மற்ற எபிசோடுகள்
Published:Updated:

பாபாயணம் - 25

சாய் பாபா
பிரீமியம் ஸ்டோரி
News
சாய் பாபா

சச்சிதானந்த சத்குரு ஸ்ரீசாயிநாதரே சரணம்!

இறைவனை வழிபடுவதுவே அவனை வசப்படுத்தும் வழி. வழிபாடென்பது அபிஷேகம், ஆராதனை, பூசை இவை மட்டுமன்று. வெற்றுப் பூசைகளால் வசப்படுபவனும் அவன் அல்லன். அவன் அன்பால் வசமாவான். - பாபா

“பக்தியால் யானுனைப் பலகாலும், பற்றியே

மாதிருப்புகழ் பாடி, முத்தனா மாறெனைப்

பெருவாழ்வின் முத்தியே சேர்வதற் கருள்வாயே”- என்கிறது திருப்புகழ்.

உண்மையான பக்திக்கும் அன்புக்குமே மயங்குபவன் இறைவன். பாண்டவர்களுக்காகத் தூது வந்த கிருஷ்ணனைக் கவர துரியோதனன் ஆடம்பரமான ஏற்பாடுகளைச் செய்கிறான். பலமாக விருந்து ஏற்பாடு செய்து, வரவேற்பு, உபசாரம் என்று ஆர்ப்பாட்டம் செய்கிறான். ஆனால் கண்ணன் எளிய விதுரர் வீட்டில்தான் தங்குகிறார். அவர் தரும் எளிய உணவை ஏற்றுக் கொள்கிறார்.

“கண்ணா, உனக்கு கௌரவர் அரண்மனையே சேவை செய்யக் காத்திருக்கும்போது இந்த எளியவனின் வீட்டில் தங்கி, உணவு எடுத்துக் கொள்கிறாயே”- என்று விதுரர் நெகிழும்போது கிருஷ்ணர் கூறுகிறார், “விதுரரே, அன்பிற்கு மட்டுமே நான் கட்டுப்படுவேன். நீர் தரும் எளிய உணவே எனக்கு உகந்த நைவேத்தியம்.”

சாய் பாபா
சாய் பாபா

அன்புதான் அந்தப் பரந்தாமனை வசப்படுத்தும் ஆயுதம். அதனால்தான் விஸ்வரூபனான அந்த விஷ்ணுவை அன்பெனும் கயிறு கொண்டு சகாதேவனால் கட்டிப்போட முடிந்தது. இதே அன்பைத்தான் பாபாவும் வலியுறுத்துகிறார்.

“நான் அன்புக்கு மட்டுமே கட்டுப்படுபவன். ஆத்மாவைத் தூய்மையாக வைத்திருக்கும் ஒவ்வொருவனும் நிம்மதியாக வாழ முடியும். அதுவே தெய்விகம்” என்று கூறுகிறார் பாபா.

பாபா தன்னை நம்பி வாழும் தன் அடியவர்களின் சகல வேதனைகளையும் நீக்கி அவர்கள் விதியை மாற்றி அமைக்கிறார். அவர்களின் எதிர்காலத்தைத் தன் தீர்க்க தரிசனத்தால் அறிந்து காப்பாற்றுகிறார்.

மராட்டிய மாநிலம் அகமத் நகரைச் சேர்ந்தவர் தாமோதர் சால்வாரம் ராஜனே சாகர். பாபாவிடம் தீவிர பக்தி கொண்டவர். அவருக்கு ஒருமுறை பஞ்சு வியாபாரம் செய்ய வாய்ப்பு வந்தது. அதில் ஈடுபட விரும்பிய தாமோதர் பாபாவிடம் அனுமதி கேட்டுக் கடிதம் அனுப்புகிறார்.

ஆனால், “அவனுக்கு ஏன் இந்தப் பேராசை? இதில் இறங்க வேண்டாம்” என்று பாபா மறுத்து பதிலெழுதச் சொல்கிறார். பல லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கும் வியாபாரம் என்றாலும் பாபா மறுத்த பிறகு எப்படி அதைச் செய்வது என்று எண்ணி அதைக் கைவிடுகிறார் தாமு. காரணம், பாபாவே அவரின் கண்கண்ட தெய்வம்.

அதன்பிறகு ஒருமுறை ஷீர்டி வந்தபோது, தானிய வியாபாரம் செய்ய பாபாவிடம் அனுமதி கேட்டார்.

பாபா, “உன்னிடம் இருக்கும் பணத்தைக் கொண்டு நிம்மதியாக இரு. இப்போதைக்கு எந்தத் தொழிலிலும் ஈடுபட வேண்டாம்” என்கிறார். சில நாள்களில் பஞ்சு விலையும் தானியங்களின் விலையும் சரிந்து படுபாதாளத்திற்குப் போய்விட்டன. அந்த வியாபாரத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் பல லட்சங்கள் நஷ்டம். பாபாவின் வழிகாட்டலில் தாமோதர் நஷ்டத்திலிருந்து தப்பித்தார்.

