
சச்சிதானந்த சத்குரு ஸ்ரீசாயிநாதரே சரணம்!
‘நீங்கள் அனுபவிப்பது, உங்களிடம் இருப்பது என அனைத்துமே நான் அனுக்கிரகம் செய்து கொடுத்தவைதான்’ என்கிறார் பாபா. அவரே கதி என்று நம்பியவர்களின் துயரங்களை அவர் தடுத்து நிறுத்துவார். தன்னைக் காணாமல், தன்மீது அன்பும் தன் நாமத்தின்மீது பக்தியும் கொண்ட ஒரு பெண்ணின் மரணத்தையே மாற்றிய அற்புதம் ஒன்றும் பாபாவின் சரிதத்தில் உண்டு.
ரத்தன் ஜங்கர் என்பவர் பாபாவின் அடியவர். ஷீர்டிக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் அடிக்கடி பாபாவைச் சந்தித்துவிட்டு வந்து தன் உறவினர்களிடம் அவரின் மகிமைகளை, அற்புதங்களை, கனிவான சொற்களை, செயலை, எளிமையைப் பரவசத்துடன் விளக்குவார். அதைக் கேட்கும் உறவினர்கள் வியப்படைவார்கள். அவர்களில் ஒருத்திக்கு பாபாவின் மீது மிகுந்த பக்தி உண்டாயிற்று.
நாளுக்கு நாள் பாபாவின் மீதான அவளின் பக்தி அதிகரித்தது. அதே நேரம் அவளுக்கு உடல்நலமும் குறைந்துகொண்டே போனது. அவள் மனதின் ஆழத்தில் ஷீர்டிக்குச் செல்லும் ஆசை தோன்றிவிட்டது. சந்தர்ப்பங்கள் அவளைப் போக விடாமல் தடுத்தன. ஷீர்டி போக வேண்டும், பாபாவை தரிசிக்க வேண்டும் என்ற அடங்காத ஆசை அவளுள் கொந்தளிக்க ஆரம்பித்தது. அவள் உடல்நிலையும் மேலும் மோசமானது. படுத்த படுக்கையானாள். மருத்துவர் பார்த்துவிட்டு ‘விரைவில் இவள் இறந்துவிடுவாள், பிழைக்க மாட்டாள்’ என்று கூறிவிட்டனர்.
இதுவரை தரிசித்திராத சாயிபாபா திருவுருவப் படங்கள் புதிய பரிமாணங்களில்.
மருத்துவ வசதிகள் வளராத காலம். காலரா, பிளேக் என்ற கொடிய நோய்கள் ஊரெங்கும் பரவிய காலம். ‘பாபா இருக்கிறார், அவர் என்னைக் காப்பாற்றுவார், என்னை அங்கே கொண்டு போங்கள்’ என்று நம்பிக்கையுடன் கூறினாள் அந்தப் பெண்.
பலரின் நோய்களை பாபா தீர்த்து வைக்கிறார் என்கிற விஷயம் நாடு முழுவதும் பரவியிருந்தது. அவளுக்கு மரணமடைந்துவிடுவோம் என்று வேதனை இல்லை. ஆனால் பாபாவை தரிசிக்க முடியாமல் போய்விடுமோ என்ற ஏக்கம்தான் இருந்தது. ஒருவேளை ஷீர்டி சென்றால் பாபாவால் குணம் ஏற்படலாம் என்ற நம்பிக்கையும் உள்ளூர இருந்தது. தன்னை ஷீர்டி எடுத்துச் செல்லுங்கள் என்று அவள் உறவினர்களை வேண்டினாள்.

உறவினர்கள் அவளை ஒரு கட்டிலில் படுக்கவைத்து ஷீர்டி எடுத்துச் சென்றனர். பாபாவை தரிசனம் செய்ததும் அவளுக்குக் கண்ணீர் பெருக்கெடுத்தது. பாபாவைக் கண்ணாரக் கண்டு தரிசனம் செய்தாள். உயிர் பிரியும் தருவாயில் உள்ள பெண்ணை இப்படி சிரமப்படுத்தி எடுத்து வந்ததற்காக பாபா அவர்களை ஒருகணம் கடிந்துகொண்டார். ஆனாலும் அவருக்கு அந்தப் பெண்ணின் மேல் இரக்கம் பிறந்தது.
