மற்ற எபிசோடுகள்
Published:Updated:

பாபாயணம் - 32

பாபாயணம்
பிரீமியம் ஸ்டோரி
News
பாபாயணம்

சச்சிதானந்த சத்குரு ஸ்ரீசாயிநாதரே சரணம்!

“அன்பினால், நம்பிக்கையினால் மட்டுமே என்னை தரிசிக்க முடியும். என்னை எப்படித் திருப்தி செய்வது என்று பிரயாசைப்பட வேண்டாம். நான் எதிர்பார்ப்பது விசுவாசம் மட்டுமே” என்கிறார் பாபா.

மேலும் அவர், “நான் இந்த பௌதிக உடலுடன் ஷீர்டியில் மட்டுமே வசிக்கவில்லை. எங்கும் வியாபித்து இருக்கிறேன். நீ என்னை அழைக்காவிட்டாலும் நான் உன்னைத் தேடிவந்து ஈர்த்துக்கொள்வேன். என் கருணைக்கு எல்லைகள் இல்லை. எனக்கு விமானங்கள், புகை வண்டிகள் தேவையில்லை. நினைத்த இடத்துக்கு நான் செல்வேன்” என்றும் தன் பக்தர்களுக்கு அருள்கிறார் பாபா. பாபாவின் சரிதத்தில் அவ்வாறு பாபா பக்தர்களை நாடிச் சென்று அருள் செய்த சம்பவங்கள் அநேகம் உள்ளன. அப்படி ஒரு நிகழ்வுதான் மராட்டிய மாநிலத்தில் கன்தேஷ் மாவட்டத்துத் தம்பதிக்கு நிகழ்ந்தது.

அந்த கிராமத்தின் பெரும் பணக்காரக் கனவான். குறைவில்லாத செல்வம் இருந்தும் அவருக்குக் கொஞ்சி மகிழக் குழந்தைச் செல்வம் இல்லை. தம்பதி செய்யாத பூஜை இல்லை. செல்லாத கோயில் இல்லை. ஜோதிடம், ஜாதகம் என்று பலரையும் அணுகி அவர்கள் சொல்லிய பரிகாரங்கள் அனைத்தும் செய்தார்கள். ஆனாலும் அவர்களுக்குக் குழந்தை பாக்கியம் கிட்டவே இல்லை. கண்ணீருடன் நாள்கள் கழிந்தன. ஒருமுறை அவர் வீட்டுக்கு வந்த ஜோதிடர், “தேவையில்லாமல் துன்பப்படாதீர்கள். இந்த ஜன்மத்தில் உங்களுக்குக் குழந்தை பாக்கியம் இல்லை. மனதைத் தேற்றிக்கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

பாபாயணம் - 32

அவர்களின் துக்கம் எல்லை மீறியது. கனவானின் மனைவி கதறியழுதாள். ‘இந்த உலகில் இரக்கம் காட்டும் தெய்வமே இல்லையா’ என்று சொல்லிப் புலம்பினாள். நல்லவர்களின் புலம்பலையும் கண்ணீரையும் கண்டால் இறைவன் பொறுப்பானா?!

அப்போது அவர்கள் வீட்டு வாசலில் ஒரு துறவி வந்து நின்றார். ‘வீட்டில் யார்’ என்று குரல் கொடுத்தார். அந்தக் குரல் அந்தப் பெண்மணிக்குள் ஓர் அதிர்வை உண்டாக்கியது. கண்களைத் துடைத்துக்கொண்டு வெளியே வந்தாள். வெளியே நீள அங்கி அணிந்த ஒரு துறவி நின்றுகொண்டிருந்தார். குளுமையும் கருணையும் அவர் கண்களில் நிறைந்திருந்தன.

“எனக்கு மிகவும் பசிக்கிறது. ஒரு ரொட்டித் துண்டைப் போடு. உனக்கு வேண்டிய வரம் தருகிறேன்” என்று சொன்னார். அவள் என்ன வரம் கேட்டுவிடப் போகிறாள்... அவர்கள் துயர் தீர்க்க ஒரு குழந்தை. அதை அவள் வாய் திறந்து சொல்லக்கூட இல்லை.

“கவலைப்படாதே, நீ போடும் ஒவ்வொரு ரொட்டித் துண்டுக்கும் உனக்கு ஒரு வரம் கிடைக்கும்” என்றார்.

துறவியின் சொல்கேட்டுப் பூரித்த அந்தப் பெண்மணி உள்ளே ஓடிப்போய் கையில் கிடைத்த ரொட்டிகளைக் கொண்டு வந்து அவருக்கு வழங்கி அவர் பாதம் பணிந்துகொண்டார். அதைப் பெற்றுக்கொண்ட துறவி,“அம்மா, என் பசியை நீ போக்கினாய். நீ வழங்கிய நான்கு ரொட்டித் துண்டுகளுக்கு இணையாக உனக்கு அழகாய் நான்கு வரங்கள் கிடைக்கும்” என்று ஆசீர்வதித்து அங்கிருந்து நகர்ந்தார்.

