மற்ற எபிசோடுகள்
Published:Updated:

பாபாயணம் - 29

பாபாயணம்
பிரீமியம் ஸ்டோரி
News
பாபாயணம்

சச்சிதானந்த சத்குரு ஸ்ரீசாயிநாதரே சரணம்!

‘இன்றைய நாள், இந்த நிமிடம் மட்டுமே உன் கையில் உள்ளது’ என்று சத்தியவாக்கு உரைக்கும் பாபா, தன் நினைப்பை மிஞ்சிய பரமானந்தம் எதுவும் இல்லை என்கிறார்.

அவர் தரிசனம் கண்டவர்கள் அந்த ஆனந்தத்தை தினம் தினம் அடைந்தார்கள். அவர் சந்நிதி நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களால் நிரம்பிவழிந்தது. அவரை தரிசிப்பதில் உள்ள ஆனந்தத்தை அனுபவிக்கப் பலர் வந்தனர். ஆனால், உலக இன்பங்களில் போதை கொண்டு தற்பெருமை என்னும் ஆணவத்தில் திளைப்பவர்கள் அந்த ஆனந்த சந்நிதானத்தை அடையவே முடியாது.

பாபா சிலரைச் சட்டென்று தன் தர்பாரில் சேர்ப்பதில்லை. அவருடைய அன்பைப் பெற ஆர்வத்துடன் காத்திருந்தால் மட்டுமே அது நிகழும். இதற்குக் கல்யானைச் சேர்ந்த ஹாஜி சித்திக் ஃபால்கே தொடர்புடைய நிகழ்ச்சி ஓர் உதாரணம்.

ஃபால்கே மிகச்சிறந்த இஸ்லாமிய அறிஞர். குரானில் அவரது ஞானம் குறித்த பெருமை அவருக்கு இருந்தது. மேலும், மெக்கா சென்று தன் இறைக்கடமையை முடித்துவிட்டவர் என்ற எண்ணமும் அவருள் ஓர் ஆணவத்தை உருவாக்கியிருந்தது.

சாய் பாபா
சாய் பாபா

பாபாவைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரை தரிசனம் செய்துகொள்ள ஷீர்டி வந்தார். பாபா அவரை மசூதிக்குள்ளே அனுமதிக்கவேயில்லை. பாபாவை தரிசனம் செய்து அவரின் ஆசியைப் பெறாமல் அங்கிருந்து செல்வதில்லை என ஃபால்கேயும் அங்கேயே தங்கிவிட்டார். தினமும் மசூதிக்கு வெளியே வந்து பாபாவின் அழைப்பை எதிர்பார்த்துக் காத்திருப்பார். ஒன்றல்ல, இரண்டல்ல ஒன்பது மாதங்கள் காத்திருந்தார்.

காலம் மாறியதே தவிர பாபாவின் மனம் மாறவேயில்லை. காரணம் ஃபால்கே தாழ்மையோடு காத்திருப்பதுபோலத் தோன்றினாலும் உள்ளூர அவருக்குள் ஆணவம் கொஞ்சமும் குறையாமல் இருந்தது. ஃபால்கேயின் இந்தப் பிடிவாதத்தைக் கண்ட சிலர் அவரை அணுகி ஒரு யோசனை சொன்னார்கள். பாபாவின் அடியவரான ஷாமாவை அணுகி அவர் மூலம் பாபாவின் தரிசனத்தைப் பெறலாம் என்று வழிகாட்டினர். ஃபால்கேவுக்கு அது சரி என்றே தோன்றியது.

ஷாமா பாபாவிடம் பேசுவதாகச் சொன்னார். அதே போன்று பாபாவிடம் ஃபால்கேவுக்காக இரங்கும்படி வேண்டிக்கொண்டார்.

“சரி ஷாமா, நீ சென்று நாளை ஃபால்கே பார்லி கிணற்றுக்கருகில் உள்ள ஒற்றையடிப் பாதைக்கு வருவாரா என்று கேட்டு வா” என்றார்.

ஷாமா ஓடிச் சென்று ஃபால்கேவின் சம்மதத்துடன் திரும்பி வந்தார்.

“சரி அவரிடம் சென்று நாற்பதாயிரம் ரூபாயை நான்கு தவணைகளில் எனக்குத் தருவாரா என்று கேட்டு வா” என்றார்.

ஷாமா நாற்பதாயிரம் ரூபாயா என்று எண்ணிக்கொண்டே ஃபால்கேயிடம் சொன்னபோது, “பாபாவின் அருள் கிடைக்க நாற்பது லட்சம் ரூபாய்கூடத் தரத் தயாராய் இருக்கிறேன்” என்றார் ஃபால்கே.