அந்தப் பெண்ணைத் தன் கனிவான பார்வையால் தீண்டி ஆறுதல் தந்துவிட்டு, அருகில் இருந்த கூடாரத்தில் ஒரு விரிப்பை விரித்து அவளை அதில் படுக்க வைக்கச் சொன்னார். தினமும் உதி கலந்த தண்ணீரை மட்டும் அவளுக்குக் கொடுக்கச் சொன்னார். நான் அனுமதி தந்த பிறகுதான் அவளை இங்கிருந்து அழைத்துச் செல்ல வேண்டும் என்று கட்டளையிட்டார். ஏழுநாள்கள்வரை வெறும் தண்ணீரை மட்டுமே கொடுத்துவர அந்தப் பெண்ணின் உடல்நிலையில் சிறு மாற்றம் தெரிந்தது. அவள் கொஞ்சம் தெம்புடையவளாகக் காணப்பட்டாள். பஞ்சடைந்த அவள் கண்கள் ஒளிரத் தொடங்கின. சீக்கிரம் அவள் தேறிவிடுவாள் என்று உறவினர்கள் எண்ணிக் கொண்டிருந்தபோது எட்டாம் நாள் காலையில் அந்தப்பெண் திடீரென்று இறந்துவிட்டாள். உடன் வந்த உறவினர்கள் திகைத்தனர். அவளின் உடலைத் தூக்கிச் செல்ல ஆயத்தமாகி நின்றார்கள். பாபா ஏற்கெனவே, ‘தான் அனுமதி தந்த பிறகுதான் அவளை எடுத்துச் செல்லவேண்டும்’ என்று கூறியிருந்ததால் அவரின் அனுமதிக்காகக் காத்திருந்தனர். ஆனால், வழக்கமாக அதிகாலையில் எழுந்து விடும் பாபா அன்று விடிந்து நீண்ட நேரமாகியும் வெளியில் வரவில்லை.
சிறிது நேரத்தில் அந்தப் பெண்ணின் உடலில் ஓர் அசைவு. திடுமென்று எழுந்து உட்கார்ந்தாள். எல்லோரும் திடுக்கிட்டனர். அதே நேரம் பாபா சாவடியிலிருந்து வெளியே ஓடிவந்தார். தன் கையில் இருந்த தடியால் ஓங்கித் தரையில் அடித்து ‘ஓடு, ஓடிவிடு’ என்று கோபத்துடன் கத்தி யாரையோ விரட்டுவதுபோலச் செய்தார்.
அந்தப் பெண் தெம்போடு எழுந்து நின்றாள்.
பாபா அவளை நெருங்கிக் கனிவுடன், “உன் விதி மாற்றப்பட்டுவிட்டது. இனி நீ எப்போது வேண்டுமானாலும் இங்கிருந்து கிளம்பலாம்” என்று கூறி ஆசி வழங்கினார்.

என்னதான் நடந்தது... அந்தப் பெண் விளக்கினாள்.
“ஒரு கரிய உருவம் என் மேல் விழுந்து என்னை இழுக்க முயன்றது. அப்போது பாபா தன் கைத்தடியால் அதை அடித்து விரட்டினார். இறுதியில் பாபாவின் அடியைத் தாங்கமுடியாமல் அது ஓடிவிட்டது” என்றாள்.
மரணம் அவளை நெருங்கியிருக்கிறது. பாபா அதைத் தன் உத்தரவால் விரட்டியிருக்கிறார் என்று மற்றவர்களுக்குப் புரிந்தது.
“எந்த நேரமும் ராமநாமத்தை ஜெபித்துக் கொண்டிரு. உன்னைப் பிடிக்க வந்த இருள் அகன்று ஓடிவிட்டது” என்று பாபா அறிவுறுத்தி அந்தப் பெண்ணை ஊருக்கு அனுப்பி வைக்கிறார்.
பாபா சொன்னதுபோலவே அவள் ராம நாமத்தை சாயியையும் சேர்த்து ‘சாயிராம்’ என்று தன் வாழ்நாள் முழுவதும் ஜபித்துக் கொண்டிருந்தாள். ஸ்ரீராமசந்திரனின் பாதம் அகலிகையை உயிர்ப்பித்ததுபோல பாபாவின் உதி இவளை மரணத்திலிருந்து மீட்டுவிட்டது.
தெய்வம் ஒன்றே. யாருக்கு எது பிடிக்கிறதோ அந்த உருவத்தில் அவர்களுக்கு அருள்கிறது. பாபாவை தெய்வமாகக் கண்டு சரணடைந்தால் அவர் நம்மைக் காத்து வழிநடத்துவார்.
“உனக்கு அருகதை உள்ளது நிச்சயம் கிடைக்கும். என்னை நம்பினால் அதை உங்களுக்குக் கொடுத்துக்கொண்டே இருப்பேன்” என்பதே பாபாவின் அருளுரை.
