
சச்சிதானந்த சத்குரு ஸ்ரீசாயிநாதரே சரணம்!
எதிர்காலத்தில் நடக்கப்போவதை பாபா நேரிடையாகத் தன் பக்தர்களிடம் சொல்லத் தயங்கியதில்லை. எனவேதான் காபர்டே பாலகங்காதர திலகருடன் பாபாவைச் சந்திக்க வந்தபோது இந்திய சுதந்திரம் பற்றிய தன் கருத்தை அவர் தயங்காமல், அதேவேளை மறைபொருளாக முன்வைத்தார்.
1916-ல் டிசம்பர் மாதம் இந்திய தேசியக் காங்கிரஸின் அகில இந்தியக் கூட்டம் லக்னோவில் நடைபெற்றது. அப்போது அதில் திலகர், மதன்மோகன் மாளவியா, யோகி சுத்தானந்த பாரதி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது நிர்வாகிகள் பேசியதை யாரும் காதுகொடுத்துக் கேட்கவில்லை. ஒரே கூச்சலும் சத்தமுமாக இருந்தது. இதனால் ஆவேசமும் கவலையும் அடைந்த சுத்தானந்த பாரதி,
“இப்படிக் கூச்சல் போட்டுக்கொண்டே யிருந்தால் சுதந்திரம் பெற முடியாது” என்று வேதனையுடன் கூறினார்.
அதைக் கேட்ட திலகர், “அப்படியானால் எப்படித்தான் சுதந்திரம் பெறுவது...” என்று கவலையுடன் கேட்டார்.
இந்தச் சிக்கலான கேள்வியை சுத்தானந்த பாரதியார் அமைதியாகச் செவிமடுத்தார். சில நிமிடங்களுக்குப் பிறகு, “நாம் யாரேனும் ஒரு மகானின் ஆசியையும் வழிகாட்டுதலையும் தீர்க்க தரிசனத்தையும் பெற வேண்டும்” என்றார்.

இதைக் கேட்டதும் திலகர், “தற்போது அப்படி யாரேனும் இருக்கிறார்களா?” என்ற கேள்வியை முன்வைத்தார். திலகரை பாபா அறிவார். பாபாவைக்குறித்துத் திலகர் அதிகம் அறிந்திருக்கவில்லை. அப்போது காபர்டே முன்வந்து பேசினார்.
“ஷீர்டியில் சாயிபாபா என்று ஒரு மகான் இருக்கிறார். எதிர்காலம் அறியும் ஞானதிருஷ்டி உடையவர். அவரிடம் சென்று கேட்டால் நிச்சயம் வழிகாட்டுவார்” என்றார் காபர்டே.
திலகர், சுத்தானந்த பாரதி, காபர்டே மூவரும் ஷீர்டி வந்தார்கள். மூவரும் குளித்துத் தயாராகி மசூதிக்கு வந்தபோது வேப்ப மரத்தடியில் அமர்ந்திருந்தார் பாபா. இவர்கள் அங்கு போனதும் புன்னகையுடன் அவர்களை வரவேற்றார். வழக்கமான உபசார வார்த்தைகள் முடிந்ததும் பாபா புன்னகையோடு, “ஆளாளுக்கு சத்தம் போட்டுப் பேசிக் கொண்டிருந்தால் சுதந்திரம் அடைய முடியாது” என்றார்.
இதைக் கேட்டதும் மூவரின் விழிகளும் உயர்ந்தன. சுத்தானந்தபாரதி வியந்து அவர் கால்களில் விழுந்து வணங்கினார். இவரை விட்டால் தம் மனத்தின் கேள்விக்கான விடையை யாரும் சொல்லமுடியாது என்று உணர்ந்து அந்தக் கேள்வியை முன்வைத்தார்.
“ இந்தியாவுக்கு சுதந்திரம் எப்போது, எப்படிக் கிடைக்கும்?”
பாபா அவர்களை அன்போடு பார்த்தார். “நீங்கள் மூவரும் இந்திய சுதந்திரம் பற்றிக் கவலைப்படுவது புரிகிறது. இறைவன் அந்த நாளுக்கான முகூர்த்தத்தைக் குறித்துவிட்டார். அந்தப் பணிக்காக ஒருவர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். அவர் அதை மிகவும் சிறப்பாகச் செய்துமுடிப்பார். நீங்கள் உங்கள் கவலைகளை விட்டு நிம்மதியாக ஓய்வு எடுங்கள்” என்றார் பாபா. இதைச் சொல்லும்போது அவர் குரலில் கனிவும் அன்பும் நிறைந்திருந்தன.

