மற்ற எபிசோடுகள்
Published:Updated:

பாபாயணம் - 36

பாபாயணம்
பிரீமியம் ஸ்டோரி
News
பாபாயணம்

சச்சிதானந்த சத்குரு ஸ்ரீசாயிநாதரே சரணம்!

“மனத்தை என்மேல் வைத்து, என் நாமத்தையே உச்சரித்து, அல்லும் பகலும் என் நினைவிலேயே ஆழ்ந்திருந்தால், உனக்கு வேண்டிய அனைத்தையும் செய்து, மோட்சமும் அளிப்பேன்” என்கிறார் பாபா.

கிராமமாக இருந்த ஷீர்டியை சமஸ்தானமாக மாற்றியவர் ராதாகிருஷ்ணமயி. அவரின் அர்ப்பணிப்பு கலந்த சேவையே ஷீர்டி இவ்வளவு தூரம் வளரக் காரணம். மசூதிக்கு அருகிலேயே ஒரு வீட்டில் தங்கிய மயி, அங்கு வரும் பக்தர்களுக்கு இடைவிடாமல் உணவும் நீரும் வழங்குவார்.

ராதாகிருஷ்ணமயியின் வாழ்க்கை பெருந் துயரம் நிறைந்தது. அதன் பின்னரே ‘பாபாவே தஞ்சம்’ என்று ஷீர்டி வந்தடைந்தார்.

மயியின் இயற்பெயர் சுந்தரிபாய். அஹமத் நகரில் காண்பவர் கண்படும்படி, அன்பும் இனிமையுமாய் வாழ்ந்தவர். சுந்தரிபாய் சிந்தனை என்றால் அவர் கணவர் செயல். அந்த அளவுக்கு ஒற்றுமையான வாழ்க்கை. ‘வாழ்ந்தால் சுந்தரிபோல் வாழ வேண்டும்’ என்று கிராமமே பேசியது. பல ஆண்டுகள் ஆகியும் குழந்தைப் பேறு இல்லை என்றாலும், அந்தக் கவலை இல்லாமல் உனக்கு நான், எனக்கு நீ என்று வாழ்ந்த அழகான தம்பதியர்.

யார் கண்பட்டதோ சுந்தரியின் கணவர் திடீரென்று நோய்வாய்ப்பட்டார். எவ்வளவோ வைத்தியம் செய்தும் நோய் குறையவில்லை. அப்போதுதான் பாபா பற்றிக் கேள்விப்பட்டார் சுந்தரி. ஷீர்டி சென்று வந்தவர்கள் அவரைப் பற்றி, அவரின் அற்புதங்கள் பற்றிக் கதை கதையாகச் சொன்னார்கள்.

பாபா
பாபா

“அவர் பார்வை நம்மேல் பட்ட அந்தக் கணம் நோய் விலகுகிறது. அவர் தரும் உதியை உண்டால் தீராத பிரச்னைகள் தீர்கின்றன. நீயும் அவரைச் சென்று சந்தித்து வா” என்று கூற சுந்தரிபாய் பாபாவைச் சந்திக்க வந்து, அவரின் பாதம் பணிந்து, கைகூப்பி வணங்கி நின்றார். பாபாவைப் பார்த்த அந்தக் கணம் அவரால் எதுவும் பேச முடியவில்லை. இறைவனை தரிசித்த ஆனந்தம், பூரிப்பு. என்ன கேட்பது என்று அறியாத திகைப்பு.

பாபா, முக்காலமும் உணர்ந்தவர். ஆனாலும் அதை அப்படியே சொல்லித் தன் பதம் பணிந்தவர்களின் துயரத்தை அதிகரிக்காமல் அவர்களை ஆசுவாசப்படுத்தும் வார்த்தைகளைச் சொல்பவர். அப்படித்தான் சுந்தரிபாயின் எதிர்காலமும் அவருக்குத் தெரிந்தது. துயரம் படிந்த அந்தக் காலத்தை அவளிடம் மறைமுகமாகச் சுட்டிக்காட்டினார் பாபா.

“அம்மா, தைரியமாக இரு. எந்நேரமும் திடமாக இரு. விரைவில் நீ தாய் ஆவாய்” என்று சொல்லி அனுப்பினார்.

சுந்தரிக்கு ஆனந்தம் தாளவில்லை. விரைவில் தன் கணவர் குணமடைவார் என்பதைத்தான் சாயி இப்படிச் சொல்லியிருக்கிறார் என்று நினைத்தபடி மகிழ்வுடன் அஹமத் நகர் திரும்பினார்.

ஆனால் விதி வேறு ஒன்றை அரங்கேற்றியது. சுந்தரியின் கணவர் இறந்துபோனார். எப்போதும் நம் மனம் நினைத்தது நடக்காவிடில் அதை விதி என்று ஏற்றுக்கொள்வதில்லை. கடவுள் வஞ்சித்துவிட்டார் என்றேதான் நினைக்கிறோம்.

