
சச்சிதானந்த சத்குரு ஸ்ரீசாயிநாதரே சரணம்!
அன்பு என்பதே ஞானிகளின் மொழி. பாரபட்சமின்றி ஜாதி, மதம், மொழி, இனம் இவற்றைத் தாண்டி மனிதனை நல்வழிப் படுத்துவது மட்டுமே அவர்களின் குறிக்கோள்.
பாபா என்ன மதம், என்ன ஜாதி என்ற சர்ச்சை பலகாலமாக இருந்தாலும், அவரின் அன்பு ஒரு வட்டத்திற்குள் அடங்கிவிடவில்லை. மொழி, இனம், மதம் என்ற வட்டத்தைத் தாண்டி எல்லையற்ற இந்தப் பிரபஞ்சத்தின் அனைத்து ஜீவராசிகளிடமும் அன்பு காட்டி நேசித்தார் பாபா.
மக்கள் தங்களிடையே ஒற்றுமையின்றிச் சண்டையிட்டுக் கொள்ளும்போதும், மதமென்னும் போர்வையில் தகாத காரியங்களைச் செய்யும்போதும், முக்தி என்னும் உண்மை நெறியினின்று வழிதவறிச் செல்லும்போதும் ஞானிகள் தோன்றுகிறார்கள் என்கிறார் ஹேமத்பந்த்.
அவர்களின் நோக்கம் மக்களை ஒற்றுமைப்படுத்தி நல்ல வழியில் செலுத்துவது மட்டுமே. பாபா அதன்படிதான் இருந்தார். அவர் யாரிடமும் பாரபட்சம் காட்டியதில்லை. அடி ஆழத்தில் கடல் அமைதியாக இருப்பதுபோல் அவரும் உள்ளுக்குள் ஆசையற்றவராய், அமைதியாய், அகங்காரம் அற்று, ஆன்ம உணர்விலேயே ஆழ்ந்திருந்தார்.

அவர் ஷீர்டியில் இருந்தாலும் அவரின் ஞானம் திக்குதோறும் பரவி இருந்தது. அவரை தரிசிப்பதும் திருவடி பணிவதுமே பாவங்களைத் தீர்க்கும் என்று மக்கள் திரண்டு வந்தனர். மகாராஷ்ட்ரா தாண்டி மற்ற இடங்களிலும் பாபாவின் புகழ் பரவ தாஸ்கணுவே காரணம். பாபாவின் அருளால் தன்னைச் சூழ்ந்த அனைத்துப் பிரச்னைகளையும் சமாளித்து வந்த அவர் பாபா கேட்டுக் கொண்டபடி தன் வேலையை உதறினார். அதன்பிறகு அவரின் வாழ்க்கையை பாபாவின் அருள் வழி நடத்தியது.
நாடெங்கும், கதாகாலட்சேபம், ஹரி கதை சொல்லுதல், பாபாவின் அற்புதங்களை, மகிமைகளைப் பாடல்களாகப் பாடுதல் என்று தாஸ்கணுவின் வாழ்க்கைமுறை மாறியது. பாபாவே அவரின் கண்கண்ட தெய்வமானார்.
ஒருமுறை தாஸ்கணு பிரயாகை சென்று புனித நீராடி வர விரும்பி பாபாவிடம் அனுமதி கேட்டார். கங்கையும் யமுனையும் சந்திக்கும் அந்த இடத்தில் நீராடுவதன் மூலம் புண்ணியம் அடையலாம், பாவங்கள் தொலையும் என்பது நம்பிக்கை. குறிப்பிட்ட காலங்களில் ஆயிரக் கணக்கானோர் அங்கு சென்று நீராடுவது வழக்கம்.
“அவ்வளவு தொலைவு செல்ல வேண்டுமா தாஸ்கணு... நம் பிரயாகை இங்கேயே உள்ளது” என்றார் பாபா. அவரின் சொற்களில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும்.
தாஸ்கணு கைகளைக் கூப்பியபடி அமைதியாக நின்றார்.
“என்னை நம்பு”- என்ற பாபாவின் பாதத்தில் விழுந்து ஆசி கோரியபோது, பாபாவின் கால் கட்டை விரலிலிருந்து ஓர் ஊற்று புறப்பட்டதைப் போன்ற நீர் பாய்ந்து தாஸ்கணுவின் தலையை நனைத்தது.
இதுவரை தரிசித்திராத சாயிபாபா திருவுருவப் படங்கள் புதிய பரிமாணங்களில்.
தாஸ்கணு சிலிர்த்துப்போனார். அந்த நதிப் பிரவாகம்தான் கங்கை. அந்த நதிப் பிரவாகமே யமுனை. ஷீர்டியில் தான் தலைசாய்த்திருக்கும் இடம்தான் இந்த உலகில் மிகப் புனிதமான பிரயாகை. தாஸ்கணு மீண்டும் மீண்டும் அவர் கால்களில் விழுந்து வணங்கினார்.