திலகர் இந்த பதிலைக் கேட்டதும் மனம் தெளிவடைந்தவராகக் காணப்பட்டார். பாபா நேரடியாகத் திலகரிடம் சில விஷயங்களைச் சொல்ல விரும்பினார்.
“உங்கள் ஆன்மிக தரிசனங்கள் ஆழமானவை. அதில் நீங்கள் இன்னும் தீர்க்கமாக ஈடுபடுங்கள். உங்களுக்கு வயதாகிக்கொண்டிருக்கிறது. நீங்கள் ஏன் ஓய்வெடுத்துக்கொள்ளக் கூடாது” என்ற கேள்வியை அவர்முன் வைத்தார் பாபா.
இதைச் சற்றும் எதிர்பார்க்காத திலகரின் மனம் குழம்பிக்கொண்டிருந்தபோது பாபா, காபர்டேவை கீதையின் பன்னிரண்டாவது அத்தியாயத்தைப் படிக்கச் சொல்கிறார். காபர்டே கீதையைத் திறந்து சத்தமாக வாசிக்கத் தொடங்கினார்.
“பக்தி யோகமே சிறந்தது. மனதை என்னிடத்தில் வைத்து, பிறரிடத்தில் அகங்காரமற்று, இன்ப துன்பங்களை சமமாக எண்ணி வாழ வேண்டும். கிடைத்ததைக் கொண்டு வாழ வேண்டும். தன்னைப் பிறர் போற்றினாலும் தூற்றினாலும் அதில் மனம் சலனமடையாமல் இருக்க வேண்டும்.
இதுவரை தரிசித்திராத சாயிபாபா திருவுருவப் படங்கள் புதிய பரிமாணங்களில்.
பக்தி ஒன்றினால் மட்டுமே இறைவனை அடைய முடியும். அதுவே சுலபமான வழி. எல்லாவற்றையும்விடப் பெரிய ரகசியம், உன் மனத்தை என்னுடையதாக்கிவிடு. எல்லாக் கர்மங்களையும் எனக்குப் பூரணமாக அர்ப்பணித்துவிட்டு என்னையே சரணடை. எவ்வுயிர்களிடத்தும் பகைமை இல்லாதவனாய், கருணை மிக்கவனாய், பக்தி மிகுந்தவனாய் இருப்பவனே என் அடியவன் என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.”
காபர்டே அந்த அத்தியாயத்தை முழுவதுமாகப் படித்து முடித்ததும் பாபா அன்புடன் திலகரிடம் கூறினார்.
“நான் உங்களுக்குச் சொல்லும் அறிவுரை இதுதான். அனைத்தையும் அவனிடம் ஒப்புவித்துவிட்டு நீங்கள் அமைதியாக இருங்கள். உங்கள் தியாகம் என்றும் வீணாகாது. நிச்சயம் சுதந்திரம் கிடைக்கும்” என்றார்.
இதைக் கேட்டதும் திலகரின் உடல் சிலிர்த்தது. மூவரும் பாபாவைப் பணிந்துகொண்டு விடைபெற்றனர். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று திலகர் அறிய மாட்டார். ஆனால் பாபா அறிந்திருந்தார். எனவேதான் பயமோ, தயக்கமோ இன்றி ‘நீங்கள் ஓய்வு எடுங்கள்’ என்று உறுதியாகக் கூறினார்.
பாபா சொன்னதைப் போலவே காந்தியின் அரசியல் வருகை இந்தியாவுக்கு சுதந்திரத்தைப் பெற்றுத்தந்தது.
