மற்ற எபிசோடுகள்
Published:Updated:

பாபாயணம் - 33

பாபாயணம்
பிரீமியம் ஸ்டோரி
News
பாபாயணம்

சச்சிதானந்த சத்குரு ஸ்ரீசாயிநாதரே சரணம்!

செல்வம், புகழ், அந்தஸ்து என்ற போதையில் சிக்கி உண்மையான ஆன்மிக உணர்வை அடைய மறுப்பவர்களை பாபா தன்னிடம் வித்தியாசமான முறையில் ஈர்க்கிறார். முதலில் அவர்களின் உலகாயத ஆசைகளை நிறைவேற்றி, பின்னர் மெய்ஞ்ஞானம் என்கிற விரிந்த உணர்வை அறிய வைக்கிறார்.

இதுபற்றி அவரிடம் வருந்திய ஓர் அடியாரிடம் “ஆட்சேபனை செய்யாதே. அவர்களின் ஆசைகளை நிறைவேற்றி, சுகமான வாழ்வு கொடுத்த பிறகு அவர்கள் என்னிடம் ஐக்கியமாவார்கள்” என்றார். அப்படியே அவர் திரு காபர்டேவையும் தன்வசம் ஈர்த்தார்.

கணேஷ் கிருஷ்ண காபர்டே என்பவர் அமாராவதியைச் சேர்ந்த வழக்கறிஞர். இங்கிலாந்து சென்று படித்துவிட்டு வந்த அவர் அரசியலிலும் ஒரு முக்கியமான நபர். அன்றைய சுதந்திரப் போராட்டக் காலத்தில் இந்திய தேசியக் காங்கிரஸின தலைவர்களில் ஒருவரான பால கங்காதர திலகரின் நெருங்கிய நண்பர்.

பாபாயணம் - 33

தீவிரவாதக் குழுவைச் சேர்ந்தவர்களின் பட்டியலில் முதலாவதாக காபர்டே இருந்தார். சுதந்திரப் போராட்ட வீரர்கள்மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்து சிறைத் தண்டனை, நாடு கடத்துதல், சொத்து பறிமுதல் செய்தல் போன்ற தண்டனைகளை ஆங்கில அரசு வழங்கிவந்தது. காபர்டேவையும் கைது செய்ய நேரம் பார்த்திருந்தது ஆங்கில அரசு.

காபர்டே தன் நண்பர்கள் மூலம் பாபாவைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தார். பாபாவின் மகிமைகள், வியத்தகு அற்புதங்கள் பற்றிக் கேள்விப்பட்ட காபர்டேவும் ஷீர்டி வந்தார். உண்மையில் ஆங்கில அரசிடமிருந்து தப்பிக்கவே அவர் ஷர்டி வந்தார்.

குற்றவியல் வழக்கறிஞராக ஒருகாலத்தில் பரபரப்பாக நிறைய வருமானம் ஈட்டிக் கொண்டிருந்த அவருக்கு இப்போது வழக்குகள் குறைந்து வருமானமும் இன்றி உடல்நலம் பாதித்திருந்தது. அவர் குடும்பத்தினர் காபர்டே மீண்டும் அமராவதிக்குத் திரும்பி வழக்கறிஞர் தொழிலை நடத்த வேண்டும் என்று விரும்பினர். ஆனால் ஆங்கில அரசு அவரைக் கைது செய்யக் காத்திருந்தது.

பாபாவால் அனைத்துத் தீமைகளையும் நீக்கித் தனக்கு நல்லது செய்ய முடியும் என்று நம்பினார் காபர்டே. பாபாவின் அருகில் அவர் மிகவும் பாதுகாப்பாக உணர்ந்தார். பாபாவின் அருளால் அவரைச் சூழ்ந்திருந்த ஆபத்து மெள்ள விலகியது. ‘காபர்டேக்கு மூளை பிசகிவிட்டது. அதனால்தான் எந்த வழக்கையும் ஏற்காமல் பாபாவின் அருகிலேயே இருக்கிறார்’ என்று ஒரு வதந்தி எங்கும் பரவியது. அந்த அளவுக்கு ஷீர்டியிலேயே காபர்டே தங்கிவிட்டார். ஷீர்டியில் தங்கிவிட்டதாலேயே அவருக்கு பாபாவின் மீது ஆத்மார்த்த பக்தி வந்துவிட்டது என்று பொருள் இல்லை. காபர்டேவின் பக்தி காரிய அனுகூலத்திற்கானது. ஆனால் திருமதி காபர்டேயோ பாபாவின் மீது ஆழ்ந்த பக்தி செலுத்தினார்.

