
சச்சிதானந்த சத்குரு ஸ்ரீசாயிநாதரே சரணம்!
இறைவன் இந்தப் பிரபஞ்சத்தில் கோடிக்கணக்கான ஜீவராசிகளைப் படைத்து அவர்களின் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ற விதத்தில் வாழ்க்கையை ஏற்படுத்துகிறார்.
ஆனால் மற்ற ஜீவராசிகளால் அடையவோ, அறியவோ முடியாத ஞானத்தை மனிதர்களே அடைகிறார்கள். அதனாலேயே தேவர்களும் இந்தப் பூவுலகில் மனிதர்களாக வந்து பிறக்க விரும்புகிறார்கள். அழியக்கூடிய உடல்தான் என்பதற்காக உடலைப் புறக்கணிக்கும் ஞானிகள் உண்டு. ஆனால், பாபா உடலைப் புறக்கணிப்பவர் இல்லை.
“உடம்பைப் புறக்கணிக்கவோ, விரும்பிச் செல்லமாகப் பராமரிக்கவோ கூடாது. ஆனால் முறையாகப் பராமரிக்க வேண்டும். ஒரு குதிரையில் சவாரி செய்யும் பயணி, எவ்வாறு தான் போகுமிடத்தை அடைந்து, வீடு திரும்பும்வரை தன் குதிரையைப் பராமரிக்கிறானோ அதைப்போல் இவ்வுடம்பைப் பாதுகாக்க வேண்டும்” என்பார் பாபா.
எளிமையும் பணிவுமே இறைவனை அடையும் வழி என்னும் பாபா, தானும் அவ்வாறே வாழ்ந்து காட்டினார். தூய உணர்வுகளின் சாரமாகவும், ஆசை, பற்று, கோபம் ஆகிய உணர்ச்சிகளை அடக்கி, அமைதியின் உருவமாகவும் திகழ்ந்தார் சாயி. அன்பு மட்டுமே அவரின் மொழியாக இருந்தது.

ஷீர்டியில் நானாவல்லி என்ற விசித்திரமான குணம் கொண்ட ஒரு மனிதன் இருந்தான். யாரையும் மதிக்காத போக்குடன், இஷ்டம்போல் சுற்றித்திரிந்து, பிறரை அடக்கி, அதிகாரம் செய்யும் ஆர்வமுடையவனாக இருந்தான். ஆனால், அவன் பாபாவின் வேலைகளை கவனிப்பதிலும் அவருக்குச் சில பணிவிடைகள் செய்வதிலும் விருப்பம் உள்ளவனாக இருந்தான்.
இதுவரை தரிசித்திராத சாயிபாபா திருவுருவப் படங்கள் புதிய பரிமாணங்களில்.
ஒருமுறை ஆசனத்தில் அமர்ந்திருந்த பாபாவிடம் சென்று, “இந்த ஆசனத்தில் நான் அமர விரும்புகிறேன், எழுந்திருங்கள்” என்றான்.
அங்கிருந்த பக்தர்கள் அதிர்ச்சியடைந்து பதறியபோது பாபா புன்னகையுடன் உடனடியாக எழுந்து அவனுக்கு ஆசனத்தை விட்டுக் கொடுத்தார். அதில் அவன் பாபாவைப் போலவே சிறிது நேரம் அமர்ந்திருந்தான். சிறிது நேரம் கழித்து எழுந்து பாபாவை அதில் அமரச் சொன்னான்.
பாபா அமர்ந்ததும் அவர் பாதங்களில் வீழ்ந்து வணங்கிவிட்டுச் சென்றுவிட்டான். தான் அதிகாரம் செய்யப்பட்ட போதும், ஆசனத்திலிருந்து நகரச் சொன்னபோதும் வருத்தமடையவில்லை பாபா.
நானாவல்லியின் ஆழ்ந்த அன்பை அவர் புரிந்திருந்தார். அவன் பாபாவை மிகவும் நேசித்தான். அதனால்தானோ என்னமோ பாபா மஹாசமாதி அடைந்த பதிமூன்றாவது நாள் அவனும் சமாதி அடைந்தான்.
தன் பக்தர்களின் அடிமனதை பாபா அறிவார். வெளித்தோற்றத்தைக் கண்டு அவர் என்றுமே மயங்கியதில்லை. பக்தர்கள் விரும்பியவாறே தன்னை வழிபட அவர் அனுமதித்தார்.
