மற்ற எபிசோடுகள்
Published:Updated:

பாபாயணம் - 30

பாபாயணம்
பிரீமியம் ஸ்டோரி
News
பாபாயணம்

சச்சிதானந்த சத்குரு ஸ்ரீசாயிநாதரே சரணம்!

சாயி பரப்பிரம்ம சொரூபம்; அவரே இறைவன்; பக்தர்களின் துயர் தீர்க்க உருவம் எடுத்து வந்து வழிநடத்தும் ஒளி என்பதுவே அவர் அடியவர்களின் நம்பிக்கை.

அந்த நம்பிக்கையை பாபா ஒருபோதும் பொய்த்துப்போகச் செய்ததில்லை. அவர்களுக்கான நல்வழியை எப்போதும் காட்டியருள்வார். பக்தர்களோடு நேரடியாகவும் மறைமுகமாகவும் எப்போதும் உரையாடி அவர்களின் மனப் பக்குவத்துக்கு ஏற்ப வழிநடத்துவார். பக்தர்கள் அவர் முன்வைக்கும் வினாக்களுக்கான விடைகள் பலவகைகளில் அமையும். சிலருக்கு நேரடியான விடை. சிலருக்கோ அவர்களே புரிந்துகொள்ளும்படியான வழிகாட்டல். இவையெல்லாமே அவர் தன் பக்தர்கள் உண்மையின் வழியை அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.

சாயியின் பக்தர்களில் முக்கியமானவர் தாஸ்கணு. ஞானத்தின் மீது ஈடுபாடுள்ள தாஸ்கணு அவ்வப்போது தன் சந்தேகங்களை சாயியிடம் கேட்பதுண்டு. வழக்கம்போல் சாயி சில நேரங்களில் நேரடியாகவும் சில நேரங்களில் மறைமுகமாகவும் பதிலளிப்பார்.

ஈஸா உபநிடதத்துக்கு மராத்திய மொழியில் உரை எழுத விரும்பினார் தாஸ்கணு. ஈஸா உபநிடதம் வேத சம்ஹிதையில் ‘மந்திரோபநிஷத்’ என்று அழைக்கப்படுகிறது. யஜூர் வேதத்தில் வாஜசனேய சம்ஹிதையில் அமைந்த இது மற்ற எல்லா உபநிடதங்களையும்விடச் சிறந்ததாகக் கருதப்படுகிறது.

இதுவரை தரிசித்திராத சாயிபாபா திருவுருவப் படங்கள் புதிய பரிமாணங்களில்.

‘எங்கும் இருப்பது இறைவனே. அந்த உணர்வுடன் நம் கடமைகளைச் சிறப்பாக, உற்சாகத்துடன் செய்வதே சிறந்த வாழ்க்கைக்கு வழி’ என்ற அறிவைத் தருகிறது ஈஸா உபநிஷத். இதனை எளிய விளக்கங்களால், செய்யுள் செய்யுளாக மராத்திய யாப்பு ஒலி வடிவில் இயற்ற விரும்பினார் தாஸ்கணு. ஆனால் அதன் முழு சாராம்சத்தையும் புரிந்துகொள்ள முடியாமல் மன உளைச்சலுடன் இருந்தார். இறுதியில் சத்குருவான பாபா ஒருவரே இதற்கு விளக்கம் அளிக்க சக்தி உடையவர் என்று முடிவு செய்து அவரையே தஞ்சமடைந்தார்.

சாய் பாபா
சாய் பாபா

ஞானத்தின்பால் பற்றுகொண்ட தாஸ்கணுவை பாபா கருணையோடு பார்த்தார். அவரின் இச்செயல் பரிபூரணமாக நிறைவேற ஆசீர்வதித்தார். ஆனாலும், அவரோடு விளையாட விரும்பினார்.

“தாஸ்கணு, கவலைப்படாதே. இதில் எவ்விதக் கஷ்டமும் இல்லை. நீ வீட்டிற்குத் திரும்பிப் போகும் வழியில் விலேபார்லேயில் காகா சாஹேப் தீட்சித் வீட்டுக்குப் போ. அவர்கள் வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரப் பெண் உன் சந்தேகங்களைத் தீர்ப்பாள்” என்றார்.

தாஸ்கணுவுக்கு வெட்கமாகப்போயிற்று. பாபா தன்னைக் கிண்டல் செய்வதாகவே நினைத்தார். அது எப்படி ஒரு வேலைக்காரப் பெண் ஞானத்தில் உயர்ந்த இந்த உபநிடதத் தத்துவத்தில் உள்ள சந்தேகங்களை நீக்க முடியும் என்று நினைத்தார். ஆனால், பாபாவின் பேச்சை மீறி மறுபேச்சு பேசும் வழக்கம் அவருக்கு இருந்ததில்லை. வீடு திரும்பும்போது விலேபார்லே சென்று தீட்சித் வீட்டில் தங்கினார். ஆனால் அவர் மனம் ஓய்வுகொள்வதில் விருப்பமில்லாமல் இருந்தது. அப்போது மெல்லிய குரலில் ஒரு பாடல் காற்றில் கலந்து வந்தது.