தம்பதியின் மனம் பூரிப்பில் மிதந்தது. அந்த மகிழ்ச்சி அவர்கள் வாழ்வில் வசந்தத்தைக் கொண்டுவந்தது. அடுத்த ஆண்டே அந்தப் பெண்மணிக்கு அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. எந்த அளவுக்கு வாழ்வில் துயரத்தில் இருந்தார்களோ அந்த அளவுக்கு வாழ்வில் மகிழ்ச்சியையும் அனுபவித்தார்கள்.

அடுத்தடுத்த ஆண்டுகளில் அவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தனர். அப்போதுதான் அவர்களுக்குத் தங்களை ஆசீர்வதித்துத் தலைவிதியையே மாற்றிய அந்தத் துறவியின் நினைவுவந்தது. அவர் சொன்னதுபோல அவர்களுக்கு இப்போது அழகிய நான்கு வரங்கள்.

தினமும் காலையில் அந்தத் துறவியை நினைத்து மனதுக்குள் வணங்கிக்கொண்டார்கள். பிள்ளைகள் வளர்ந்து நடைபழகும் காலத்தில் ஒருநாள் மீண்டும் அதே துறவி அவர்கள் வீட்டுக்கு வந்து வாசலில் நின்றார். அவரின் தரிசனத்தைக் கண்டதும் சிலிர்த்துப்போன தம்பதி அவரை அமரவைத்துப் பாத பூஜை செய்து நமஸ்கரித்தனர். அவர் யார் என்று அறிந்துகொள்ளும் ஆர்வம் அதிகரித்தது. ஆனால் துறவியோ, “அல்லா மாலிக்” என்பதைத் தவிர வேறு சொற்களைப் பேசவில்லை. புறப்படும்போது, “குழந்தைகளே, ஷீர்டி செல்லுங்கள்” என்று கூறிவிட்டுச் சென்றார்.

தங்கள் மனதின் வேதனையைச் சொல்லாமல் அறிந்து தீர்த்துவைத்த அந்த தெய்வத்தின் சொல்லே வேதவாக்கு என்று கொண்ட அந்தத் தம்பதி குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஷீர்டியின் திசை விசாரித்துக்கொண்டு சென்றனர்.

ஷீர்டியில் பழைய மசூதியில் பாபா வாழ்கிறார் என்பதை அறிந்து அவரை தரிசனம் செய்யச் சென்றனர். மசூதியில் மக்கள் கூடி நின்றனர். அவர்களிடம் வழிகேட்டு உள்ளே சென்று பாபாவின் சந்நிதானத்தை அடைந்தபோது அவர்கள் திகைத்துப்போயினர். காரணம், அங்கே அமர்ந்திருந்தது அவர்கள் வீடு தேடிவந்து வரம் தந்த தெய்வமே. சாஷ்டாங்கமாக அவர் பாதத்தில் விழுந்து வணங்கினர். அவர்கள் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் வழிந்து அவர் பாதங்களைக் கழுவியது.

இதுவரை தரிசித்திராத சாயிபாபா திருவுருவப் படங்கள் புதிய பரிமாணங்களில்.

“அம்மா ஏன் அழுகிறாய்... அன்று நீ எனக்கு நான்கு ரொட்டிகள் தந்தாய். எனவே உனக்கு நான்கு குழந்தைகளை வரமாகத் தந்தேன். நான் எப்போதும் வாக்கு தவறுவதில்லை” என்றார் பாபா.

அதைக் கேட்டதும் அவர்களின் சிலிர்ப்பும் கண்ணீரும் மேலும் பெருகியது. அப்போது அங்கிருக்கிறவர்கள் அவர்களைத் தேற்றி அவர்கள் குறித்து விசாரித்தார்கள். அப்போது நடந்தவற்றை அவர்கள் கூற, அங்கிருந்த மக்கள் அனைவரும் ஆச்சர்யமடைந்தனர்.

பாபாயணம் - 32
ஓவியம்: பாலகிருஷ்ணன்

அவர்களில் பலர் விவரம் தெரிந்த நாளிலிருந்து பாபா ஷீர்டியை விட்டு வெளியே போனதேயில்லை என்று சொல்லி, இது பாபா எங்கும் நிறைந்த பரப்பிரம்மம் என்பதன் சான்று என்று சொல்லி பாபாவைப் பணிந்துகொண்டனர்.

“நீ எந்த தெய்வத்தை நினைத்தாலும் அதை நான் ஏற்று உனக்கு அருள்புரிய ஓடி வருகிறேன். என்னை ஆராதிக்க, பூமாலைகளோ, பூசைகளோ தேவையில்லை. ஏழைகளுக்கும், வாயில்லா ஜீவன்களுக்கும், கருணை காட்டுவதே என்னை ஆராதிக்கும் வழி. அவர்களுக்கு அன்புடன் நீ தருவது நேரடியாக என்னைச் சேர்கிறது. மனிதர்களின் இதயத்தில்தான் இறைவன் விருப்பத்தோடு குடி இருக்கிறான்” என்கிறார் பாபா.

