மற்ற எபிசோடுகள்
Published:Updated:

பாபாயணம் - 24

சாய் பாபா
பிரீமியம் ஸ்டோரி
News
சாய் பாபா

சச்சிதானந்த சத்குரு ஸ்ரீசாயிநாதரே சரணம்!

தாஸ்கணு போலீஸ் கான்ஸ்டபிள். இவரின் உயர் அதிகாரி நானா, சாயியின் பக்தர். நானா, பாபாவைச் சந்திக்கச் செல்லும்போதெல்லாம் அவருடைய கான்ஸ்டபிள் என்ற முறையில் தாஸ்கணுவும் அவருடன் செல்வார்.

மற்றபடி அவருக்கு பாபாவின் மீது பக்தியோ விசுவாசமோ மதிப்போ இல்லை. பாபா தாஸ்கணுவிடம், “நீ வேலையை விட்டுவிட்டு இங்கு வந்துவிடு” என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால் தாஸ்கணுவோ அதைச் செவிமடுக்கவேயில்லை.

ஷீர்டி வரும்போதெல்லாம் தாஸ்கணு பாபாவின் சந்நிதியில் பாடல்கள் பாடுவார். அவர் பாபாவின் மீது பாடிய ‘ஷீர்டி மாஜே பண்டரிபூர் சாயிபாபா ராமாவார்’ என்னும் பஜன் புகழ்பெற்றது. உதட்டளவில் போற்றிப் பாடினாலும், அவரைத் தன் குருவாக தாஸ்கணுவால் ஏற்க முடியவில்லை. சாயி யார் தன்னைப் போலியாகத் துதித்தாலும் அவர்களைக் கைவிடுவதில்லை. உண்மையை அவர்கள் அறியுமட்டும் உடனிருந்து காத்து அவர்களைத் தன் பிரிய பக்தர்களாக மாற்றிவிடுவார்.

பாபா தாஸ்கணுவைத் தன்னிடம் ஈர்த்துக்கொள்ள முடிவு செய்து விட்டார். ஷீர்டி செல்லும்போதெல்லாம், “தாஸ்கணு வேலையை விட்டுவிட்டு வந்துவிடு” என்று சொல்லிக் கொண்டேயிருந்தார்.

சாய் பாபா
சாய் பாபா

தாஸ்கணுவுக்குப் புண்ணிய தலங்களுக்குப் பயணம் செய்வதில் ஆர்வம் அதிகம். ஆனால் காவல்துறையில் பணிபுரியும் ஒருவர் முன் அனுமதியின்றி அவ்வாறு புறப்பட இயலாது. ஆனால் தாஸ்கணு அது குறித்த அக்கறையின்றி அடிக்கடி புண்ணிய தலங்களுக்குப் புறப்பட்டுவிடுவார். அப்படித்தான் ஒருமுறை முன்னனுமதியின்றி நிஜாம் சமஸ்தானத்திலிருந்த ஓர் ஆலயத்துக்குச் சென்றுவிட்டார். தரிசனம் முடித்துவிட்டு கோதாவரி நதியில் ஒரு படகில் தாஸ்கணு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது மறுகரையில் சில காவலர்கள் நின்றுகொண்டி ருந்தனர். அவர்களைக் கண்டதும்தான் தாஸ்கணுவுக்கு நிலைமை புரிந்தது.

இதுவரை தரிசித்திராத சாயிபாபா திருவுருவப் படங்கள் புதிய பரிமாணங்களில்.

அனுமதியின்றி நிஜாம் சமஸ்தானம் சென்றுவந்ததற்காகத் தான் கைதுசெய்யப் படலாம் என்று அஞ்சினார். அச்சத்தில், ‘சாயி என்னைக் காப்பாற்று. இந்தச் சிக்கலில் இருந்து என்னை விடுவித்தால் நான் வேலையை விட்டுவிட்டு நீங்கள் சொல்வதுபோல் ஷீர்டிக்கே வந்துவிடு கிறேன்’ என்று மனதுக்குள் வேண்டிக்கொண்டார்.

அச்சத்தில் மீண்டும் படகை நிஜாம் சமஸ்தானக் கரைக்கே திருப்பச் சொன்னார். அங்கு கிராம அதிகாரி ஒருவர் பதற்றத்தோடு நிற்பதைக் கண்டார். தாஸ்கணு ஒரு காவலர் என்று அறிந்திருந்த அவர், “ஒரு கொள்ளையன் இங்கு பதுங்கியிருக்கிறான். நீங்கள் ஒத்துழைத்தால் அவனைப் பிடித்துவிடலாம்” என்றார். தாஸ்கணு அவருடன் சென்று அந்தக் கொள்ளையனைப் பிடித்தார். நிறைய பொருள்கள் அவனிடமிருந்து மீட்கப்பட்டன.