சாய் பாபா
சாய் பாபா

இறுதியாக, “இன்னும் ஒரே ஒரு கேள்விக்கு பதில் கேட்டு வா. நாங்கள் இந்த மசூதியில் ஓர் ஆட்டை வெட்டப்போகிறோம். அவருக்கு அதன் மாமிசத்தில் எந்தப் பகுதி வேண்டும் என்று கேட்டு வா” என்று மீண்டும் சொல்லி அனுப்பினார்.

ஃபால்கேவோ, “எனக்கு மாமிசம் என்று இல்லை, பாபாவின் மட்பாண்டத்திலிருந்து சிறு பருக்கை கிடைத்தாலும் சரி” என்று பதில் அளித்தார். அதைக் கேட்ட பாபா தன் கையில் வைத்திருந்த கூஜாவை வீசியெறிந்தார். நேரே ஃபால்கே இருக்கும் இடத்துக்கு வந்தார்.

“ஏன் தற்பெருமை கொண்டு அலைகிறாய்... உன்னையே உயர்வாக நினைத்துக்கொள்கிறாய். உன் புனித யாத்திரைகள் பற்றிப் பெருமை கொள்கிறாய். உன் ஞானம் உன் கண்ணை மறைக்கிறது. நான் யார் என்று நீ அறியவில்லையா...” என்றார்.

இதுவரை தரிசித்திராத சாயிபாபா திருவுருவப் படங்கள் புதிய பரிமாணங்களில்.

அந்தக் கணத்தில் ஃபால்கே பாபாவின் பாதங்களில் விழுந்தார். அவருள் ஊறியிருந்த ஆணவம் கண்ணீராக மாறி வழிந்து ஓடி பாபாவின் பாதங்களில் சரண் புகுந்தது. சரணாகதி என்னும் சூரியன் உதித்தபின் அஞ்ஞானம் என்னும் இருளுக்கு அங்கு என்ன வேலை...

பாபா மசூதிக்குள் சென்று அமர்ந்துகொண்டார். ஃபால்கேவை உள்ளே அழைத்தார். ஃபால்கே எந்த சந்நிதிக்குள் புக வேண்டும் என்று இத்தனை நாள்களும் காத்திருந்தாரோ அந்த சந்நிதிக்குள் ஆனந்தமாகப் புகுந்தார். அவர் ஆன்மா ஆனந்தமயமாக மாறியது. இந்த ஆனந்தத்தை அருளவே பாபா இவ்வளவு தூரம் சோதித்தாரோ என்றுகூட அவருக்குத் தோன்றியது.

பாபா ஃபால்கேவை ஆசீர்வதித்தார். உள்ளிருந்து ஒரு கூடை நிறைய மாம்பழங்களைக் கொண்டுவந்து அவரிடம் கொடுத்தார். சிறு பருக்கை போதுமென்றவருக்குக் கூடை நிறைய பழங்கள். கூடவே தன் பையில் இருந்த 55 ரூபாயை எடுத்து அதையும் ஃபால்கேவுக்குக் கொடுத்தார். இவையெல்லாம் போதாதென்று தன்னோடு சேர்ந்து உணவு உண்ணச் சொன்னார்.

ஃபால்கே இப்போது பழைய ஃபால்கே இல்லை. தாழ்மையும் ஆனந்தமும் அடைந்துவிட்ட ஃபால்கே. ஷீர்டியை விட்டுக் கிளம்பும்போது அவர் உயர் ஞானவானாக மாறியிருந்தார். அவருள் ஆனந்தம் நித்தியமாய் சுடர்விட ஆரம்பித்துவிட்டது. அதன் மத்தியில் பாபா எப்போதும் குடியிருந்தார்.

(தரிசனம் தொடரும்)

