
சச்சிதானந்த சத்குரு ஸ்ரீசாயிநாதரே சரணம்!
பாபாவின் மீது அபரிமிதமான பக்தி கொண்ட மனிதர் சாந்தாராம் பலவந்த் நாஸ்னே தஹானுகர். தாலுகா அலுவலகத்தில் குமாஸ்தாவாகப் பணிபுரிந்தவர். எளிய குடும்பம். பண்பும் அன்பும் நிறைந்தவர். பிறருக்குத் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்பவர்.
அவரின் அண்ணாவுக்கு மும்பை பஜேகர் மருத்துவமனையில் சிக்கலான அறுவை சிகிச்சை ஒன்று தொண்டையில் நடைபெறவிருந்தது. அப்போது தானேவில் இருந்த சாந்தாராம் வீட்டிற்கு ஒரு சாது வந்தார். “எனக்குச் சில ரொட்டித் துண்டுகள் தர முடியுமா?” என்று கேட்டார்.
சாந்தாராமின் அண்ணி அவரை உள்ளே அழைத்து சகல பதார்த்தங்களையும் பரிமாறி உணவு படைக்கிறார். ஆனால் சாதுவுக்கு அளிக்க ஏற்றது இல்லை என்று வெண்டைக்காய்க் கூட்டை மட்டும் போடாமல் விட, சாதுவோ அதைக் கேட்டு வாங்கிச் சாப்பிடுகிறார். புறப்படும் போது அவர்களை ஆசீர்வதித்து, “அறுவை சிகிச்சை நலமாக நடைபெறும்” என்று கூறிச் செல்கிறார்.
அதே வேளையில் மும்பையில் அறுவை சிகிச்சை நடந்து முடிந்த பின் சாந்தாராம் அண்ணாவின் கட்டிலருகே ஒரு சாது தோன்றி அவரின் உடலைத் தடவிக் கொடுத்து ‘எல்லாம் சரியாகும்’ என்கிறார். இது கனவைப்போன்ற காட்சி என்றாலும் அவரால் அதை மறக்கவே முடியவில்லை. சாது சொன்னதுபோலவே அவர் குணமும் அடைகிறார்.
சில மாதங்களுக்குப் பின் ஷீர்டி சென்ற சாந்தாராம் பாபாவைக் கண்டதும் ஆச்சர்ய மடைந்தார். அந்த சாதுவை ஏற்கெனவே சந்தித்ததுபோன்ற தோற்றமும் நினைவிலாடியது. பாபா புன்னகையோடு அவரின் மனக்குழப்பத்தைத் தீர்க்க முடிவு செய்தார்.
சாந்தாராம் பாபாவின் திருப்பாதங்களைப் பணிந்துகொண்டபோது, பாபா அவரைச் சுட்டிக்காட்டி, “நான் இவன் வீட்டிற்குச் சென்ற போது, இவன் அண்ணி எனக்கு வெண்டைக்காய்க் கூட்டு போடவில்லை” என்று விளையாட்டாகச் சொல்வதுபோல் சொல்லிச் சிரித்தார். மற்றவர் களுக்கு அது புரியாத புதிர்போல இருந்தாலும், சாந்தாராமுக்கு அனைத்தும் விளங்கிவிட்டது. ‘சாயியே பரப்பிரம்மம்’ என்று தெளிந்து அவர் ஆசியோடு புறப்பட்டார்.

சாந்தாராம் தம்பதிக்கு புத்திர பாக்கியம் நிலைக்கவேயில்லை. சில குழந்தைகள் பிறந்து இறந்தன. இதுகுறித்த கவலை அவர்களை வாட்டியது. ஒருமுறை பாபாவை தரிசனம் செய்யச் சென்றபோது இருவரும் அவரின் பாதங்களைப் பணிந்து தங்களின் கோரிக்கையை முன்வைத்தனர்.
அப்போது பாபா, சாந்தாராமின் மனைவியிடம் ஒரு தேங்காயைக் கொடுத்து “தாயே, எப்போதும் என் ஆசிகள் உன்னோடு இருக்கும்” என்றுகூறி வழியனுப்பினார். சீக்கிரம் அவர்களுக்கு ஓர் ஆண்குழந்தை பிறந்தது. அதற்கு ‘கலுராம்’ என்று பெயரிட்டு வளர்த்தனர். துரதிர்ஷ்டவசமாக குழந்தை பிறந்த இரண்டே ஆண்டுகளில் சாந்தாராமின் மனைவி இறந்தார்.