இதுவரை தரிசித்திராத சாயிபாபா திருவுருவப் படங்கள் புதிய பரிமாணங்களில்.

“இருப்பதைக் கொண்டு நிம்மதியாக வாழ்” என்கிறார் பாபா. தாமுவுக்கு நஷ்டம் வரும் என்று அறிந்தே பாபா தடுத்தார் என்பதைவிட, பாபாவின் மேல் தாமு வைத்த பரிபூரண நம்பிக்கையே அவரைக் காத்தது என்று சொல்லலாம்.

அவரை எல்லோரும் தாமு அண்ணா என்றே அழைப்பார்கள். தாமுவுக்குச் செல்வங்கள் நிறைவாக இருந்தும் குழந்தைச் செல்வம் மட்டும் இல்லாமலிருந்தது.

பல ஜோதிடர்களிடம் தன் ஜாதகத்தைக் காட்டினார் தாமு. அவரின் ஜாதகத்தில் பாவக்கிரகம் இருப்பதால் இந்தப் பிறவியில் குழந்தை பாக்கியம் இல்லை என்று உறுதியாகக் கூறினார்கள்.

ஆனால் தாமு, தன் தெய்வம் பாபா மேல் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார். உரிய காலத்தில் வானம் பொழிவதைப்போல பாபா தனக்கு ஒரு வாரிசை அருள்வார் என்று நம்பினார்.

கோவாவைச் சேர்ந்த ராலே என்ற பணக்காரர் பாபாவுக்கு ஒரு கூடை நிறைய மாம்பழங்களை அனுப்பியிருந்தார். அதில் முந்நூறு மாம்பழங்கள் இருந்தன. அதை அனைவருக்கும் பகிர்ந்தளித்த பாபா அதில் எட்டுப் பழங்களை எடுத்து ‘இது தாமுவுக்கு’ என்று ஒதுக்கிவைத்தார். அங்கு இல்லாத தாமுவுக்குப் பழங்களை எடுத்துவைப்பது ஏன் என்று அனைவரும் எண்ணிக்கொண்டிருக்கும் போதே தாமு மசூதிக்குள் நுழைகிறார். அனைவரும் ஆச்சர்யமாகப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, “இங்கே வா” என்று தாமுவை அழைத்து அந்தப் பழங்களை தாமுவுக்குத் தருகிறார்.

“இந்த மாம்பழங்கள் உனக்குக் குழந்தைச் செல்வத்தைத் தரும். இவற்றை உன் மனைவியிடம் கொடு. அவள் சாப்பிடட்டும். உன் விருப்பம் நிறைவேறும்” என்றார்.

சாய் பாபா
சாய் பாபா

தாமு மரியாதையாக அவற்றை வாங்கிக்கொண்டபோதும் அவருக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. `இறைவனால் நிர்ணயிக்கப் பட்ட விதியை மாற்ற முடியுமா’ என்று தோன்றுகிறது. அவர் நெற்றியின் சுருக்கத்தில் இருந்த ஐயத்தை பாபா அறிந்துகொண்டவர் போல, “தாமு, ஒரு செடியில் ஒரு கிளையில் வெள்ளை, மற்றொரு கிளையில் சிவப்புமாக ரோஜாக்கள் பூக்குமா” என்று கேட்டார். தாமு மௌனமாக இருந்தார்.

“நாளை தோட்டத்துப் பக்கம் வா” என்றார் பாபா.

மறுநாள் தாமு, பாபாவுடன் தோட்டத்திற்குச் சென்றார். அங்கு ஒரு ரோஜாச்செடியைக் காண்பிக்கிறார் பாபா. அதில் ஒரு பக்கம் வெள்ளை, மறுபக்கம் சிவப்பு ரோஜாக்கள் பூத்திருக்கின்றன.

“விதியையும் மாற்றும் வல்லமை நம்பிக்கைக்கு உள்ளது. என்மேல் நீ கொண்ட அன்பும் நம்பிக்கையுமே என்னை இதைச் செய்யத் தூண்டின. உனக்காக ஆண்டவனிடம் வேண்டினேன். இந்த அற்புதம் நிகழ்ந்தது” என்றார் பாபா.

தாமு அந்தப் பழங்களை வீட்டுக்கு எடுத்து வந்து தன் மனைவியிடம் தந்தார். இறைவன் அருளால் அவருக்கு அடுத்த ஆண்டே குழந்தை பிறந்தது.

உடல், மனம், பொருள் எல்லாவற்றையும் அர்ப்பணித்து அன்பும் நம்பிக்கையுமாய் பூரண சரணாகதி அடைவதே பாபாவுக்குச் செய்யும் வழிபாடு. அப்படித் தன்னையே சரணடைந்த பக்தர்களை என்றும் கைவிட்டதில்லை பாபா.

