மற்ற எபிசோடுகள்
Published:Updated:

பாபாயணம் - 27

பாபாயணம்
பிரீமியம் ஸ்டோரி
News
பாபாயணம்

சச்சிதானந்த சத்குரு ஸ்ரீசாயிநாதரே சரணம்!

ஒருமுறை ருக்மணிக்கு ராதையின் பக்தி தன் பக்தியைவிடச் சிறந்ததா என்ற சந்தேகம் எழுந்தது. இந்தச் சந்தேகம் பொறாமையாக உருவெடுத்தது. ராதையை ஒருநாள் தன் இல்லத்திற்கு அழைத்தாள் ருக்மணி.

ராதையும் வந்தாள். ஒருகணம் ராதையின் பேரெழிலில் தன்னையே மறந்தவள், மறு கணம் சுதாரித்துக்கொண்டு வரவேற்றாள். தன் இல்லம் தேடிவந்தவளுக்கு அருந்தத் தர, பாலைச் சுட வைத்தாள். அதில் மணங்கமழும் ஏலம், குங்குமப் பூ ஆகியன இட்டு அதைக் குவளைகளில் ஆற்றிக்கொண்டே வந்து தந்தாள்.

ராதை அதைக் கையில் வாங்கிக்கொண்டாள். கைகளில் சூடு பரவியது. ருக்மணியை நோக்கினாள். நிலவுபோன்ற அவள் முகத்தில் அன்பு ஒளியாக வீசிக்கொண்டிருந்தது.

எங்கே தான் பாலை அருந்த மறுத்தாலோ தாமதித்தாலோ ருக்மணியின் தூய அன்பை அவமதித்ததுபோல ஆகிவிடுமோ என்று எண்ணினாள். அடுத்த கணம் அந்தப் பாலை கடகடவெனக் குடித்துவிட்டாள். சில கணம் ருக்மணியோடு பேசிவிட்டு ராதை புறப்பட்டுச் சென்றாள்.

பாபாயணம் - 27

அன்று இரவு உணவு முடிந்து கிருஷ்ணர் ஓய்வாகச் சாய்ந்திருந்தபோது வழக்கம்போல ருக்மணி பாத சேவை செய்ய ஆரம்பித்தாள். அப்படிக் காலைப்பிடித்து வருடிக் கொடுக்கும்போது பகவானின் உள்ளங்கால் முழுதும் கொப்புளங்கள் இருப்பதைப் பார்த்து அதிர்ந்துபோனாள்.

அவள் உள்ளம் துடித்தது. “கிருஷ்ணா, எப்படி இது?” என ருக்மணி கேட்டாள்.

இதுவரை தரிசித்திராத சாயிபாபா திருவுருவப் படங்கள் புதிய பரிமாணங்களில்.

அதற்குப் புன்னகை மாறாத கிருஷ்ணன் “இன்று மதியம் நீ ராதைக்கு சூடான பால் கொடுத்தாய் அல்லவா, அப்போதுதான் நிகழ்ந்தது. ராதை எப்போதும் தன் இதயத்தில் என் பாதங்களை வைத்து இடைவிடாமல் பூஜை செய்கிறாள். இதற்காகவே சூடாக எதையும் அவள் அருந்துவதில்லை. ஆனால் கொடுத்தது நீ என்பதால் பாலை வாங்கிக் குடித்துவிட்டாள். அவள் தியானிக்கும் என் திருப்பாதங்கள் பாலின் சூடுபட்டுக் கொப்பளித்துவிட்டன” என்றான் கிருஷ்ணன்.

ருக்மணிக்கு எது உயர்ந்த பக்தி என்பது புரிந்துவிட்டது. மேலும், பகவான் பக்தர்களின் வேதனைகளைச் சுமப்பவராக இருப்பார் என்பதையும் இந்த நிகழ்வு எடுத்துக்காட்டியது.

பாபாவும் நம் இதயத்தில்தான் வாசம் செய்ய விரும்புகிறார். சாயிராம் என்றதும் அவர் நம் மனத்தாமரையில் வந்து அமர்ந்துவிடுகிறார். அதன்பின்பு நம் சிந்தை, செயல்கள் என அனைத்தும் அவரால் வழிநடத்தப்படும். பேசும்போது அவரின் பொன்மொழிகள் நினைவுக்கு வரும். அவை நமக்குள் ‘நான்’ என்ற அகங்காரம் தலையெடுக்காதபடி செய்து நம் குறிக்கோளை அடைய உதவும்.

அவ்வாறு யார் ஒருவர் பாபாவிடம் தன் முழு இதயத்தையும் அர்ப்பணிக்கிறாரோ அவர்களின் அனைத்து நலன்களையும் அவரே கவனித்துக் கொள்கிறார்.

“வறுமையோ இல்லாமையோ, என் அடியவர்களின் வீட்டில் இருக்காது. உணவு, உடையைப் பொறுத்தவரை அவற்றுக்குக் குறைவிருக்காது. தங்கள் மனதை எப்போதும் என்மேல் வைத்து என்னையே முழு இதயத்துடன் வழிபடும் அடியவர்களின் நலன்கள் அனைத்தையும் நானே கவனித்துக்கொள்கிறேன்” என்கிறார் பாபா.