சுந்தரி, பாபா தன்னை ஏமாற்றிவிட்டார் என்ற குமுறலுடன் தலைவிரி கோலமாக பாபாவிடம் வருகிறார்.

பாபா
பாபா
ஓவியம்: பாலகிருஷ்ணன்

“பாபா, உங்களையே நம்பி வந்த என்னை ஏமாற்றி விட்டீர்களே” என்று கதறுகிறார்.

சுந்தரிபாய் அழுது தீர்க்கும்வரை பாபா அமைதியாக இருந்தார். பின்பு, “அம்மா, விதியை வெல்ல யாராலும் முடியாது. நான் மறைமுகமாக உனக்குச் சிலவற்றைக் குறிப்பால் உணர்த்தினேன். இதில் என் பிழை என்ன?” என்று வருத்தம் தோய்ந்த குரலில் கேட்டார்.

இதுவரை தரிசித்திராத சாயிபாபா திருவுருவப் படங்கள் புதிய பரிமாணங்களில்.

சுந்தரிபாய் மனம் வருத்தத்தில் இருந்தாலும் சாயியின் சொற்களில் இருந்த கனிவு அவர் மனதை மாற்றியது.

“அம்மா, இனி நீ இந்த ஷீர்டியின் தாய். தனியாக ஒரு குழந்தை வாய்க்கவில்லை என்று வருந்தாதே... நான் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் உன்னை அம்மா என்று அழைப்பார்கள். இன்று முதல் நீ ராதாகிருஷ்ணமயி என்று அழைக்கப்படுவாய்” என்றார்.

பாபாவாலேயே ‘அம்மா’ என்று அழைக்கப்பட்ட பெருமைக்குரியவரானார் ராதாகிருஷ்ணமயி.

பாபாவின் வார்த்தைகளால் மனம் தேறிய சுந்தரிபாய், தன்னை முற்றிலும் ராதாகிருஷ்ணமயியாக மாற்றிக்கொண்டார். அனைவருக்கும் தாயாக இருப்பதற்கு வயது தடையில்லை. பிரியமும் கருணையும் இருந்தால் போதும் என்று நிரூபித்தார். ஷீர்டி சமஸ்தானமே அவரை அம்மா என்று கொண்டாடியது. ஷீர்டியில் பல விஷயங்களை மாற்றி அமைத்தார். பாபா, பக்தர்கள் பாடும் பாடல்களை ஒருங்கிணைத்து ஆரத்திப் பாடல்களாகப் பாட வைத்தார்.

பாபாவிற்கு மிகவும் பிடித்தது அன்னதானம். அதை மனமுவந்து செய்தார். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு உணவு அளித்தார். அடிக்கடி மசூதியின் தரை மற்றும் சுவர்களைக் கழுவி சுண்ணாம்பு அடித்து, சுத்தமாகப் பராமரித்தார். ராமநவமி, சந்தனக் கூடு உற்சவ நேரங்களில் இடைவிடாது எரிந்தது அவர் வீட்டின் அடுப்பு.

சித்திரை முதல் தேதியிலிருந்து ஏழுநாள்கள் நாம சப்தாகம் செய்யும் பழக்கத்தை அவரே ஆரம்பித்து வைத்தார்.

(தரிசனம் தொடரும்)