மரியாதை, அன்பு, ஆழ்ந்த உணர்ச்சிகள் இவற்றால் தாஸ்கணுவின் கண்கள் ஆனந்தக் கண்ணீரால் பொங்கின. அந்த உணர்வை அவர் ஒரு பாடலாகப் பாடி அப்போதே சாயியின் ஆசி பெற்றார்.
நாமசங்கீர்த்தனம் செய்வதிலும் கேட்பதிலும் பாபா மிகுந்த விருப்பம் கொண்டிருந்தார். தன் முன்னிலையில் கடவுளின் நாமத்தை ஏழுநாள்கள் தொடர்ந்து பாடும்படி தாஸ்கணுவைக் கேட்டுக்கொண்டார். இதற்கு நாம சப்தாஹம் என்று பெயர்.
தாஸ்கணு விட்டலனின் பக்தர். பாபா மனது வைத்தால் தனக்கு விட்டல தரிசனம் கிடைக்கும் என்று நம்பினார். அதனால் பாபாவிடம் ஒரு வேண்டுகோளை வைத்தார்.

“பாபா, ஏழாவது நாள் முடிவில் விட்டலன் பிரசன்னம் ஆவதாக உறுதி அளித்தால் செய்கிறேன்” - என்றார் தாஸ்கணு.
அதற்கு பாபா, “நிச்சயம் விட்டலன் பிரசன்னமாவான். ஆனால் அதற்கு பக்தன் நம்பிக்கையும், ஊக்கமும் உடையவனாக இருக்க வேண்டும்” என்கிறார். தாஸ்கணுவுக்கு அந்தக் கவலையில்லை. காரணம் சகலமுமான சாயி துணையிருக்கும்போது அவநம்பிக்கை எப்படி வரும்.
அன்று சப்தாஹம் முடிவடையும் நாள். வழக்கம்போல் குளித்து, தியானத்தில் அமரும்போது அவருக்கு விட்டலனின் காட்சி கிடைத்தது. மதியம் வியாபாரி ஒருவன் விட்டோபாவின் படங்களை விற்றுக் கொண்டு வந்தான். காகா தீக்ஷித் அதில் ஒரு படம் வாங்கி, பாபாவின் மொழிகளை நினைவுகூர்ந்தபடி பூஜையில் வைக்கிறார்.
தியானத்தில் விட்டலனின் திவ்ய தரிசனம் கண்டு பூஜை அறைக்கு தாஸ்கணு வந்தபோது அங்கு படமாக விட்டலன் சிரித்துக் கொண்டிருந்தான்.
“இந்த மசூதியில் அமர்ந்து நான் பொய் சொல்ல மாட்டேன். யாரிடமும் நான் பேதம் பார்க்க மாட்டேன்” என்று சொல்லும் பாபாவின் சொற்கள் எவ்வளவு சத்தியமானவை...
எளிமை, இனிமையான மொழிகள் என்று வாழ்ந்த பாபா, இரவில் உதிர்ந்து கொட்டும் ஒரு மசூதியில்தான் படுத்து உறங்கினார். அவர் கேட்டால் அள்ளி வழங்கத் தயாராய் இருந்த பலரின் கோரிக்கைகளை அவர் . சாக்குத் துணி ஆசனத்தில் குளிரை விரட்ட எப்போதும் துனி அருகிலேயே அமர்ந்திருந்தார். அல்லா மாலிக் என்று அடிக்கடி உச்சரித்தார்.
“என் அன்புக் குழந்தைகளே, கடவுள் ஒருவரே. நாம் அனைவரும் அவரின் குழந்தைகளே. ஒருவரை ஒருவர் நேசியுங்கள்” என்று உபதேசித்தார். அதையே அவர் வாழ்ந்தும் காட்டினார்.