(தரிசனம் தொடரும்)
வாசகர் அனுபவம்
எனக்குத் திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. மருத்துவமனை சென்று பரிசோதனை செய்தபோது இருவருக்கும் பிரச்னை ஒன்றும் இல்லை என்றாலும், செயற்கைக் கருத்தரிப்பு முறையைப் பரிந்துரை செய்தனர். கணவருக்கும் எனக்கும் வயதாகிக்கொண்டேயிருப்பதால் வேறுவழியின்றி ஒப்புக்கொண்டோம். அதனால் நாங்கள் பட்ட துன்பம் கொஞ்ச நஞ்சமல்ல. லட்சக்கணக்கில் பணம், கூடவே சிகிச்சை என்னும் பெயரில் என் உடல் ஆரோக்கியம் மிகவும் பாதிக்கப்பட்டுவிட்டது. ஒருகட்டத்தில் எனக்குப் பிள்ளையே வேண்டாம் என்று முடிவுசெய்துவிட்டேன். அப்போதுதான் எனக்கு சாயிநாதரைக் குறித்து என் தோழி கூறினாள். ஒருநாள் என்னை ஈ.சி.ஆரில் இருக்கும் கோயிலுக்கு அழைத்துச் சென்றாள். சாயிதரிசனத்தில் என் மனம் மகிழ்ந்தது. தொடர்ந்து சாயிகோயிலுக்குச் செல்ல ஆரம்பித்தேன். குடும்பத்தில் பல சுப நிகழ்ச்சிகள் நடந்தன. கணவருக்கும் பதவி உயர்வு கிடைத்தது. மிகப்பெரிய பதவியுயர்வான தாய் என்னும் பதவி அடுத்த ஆண்டிலேயே எனக்குத் தேடிவந்தது. இயல்பாகக் கருத்தரித்து சுகப் பிரசவமும் ஆனது. கசப்பாக இருந்த என் வாழ்க்கையை இனிப்பாக மாற்றிய மகான் சாயிநாதரே.
- மல்லிகா, பாலவாக்கம்
பாபாவும் நானும்
ஆழ்வார்பேட்டையில் வீடு. படித்தது மயிலாப்பூர் பி.எஸ். ஸ்கூல். தினமும் வீட்டிலிருந்து ஸ்கூலுக்கு வரும்போதெல்லாம் பாபா கோயிலைப் பார்ப்பேன். `இது ஏதோ ஒரு வட இந்தியக் கோயில் மாதிரி இருக்கே, இதற்குள் போகலாமா?’ என்று எண்ணிக்கொண்டே வந்துவிடுவேன்.

டைரக்டரான பிறகு ஒருமுறை ஈ.சி.ஆர் ரோட்டிலிருக்கும் சாயிபாபா கோயிலில் நடைபெற்ற என் நண்பரின் மகள் திருமணத்துக்குச் சென்றிருந்தேன். அந்தக் கோயில் பிரமாண்டமாகவும் அமைதியுடனும் இருந்தது. அதன்பிறகு அடிக்கடி அந்தக் கோயிலுக்குப் போக ஆரம்பித்தேன். மனதில் ஒரு நிம்மதி உண்டானது.
அங்கு பாபா போட்டோ ஒன்று உண்டு. அது நம்மையே பார்க்கிற மாதிரி இருக்கும். நீண்டநேரம் நின்று பார்த்துவிட்டு வருவேன். இந்தப் போட்டோ நமக்குக் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன். அடுத்த முறை சென்றபோது அந்தப் புகைப்படம் அங்கு இல்லை. வெளியில் இருந்த கடையில் இருந்தது. அதை விலைக்குத் தரும்படி கேட்டேன். அவரோ ‘அது விலைக்கு இல்லை’ என்று சொல்லிவிட்டார்.
அப்போது கோயிலில் பூஜை செய்யும் வட இந்தியப் பெண்மணி ஒருவர் வந்தார். `சார் என்ன கேட்கிறார்?’ என்று கேட்கவே இவரும் பதில் சொன்னார். ‘அவருக்கே கொடுத்துடுங்க’ என்று சொல்லிச் சென்றார். என் கண்களில் கண்ணீர். ‘பாபா எங்கு இருக்க ஆசைப்படுகிறாரோ அங்கு போய்விடுவார்’ என்பார்கள். இன்றுவரை என் வீட்டில் அந்தப் போட்டோவை வைத்துதான் பூஜை செய்கிறேன்.
- எஸ்.கதிரேசன்
சாயிபாபா உங்கள் வாழ்க்கையில் நிகழ்த்திய அற்புதங்களை உங்கள் புகைப்படத்துடன், ஆனந்த விகடன், 757 அண்ணாசாலை, சென்னை-2 என்ற முகவரிக்கோ, saibaba@vikatan.com மின்னஞ்சலுக்கோ எழுதி அனுப்புங்கள். சிறந்த அனுபவங்கள் வெளியிடப்படும்.