கூடவே தாஸ்கணுவுக்கு நிஜாம் சமஸ்தானம் சென்றது குறித்துத் தன் அதிகாரிகளிடம் சொல்வதற்குக் காரணம் ஒன்றும் கிடைத்து விட்டதல்லவா... மீண்டும் தன் காவல் நிலையத்துக்குத் திரும்பி நடந்தவற்றைச் சொல்லி அவருக்குக் கிடைக்கவிருந்த தண்டனையிலிருந்து தப்பினார். ஆனால் பாபாவிடம் வேண்டிக் கொண்டதுபோல் வேலையை விடவில்லை.

அதுதானே சாமானியனின் சுபாவம். வேலை ஆனதும் வேண்டுதலை பக்தர்கள் மறந்து விடுவார்கள். அடுத்த பிரச்னை வரும்வரை தெய்வத்தையேகூட பக்தன் மறந்துவிடுகிறான். ஆனால் தெய்வம் காக்க மறப்பதில்லை. எப்போதும் கருணையுள்ள மேகம்போல சாயி தன் பக்தர்களுக்கு அருள்மழையையே பொழிகிறவர். தாஸ்கணுவையா கைவிட்டுவிடுவார்?!

அந்தக் காலத்தில் கானாபீல் எனும் இரக்கமற்ற கொள்ளைக்காரன் மூன்று காவலர்களைச் சுட்டுக் கொன்றுவிட்டான். அவனைப் பிடிக்கும் பொறுப்பு தாஸ்கணுவிடம் ஒப்படைக்கப் பட்டது. அப்போது லோனிவார்ணீ என்னும் கிராமத்தில் முகாமிட்டிருந்தார் தாஸ்கணு. இதைக் கேள்விப்பட்டு அவரையும் கொல்ல வந்தான் கானாபீல்.

தாஸ்கணுவுக்கு கானாபீல் வந்துகொண்டி ருக்கும் செய்தி வந்தது. நிச்சயம் அவன் தன்னைக் கொன்றுவிடுவான் என்று அஞ்சினார். ஆபத்து என்றதும் அவருக்கு பாபாவின் நினைவு வந்தது. “சாயி இந்த இக்கட்டிலிருந்து என்னைக் காத்து அருளினால் நான் வேலையை விட்டுவிட்டு உங்களிடமே வந்துவிடுவேன்” என்று வேண்டிக்கொண்டார்.

சாய் பாபா
சாய் பாபா

லோனிவார்ணீ கிராமத்தின் எல்லைவரை வந்த கானாபீல், என்ன நினைத்தானோ, வந்த வழியே திரும்பிச் சென்றுவிட்டான். இதை அறிந்த தாஸ்கணு மகிழ்ந்தார். தன் மேலதிகாரிகளுக்குச் செய்தியனுப்பி ஒரு பெரும்படையை வரவழைத்தார். கானாபீல் சென்ற வழியே தேடிச் சென்றது அந்தப் படை. ஆனால் அவன் சிக்கவில்லை. தாஸ்கணு வழக்கம்போலத் தன் வேண்டுதலை மறந்துவிட்டார். தன் காவலர் பணியைத் தொடர்ந்துவந்தார். அப்போதுதான் அந்த நிகழ்வு நடந்தது.

ஒரு குற்றவாளியிடமிருந்து வசூலித்த அபராதத் தொகை தாஸ்கணுவிடம் இருந்தது. அதை அவர் தன் உதவியாளரிடம் கொடுத்து வாய்மொழியாக கஜானாவில் கட்ட உத்தரவிட்டார்.

ஆனால் அவரோ அதை கஜானாவில் கட்டாமல் எடுத்துக்கொண்டு பழியை தாஸ்கணுவின் மேல் போட்டார். இதனால் தாஸ்கணு பணியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டார். பாபா எத்தனை முறை இந்த வேலையை விட்டுவிட்டு வரச் சொன்னார்... ஆனால் தனது அலட்சியத் தாலேயே இவ்வாறு நேர்ந்தது என்று வருந்தினார். “ஒருவேளை இம்முறையும் பாபா என் மேல் இரக்கம் கொண்டு இதிலிருந்து, இந்தப் பழியிலிருந்து தப்பிக்கச் செய்தால், உடனே நான் வேலையை உதறிவிட்டு பாபாவின் பாதங்களிலேயே சரணடைந்து விடுகிறேன்” என வேண்டிக்கொண்டார்.

பாபாவிடம் நம் கவலைகளை ஒப்படைத்து விட்டால் நாம் வேறு எதற்காக வருந்த வேண்டும்... தாஸ்கணுவை ஏமாற்றிய அந்த உதவியாள் ஒருநாள் கையும் களவுமாகச் சிக்கிக்கொண்டார். தாஸ்கணுவின் மேல் குற்றம் இல்லை என்பதையும் நீதிமன்றத்தில் சொல்ல தாஸ்கணுவுக்கு வேலை கிடைத்தது. ஆனால் இந்த முறை தாஸ்கணு அந்த வேலையை நிஜமாகவே விட்டுவிட்டு பாபாவின் சந்நிதிக்குத் திரும்பினார். பின்னாள்களில் மகாராஷ்டிரா முழுவதும் பாபாவின் புகழைப் பரப்பி, அவர் குறித்த நிறைய புத்தகங்கள் எழுதி, தன் வாழ்க்கையை சாயிக்கே சமர்ப்பித்தார்.