பாபாவின் மீது ஆழமான பக்தி கொண்டு அவரை உள்ளத்தில் வைத்துப் பூஜித்தவர்கள் அநேகர். பாபாவும் அவர்கள்மீது மிகவும் பிரியமாய் இருந்தார். அப்படி ஒருவர்தான் அமராவதியைச் சேர்ந்த தாதா சாஹேப் கபர்டேயின் மனைவி.் அநேகர். பாபாவும் அவர்கள்மீது மிகவும் பிரியமாய் இருந்தார். அப்படி ஒருவர்தான் அமராவதியைச் சேர்ந்த தாதா சாஹேப் கபர்டேயின் மனைவி.

பாபாயணம் - 27

ஷீர்டியில் பாபாவை தரிசனம் செய்யத் தன் மகனுடன் வந்த அந்தப் பெண்மணி அங்கேயே சில நாள்கள் தங்கியிருந்தாள். நித்தமும் பாபாவின் தரிசனமும் ஆசியும் அவளை ஷீர்டியை விட்டு அகல விடாது தடுத்தன. ஒருநாள் சோதனையாக அவள் மகனுக்குத் திடீரென்று காய்ச்சல் வந்தது. சில நாள்களில் அது பிளேக்காக மாறியது.

பயந்துபோன அந்தப் பெண்மணி, அமராவதிக்குத் திரும்பிப்போக எண்ணினாள். இதற்காக சாயியை சந்தித்து அவரின் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தாள்.

மாலை வேளை. சாயி, சமாதி மந்திரைச் சுற்றி வந்துகொண்டிருந்தார். அவர் முகம் சூரியப் பிரகாசத்தோடு ஜொலித்தது. ஆனால் உடலோ தளர்ந்ததுபோல் இருந்தது. மெள்ள அவர் சுற்றி வரும் வழியில் போய் நின்று அவர் பாதங்களைப் பணிந்தாள் அந்தப் பெண்மணி.

“பாபா, என் மகன் பிளேக் நோயால் பீடிக்கப்பட்டிருக்கிறான். நான் என் ஊருக்குச் செல்லலாம் என்று நினைக்கிறேன். தாங்கள் அனுமதி கொடுக்க வேண்டும்” என்று தன் துயரம் தோய்ந்த மெல்லிய குரலால் கூறினாள். பாபா தன் புன்னகை மாறாமல் கரத்தை உயர்த்தி ஆசி வழங்கினார்.

பின்பு அவளிடம், “தாயே, பயப்படாதே. வானம் மேகங்களால் சூழப்பட்டிருக்கிறது. விரைவில் அவை உருகி ஓடிவிடும். எல்லாம் எளிதாகவும், தூயதாகவும் மாறிவிடும்” என்று கூறினார். அந்தப் பெண்மணிக்கு என்ன கூறுவதென்று தெரியவில்லை. சாயி சொல்லைத் தட்டவும் முடியாமல், தன் கோரிக்கையை மீண்டும் வைக்கவும் முடியாமல் தடுமாறினாள்.

அப்போது சாயி திடீரென்று தன் மேல் சட்டையைத் தூக்கிக் காட்டினார். அவர் உடலில் ஒரு பெரிய பிளேக் கட்டி இருந்தது. “பார்த்தாயா பெண்ணே, என் அடியவர்களுக்காக நான் எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கிறது... அவர்களின் துன்பங்கள் எல்லாம் என்னுடையதாகும். நீ கவலைப்படாமல் செல்” என்றார்.

தன் மகனின் துன்பங்களை எல்லாம் சாயி வாங்கி அனுபவித்துக்கொண்டிருக்கிறார் என்று அறிந்ததும் அவள் கண்கள் கண்ணீரால் நிறைந்தன. அந்தக் காட்சியைக் கண்டவர்கள் அனைவரும் சாயியைத் துதித்தார்கள்.

அடுத்த ஓரிரு நாள்களில் அவள் மகன் பூரண குணமடைந்தான்.

(தரிசனம் தொடரும்)

வாசகர் அனுபவம்

ன் பெயர் வர்ஷினி. நான் சாயி பக்தை. இது நான் இன்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படிக்கும்போது நடந்தது. தேர்வு முடிவுகள் வெளியாகும் நாளன்று நான் அதிகாலையிலிருந்தே இணையத்தில் தேடிக்கொண்டேயிருந்தேன். ஆனால் முடிவுகள் வெளியாகும் தளம் வேலை செய்யவேயில்லை, அல்லது, பிஸியாகவே இருந்தது. இது எனக்குள் ஒரு பதற்றத்தை ஏற்படுத்தியது. என்ன எழுதினோமோ அதற்கேற்பதான் முடிவு வரப்போகிறது என்றாலும், அதைத் தெரிந்துகொள்ள இயலாத சூழ்நிலை மன வருத்தத்தை ஏற்படுத்தியது. வழக்கம்போல் நான் சாயியிடம் வேண்டிக்கொண்டேன். அடுத்த நிமிடம் சாயி பாடல் ஒலிக்க வரும் வண்டி ஒன்று வீட்டு வாசலில் வந்தது. நான் சென்று சிறு காணிக்கை ஒன்றைச் செலுத்திவிட்டுத் திரும்பினேன்.