வாசகர் அனுபவம்

நான் சாயிபாபாவின் தீவிர பக்தன். மாலத்தீவில் பணியாற்றுகிறேன். இரண்டு மாதங்களுக்கு முன்பு திருச்சி வந்துவிட்டு மாலத்தீவு திரும்பவேண்டிய நாள். திருவனந்தபுரத்திலிருந்து மாலத்தீவு செல்ல விமானம் புக் செய்திருந்தேன். காலை 7.20க்கு நான் திருவனந்தபுரத்தில் செக் இன் செய்திருக்க வேண்டும். ஆனால் நான் விமான நிலையம் சென்றபோதே மணி 8.45. செக் இன் கவுன்டர் மூடிவிட்டார்கள். அவசியம் அன்றுநான் போயே ஆகவேண்டும். மனதார சாயிபாபாவை வேண்டினேன். பின்பு எதற்கும் ஒருமுறை கேட்கலாம் என்று செக்யூரிட்டியிடம் கேட்டேன். வழக்கமாக இதுபோன்றவற்றை மறுத்துவிடுவார்கள். ஆனால் அன்று அவருக்கு என்ன தோன்றியதோ, என்னை உள்ளே அனுமதித்தார். அடுத்து ஸ்கேன் செக்‌ஷன். அங்கும் யாரும் ஒரு வார்த்தைகூடக் கடுமையாகப் பேசவில்லை. போர்டிங் கேட் மூடப்பட்டிருந்தது. அப்போது எங்கிருந்தோ வந்த ஆபீஸர் ஒருவர் என் பாஸ்போர்ட்டை வாங்கிப் பார்த்துவிட்டு, மூடியிருந்த சிஸ்டத்தை மீண்டும் ஓப்பன் செய்து அனுமதித்தார். கூடவே வந்து இமிக்ரேஷன்வரை கூட இருந்து என்னை அடுத்த பதினைந்து நிமிடத்தில் விமானத்தில் ஏற்றிவிட்டார். விமானத்தில் ஏறி அமர்ந்தபின்பு நடந்ததெல்லாம் ஒரு கனவுபோல இருந்தது. இதை சாயியின் கருணை என்றே நான் புரிந்துகொண்டேன்.

s.சக்திவேல் மாலத்தீவு

பாபாவும் நானும்

“பொதுவாக எனக்கு சாமின்னா முருகன். குருன்னா ஷீர்டி சாயிபாபாதான். இப்போதான் யோகிபாபு என்றால் எல்லாருக்கும் தெரியுது. அப்போ என் பேர் பாபு. ஆனால், யாரும் அப்படிக் கூப்பிட மாட்டாங்க. `பாபா' என்றுதான் கூப்பிடுவாங்க.

ஸ்ரீபெரும்புதூர் அரசுப் பள்ளியில்தான் நான் படிச்சேன். இப்போது இருக்கிற மாதிரிதான் தலைமுடி அப்போதும் இருக்கும். புட்டப்பர்த்தி சத்ய சாயிபாபா மாதிரி என் தலைமுடி இருந்ததால, ஸ்கூல் ஃபிரெண்ட்ஸ் `பாபா' என்றுதான் என்னைக் கூப்பிடுவாங்க. அதன்பிறகு, சினிமாவுல சான்ஸ் தேடிக்கிட்டிருந்தப்போதான் நானும் என் நண்பனும் ஒவ்வொரு வியாழக்கிழமையும் சாலிகிராமத்தில் இருக்கிற பாபா கோயிலுக்குப் போய் சாமி கும்பிடுவோம். சினிமாவுல நல்ல ரோல் கிடைச்சு எப்படியும் பெரிய ஆளா வரணும்னு வேண்டிக்கிட்டு வருவோம்.

என் மனைவியும் சாயிபாபா பக்தைதான். எங்க மேரேஜ் முடிஞ்சதும் ஷீர்டிக்கு வருவதாக வேண்டியிருந்திருக்காங்க. எனக்கே தெரியாது. இந்தப் பிரார்த்தனையை அவங்க சொன்னதும் மேரேஜ் முடிந்த மறுநாளே நாங்க ஷீர்டிக்குப் போய் சுவாமி தரிசனம் பண்ணிட்டு வந்தோம். விடியற்காலை நாலரை மணிக்கு அபிஷேகம், ஹாரத்தி பார்த்தோம். உண்மையில் ரொம்ப சிலிர்ப்பான அனுபவமாய் இருந்தது.

நடிகர் யோகி பாபு
நடிகர் யோகி பாபு

பாபாவைப் பொறுத்தவரை நாம் எதைக் கேட்கிறோமோ அதை நமக்குத் தருவார். பாபாவிடம் இன்னொரு முக்கியமான விஷயம், இந்து, கிறித்துவர், முஸ்லிம் என எந்த மதத்தைச் சேர்ந்தவர்களும் பாரபட்சம் பார்க்காமல் எல்லோருக்கும் பொதுவானவராக இருக்கிறார். இது எங்கேயுமே பார்க்க முடியாத ஒரு வித்தியாசமான அனுபவம். தெய்வம் எல்லாத்தையும் ஞாபகம் வெச்சுக்கும்னு சொல்வாங்க. நமக்கான தேவையை சரியான நேரத்துல அது கொடுத்திடும். அந்த மாதிரிதான் எனக்கு இந்த வாழ்க்கை!”

சாயிபாபா உங்கள் வாழ்க்கையில் நிகழ்த்திய அற்புதங்களை உங்கள் புகைப்படத்துடன், ஆனந்த விகடன், 757 அண்ணாசாலை, சென்னை-2 என்ற முகவரிக்கோ, saibaba@vikatan.com மின்னஞ்சலுக்கோ எழுதி அனுப்புங்கள். சிறந்த அனுபவங்கள் வெளியிடப்படும்.