வாசகர் அனுபவம்

2017-ம் ஆண்டு பல்கலைக்கழகம் ஒன்றில் நான் துறைத்தலைவராகப் பணியாற்றிக்கொண்டிருந்தேன். ஒருநாள் வீட்டில் இருந்தபோது வாசலில் யாரோ அழைக்கும் சப்தம் கேட்டது. அங்கு ஓர் இஸ்லாமியப் பக்கிரி நின்றிருந்தார். அவர் என்னிடம், ‘உனக்கு முக்கியமான செய்தியை ஷீர்டியிலிருந்து கொண்டுவந்திருக்கிறேன்’ என்றார். நான் சாயிபக்தன்தான் என்றபோதும் நான் மேற்கொண்டு பேச விரும்பாமல் ஐம்பது ரூபாயை அவரிடம் கொடுத்து அனுப்பப் பார்த்தேன். அதை அந்த இளைஞர் வாங்கிப் பத்தாக மடித்து உள்ளங்கையில் வைத்து மூடிக் கையைத் திறந்தபோது பணம் தாயத்தாக மாறியிருந்தது. ‘இதை உன் பூஜை அறையில் வை. உனக்கு வேலை போகப்போகிறது. ஆனாலும் சாயி கருணையால் விரைவில் அதைவிட நல்ல வேலை கிடைக்கும்’ என்றார். எனக்கு அதிர்ச்சியும் ஆச்சர்யமுமாக இருந்தது. ஆனாலும் ஏதேனும் கண்கட்டுவித்தையாக இருக்கப்போகிறது என்று மீண்டும் ஐம்பது ரூபாயைக் கொடுத்துக் கிளம்பச் சொன்னேன். அவர் அதையும் முன்போல் மடித்துக் கையில் வைத்து மூடித் திறந்தபோது கையில் இரண்டு அங்குல சாயி விக்ரகம் இருந்தது. நான் பயந்துவிட்டேன். ஆனால் சாயி சொரூபம் மிக அழகாக இருந்தது. அதைக் கேட்டேன். தர மறுத்தவர், ‘பயப்படாதே, உன் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது’ என்று சொல்லி நகர்ந்தார். எனக்குப் பணியில் எந்தப் பிரச்னையும் இல்லை என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் அவர் சொன்னதுபோல அந்த மாதத்தில் ஒருநாள் காரணமேயின்றி நான் வேலையிலிருந்து துரத்தப்பட்டேன். அடுத்த ஒரு மாதம் வாழ்க்கை நரகம் போல் கழிந்தது. ஆனாலும் சாயி அனுப்பிய சொற்கள் தைரியப்படுத்தின. அடுத்தமாதம் மற்றுமொரு பல்கலைக்கழகத்தில் துணை முதல்வராகப் பணியாற்ற வருமாறு அழைப்பு வந்தது. ஏற்றுக்கொண்டேன். அப்போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. எல்லாம் சாயியின் கருணையே அன்றி வேறில்லை. ஓம் சாயிராம்.

- முனைவர். கே.என். ஸ்ரீனிவாஸ்

பாபாவும் நானும்

ருமுறை கன்னியாகுமரியில் நடைபெற்ற இலக்கியக் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டுவிட்டு பாபா கோயிலுக்குச் சென்றுவிட்டு நாகர்கோவிலில் தங்கியிருந்தேன்.

கவிஞர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன்
கவிஞர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன்

மாலையில் சென்னைக்குப் புறப்பட்டு வர கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலைப் பிடிப்பதற்காக ஓட்டலை விட்டு வெளியில் வந்தேன். என்னை அழைத்துச்செல்வதற்காக வந்த நண்பர், காரை சாலையின் மறுபுறத்தில் நிறுத்திவிட்டு, சாலையைக் கடந்து என்னை நோக்கி வந்தார். அவரின் வருகையை எதிர்நோக்கி இருந்த நானும் அவருடன் நடக்கத் தொடங்கினேன். திடீரென்று வந்த ஒரு மோட்டார் சைக்கிள் என்மீது மோதி என்னைத் தூக்கியெறிந்தது.

என்ன நடக்கிறது என்பதே எனக்குத் தெரியாத ஒரு மயக்க நிலைக்குச் சென்றுவிட்டேன். என்னுடைய கை தொங்கிப்போய்விட்டது. கழுத்திலும் லேசான காயம். இதனால் பயணத்தை ரத்து செய்துவிட்டு அங்கேயே ஏதேனும் எலும்புமுறிவு மருத்துவ மையத்தில் சேரலாம் என்று யோசித்தேன். ஆனால், என் மனைவி மற்றும் குடும்பத்தினர் இங்கு கிளம்பி வந்து தங்கியிருந்து என்னைக் கவனிக்க வேண்டும். ஒரு நிமிடம் சகலத்தையும் மறந்து பாபாவை மனத்துக்குள் நினைத்து தியானித்தேன். அடுத்த கணம் எங்கிருந்தோ மனத்துள் ஒரு துணிச்சல் பிறந்தது. ‘நான் இருக்கிறேன். பயப்படாதே’ என்று சாயி சொல்வது போலிருந்தது. சென்னைக்கே போய்விடுவோமென முடிவுசெய்தேன்.

ரயில்வே தொழிற்சங்கச் செயலாளர் நண்பர் ராஜாஸ்ரீதர் சந்தித்தார். ரயிலிலேயே நான் சிகிச்சை பெற ஏற்பாடுசெய்து பாதுகாப்பாக அனுப்பி வைத்தார். கூடவே திருநெல்வேலி, மதுரை, திருச்சி, விழுப்புரம் என ஆங்காங்கே டாக்டர்கள் குழுவையும் அனுப்பி என்னைக் கண்காணிக்க வைத்தார். நல்லவிதமாகச் சென்னை வந்து சேர்ந்தேன்.

சாயிபாபா உங்கள் வாழ்க்கையில் நிகழ்த்திய அற்புதங்களை உங்கள் புகைப்படத்துடன், ஆனந்த விகடன், 757 அண்ணாசாலை, சென்னை-2 என்ற முகவரிக்கோ, saibaba@vikatan.com மின்னஞ்சலுக்கோ எழுதி அனுப்புங்கள். சிறந்த அனுபவங்கள் வெளியிடப்படும்.