‘என்னை நேசிப்பவர்கள்மீது என் பார்வை எப்போதும் இருக்கும்’ எனும் பாபா, திருமதி காபர்டேவின் மெய்யான பக்தியில் மகிழ்ந்தார். கணவனைப் போல் சுயநல ஆசை இன்றி உண்மையான பக்தியும் பிரியமும் கொண்ட அவளின் மனதை மதித்தார். அவள் மகனுக்கு பிளேக் நோய் ஏற்பட்டபோது அதை நீக்கி அருள் செய்தார்.

இதுவரை தரிசித்திராத சாயிபாபா திருவுருவப் படங்கள் புதிய பரிமாணங்களில்.

காபர்டேக்கு சிறிது காலத்தில் அங்கு தங்குவதில் சலிப்பு ஏற்பட்டது. பொறுமையின்றி அங்கிருந்து கிளம்பத் துடித்தார். தொழில், வருமானம், உயரிய அந்தஸ்து என்று அவர் கவனம் திரும்பியது. ஆனால் அவரை அங்கிருந்து செல்ல பாபா அனுமதிக்கவில்லை. பாபா இரண்டு விஷயங்களில் அவரை அனுக்கிரகிக்க விரும்பினார். ஒன்று, குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்படுவதிலிருந்து அவரை விடுவித்தல். மற்றொன்று, பற்று இல்லாதவராக மாற்றி ஆன்மிக நெறியில் வழிநடத்துவது. ஆனால் பல தத்துவ சாஸ்திர நூல்களை, புராண, இதிகாசங்களைப் படித்திருந்தாலும் லௌகிக வாழ்வில் பற்று உடையவராகவே திகழ்ந்தார் காபர்டே.

சாய் பாபா
சாய் பாபா
ஓவியம்: பாலகிருஷ்ணன்

திருமதி காபர்டே பாபாவின் மீது மெய்யான பக்தி செய்ததோடு அவருக்கு நைவேத்தியத்தை சமர்ப்பித்து வணங்கினார். பாபா அவரை ஆசீர்வதித்து எந்நேரமும் ‘ராஜாராம்’ என்று நாமஜபம் செய்ய உபதேசித்தார். தொடர்ந்து நாம ஜபம் செய்ததன்மூலம் அவர் ஆன்மிக நெறியில், ஆன்மிக அனுபவத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் அடைந்தார்.

அவரிடம் பாபா “ஆங்கிலேய கவர்னர் ஒரு பெரிய ஈட்டியுடன் வந்தார். நான் அவருடன் போராடி அனுப்பி வைத்தேன்” என்று சொன்னார். பாபாவின் சொற்கள் எப்போதும் மறைபொருள் வாய்ந்தவை. தன்னைச் சூழ்ந்த ஆபத்து நீங்கியது என்பதை காபர்டே பாபாவின் இந்தச் சொற்களின் மூலம் அறிந்துகொண்டார்.

மராத்தியில் ஒரு பொன்மொழி உண்டு. ‘மகான்கள் உபதேசம் செய்ய வேண்டியதில்லை. அவர்களுடன் இருந்தால் போதும். அவர்கள் பேசுவது, நடப்பது ஆகியவற்றை கவனிப்பதே மிகச் சிறந்த உபதேசம்’ என்று. திருமதி காபர்டே பாபாவை கவனிப்பதன் மூலம் மன நிம்மதியும், சாந்தியும் அடைந்தார். ஆன்மிக நெறி அவருக்கு வரமாகக் கிடைத்தது. ஆறு மாதங்கள் ஷீர்டியில் தங்கி இருந்த காபர்டேவின் நாட்குறிப்புகளே அந்த நாளைய பாபா பற்றி, ஷீர்டி பற்றி அறிந்துகொள்ள பிற்காலத்தில் உதவியாக இருந்தது.

ஆபத்து நீங்கிய காபர்டே அங்கிருந்து கிளம்பினார். ஒரு தந்தையைப்போல் அறிவுரை சொன்ன பாபாவை அவர் அதன்பிறகு சந்திக்க முயலவில்லை. ஆசை, பற்று நீங்காதவராக, அரசாங்கத்தில் உயர்ந்த அந்தஸ்து அடைய வேண்டும் என்ற ஆசையுடன் அவர் அமாராவதிக்குத் திரும்பினார். ஆனாலும் பாபாவின் மீது கொண்ட நம்பிக்கையே அவரை மீண்டும் பால கங்காதர திலகருடன் ஷீர்டிக்கு வரவழைத்தது.

அப்போது இந்திய சுதந்திரத்துக்காக மறைபொருள் ஒன்றைக் கூறினார் பாபா. அது...