(தரிசனம் தொடரும்)

வாசகர் அனுபவம்

நாடெங்கும் ஊரடங்கு. வெளியில் செல்ல முடியாத நிலை. வாரந்தோறும் பாபா கோயிலுக்குச் சென்று வரும் எனக்கு லாக்டௌன் நாள்களில் பாபாவை தரிசனம் செய்ய முடியவில்லையே என்று மன வருந்தம் அதிகமாகிக் கண்ணீர்விட்டு அழுதேன். அடுத்த ஒரு மணிநேரம் கழித்து அந்த அதிசயம் நடந்தது. பாபா கோயில் பூசாரி எனக்கு போன் செய்தார். செல்போனில் பாபாவினை தரிசனம் செய்கிறீர்களா என்று சொல்லி, ஆரத்தி காட்டி தரிசனம் செய்துவைத்தார். அந்தக் கணம் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. ‘என் பக்தர்கள் வீட்டில் தேவை என்பதே இருக்காது’ ‌‌‌‌‌‌என்னும் தன் வாக்கை பாபா ஒவ்வொரு விஷயத்திலும் நிரூபித்ததை எண்ணி ஆனந்தக் கண்ணீரில் நனைந்தேன்.

சு.அமுதவல்லி, சின்னாளபட்டி.

பாபாவும் நானும்

ருமுறை ஒரு பெரிய கலைநிகழ்ச்சி நேரு விளையாட்டு அரங்கத்தில் ஏற்பாடாகியிருந்தது. அந்த நிகழ்ச்சியில் `மிமிக்ரி'யுடன் ஒரு நாடகத்தை நானும் சக நடிகர் ஒருவரும் நடத்தலாம் எனத் திட்டமிட்டிருந்தோம். ஆனால், நிகழ்ச்சி நாளன்று அவர் என்னுடன் வராமல், தனியே புறப்பட்டு நிகழ்ச்சிக்குச் சென்று விட்டார். அந்த நிகழ்ச்சிக்கு நான் பெரிதும் மதிக்கும் ஜானி லீவர் எனும் வட இந்திய நகைச்சுவை நடிகர் வருவதாக இருந்தார். அவரும் ஒரு மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட். அவரின் முன்னிலையில் என்னுடைய மிமிக்ரி நிகழ்ச்சியை நடத்த வேண்டுமெனப் பெரிய அளவில் ஆர்வம் கொண்டிருந்தேன். ஆனால், அது நடக்கவில்லை. மிகவும் வருத்தம். நிகழ்ச்சி முடிந்ததும் இரவு தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் தங்கியிருந்த ஜானி லீவரை சந்தித்தபோது, ‘இதைவிட நல்ல வாய்ப்பு கிடைக்கும் கவலைப்படாதீர்கள்’ என ஆறுதல் கூறினார்.

நடிகர் சின்னி ஜெயந்த்
நடிகர் சின்னி ஜெயந்த்

மறுநாள் பாபா கோயிலுக்குப் போய் என் வேதனையைச் சொல்லிக் கலங்கினேன். அடுத்த ஆண்டு அதே நேரு உள்விளையாட்டு அரங்கில் திரையுலகம் சார்பாக நடந்த நிகழ்ச்சியில் அப்போதைய முதல்வர் கருணாநிதி முன்பாகவும் அமிதாப் பச்சன் முன்னிலையிலும் என்னுடைய மிமிக்ரி நிகழ்ச்சி. அமிதாப் பச்சன் அவரைப்போல் நான் பேசியதை மிகவும் ரசித்ததுடன் அது முதல் அவரின் குடும்ப நண்பர்களில் ஒருவராகும் பாக்கியத்தைக் கொடுத்தார். நான் நடத்திய ஒரு நிகழ்ச்சிக்கு அவரின் மகன் அபிஷேக் பச்சனைச் சிறப்பு விருந்தினராக அனுப்பி வைத்தார். பாபா நமக்கு ஒன்றைத் தராமல் இருக்கிறார் என்றால், அதைவிடப் பெரிதான ஒன்றை நமக்குத் தரப்போகிறார் என்று உணர்ந்துகொள்ளுங்கள். உண்மை, தகுதி, நம்பிக்கை உள்ளவர்களை ஒருநாளும் பாபா கைவிடுவதே இல்லை.

- எஸ்..கதிரேசன்

சாயிபாபா உங்கள் வாழ்க்கையில் நிகழ்த்திய அற்புதங்களை உங்கள் புகைப்படத்துடன், ஆனந்த விகடன், 757 அண்ணாசாலை, சென்னை-2 என்ற முகவரிக்கோ, saibaba@vikatan.com மின்னஞ்சலுக்கோ எழுதி அனுப்புங்கள். சிறந்த அனுபவங்கள் வெளியிடப்படும்.