ஒருமுறை டாக்டர் பண்டிட் என்பவர் பாபாவை தரிசனம் செய்ய வந்தார். அதுவரை மகல்சாபதி மட்டுமே பாபாவின் கழுத்தில் சந்தனம் பூசுவது வழக்கம். ஆனால், எளிய பக்தரான பண்டிட் அன்று மாலை தரிசனத்தின் போது, பூஜைப்பொருள்கள் வைத்திருந்த தட்டை எடுத்துப் போய் அதிலிருந்து சந்தனத்தை எடுத்து திரிபுந்த்ரா எனப்படும் மூன்றுகோடுகளால் ஆன பட்டையை அவர் நெற்றியில் இட்டார்.எல்லோரும் வியக்கும் வண்ணம் பாபா அமைதியாக இருந்தார்.
இதுபற்றி தாதாபட் கேட்டபோது “டாக்டர் அவரின் குரு காகாபுரானிக் என்று அழைக்கப் பட்ட ரகுநாத் மகராஜ் என்று என்னை நினைத்தார். அவர் குருவுக்குச் செய்வதைப்போல் எனக்குச் செய்ய விரும்பினார். அவரின் ஆழ்ந்த பக்தியும் உணர்வின் நெகிழ்வும் புரிந்தே நான் அவரைத் தடுக்கவில்லை” என்றார் பாபா.
அடியவர்களின் தூய மனதையும், எளிமையையும் விரும்புபவர் பாபா. ஆழ்ந்த அன்பே இறைவனை அடைவதற்கான வழி என்பார்.
மதப் புத்தகங்கள், மந்திரங்கள் அனைத்தும் கொடுக்க இயலாத ஆத்ம சந்தோஷத்தை சத்குருவானவர் அளித்துவிடுவார். தன்னிலேயே ஆழ்ந்து, எளிமை, இரக்கம் மனம் - மெய் இவற்றில் கட்டுப்பாடுகொண்ட பாபா, தன் வாழ்வின் செயல்கள் மூலம் அவற்றை நமக்கு உணர்த்துகிறார்.
“ஆண்டித்தனமே உண்மையான பிரபுத் தன்மை. ஏனெனில் அது எப்போதும் நிலைத்திருக்கும். மற்ற செல்வங்களெல்லாம் நிலையற்றவை” என்று அடிக்கடி கூறுவார்.

எதன்மீதும் எதிர்பார்ப்போ, கிடைக்கவில்லை என்ற ஏக்கமோ அவருக்கு இல்லை.
ஐந்தடி மூன்று அங்குல உயரமுள்ள மனிதனாக பாபா காட்சி அளித்தாலும், சாந்தத்தின் இருப்பிடமாக, பிரம்மானந்த நிலையை எய்தியவராக இருந்தார். வெளித்தோற்றத்தில் அவரின் நடவடிக்கைகள் வித்தியாசமாகத் தெரிந்தாலும் அவை அனைத்தும் பக்தர்களின் நலன் கருதியவையே.
இந்தப் பிரபஞ்சத்தில் உள்ளது ஒரே தெய்வம். மனிதர்கள் அனைவரும் அதன் குழந்தைகள். எனவே சொந்த சகோதரர்களான நீங்கள் உங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்ளாதீர்கள்” என்பதை அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார். மனிதர்களின் ஒற்றுமையே அவர் விரும்பியது.
“என் அடியவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் தங்களுக்குள் ஜாதி, மதம், மொழி, இன வேறுபாடு இன்றி ஒற்றுமையாக வாழ வேண்டும்” என்றார். “அன்பாய் இருங்கள், உண்மையும் நேர்மையும் சத்தியமுமே உங்கள் வாழ்க்கை முறையாக இருக்க வேண்டும்” என்று எப்போதும் உபதேசித்தார் பாபா.