அப்போது அந்த வண்டியில் வந்த சிறு குழந்தை ஒன்று, “அக்கா, சாக்லேட் கொடு” என்று புன்னகையோடு கேட்டது. நான் என் அறைக்கே வந்துவிட்டேன். அடுத்த பத்து நிமிடத்தில் முடிவுகள் வந்துவிட்டன. நான் அனைத்திலும் பாஸ் செய்திருந்தேன். அந்தக் குழந்தை என்னிடம் சாக்லேட் ஏன் கேட்டது என்று எனக்கு அப்போதுதான் புரிந்தது. சாயிதான் என் மன வருத்தம் தேவையற்றது, நீ பாஸ் செய்துவிட்டாய் என்பதைச் சொல்வதற்காகக் கேட்டிருக்கிறார் என்பது புரிந்தது. சாயி என் மனம் அறிந்து என்னோடு பேசும் தெய்வம் என்பது இப்படி ஒவ்வொரு முறையும் உறுதியாகிறது.

- வர்ஷினி, சென்னை

பாபாவும் நானும்

``ஒரு நாள் அதிகாலையிலேயே எழுந்து மயிலாப்பூரிலிருக்கும் சாயிபாபா கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காகப் போனேன். காலை அஞ்சு மணிக்கே போனப்போ அபிஷேகம் நடந்துகிட்டிருந்தது. என் கையாலேயே பாபாவுக்குப் பாலபிஷேகம் செய்யச் சொன்னாங்க. இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. அப்போ மனசுக்குள்ள வெளியில சொல்லமுடியாத ஓர் உணர்வு ஏற்பட்டுச்சு. தொடர்ந்து அங்கு போனப்போ அவரை நான் என் அப்பாவாக சுவீகரிச்சிக்கிட்டேன். சாயிபாபான்னு சொல்ல மாட்டேன். `சாய்பா'ன்னுதான் சொல்லுவேன்.

நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி
நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி

அதன் பிறகு, என்னைப் பார்க்க வர்றவங்க எல்லாம் சாயிபாபா சிலைகளைச் சின்னதும் பெரிதுமாகக் கொண்டு வந்து கொடுத்துக்கிட்டே இருப்பாங்க. என் வீடு முழுக்க பாபா சிலைகளாக நிறைய ஆரம்பிச்சிடுச்சு.

2013-ம் ஆண்டில் எனக்கு வாழ்வா சாவான்னு ஒரு பிரச்னை. உயிர்பிழைக்க மாட்டேன் என்கிற அளவு சிக்கல். டாக்டர்கள் மூன்று நாள் மட்டுமே எனக்கு அவகாசம் கொடுத்திருந்தாங்க. நான் பிழைப்பேனா என என்னைச் சுற்றியிருந்த உறவுகளுக்கும், ஏன், எனக்கும்கூட சந்தேகமாகத்தானிருந்தது.ஆபரேஷன் தியேட்டருக்குள் போகிறேன். உள்ளே போகும்போது பாபாவிடம் `நான் இருக்கணும்னு நீ நினைச்சா என்னைக் காப்பாற்று. இல்லன்னா உன்னோடயே சேர்த்துக்கோ, அவ்வளவுதான்'னு சொன்னேன். மனசார வேண்டிக்கிட்டேன்.

சர்ஜரி முடிந்ததும் கண் திறந்து பார்த்தேன். என்னைச் சுற்றிலும் டாக்டர்கள். பாபாவிடம் ‘நான் இருக்கணும்னு நினைச்சிருக்கீங்க சாய்பா, ரொம்ப நன்றி’ன்னு சொன்னேன்.

எனக்கு ஏதாவது நடக்கணும்னா, ‘சாய்பா நீதான் பார்த்து செஞ்சு வைக்கணும்’னு சொல்லி வேண்டிக்குவேன். அவரும் கண்டிப்பா செய்து தருவார். இது மாதிரி நிறைய சம்பவங்கள் இருக்கு.

எப்போ மயிலாப்பூ ருக்குப் போனாலும் அன்னதானம் சாப்பிடாம வரமாட்டேன். பிறந்தநாள், சர்ஜரி நடந்த நாள், டிசம்பர் 31-ம் தேதி இந்த நாள்களில் எங்கிருந்தாலும் பாபா கோயிலுக்குப் போயிடுவேன்.

எனக்கு எல்லாமே சாய்பாதான்.”

சாயிபாபா உங்கள் வாழ்க்கையில் நிகழ்த்திய அற்புதங்களை உங்கள் புகைப்படத்துடன், ஆனந்த விகடன், 757 அண்ணாசாலை, சென்னை-2 என்ற முகவரிக்கோ, saibaba@vikatan.com மின்னஞ்சலுக்கோ எழுதி அனுப்புங்கள். சிறந்த அனுபவங்கள் வெளியிடப்படும்.