மற்ற எபிசோடுகள்
Published:Updated:

பாபாயணம் - 23

சாய் பாபா
பிரீமியம் ஸ்டோரி
News
சாய் பாபா

சச்சிதானந்த சத்குரு ஸ்ரீசாயிநாதரே சரணம்!

ராதாபாய் தேஷ்முகின் என்னும் முதிய பெண்மணி ஷீர்டி வந்து சாயியைப் பணிந்து வணங்கினாள். சாயியின் திருமுக தரிசனம் கண்ட நாளிலிருந்து அவரின் பக்தையாகிவிட்டாள்.

சாயியே தன் குரு என்று மனத்தில் குறித்துக்கொண்ட அந்தப் பெண்மணி, அவரிடம் உபதேசம் பெற்றுவிட்டால் இந்தப் பிறவிப் பெருங்கடலிலிருந்து மீண்டுவிடலாம் என்று நினைத்தாள். ஆனால், சாயி அதைத் தொடர்ந்து மறுத்துவந்தார். காரணம், சாயி யாருக்கும் எந்த உபதேசமும் செய்ததில்லை.

சாயியின் வாழ்க்கையே அவரின் உபதேசம். சகல உயிர்களின் மீது அன்பு செலுத்தும் வாழ்க்கை. அன்பையே உபதேசமாகக் கொண்ட வரிடம் நீங்கள் வேறு என்ன உபதேசத்தை எதிர்பார்க்க முடியும்...

அன்பை நாடி வந்தவர்கள் அன்பைப் பெற்றார்கள். அவர் அன்பு வான்மழை போன்றது. பேதம் பார்த்துப் பொழியாதது. அவ்வப்போது பாபா பக்தர்களைக் கடிந்துகொள்வதும் கோபப்படுவதும், வானில் மின்னலும் இடியும் தோன்றி அச்சுறுத்துவது பெருமழை பொழியவே என்பதுபோலத்தான். இடிக்கும் மின்னலுக்கும் பின்னால் பாபா தன் அன்புமழையால் அவர்களை நனைத்து அருள்வார்.

சாய் பாபா
சாய் பாபா

அவரிடம் நீங்கள் ஞானமயமான அன்பை விரும்பினால் அதையும், லௌகிகமான பலன்களைக் கேட்டால் அவற்றையுமே மறுப்பின்றி அருள்வார். கேட்பதைக் கொடுப்பதில் வள்ளலாய் இருந்தபோதும் உபதேசம் மட்டும் அவர் வழங்கியதேயில்லை.

சாயி உபதேசம் என்று எதையும் சொல்லவில்லை என்றாலும், அவர் உயிர்களின் மீது செலுத்தும் அன்பும் கருணையும்தான் உபதேசம். உயிர்களை மதிக்கும் உத்தமமே ஞான தானம். பாபா தன் வாழ்வின் மூலம் இவற்றை வாரி வழங்கிக்கொண்டேதான் இருந்தார். ஆனால் அதை ராதாபாய் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை.

இதுவரை தரிசித்திராத சாயிபாபா திருவுருவப் படங்கள் புதிய பரிமாணங்களில். வாரந்தோறும் பாதுகாக்கத் தயாராகுங்கள்!

சாயியின் மகிமையை அறியாமல் அவரை அணுகியவர்கள்கூட ‘அவரே பரம்பொருள்’ என்னும் பேருபதேசம் பெற்றார்கள். சாயி ராமனாக, விட்டலனாக, அக்கல்கோட் மகராஜாக, அனுமனாக... யார் எந்த வடிவில் வேண்டுகிறார்களோ அந்த வடிவில் தோற்றமளித்து அருள்பாலித்தார். அந்த அருளே அவர் யார் என்று பக்தர்களுக்கு உபதேசித்தது. ஆனால் அதை ராதாபாய் உணரவில்லை. சாயியின் உபதேசம் கிடைக்கும்வரை உண்ணா நோன்பிருக்கப் போவதாகச் சொல்லி மசூதியில் அமர்ந்தாள்.

குழந்தையின் பசியைத் தாய் பொறுப்பாளா... சாயி அவளைக் கனிவுடனே பார்த்தார். ராதாபாயிடம் சென்று தன் நிலைமையை விளக்கினார்.

“தாயே, நீ உன்னை வீணாக வருத்திக் கொள்கிறாய். என் குரு எனக்கு எந்த மந்திரமும் உபதேசிக்கவில்லை. அவர் என்னிடம் இரண்டு பைசாக்களாகிய நிஷ்டை, ஸபூரி ஆகிய தட்சிணை மட்டும் கேட்டார். அவை வேறொன்றுமல்ல; மன தைரியமும், பொறுமையுமே. அவற்றை இழந்துவிடாதே என்றார். எனக்கு என் குருவைத் தவிர வேறு சிந்தனை கிடையாது. அவர் என்னுடைய நலன்களை கவனிப்பார் என்று நம்பினேன்.