(தரிசனம் தொடரும்)
வாசகர் அனுபவம்
சமீபத்தில் என் தங்கையின் கணவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கடுமையான வயிற்றுவலியால் துடித்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில் எதுவும் சரியாக விளங்கவில்லை. எனவே வேறு ஒரு மருத்துவமனைக்குச் செல்லுமாறு கேட்டுக்கொண்டார்கள். மறுநாள் காலைதான் அங்கு செல்ல முடியும். வீட்டில் வலியில் அவர் துடித்துக்கொண்டிருக்க, அவர் அருகே என் தங்கை நின்ற கோலத்தைப் பார்த்ததும் என் மனம் பதறியது. நான் சாயிபக்தன். சாயி நீதான் இதை மாற்ற வேண்டும். எங்கள் கண்ணீரைத் துடைக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டேன். கவலையோடு வீட்டுக்குத் திரும்பினேன். அந்த இரவெல்லாம் தூக்கமேயில்லை. சாயியையே வேண்டிக்கொண்டிருந்தேன். மறுநாள் காலையில் நான் எழுந்தபோது என் தங்கையின் கணவர் என் வீட்டில் இருந்தார். என்ன என்று கேட்டபோது காலையிலிருந்து வலியில்லை என்றார். அதன்பின் அவருக்கு வலி வரவேயில்லை. காரணம் எதுவாக இருந்தாலும் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து காத்தவர் அந்த சாயிநாதனே என்று என் மனம் சொன்னது. நான் சாயிக்கு மனமார நன்றி தெரிவித்தேன்.
- இ.சுந்தரவடிவேல் அக்கரைப்பற்று, இலங்கை
பாபாவும் நானும்
``முதன்முதலில் நான், இயக்குநர் கே.பாலசந்தர் சார் கிட்ட உதவி இயக்குநரா சேர்ந்து வேலை பார்த்தேன். பின் விசுவிடம் பல படங்களில் பணியாற்றினேன். அதன்பிறகு விசுவையே ஹீரோவாக வைத்து 'வீடு, மனைவி, மக்கள்'ங்கிற படத்தை முதன்முதலில் இயக்கினேன். இதைத் தொடர்ந்து 24 படங்களை இயக்கினேன். அதன்பிறகு காலப்போக்கில் பெரிதாகப் படங்கள் இயக்கவில்லை. வாழ்க்கையில் ஒரு வெறுமை தோன்றியது.
சாலிகிராமத்தில் எங்களுடைய பழைய மேன்சனை இடித்துவிட்டு புதிதாக ஒரு லாட்ஜ் கட்டலாமென்று முடிவு செய்து, 2010-ம் ஆண்டுவாக்கில் அதற்கான வேலைகளில் இறங்கினேன். அதற்கென அஸ்திவாரம் போடப்பட்டு இருந்த நிலையில், அதற்குமேல் கட்டடத்தை எழுப்புவதற்குப் போதிய நிதி இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தேன்.

எனக்குத் தெரிந்த பல நண்பர்களிடமும் வங்கிகளிடமும் கடன் உதவிக்காக அலைந்து திரிந்தேன். எங்கும் பணம் கிடைக்கவில்லை. தொடங்கிய பணியை முடிக்க முடியாது என்றுகூடச் சில நேரங்களில் என் மனதில் தோன்றியது. பேசாமல் இந்த அளவில் எவருக்காவது கைமாற்றி விடலாமா என்று நினைத்தேன்.
இப்படி இருந்த நிலையில்தான் நண்பர் ஒருவர் என்னை ஷீர்டி சாயிபாபா கோயிலுக்கு அழைத்துச் சென்றார். ஷீர்டி போய் வந்துவிட்டு என்னுடைய வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
எந்த வங்கியில் கடன் கேட்டு நான் நடையாக நடந்துகொண்டிருந்தேனோ அந்த வங்கியிலிருந்து திடீரென்று ஒரு தொலைபேசி அழைப்பு. `உங்களுக்கான லோன் தொகை முழுவதும் வழங்குவதற்கான அனுமதி கிடைத்துவிட்ட்து. வந்து பெற்றுக் கொள்ளுங்கள்' என்று வங்கி மேலாளரே கூறினார்.
இதை பாபாவின் அருளன்றி வேறு என்னவென்று சொல்ல முடியும்... விடுதி கட்டும் பணிகள் விறுவிறுப்பாக நடந்தேறின. எல்லாம் பாபாவின் அருள் தான்.
சாயிபாபா உங்கள் வாழ்க்கையில் நிகழ்த்திய அற்புதங்களை உங்கள் புகைப்படத்துடன், ஆனந்த விகடன், 757 அண்ணாசாலை, சென்னை-2 என்ற முகவரிக்கோ, saibaba@vikatan.com மின்னஞ்சலுக்கோ எழுதி அனுப்புங்கள். சிறந்த அனுபவங்கள் வெளியிடப்படும்.