(தரிசனம் தொடரும்)
வாசகர் அனுபவம்
எங்கள் குடும்பத்தில் நிறைய கஷ்டங்கள். கணவருக்கு அலுவலகத் தில் வேலை போகும் அளவுக்குப் பிரச்னை. ஜோசியம் பார்த்தபோது குலதெய்வத்தை வழிபடாமல் விட்டதே காரணம் என்றார். பெரியவர்களிடம் விசாரித்தும் குலதெய்வம் தெரியவில்லை. அதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினோம். இதற்கிடையே என் கஷ்டங்களைக் கேட்டுக் கலங்கிய தோழி, என்னை சாயிபாபா கோயிலுக்கு அழைத்துச் சென்றார். நானும் நம்பிக்கை இல்லாமல்தான் சென்றேன். ஆனால் அங்கு சென்று தரிசனம் செய்ததும் மனதின் கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்துவிட்டன. மறுநாள் காலை இரண்டு தொலைபேசி அழைப்புகள் வந்தன. ஒன்று என் கணவருக்கு இருந்த அலுவல்ரீதியான பிரச்னை தீர்ந்துவிட்டது என்று. மற்றொன்று நான் வேலைக்கு விண்ணப்பித்திருந்த பெரிய நிறுவனத்திடமிருந்து நான் என்றைக்குப் பணியில் சேரமுடியும் எனக் கேட்டு வந்தது . அன்றைய தினமே நான் அந்தப் பணியில் சேர்ந்துவிட்டு மாலையில் சாயி கோயிலுக்குப் போய் நன்றி சொன்னேன். போனவாரம் உறவினர் ஒருவர் வந்து எங்களின் குலதெய்வம் எது என்றும் சொல்லிப் போனார். இதெல்லாம் சாயியின் மகிமையன்றி வேறில்லை.
ராணி, மடிப்பாக்கம், சென்னை
பாபாவும் நானும்
“என் அம்மா அடிக்கடி மயிலாப்பூர் பாபா கோயிலுக்குப் போவாங்க. ஒருமுறை அப்படிப் போகும்போது அவங்ககூட நானும் தி. நகரிலிருக்கும் எங்கள் வீட்டிலிருந்து மயிலாப்பூரிலிருக்கும் பாபா கோயிலுக்கு நடந்தே போனோம். அது என் மனசுக்கு சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் இருந்தது. அதிலிருந்து ஒவ்வொரு வியாழக்கிழமையும் நாங்க ரெகுலரா வீட்டிலிருந்து பாபா கோயிலுக்கு நடந்தே போவோம். அதன் பிறகு நான் சாயி சத் சரிதத்தைத் தொடர்ந்து 7 நாள்கள் படிச்சேன்.`தேங்காய் பர்பி’ இனிப்பை வீட்டிலேயே நான் தயார் பண்ணிக்கொண்டு போய் அங்கிருக்கும் பக்தர் களுக்குக் கொடுத்துட்டு வந்தேன். ரொம்பவும் மன நிறைவாக இருந்தது. அதிலிருந்து பாபா என்னை அவரின் பக்கம் ஈர்த்துக்கொண்டார்.

ஜீ.வியை மேரேஜ் பண்ணின பிறகு ஒருநாள் நான் பாபா கோயிலுக்குக் கிளம்பிக்கிட்டிருந்தேன். அவர் வாக்கிங் போக ஒய்.எம்.சி.ஏவுக்குப் புறப்பட்டுக்கிட்டிருந்தார். ‘`மயிலாப்பூர் தானே. 5 கி.மீ இருக்குமா... நானும் உன்கூட வர்றேன். ஆனால், கோயிலுக்கு உள்ளே எல்லாம் வரமாட்டேன்’’னு சொன்னார். சரின்னு ரெண்டு பேரும் பேசிக்கிட்டே கிளம்பினோம். அப்படியே நடந்து கோயிலுக்கு வந்துட்டோம்.
‘`இவ்வளவு தூரம் வந்துட்டீங்க. ஷூவைக் கழற்றிட்டுக் கோயிலுக்கு உள்ள வாங்க’’ன்னு சொன்னேன். அவரும் வந்தார். அன்றைக்கு பாபா தரிசனம் முடிச்சிட்டு வெளியில் வந்ததும் ஞானவேல்ராஜா கம்பெனியிலிருந்து ஒரு போன்கால். அப்போ கிடைச்சதுதான் அவரின் முதல் படமான டார்லிங் பட வாய்ப்பு. அதிலிருந்து அவரும் பாபாவின் பக்தரானார்.
ஒவ்வொரு முறை கோயிலுக்குப் போயிட்டு வரும்போதும் ஏதோ ஒரு பட வாய்ப்பு கிடைத்துக்கொண்டே இருந்தது. அதன் பிறகுதான் சொந்த வீடு வாங்கினோம். இப்போது நாங்கள் இருக்கிற வீட்டின் பெயரே ‘துவாரகாமயிதான். வீட்டுக்குள் நுழையும்போதே பாபா சிலை இருக்கும்.’’
சாயிபாபா உங்கள் வாழ்க்கையில் நிகழ்த்திய அற்புதங்களை உங்கள் புகைப்படத்துடன், ஆனந்த விகடன், 757 அண்ணாசாலை, சென்னை-2 என்ற முகவரிக்கோ, saibaba@vikatan.com மின்னஞ்சலுக்கோ எழுதி அனுப்புங்கள். சிறந்த அனுபவங்கள் வெளியிடப்படும்.