
சச்சிதானந்த சத்குரு ஸ்ரீசாயிநாதரே சரணம்!
இதுவரை தரிசித்திராத சாயிபாபா திருவுருவப் படங்கள் புதிய பரிமாணங்களில்.
அடியவர்கள் பாபாவைத் தங்கள் இல்லத்தின் சூட்சுமமான உறவினராகக் கருதுவார்கள். மனம் சோர்வடையும்போதோ, தீர்க்க முடியாத பிரச்னைகளை எதிர்கொள்ளும்போதோ ஏதோ ஒரு விதத்தில் பாபா அவற்றைத் தீர்த்து வைக்கிறார் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
ஆனாலும், சாயி ஒருபோதும் தன் நாமத்தை மட்டுமே சொல்லி ஜபம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியதே இல்லை. ‘உங்கள் மனதை எந்த நாமம் ஈர்க்கிறதோ, எந்த நாமம் உங்களுக்கு நிம்மதியளிக்கிறதோ அதையே சொல்லுங்கள். காரணம், அனைத்தும் ஒரே கடலில் சங்கமிக்கும் பல நதிகள் போன்றவை’ என்பார் சாயி.

ஆனால் சாயியின் பக்தர்களுக்கு சாயியின் நாமமே மதுரம். அதை அவர்கள் எப்போதும் தங்கள் நாவினால் தேனை ருசிப்பவர்கள்போல உச்சரித்தபடியே இருப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு பக்தர்தான் சின்ன கிருஷ்ண ராஜாசாகேப் பகதூர் என்ற ரேகே. பாபாவின் அன்புக்குரிய பக்தர். ரேகே ஷீர்டி வந்தபோது ஒருமுறை ராதாகிருஷ்ணமாயியின் வீட்டில் அமர்ந்து நாமங்களை ஜபம் செய்து கொண்டிருந்தார். பின்பு பாபாவை தரிசிக்க மசூதிக்கு வந்தபோது, பாபா அவரிடம் ‘என்ன நாமம் ஜபம் செய்தாய்...’ என்று கேட்டார்.
“உங்களுக்குத் தெரியாதா சாயி... என் தெய்வம் நீங்கள்தான்... உங்கள் நாமம்தான் என் மூச்சு’ என்று பதில் அளித்தார்.
Also Read
“அறிவேன். ஆனாலும் நான் எல்லோருக்கும் சொல்கிறேன். உங்கள் மனம் விரும்பும் எந்த தெய்வ நாமத்தையும் தயங்காமல் ஜபியுங்கள்” என்றார்.

ரேகேவுக்கு நீண்டநாள்களாகக் குழந்தையில்லை. பாபாவை மனதார வேண்டிக்கொண்டார் ரேகே. அதன்பின் அவர் மனைவி கருவுற்றார். குழந்தை பிறந்தது. குழந்தையை எடுத்துக்கொண்டு சாயியிடம் ஆசிகள் வாங்கச் சென்றனர் ரேகே தம்பதி. அப்போது பாபா ரேகேயிடம், ‘குழந்தையை பத்திரமாகப் பார்த்துக்கொள்’ என்றார். இதன் பொருள் என்ன என்று ரேகேவால் உணர முடியவில்லை.
குழந்தைக்கு ஒன்றரை வயது இருக்கும்போது அதற்கு நிமோனியா தாக்கியது. குழந்தை மிகவும் அவஸ்தைக்கு உள்ளானது. இதைக் கண்டு மனம் பொறுக்கமுடியாத ரேகே சாயியின் படத்தின்முன் குழந்தையைக் கிடத்தி பிரார்த்தனை செய்தார்.
“பாபா, இந்தக் குழந்தை உங்களின் ஆசியால் கிடைத்தது. ஆனால் இன்று அது நோயினால் துன்புறுகிறது. அதைத் தங்களிடம் ஏற்றுக்கொண்டு அதற்கு நிம்மதியைத் தாருங்கள். அது இந்த உலகில் பிறக்க நான் காரணம். எனவே அதன் கர்ம வினைகளை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதன் தவிப்பை நிறுத்துங்கள்” என்று மனமுருகி வேண்டினார்.
சிறிதுநேரத்தில் குழந்தை முகத்தில் ஒரு தெளிவு ஏற்பட்டது. அது தன் வாதையில் இருந்து வெளியேறிவிட்டதைப் போன்ற புன்முறுவல் ஒன்றை உதட்டில் வெளிப்படுத்தியது. அடுத்த கணம் ஒரு நீண்ட மூச்சுடன் அதன் ஆவி பிரிந்தது. குழந்தை இறந்த வேதனையைவிட அது துன்பத்திலிருந்து விடுபட்டதே போதும் என்றிருந்தது ரேகேவுக்கு. அதிலிருந்து இரண்டுமாதம் கழித்து பாபாவை தரிசிக்கச் சென்றார்.