சாயி தேடிவந்து ஆட்கொள்ளும் தெய்வம் என்பதற்கு தாஸ்கணுதான் உதாரணம்.

(தரிசனம் தொடரும்)

பாபாவும் நானும்

“சமீபத்தில், நான் அமெரிக்காவுக்குச் சென்று வந்தபோது ஃபுளோரிடா மாநிலத்தில் இருக்கும் மியாமிக்குச் சென்றிருந்தேன். அப்போது அங்கு என்னுடன் வந்திருந்த நண்பர் இளங்கோவன், ‘`இங்கும் ஒரு பாபா கோயில் இருக்கிறது. பார்க்கலாமா?’’ என்று கேட்டார். எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்றாலும் நான் உடனடியாக நியூஜெர்சி போக வேண்டிய சூழ்நிலையில் இருந்தேன். அதனால் அதைத் தவிர்த்துவிட்டு விமானம் நோக்கிச் சென்றேன். மனதுக்குள் பாபா கோயிலைப் பார்க்காமல் செல்கிறோம் என்ற கவலை இருந்தது.

பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்
பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்

சரியான நேரத்துக்கு விமான நிலையத்துக்குச் சென்றுவிட்டோம். ஆனாலும், விமானம் புறப்பட்டுச் சென்றுவிட்டதாகக் கூறிவிட்டார்கள். அடுத்த விமானம் மாலையில்தான் புறப்படும் என்றும் அதற்கு எட்டு மணி நேரமாகும் என்றும் கூறினார்கள். அதனால் இங்கிருந்து அரைமணி நேரப் பயணத் தொலைவிலிருக்கும் பாபா கோயிலுக்குச் சென்று பார்ப்பதற்கு முடிவு செய்து புறப்பட்டுப் போனோம். அங்கிருந்த பாபா கோயில் மிகவும் அற்புதமாகவும் கலைநயத்துடனும் சிறப்பாக இருந்தது. கண்ணாரக் கண்டு தரிசித்துவிட்டு வந்தேன். மற்றவர்களுக்கு வேண்டுமானால் இது சாதாரண விஷயமாக இருக்கலாம். ஆனால் பக்தி உள்ளவர்களுக்கு இவை யாவுமே மனதை நெகிழ வைக்கும் நிகழ்வு.

நம்பிக்கையோடு நாம் கேட்டால் அது நிகழும் என்பது உண்மை. இதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். சொந்த வாழ்விலும் அதை அனுபவித்திருக்கிறேன். அவரின் அருள் எப்போதும் நம்முடன் இருக்கும். நாம் செய்ய வேண்டியதெல்லாம் அவரை நினைப்பதுதான்.”

வாசகர் அனுபவம்

நான் ஷீர்டி சாயிபாபாவின் தீவிர பக்தை. ஒருமுறை நான் சாயி கோயிலுக்குப் போயிருந்தபோது எனக்குள் `பக்திப்பாடல்கள் பல எழுதியிருந்தும் இன்னும் சாயியின் மீது பாடல்கள் எழுதவில்லையே' என்ற எண்ணம் தோன்றியது. நான் எழுதி அதைப் பிரபலமான பாடகர்கள் பாடினால் எப்படியிருக்கும்... சாயி அதற்கு அருள் செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன். பத்துநாள்கள் கழித்து இசையமைப்பாளர் கிரிஷிடமிருந்து அழைப்பு வந்தது.

பாபாயணம் - 24

``நீங்கள் செய்திருந்த கனகதாரா ஸ்தோத்திரத்தின் தமிழாக்கம் நன்றாக இருந்தது. நாங்கள் சாயிபாபாவுக்காக ஓர் ஆல்பம் செய்யவிருக்கிறோம். அதற்கு நீங்கள் பாடல்கள் எழுதித் தரமுடியுமா?’’ என்று கேட்டார். நானும் மகிழ்ந்து எழுதிக்கொடுத்தேன். யார் அதைப் பாடவிருக்கிறார்கள் என்ற தகவல்களெல்லாம் கேட்கவில்லை. ஆனால் ஆல்பம் வெளிவந்தபோது அதில் ஒரு பாடலை எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடியிருந்தார். நான் சாயியிடம் வேண்டிக்கொண்டது அப்படியே நிறைவேறியதை எண்ணிச் சிலிர்த்தேன்.

- கீதா தெய்வசிகாமணி

சாயிபாபா உங்கள் வாழ்க்கையில் நிகழ்த்திய அற்புதங்களை உங்கள் புகைப்படத்துடன், ஆனந்த விகடன், 757 அண்ணாசாலை, சென்னை-2 என்ற முகவரிக்கோ, saibaba@vikatan.com மின்னஞ்சலுக்கோ எழுதி அனுப்புங்கள். சிறந்த அனுபவங்கள் வெளியிடப்படும்.