(தரிசனம் தொடரும்)

வாசகர் அனுபவம்

ன் மகள் ஒரு சாயி பக்தை. சிறுவயதிலிருந்தே அவளுக்கு எல்லாமே சாயிதான். நன்கு படிக்கும் அவளுக்கு இன்ஜினீயரிங் படிக்க வேண்டும் என்று ஆவல். அந்த அளவு படிக்க வைக்க வசதியில்லாதபோதும் அவள் விருப்பத்தை நிறைவேற்ற எண்ணினோம். அப்ளிகேஷன் விலையே 500 ரூபாய் சொன்னார்கள். அதுகூட வாங்கப் பணம் இல்லாத நிலை. அவள் தினமும் பாபாவிடம் தன் விருப்பத்தைச் சொல்லி வேண்டிக்கொண்டேயிருந்தாள். எங்களுக்குச் சொந்தமாக ஒரு வீட்டுமனை இருந்தது. அதுவரை அந்த இடத்தை மிகவும் குறைவான விலைக்குக் கேட்டு விற்பனையாகாமலேயே இருந்தது. அப்போது ஒரு முஸ்லிம் பெரியவர் வந்து `ஒரு லட்ச ரூபாய்க்கு அந்த இடத்தைத் தரமுடியுமா?' என்று கேட்டார். எங்களால் நம்பவே முடியவில்லை. அந்த பாபாவே வந்து வாங்கிக்கொண்டதாக நம்பினோம். இன்று என் மகள் இன்ஜினீயரிங் முடித்து நல்ல சம்பளத்தில் வேலை பார்க்கிறாள். எல்லாம் பாபா அருள்!

- வி. வசந்தா, சென்னை 53

பாபாவும் நானும்

``முதன்முறை ஷீர்டி போனபோதே சிலிர்ப்பான அனுபவம்தான். என்னுடன் மூன்று பேர் வந்திருந்தார்கள். சரியான கூட்டம். அங்கிருக்கிற யாரையும் எனக்குத் தெரியாது. ஆனால், மனதுக்குள் பாபாவைத் தொட்டு வணங்கவேண்டும் என்ற ஆசை இருந்தது. நல்ல கூட்டம். பாபாகிட்ட போறதுக்குள்ள மக்கள் எங்களைப் புரட்டி எடுத்துட்டாங்க. அந்தக் கூட்டத்திலேயே ஒருவர் எங்களின் கையைப் புடிச்சு இழுத்துக் கொண்டுபோய் பாபா முன்னால் விட்டுட்டார். என்கூட வந்தவர்களும் என்னைப் பின்தொடர்ந்து வந்துவிட்டார்கள்.

பாபாயணம் - 25

தலைகுனிந்து பாபாவை வணங்கும்போது பாபா மேலிருந்து ஒரு பூ என் தலையில் விழுந்தது. அந்தப் பூவை எடுத்து என் கையில் கொடுத்தார் அந்த நபர். கூடவே ஒரு லட்டும் கொடுத்தார். என் கண்கள் குளமாயின. பாபா உயிர்த்துடிப் புடன் என்னைப் பார்த்தார். நான் சிலையானேன்.

சமீபத்தில் ஒரு முறை பாபாவைப் பார்க்கப் போயிருந்தேன். ஃப்ளைட் மதியம் 1.20 மணிக்கு ஷீர்டி சென்றது. ரிட்டர்ன் ஃப்ளைட் மாலை 4.20க்கு. இரண்டு மணி நேரம்கூட இல்லை. ஃப்ளைட்டுக்குள் போக, வர ஒரு மணிநேரம் கழித்துவிட்டால், ஒரு மணிநேரம்தான். நிறைய பேர் சிறப்பு தரிசனம் செய்பவர்களும் ஒருபுறம் காத்திருந்தார்கள்.

ஆனால் எதிர்பாராத விதமாக சிறப்பு தரிசன டிக்கெட் கிடைத்தது. பத்தாவது நிமிடம் பாபாவின் முன் நின்றேன். நல்ல தரிசனம். பாபாவின் காலில் இருந்த மாலை ஒன்றைத் தந்தார்கள். பாபாவுக்குப் போர்த்தப்பட்டிருந்த சால்வையும் கிடைத்தது. அதை இன்றுவரை பொக்கிஷமாகப் பாதுகாத்து வருகிறேன்.’’

சாயிபாபா உங்கள் வாழ்க்கையில் நிகழ்த்திய அற்புதங்களை உங்கள் புகைப்படத்துடன், ஆனந்த விகடன், 757 அண்ணாசாலை, சென்னை-2 என்ற முகவரிக்கோ, saibaba@vikatan.com மின்னஞ்சலுக்கோ எழுதி அனுப்புங்கள். சிறந்த அனுபவங்கள் வெளியிடப்படும்.