல்லி முடிக்கக்கூட இல்லை, அதற்குள் ஒரு மனிதர் எங்களிடம் வந்து "இந்தாருங்கள் இது பாபா பிரசாதம்" என்று கையில் ஒரு பொட்டலத்தைக் கொடுத்தார். மனம் அமைதியானது. மறுநாள் காலை எனக்கு விசா வந்துவிட்டது. பாபா எப்போதும் என் வாழ்வில் துணையிருக்கிறார். ஓம் சாயிராம்

- சரவண சேது தூத்துக்குடி

பாபாவும் நானும்

``என் வாழ்க்கையில் சாயிபாபா வந்தது ஓர் அற்புதமான அனுபவம். கும்பகோணத்திலிருந்த எங்களுடைய பூர்வீகச் சொத்தை எங்க அப்பா ஒருதலைப்பட்சமாக எழுதி என் சகோதரனுக்குக் கொடுத்துட்டார். அப்போ எனக்கு என்ன செய்யறதுன்னே புரியலே. நானும் என் குடும்பமும் நிர்கதியாக விடப்பட்ட நிலைமையில் இருந்தோம். என்னதான் சினிமாவில் நடிகராக இருந்தாலும் அதற்கேற்ற வகையில் செலவுகள் இருக்கத்தானே செய்யும்.

பாபாயணம் - 22

அந்த நேரத்தில் எனக்கு நல்ல துணையாய் இருந்து மனதில் தெம்பும் தைரியமும் கொடுத்து என் கௌரவத்தைக் காப்பாற்றியவர் சாயிபாபாதான். யாரிடமும் சொல்ல முடியாத ஒரு சூழல். சொந்தபந்தங்கள் நமக்கு எதிராகச் செயல்படும்போது அந்தக் கஷ்டத்தை நாலு பேர்கிட்ட பகிர்ந்துக்க முடியாத சூழ்நிலை. வெளியிலிருந்து பார்க்கிறவங்க, `அவருக்கென்ன, நடிகராக இருக்கார். என்ன பிரச்னை'ன்னுதான் நினைக்கிறாங்க. இந்த மாதிரி நெருக்கடியான நேரங்களில் தலைக்கு வந்த கஷ்டம் தலைப்பாகையுடன் போகிறதென்றால் அதற்குக் காரணம் பாபாதான். ஒவ்வொரு வியாழக்கிழமையும் மயிலாப்பூரில் இருக்கிற பாபா கோயிலுக்குப் போயிடுவேன்.

என் பொண்ணு எம்.பி.பி.எஸ் முடித்துவிட்டு எம்.எஸ் படிக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டாள். எங்கேயும் சீட்டு கிடைக்கல. கோடிக்கணக்கில் பணம் கேட்டாங்க. அவ்வளவு பணத்தை என்னால் புரட்ட முடியலை. என் பொண்ணு அழுதாள். ஒரு தகப்பனுக்கு தன் மகளின் கண்ணீரைப் பார்க்கிற மாதிரி கொடுமையான விஷயம் வேறு எதுவும் இல்லை.

மறுநாள் காலையில் `கிளம்பும்மா'ன்னு சொல்லி என் மகளை அழைச்சிக்கிட்டு மயிலாப்பூர் பாபா கோயிலுக்குப் போய் ஒரு தேங்காயை உடைத்துக் கும்பிட்டேன். அங்கிருந்து நேரா ஒரு தனியார் கல்லூரிக்குக் கிளம்பிப் போனோம். வழியிலேயே தாம்பரத்துல ஒரு ஹோட்டல்ல டிபன் சாப்பிட்டோம். சாப்பிட்டு முடிஞ்சு வெளியில் வந்தா அங்கு ஒரு சிறிய பாபா கோயில். அங்கும் ஒரு தேங்காயை உடைச்சிட்டு கல்லூரிக்குப் போனோம். அந்தக் கல்லூரி நிறுவனர் என்னைப் பார்த்ததும் என்ன நினைத்தாரோ, உடனடியா சீட் கொடுக்க சம்மதிச்சிட்டார். எனக்கு மகிழ்ச்சி தாங்கல. அங்கேயே, `ஓம் சாயிபாபா'ன்னு கத்திட்டேன்."

சாயிபாபா உங்கள் வாழ்க்கையில் நிகழ்த்திய அற்புதங்களை உங்கள் புகைப்படத்துடன், ஆனந்த விகடன், 757 அண்ணாசாலை, சென்னை-2 என்ற முகவரிக்கோ, saibaba@vikatan.com மின்னஞ்சலுக்கோ எழுதி அனுப்புங்கள். சிறந்த அனுபவங்கள் வெளியிடப்படும்.