“ கலங்காதே ரேகே. நீ என்னை ஏற்றுக்கொள்ள வேண்டிக்கொண்டதை நான் ஏற்றுக்கொண்டேன். அது என் இதயத்தில் எப்போதும் நித்யானந்தத்தில் இருக்கும்” என்றார். இதைக் கேட்டதும் ரேகேவுக்கு மெய் சிலிர்த்தது. “பாபா என்னை ஆசீர்வதியுங்கள்” என்று வணங்கினார்.
பாபா அவரின் பக்தியில் மகிழ்ச்சி அடைந்தது அவரின் கர்ம வினைகளைப் போக்கி ஆசி வழங்கினார். ரேகே தம்பதிக்கு அடுத்தடுத்த ஆண்டுகளில் குழந்தைகள் பிறந்து அனைவரும் நலமுடன் வளர்ந்தார்கள்.
ரேகே மற்றவர்களுக்கு பாபாவைப் பற்றிச் சொல்லும்போது, “முழுமனதுடன் பாபாவை தியானித்து பிரேமையுடன் தூய்மையான இதயத்தை அவரிடம் ஒப்படைத்துவிட வேண்டும். பின் சகல விஷயங்களையும் அவர் கவனித்துக் கொள்வார்” என்று சொல்வார். அந்த உண்மையான நம்பிக்கையும் பக்தியும் பாபாவை ரேகேயுடன் பிணைத்தது.
ரேகே ஒருமுறை தட்சிணேஸ்வரம் காளி கோயிலுக்குச் சென்றார். அவருக்கு ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சருடன் குழந்தையாய் விளையாடிய ராம்லீலா விக்ரகத்தை தரிசிக்க ஆசை. ஆனால் வழிகாட்டியோ காளிசிலை மற்றும் வேறு ஒரு பெரிய சிலையைக் காட்டி இதுதான் ராம்லீலா என்றார். ஆனால் ரேகே அதை ஏற்க மறுத்தார்.
அப்போது அங்கு வந்த ஒரு பூசாரி ‘தக்காணத்திலிருந்து வருகிறீர்களா’ என்று கேட்டு அவரைத் தன்னோடு அழைத்துச் சென்றார். பின்பு காளி மாதாவின் சிலை, சின்ன ராம்லீலா விக்ரகம் ஆகிய அனைத்தையும் காட்டி, ரேகேவை அந்த ராம்லீலா விக்ரகத்தை மடியில் வைத்துக் கொள்ளவும் அனுமதித்தார்.
ரேகேவுக்கு இவை அனைத்துமே வியப்பூட்டுவதாக இருந்தன. ரேகேயின் வியப்பைப் புரிந்துகொண்ட பூசாரி,
“நேற்று இரவு கனவில் ஒரு சாது தோன்றினார். தக்காணத்திலிருந்து ஒருவர் வருவார். அவருக்கு அனைத்து இடங்களையும் சுற்றிக்காட்ட வேண்டும் என்று உத்தரவிட்டார். அவர் சொல்லை மீறமுடிய வில்லை. அதேபோல நீங்கள் வந்தீர்கள்” என்றார்.
தனக்கு முன்பாக வந்து தன் விருப்பம் நிறைவேற வழிசெய்தது சாயிதான் என்பதில் ரேகேவுக்குத் துளியும் சந்தேகமேயில்லை.
யாத்திரை முடித்து ஷீர்டி திரும்பி ரேகே சாயியின் பாதங்களைப் பணிந்து,
“நான் எத்தனை பிறவி எடுத்தாலும் என்னைவிட்டு நீங்கள் பிரியாமல் இருக்க வேண்டும் சாயி” என்று விண்ணப்பம் செய்தார்.
ரேகே மட்டுமல்ல, சாயியின் உண்மையான அன்பை ருசித்தவர்கள் அனைவரும் கேட்கும் வரமல்லவா இது!