(தரிசனம் தொடரும்)

வாசகர் அனுபவம்

2017-ம் ஆண்டு என் சகோதரி ஒரு இன்டெர்வியூவில் தேர்வாகியிருந்தாள். நல்ல வேலை. சென்னையில் பயிற்சி. தேவையான ஆவணங்களைத் தயார் செய்ய ஒரு வாரம்தான் இருந்தது. ஆனால் அந்த வாரம் ஆயுதபூஜையை ஒட்டி, தொடர்ந்து ஐந்து நாள்கள் விடுமுறை. எனவே தேவையான அனைத்து ஆவணங்களையும் அவசர அவசரமாகத் தயார் செய்தோம். சென்னை செல்லும் நாள் அன்று ஆவணங்களை சோதித்தபோது ஒரிஜினல் ஆவணங்களைக் காணவில்லை. தூக்கிவாரிப் போட்டது. பதற்றத்தில் எதுவுமே ஓடவில்லை. ‘சாயியே சரண்’ என்று எண்ணி அவரை தியானித்தோம். மனம் தெளிவடைந்ததுபோல் ஆனது. கடந்த நாள்களில் எங்கெல்லாம் சென்றோம் என்று யோசித்தாம். அப்போது ஸ்கேன் எடுத்த கடையிலே தவற விட்டிருக்கலாம் என்று தோன்றியது. விடுமுறை நாள்களில் கடை திறந்திருக்குமா என்று தெரியவில்லை. என்ன ஆச்சர்யம், கடை திறந்திருந்தது. அன்றுதான் பூஜை முடித்துக் கடையை மூடும்தறுவாயில் இருந்தார் கடைக்காரர். நாங்கள் பிரச்னையைச் சொன்னோம். அவர் எங்களை ஆசுவாசப்படுத்தி கடையில் சாயி படத்துக்குக் கீழ் இருந்த ஆவணங்களை பத்திரமாக எங்களிடம் தந்தார்.

- எஸ். சாயி கணேஷ், ஓசூர்.

பாபாவும் நானும்

“15 ஆண்டுகளாக நான் சாயிபாபா பக்தை. பாபா கோயிலில் எனக்குப் பிடித்த விஷயம் கிறிஸ்துவர், இஸ்லாமியர், இந்துக்களென யார் வேண்டுமானாலும் போகலாம். அந்தக் கோயிலில் நான் பார்க்கிற ஒரே விஷயம் அன்பு மட்டும்தான். என்னுடைய வாழ்க்கையி ல் நடந்த ஒரு விஷயத் தைச் சொல்கிறேன்.

ஒரு முறை நான் மிகவும் தனிமையாக உணர்ந்தேன். இந்த உலகில் எனக்கு யாரும் இல்லை, நான் யாருமற்ற மனுஷியாக வாழப்போகி றேன் என்ற பயத்துடன் பாபா கோயிலுக்குச் சென்றேன். என் நிலையை நினைத்துக் கதறி அழுதேன். அப்போது ஒருவர் என் முழங்காலைத் தொட்டு, ‘எல்லாம் சரியாகிவிடும்... சரியாகிவிடும்... கவலைப்படாதே’’ என்று ஆறுதல்படுத்திவிட்டு நகர்ந்து போனார். அதைப்போலவே இரண்டு நாளில் என் வாழ்க்கையில் எல்லா விஷயங்களும் கிடுகிடுவென மாறிப்போயின.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதுகூட நான் எதிர்பாராத ஒரு விஷயம்தான். அதில் கலந்துகொண்டபோது நிறைய பேர் என்னுடைய செயல்பாடுகளை விரும்பினார்கள். நிறைய பேருக்கு என்னைப் பிடிக்காமலும் போனது.

பாபாயணம் - 33

‘ஏன் இப்படி ஒரு வாய்ப்பை எனக்குக் கொடுத்து இதில் பல விமர்சனங்களையும் சந்திக்கவேண்டி இருக்கிறது’ என்று பாபாவிடம் சொல்லி அழுதேன். மறுநாளிலிருந்து என்னை விமர்சித்தவர்களே ‘அச்சச்சோ உங்களின் சுபாவமே இதுதானா’ என்று பாராட்டத் தொடங்கினார்கள். பிக்பாஸ் முடிந்து இத்தனை நாள்கள் ஆகிவிட்டன. என்னைத் திட்டியவர்களே ‘ஸாரி’ கேட்டு சோஷியல் மீடியாவில் மெசேஜ் அனுப்புகிறார்கள். இதெல்லாமே பாபாவின் அருளால்தான்.”

சாயிபாபா உங்கள் வாழ்க்கையில் நிகழ்த்திய அற்புதங்களை உங்கள் புகைப்படத்துடன், ஆனந்த விகடன், 757 அண்ணாசாலை, சென்னை-2 என்ற முகவரிக்கோ, saibaba@vikatan.com மின்னஞ்சலுக்கோ எழுதி அனுப்புங்கள். சிறந்த அனுபவங்கள் வெளியிடப்படும்.