(தரிசனம் தொடரும்)
வாசகர் அனுபவம்
கடந்த சில ஆண்டுகளாக என் கணவருக்குத் தொழில் சரியாக நடக்கவில்லை. அதனால் கடன் தொல்லையும் அதிகரித்துவிட்டது. இதனால் மன உளைச்சலில் அவர் குடிக்க ஆரம்பித்துவிட்டார். என் தோழியிடம் சொல்லிப் புலம்பினேன். அவள்தான் என்னை சாயியை வழிபடச் சொல்லி வலியுறுத்தினாள். அருகிலேயே இருக்கும் சாயி கோயிலுக்குப் போனேன். மனம் கொஞ்சம் நிம்மதி ஆனது. என் தோழி, எப்படியாவது உன் கணவனையும் அழைத்துச் செல் என்றாள். முதலில் வரமுடியாது என்று அடம்பிடித்தவர் பிறகு, சம்மதித்தார். கோயிலுக்குச் சென்று சாயி தரிசனம் செய்தோம். தரிசனம் முடிந்து கோயில் மண்டபத்தில் அமர்ந்திருந்தபோது அவர் திடீரென்று அழ ஆரம்பித்துவிட்டார். என்னால் தேற்றவே முடியவில்லை. மறுநாளிலிருந்து அவர் நடவடிக்கைகள் மாறின. தினமும் சாயி கோயிலுக்குப் போக ஆரம்பித்தார். குடிப்பழக்கம் முற்றிலும் போய்விட்டது. நல்ல நிறுவனத்தில் வேலை கிடைத்தது. நிம்மதியான வாழ்க்கை மீண்டும் கிடைத்துவிட்டது. இது சாயி நிகழ்த்திய அற்புதமே!
- ரேவதி,மடிப்பாக்கம்.
பாபாவும் நானும்
நான் ஷீர்டி சாயிபாபாவின் பக்தன். என் வாழ்க்கையில் பாபா பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார். சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தபோது, பல்கலைக்கழகத் தேர்வுகளின் தணிக்கையாளராகவும் இருந்தேன். வினாத்தாள்கள் இருந்த பீரோவின் சாவி என் வசமே இருந்தது. தேர்வுநாளில் ஒருநாள் அவசரமாகக் கல்லூரிக்கு விரைந்தபோது, சாவிக்கொத்தை எடுக்க மறந்துவிட்டேன். பேருந்தில் பயணிக்கும்போது, பாதிவழியில் சாவிக்கொத்து நினைவு வந்துவிட்டது. பத்துமணிக்குக் கேள்வித்தாள்களை மாணவர்களுக்குக் கொடுத்தாக வேண்டும்.

உடம்பெல்லாம் வேர்க்க ஆரம்பித்துவிட்டது. ‘பாபாவே! பாபாவே!’ என வேண்டுவதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. பதற்றத்தோடு பேருந்தை விட்டு இறங்கினால் அங்கு நான் கண்ட காட்சி என்னைவியப்பில்ஆழ்த்தியது. என் மனைவி சாந்தா, ஓர் ஆட்டோவில் புறப்பட்டு வந்து, கல்லூரி வாசலில் சாவிக்கொத்தோடு நின்கிறார். ‘எப்படி என்றேன்...’ , ‘தெரியலை, திடீர்னு உங்க டேபிள்கிட்ட போனேன். அங்க இதைப் பார்த்ததும் எடுத்துக்கிட்டு ஓடிவந்துட்டேன்’ என்றார். பாபாவை நினைத்துக் கையெடுத்துக் கும்பிட்டேன். இதேபோல் 2019-ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதத்தில் இதயத்தில் ஓர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மனம் சஞ்சலப்பட்டு ‘சாயிராம்' என்றேன். பாபாவை வேண்டிக்கொண்டு மருத்துவமனைக்குள் நுழைந்தேன். பாபா எனக்கு மனவலிமையையும் உடல் உரத்தையும் தந்தார். அவரின் கருணையாலேயே நான் மீண்டு வந்தேன் என்றால் அது சத்தியம்.
சாயிபாபா உங்கள் வாழ்க்கையில் நிகழ்த்திய அற்புதங்களை உங்கள் புகைப்படத்துடன், ஆனந்த விகடன், 757 அண்ணாசாலை, சென்னை-2 என்ற முகவரிக்கோ, saibaba@vikatan.com மின்னஞ்சலுக்கோ எழுதி அனுப்புங்கள். சிறந்த அனுபவங்கள் வெளியிடப்படும்.