சாய் பாபா
சாய் பாபா

இவைதவிர அவர் எனக்கு எந்த மந்திரமும் ஓதவில்லை. அதனால் நானும் உனக்கு எதுவும் உபதேசிக்க முடியாது. நீயும் என்மேல் உன் கருத்து முழுவதையும் வைத்து மற்ற விஷயங்களில் கவனம் இல்லாமல் இரு” என்று கனிவோடு கூறினார். சத்தியத்தைக் கேட்கிற யார்தான் அதை மறுத்துக் கூற முடியும்... ராதாபாய் தன் உண்ணாநோன்பை விடுத்து அவர் பாதங்களைப் பணிந்துகொண்டாள்.

பக்தர்களுக்குப் பற்றிக்கொள்ள ஓர் உருவம் வேண்டும். சொல்ல ஒரு நாமம் வேண்டும். அவற்றையே அவர்கள் பிறவிக் கடலைக் கடக்க உதவும் தோணிகளாக நம்புகிறார்கள். ஆனால் அது எது என்ற தேடல்தான் அவர்களை அலைக்கழிக்கிறது.

வழிப்பறிக்கொள்ளையனாக இருந்த ரத்னாகருக்கு நாரதர் ‘மரா’ என்ற நாமத்தையே உபதேசித்தார். ஆனால் அவன் நம்பிக்கையோடு தொடர்ந்து ஜபித்தபோது அது ‘ராம’ என்று மாறியது. ரத்னாகர் வால்மீகி ஆனார். கொள்ளையன் காவியனானான். எதைச் சொல்கிறோம் என்பதைவிட அதை எவ்வளவு நம்பிக்கையோடு சொல்கிறோம் என்பதல்லவா முக்கியம்.

ஒருமுறை சாயியிடம் “பாபா, ஜபம் செய்ய எந்த நாமம் நல்லது...’’ என்று கேட்டார் ஒரு பக்தர்.

“பக்தியுடனும் நம்பிக்கையுடனும் உச்சரித்தால் எந்த நாமமாக இருந்தாலும் அது அந்தப் பரம்பொருளையே சென்றுசேரும்” என்றார் பாபா. அந்த பக்தரோ அடுத்த கணத்திலிருந்து, ‘சாயி, சாயி’ என்றே ஜபிக்கத் தொடங்கிவிட்டார்.

“பிரபோ, நீங்கள் இருக்கும்போது எனக்கென்ன கவலை” என்று சாயியின் சரணத்திலேயே கிடந்த மகல்சாபதியின் மன வருத்தங்களை அவர் சொல்லாமலேயே அறிந்து நிவர்த்திசெய்த கருணைக் கடலல்லவா சாயி!

“உரிமையோடு கேளுங்கள். என் கஜானா நிரம்பி இருக்கிறது. அதிலிருந்து அள்ளிக் கொடுக்க நான் தயாராக இருக்கிறேன். லௌகிக விஷயங்கள் மட்டுமல்ல; ஞானத்தைப் பெறவும் ஓடி வாருங்கள்” என்று அழைக்கிறார் பாபா.

சாயியின் நாமத்தை ஜபித்தபடி அவரை நோக்கி நாம் நகர்வோம். நம் கவலைகளை அவர் தீர்ப்பார்.

(தரிசனம் தொடரும்)

வாசகர் அனுபவம்

னக்குத் திருமணமாகி ஏழு ஆண்டுகள்வரை குழந்தை பிறக்கவில்லை. நானும் என் மனைவியும் தினமும் கடவுளிடம் மன்றாடி வேண்டிக்கொள்வோம். ஆனால் கடவுள் எங்களுக்கு இரக்கம் காட்டத் தாமதமாகிக்கொண்டே இருந்தது. அப்போதுதான் நண்பர் ஒருவர் மூலம் சாயிபாபா குறித்து அறிந்துகொண்டோம். ஒருநாள் சாயிபாபா ஆலயம் சென்று வேண்டிக்கொண்டோம். ஒரு நாள் ஒரு கனவு.