கருஞ் சிவப்புப் புடவை - ஓ

எவ்வளவு அழகாய் இருந்தது

நூலிழை வேலைகளும் அதன்

முந்தானை சரிகைகளும்

எவ்வளவு அழகு

எவ்வளவு அழகு

தாஸ்கணு அந்தக் குரலின் இனிமையால் கவரப்பட்டார். அதைப் பாடியவளைக் காண அறையிலிருந்து வெளியே வந்தார். கண்ட கணத்தில் தாஸ்கணுவுக்கு அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் ஒன்றாக ஏற்பட்டது.

அந்தப் பாடலைப் பாடியவள் ஒரு சிறுமி. மகிழ்ச்சியின் உச்சாணிக் கொம்பில் அமர்ந்து கொண்டு அவள் பாடிக்கொண்டிருந்தாள். ஆனால் அவள் உடையோ மிகவும் பழையதாகவும் ஓரங்கள் கிழிந்ததாகவும் இருந்தது. தாஸ்கணுவுக்கு அவள் மேல் பரிதாபம் ஏற்பட்டது.

ராவ்பகதூர் எம்.வி.பிரதான் என்பவர் மூலம் அவளுக்கு ஒரு நல்ல உடை வாங்கிவரும்படி வேண்டிக்கொண்டார். அழகான எம்பிராய்டரி உள்ள ஒரு பாவாடையும் தாவணியும் வாங்கி அவளுக்கு அன்பளிப்பாக அளித்தார். அந்தச் சிறுமி அதை உற்சாகத்தோடு வாங்கி அணிந்து கொண்டாள். அந்த நாள் முழுவதும் அவள் மகிழ்ச்சியில் ஒரு சிறு பட்டாம்பூச்சியைப்போல ஆடிப் பாடிப் பறந்தவண்ணம் இருந்தாள். தாஸ்கணுவுக்கும் நிறைவாக இருந்தது.

பாபாயணம் - 30

என்னதான் புதிய உடை என்றாலும் தினமும் அதையேவா போட்டுக்கொண்டிருக்க முடியும். மறுநாள், அந்தப் பெண் தன் பழைய உடையிலேயே வேலைக்கு வந்தாள். என்ன ஆச்சர்யம், அவள் உற்சாகத்தில் ஒரு குறைவுமில்லை. அதே மகிழ்ச்சியோடு ஆடிப் பாடி வேலை செய்து கொண்டிருந்தாள்.

தாஸ்கணுவுக்கு இப்போது சகலமும் புரிந்துவிட்டது. இன்பமோ, துன்பமோ அது மனதைப் பொறுத்தது என்னும் ஞானம் பளிச்சிட்டது.

கடவுள் எல்லாத் திசைகளிலும், எல்லாப் பொருள்களிலும், எல்லா உயிர்களிலும் நிறைந்து இருக்கிறார். அவர் தருவது எதுவாக இருந்தாலும் அது நம் நன்மைக்கே. அவர் நமக்கு அளித்த அனைத்தையும் மகிழ்ந்து அனுபவிக்க வேண்டும்.

ஏழ்மையிலும் இந்தச் சிறுமிக்கு மகிழ்ச்சி நிலைக்கிறது. ஆனால் சகலமும் இருந்தும் மகிழ்ச்சி இல்லாத நிலை பலருக்கும் இருக்கிறது. அதன் காரணம் மனம். கந்தல் ஆடையோ புதிய ஆடையோ அதை அளித்தவர் கடவுள் என்ற தெளிவுடையவளாக இருந்தாள். மேலும், எந்தப் பொருளும் மகிழ்ச்சியைக் கொண்டுவரவோ, கொண்டுபோகவோ முடியாது என்பதுவே ஞான நிலை.

இந்தப் பேருண்மையைத் தானாக அறிந்துகொள்ள வேண்டும் என்றே சாயி உபதேசிக்காமல் இங்கு செல்லச் சொல்லி அறிவுறுத்தியிருக்கிறார் என்பது தாஸ்கணுவுக்குப் புரிந்தது.

கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார். அவரால் அருளப்பட்ட அனைத்தும் ஏதோ ஒரு விதத்தில் நம்மை வந்து சேரும். அது நம் நன்மைக்கே என்ற உறுதியை மனதில் கொள்ள வேண்டும். கிடைத்ததைத் திருப்தியுடன் ஏற்றுக்கொண்டு நம் கடமைகளைத் தொடர்ந்து செய்ய வேண்டும். கர்மங்களைச் செய்யவே இந்த வாழ்க்கை.

இதையே பாபா எப்போதும் வலியுறுத்துகிறார்.