(தரிசனம் தொடரும்)
வாசகர் அனுபவம்
என் மனைவி தீவிர சாயி பக்தை. ஆனால், எனக்கு சாயி மேல் ஈடுபாடு இல்லாமல் இருந்தது. ஜனவரி 23-ம் தேதி, நானும் என் நண்பரும் திருச்சிக்குச் சென்றோம், அப்போது சமயபுரம் அருகில் வரும்போது, தென் ஷீர்டி எனும் சாயிபாபா கோயில் தென்பட்டது. அப்போது நண்பர், ‘இன்று வியாழன், வா கோயிலுக்குப் போயிட்டு வரலாம்’ என்றார், அவரும் சாயி பக்தர். கோயிலை முழுவதும் சுற்றிப் பார்த்துவிட்டு, அன்னதானம் நடைபெறும் இடத்துக்குச் செல்லும்போது, என் கைபேசியில், சின்னத்திரை இயக்குநர் பசும்பொன் அழைத்தார். ‘பிரபலத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு தொடருக்கு ஒரு காட்சியில் மட்டும் வந்து நடிக்க முடியுமா...’ என்று சொல்லிவிட்டு ‘அடுத்த வியாழன் ஷூட்டிங்’ என்றார். உடனே என் நண்பர், ‘பார்த்தியா எல்லாம் சாயி கோயில் வந்த நேரம்’ என்றார். எனக்குக் கண்கலங்கிவிட்டது. சாயியின் சொரூபத்தின் முன் உட்கார்ந்து மனமுருகி வேண்டினேன். சென்னைவந்து ஷூட்டிங் முடிந்து சின்னத்திரையில் என் முகத்தைப் பார்த்தபோது நான் அடைந்த சந்தோஷமே வேறு, அது ஒளிபரப்பானதும் ஒரு வியாழன். அன்று மாலையே பெரம்பலூர் சாயிபாபா கோயிலுக்கு முதல்முறையாகச் சென்று நன்றிசொல்லி வணங்கினேன். தற்போது நடிகை சாக்ஷி அகர்வால் நாயகியாக நடிக்கும் படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்.
- ஸ்வின்
பாபாவும் நானும்
``என் எழுபதாவது வயதுவரை ஷீர்டி சாயிபாபா பற்றிக் கேள்விப்பட்டிருந்தேனே தவிர பெரிதாக எதுவும் தெரியாது. சுவாமியை வணங்குவதென்றால் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் போவேன். மாரியம்மன் கோயிலுக்குப் போவேன். அவ்வளவுதான்.

2016-ம் ஆண்டு எனக்கு ஒரு விசித்திரமான ஒரு நோய் வந்தது. என் முதுகுத் தண்டுவடத்தில் பிரச்னை. தாங்க முடியாத வலி. ஆங்கில மருத்துவம் எடுத்துப் பார்த்தேன். பிசியோதெரபி போனேன் எதிலும் குணமாகவில்லை. அந்த வேளையில் என் நண்பர் ஒருவர் 'திருநெல்வேலிக்கும் திருச்செந்தூருக்கும் இடையில் ஒரு சித்த மருத்துவமனை இருக்கிறது. அங்கு சென்று சிகிச்சை பெற்றால் இந்த நோயை குணமாக்கலாம்' என்று கூறினார்.
அங்கு சென்றேன். 'நீங்கள் எங்கும் போகாமல் என்னுடைய மருத்துவமனையில் 45 நாள்கள் தங்கி இருந்தால், என்னால் உங்களை குணப்படுத்திவிட முடியும்’ என்றார் மருத்துவர். ஏற்கெனவே ஒப்புக்கொண்டிருந்த நிகழ்ச்சிகளை ஒத்திவைத்துவிட்டு சிகிச்சைக்கு உடன்பட்டேன்.
மண் சிகிச்சை, மண்பானை சமையல் என ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. ஆனாலும் உடலில் வலி இருந்துகொண்டே இருந்தது. எத்தனையோ பேருக்குத் தன்னம்பிக்கை தரும் பேச்சாளனாக எத்தனையோ மேடைகளில் பேசியிருக்கிறேன். வலியின் துன்பம் தாங்காமல் தற்கொலை செய்துகொள்ளலாமா என்றுகூட நான் சிந்தித்தேன்.
அந்த வேளையில் மதுரையில் இருந்த என் நண்பர் ஒருவர் இந்தப் புத்தகத்தை வாசியுங்கள். நிச்சயம் உங்களின் உடல் நலனில் மாறுபாடு ஏற்படும், வலியும் குறையும் என்று கூறி சாயி சத்சரிதத்தைக் கொடுத்தார். வலி இல்லாத நேரங்களில் அந்த நூலை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். எனக்குள் ஒரு நம்பிக்கை உருவானது. 45 நாள்களில் ஒட்டுமொத்தப் புத்தகத்தையும் வாசித்து முடித்தேன். வலியும் மெள்ள மெள்ளக் குறைந்தது. இன்று நலமாக இருக்கிறேன்.
பாபாவின் அருளை எண்ணி ஆச்சர்யப்பட்டேன். வாழ்க்கையின் விளிம்புக்குச் சென்ற நான் மீண்டு வந்ததெல்லாம் ஷீர்டி பாபாவின் கருணையன்றி வேறு என்னவாக இருக்கமுடியும்.
சாயிபாபா உங்கள் வாழ்க்கையில் நிகழ்த்திய அற்புதங்களை உங்கள் புகைப்படத்துடன், ஆனந்த விகடன், 757 அண்ணாசாலை, சென்னை-2 என்ற முகவரிக்கோ, saibaba@vikatan.com மின்னஞ்சலுக்கோ எழுதி அனுப்புங்கள். சிறந்த அனுபவங்கள் வெளியிடப்படும்.