பாபாயணம் - 23

நான் ஒரு பெரிய அரங்கில் அமர்ந்திருக்கிறேன். சுற்றியிருப்பவர்கள் எல்லோரும் பஜனை செய்துகொண்டிருக்கிறார்கள். எதிரே சாயி அமர்ந்திருக்கிறார். சாயி திடீரென்று என்னை நோக்கிக் கையசைத்துத் தன்னருகில் வரும்படி அழைத்தார். நான் கண்ணீரோடு அவர் அருகில் சென்றேன். அவர் என்மேல் கைவைத்து, `நான் இருக்கும்போது உனக்கென்ன கவலை?' என்று ஆறுதல்படுத்தினார். தூக்கம் கலைந்துவிட்டது. கனவில் உண்டான சிலிர்ப்பு நினைவிலும் அடங்கவேயில்லை. அடுத்த சில மாதங்களில் என் மனைவி கர்ப்பவதியானாள். இப்போது என் பையன் 9-வது படித்துக்கொண்டிருக்கிறான். எல்லா வளங்களோடும் வாழ்கிறோம். இந்த வாழ்க்கை சாயி எங்களுக்கு அருளியது.

என்.மூர்த்தி, பெருங்களத்தூர்

பாபாவும் நானும்

“ஓம் சாயி... ஸ்ரீசாயி... ஜெயஜெய சாயி... என்கிற இந்த மந்திரத்தை, உங்க மனசு அமைதியில்லாம இருந்தாலோ, வேலையில்லாம சும்மா இருந்தீங்கன்னாலோ ஆட்டோ சஜஷன் மாதிரி சொல்லிக்கிட்டே இருங்க. அதன்பிறகு பாருங்க பாபாவின் மகிமையை. `ஓம் சாயி... ஸ்ரீசாயி... ஜெயஜெய சாயி...’ன்னு நீங்க சொல்லச் சொல்ல உங்க மனசுக்கு நிம்மதி கிடைக்கும். மனிதர்கள்கிட்ட பேசுற மாதிரி பாபாகிட்டே நீங்க பேசலாம். ஆனா நீங்க உண்மையா இருக்கணும். பாபாகிட்ட பின்பற்ற வேண்டிய முக்கியமான விஷயம் ஸ்ரத்தா, ஸபூரி. அதாவது, நம்பிக்கை, பொறுமை. இவை இரண்டும் இரண்டு கண்கள் மாதிரி. இந்த இரண்டும் இருந்துச்சுன்னா பாபாவோட துணையுடன் இந்த உலகத்தில் எதையும் நாம சாதிக்கலாம். சாயி சரிதத்தில் தினம் ஓர் அத்தியாயம் படிச்சோம்னா போதும். நாம் செய்யும் செயல்களின் பலன் கட்டாயம் கிடைக்கும். பாபாவுக்காக நீங்க பணம் தரணும்னோ கடுமையான விரதம் இருக்கணும்னோ தேவையில்லை.

நடிகர் அஜய் ரத்னம்
நடிகர் அஜய் ரத்னம்

என் பையன் ஒருமுறை பூனாவுக்குப் போயிருந்தான். திரும்பி வந்தவன், `உங்களுக்கு ஒரு கிப்ஃட் வாங்கிட்டு வந்திருக்கேன்'னு சொன்னான். வழக்கமா அவன் வெளியூர் போனா நாய்க்குட்டி, இல்லைன்னா, பூனைக்குட்டி வாங்கிட்டு வருவான். அந்த முறை வித்தியாசமா, பாபாவோட சிலையை வாங்கிட்டு வந்தான். பாபாவோட பக்தரா ஒருத்தர் மாறப்போறார்னா அவங்களுடைய வீட்டுக்கு அவரே வந்துடுவார். அப்படித்தான் எங்க வீட்டுக்கும் வந்தார். அப்புறம் என் பையனுக்குப் பொண்ணு பார்க்கும்போது, பொண்ணு எப்படின்னு கேட்டோம். `வியாழக்கிழமை முழுநாள் விரதமிருந்து சாயந்தரம் யாருக்காவது பத்துப்பேருக்கு உணவோ பிஸ்கட்டோ வாங்கிக் கொடுத்துட்டு, அப்புறம்தான் சாப்பிடுவா'ன்னு சொன்னாங்க. நாங்க வேற எதையுமே கேட்கலை. அந்தப் பொண்ணுதான் இப்போ எங்க வீட்டு மருமகள்.”

சாயிபாபா உங்கள் வாழ்க்கையில் நிகழ்த்திய அற்புதங்களை உங்கள் புகைப்படத்துடன், ஆனந்த விகடன், 757 அண்ணாசாலை, சென்னை-2 என்ற முகவரிக்கோ, saibaba@vikatan.com மின்னஞ்சலுக்கோ எழுதி அனுப்புங்கள். சிறந்த அனுபவங்கள் வெளியிடப்படும்.