(தரிசனம் தொடரும்)

வாசகர் அனுபவம்

சில ஆண்டுகளுக்கு முன்பு, திருவள்ளூர் மாவட்டத்தில் எங்களுக்குச் சொந்தமாக இருக்கும் மனையில் வீடுகட்ட ‘வாஸ்து நாள்’ பார்த்து பூஜை போட்டோம். மறுநாள் ஆட்கள் வந்து அஸ்திரவாரம் தோண்டினார்கள். ஆனால் அன்றிரவு `மழையோ மழை’ அஸ்திவாரப் பள்ளங்கள் நீரில் மூழ்கி விட்டன. இரண்டு நாள்கள் வேலைகள் நின்றுவிட்டன. மூன்றாம் நாள் கொஞ்சம் மழை நிற்க, மீண்டும் அஸ்திவாரம் தோண்டினோம். அன்றிரவும் பேய் மழை. அஸ்திவாரப் பள்ளங்கள் மீண்டும் மூழ்கின. கடன் வாங்கி வீடு கட்டும்போது இவ்வளவு தடங்கல்களா என்று நொறுங்கிப் போனேன். என் மனைவி சாயி பக்தை. மறுநாள் அஸ்திவாரம் போட்ட இடத்தில் சாயியின் படத்தை வைத்துக் கற்பூரம் காட்டி பூஜை செய்து, ‘இனி நீயே வழி காட்டு’ என்று வேண்டிக்கொண்டாள். என்ன அதிசயம்... மறுநாள் மழை வெறித்துவிட்டது. பணிகள் தொடங்கின. அதன்பின் கிரகப்பிரவேசம் முடியும்வரை ஒரு தடங்கலும் இல்லை. எங்களைக் காத்து வழிநடத்தியவர் அந்த சத்ய சாயிதான்.

- கே. அசோகன், மும்பை

பாபாவும் நானும்

நடிகர் கணேஷ்,

``நான் வளசரவாக்கத்துக்குக் குடிபெயர்ந்துவிட்டேன். இங்கு வந்தபிறகு ஏ.எம்.ரத்னம் சாரின் விஸ்வரூப சாயி பாபா கோயிலுக்கு ஒவ்வொரு வியாழக்கிழமையும் போவேன். பாபா கிட்ட நான் `இது வேண்டும், அது வேண்டும்'னு கேட்டதே இல்லை. அங்குபோய் உட்கார்ந்தால் போதும். நமக்கு என்ன தேவை என்பதை அவரே பார்த்துப் பார்த்துச் செய்திடுவார்.

நான் முன்பெல்லாம் தம் அடிப்பேன். தண்ணி அடிப்பேன். டெய்லி ஃபிரெண்ட்ஸோடு பார்ட்டி பண்ணுவோம். நான்கு வருஷத்துக்கு முன் 2016 டிசம்பர் 31 நியூ இயர் கொண்டாட்டங்களுக்குக் கலந்துகொள்வதற்காகப் போனேன். அதற்கு முன் பாபா கோயிலுக்குப் போனேன். பாபாகிட்டே `தாத்தா, இன்றைக்கு பார்ட்டிக்குப் போறேன் இன்றோடு சரி. இனி இதைத் தொட மாட்டேன்'னு சொல்லிட்டு வந்தேன்.

கணேஷ், ஆர்த்தி
கணேஷ், ஆர்த்தி

சொன்னால் நீங்கள் நம்ப மாட்டாங்க. அன்றையிலிருந்து சிகரெட், டிரிங்ஸ் இரண்டையும் தொடுறதே கிடையாது. இந்தப் பழக்கத்திலிருந்து விடுபட்டதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டு ஆர்த்தியும் என்னை மாதிரி பாபா பக்தரா மாறிட்டாங்க. அவங்க சொல்றதையும் கேளுங்க'' என்றார்.

நடிகை ஆர்த்தி,

``தொடக்கத்தில் பாபாவைப் பற்றிச் சொல்லும்போதெல்லாம் நான் விளையாட்டாகத்தான் எடுத்துக்கொண்டேன். வியாழக்கிழமை பாபாவுக்குப் பூ வைக்கவில்லையென்றால் வளசரவாக்கத்திலிருந்து தி.நகருக்கே போய்கூடப் பூ வாங்கி வந்து வைப்பார். நான்கூட அவரைக் கிண்டல் செய்திருக்கிறேன். ஆனால், அப்பா, அம்மா, பொண்டாட்டி சொல்லிக்கூடக் கேட்காத ஒருவர், `பாபாவிடம் சொல்லிவிட்டார்' என்பதற்காகத் தனக்கிருந்த கூடாப் பழக்கங்களையெல்லாம் தூக்கி எறிந்தார் என்கிறபோது, நான் ரொம்பவே நெகிழ்ந்து போயிட்டேன். இப்போது பாபா அவருக்கு மட்டுமல்ல, எனக்கும் தாத்தாதான். எங்கள் வீட்டில் என்ன சமைத்தாலும் முதலில் பாபாவுக்குப் படையல் வைத்துவிட்டுத்தான் எல்லோருக்கும் சாப்பிடவே கொடுப்பேன்”

சாயிபாபா உங்கள் வாழ்க்கையில் நிகழ்த்திய அற்புதங்களை உங்கள் புகைப்படத்துடன், ஆனந்த விகடன், 757 அண்ணாசாலை, சென்னை-2 என்ற முகவரிக்கோ, saibaba@vikatan.com மின்னஞ்சலுக்கோ எழுதி அனுப்புங்கள். சிறந்த அனுபவங்கள் வெளியிடப்படும்.