கலுராமும் எட்டுவயதுவரையே வாழ்ந்தான். ஆனால் வாழ்ந்த நாள்களில் அவன் ஓர் அதிசயப் பிறவி என்பதை மெய்ப்பித்தான். கலுராம் எந்நேரமும் ‘ராம், ஹரிராம்’ என்று சொல்லிக் கொண்டே இருப்பான். அவன் சொல்லும் செயலும் வயதை மீறியதாக இருந்தன.
ஒருமுறை கிராமபோன் தட்டு ஒன்றைப் பார்த்துக்கொண்டிருந்த அவன் சாந்தாராமை அழைத்து “இதில் உள்ள நாய் என்ன செய்கிறது?” என்று கேட்டான்
சாந்தாராமுக்கு அந்தக் கேள்வியே அதிசயமாக இருந்தது. சிறு குழந்தைதானே என்று நினைத்து “அது பாட்டு கேட்கிறது” என்று பதிலளித்தார்.
அந்த பதிலைக் கேட்டுச் சிரித்த குழந்தை, “இல்லை, இல்லை. அது தன் எஜமானரின் சொல்லைக் கருத்தூன்றிக் கேட்கிறது. அமைதியாய், ஆழ்ந்த கவனத்துடனும் மன உறுதியுடனும் கேட்கிறது. நாமும் அதேபோல் இருந்தால் இறைவனின் குரலைக் கேட்கலாம்” என்றார்.
இந்த பதிலைக் கேட்டதும் சாந்தாராம் ஆச்சர்யப்பட்டார். எத்தனை பெரிய விஷயத்தை இவன் இத்தனை எளிமையாகச் சொல்லிவிட்டான் என்று வியந்தார். ஆனால் அதைத் தொடர்ந்து அவன் செய்த செய்கை அவரை மேலும் சிலிர்த்துப்போக வைத்தது.
அந்தப் படத்தில் உள்ள நாயைப்போலவே அவனும் அமர்ந்துகொண்டு “நானும் இந்த நாயைப்போல பாபாவின் குரலைக் கருத்தூன்றிக் கேட்கிறேன்” என்றான். இதைக் கேட்டதும் சாந்தாராமுக்கு கலுராம் சாதாரணக் குழந்தை அல்ல என்பது புரிந்தது. கலுராம் பாபாவின் ஆசீர்வாதத்தால் பிறந்தவன். அதனால் அவரின் பரிபூரண ஞானம் அவனிடம் பொருந்தியிருப்பதை அறிந்துகொண்டார்.
சாந்தாராமின் குடும்பத்தார் அனைவரும் பாபாவின் தீவிர பக்தர்கள் ஆனார்கள். ஒருமுறை சாந்தாராம் குடும்பத்துடன் ஷீர்டி சென்றார். அப்போது சாந்தாராமின் மாமியார் சாப்பாடு தயார் செய்ய வெங்காயம் நறுக்கினார். அங்கே அருகில் தங்கியிருந்த ஆசாரம் நிறைந்த தாதா கேல்கரோ, வெங்காயத்தால் தன் ஆசாரம் கெட்டுவிட்டதாக சாந்தாராமின் மாமியாரைத் திட்டினார். இதைக் கேட்ட சாந்தாராம் மாமியாரின் மனம் புண்பட்டது.

அன்று கேல்கரின் பேத்திக்குத் தாங்கமுடியாத கண்வலி. வெங்காயச் சாறு கொண்டு மருந்து தயாரித்துக் கண்களில் கட்டிவிடச் சொன்னார் பாபா. ஆனால் தன்னிடமிருந்த வெங்காயத்தைத் தராமல் சாந்தாராமின் மாமியாரிடம் சென்று வெங்காயத்தை வாங்கிக் கொள்ளும்படி சொல்கிறார்.
கேல்கர் தன் தவற்றை உணர்ந்துகொள்ள வேண்டும். அதேநேரம் சாந்தாராமின் மாமியார் மன்னிக்கும் மனம் படைத்தவரா என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும் என்று பாபா இந்தச் சோதனையைச் செய்தார். இருவரும் அவர் அருளாலே இதில் தேறுகிறார்கள்.
(தரிசனம் தொடரும்)
வாசகர் அனுபவம்
நான் நீண்ட காலமாக சாயி பக்தை. சாயி என்னைப் பல நேரங்களில் துன்பங்களிலிருந்து காத்திருக்கிறார். ஒரு வியாழக்கிழமை. மனமும் உடலும் மிகவும் அசதியாக இருந்தது. காலை உணவுக்குப் பின் திடீரென்று மயக்கம் ஏற்பட்டது. நாடித்துடிப்பு குறைந்துவிட்டது. உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைத்தார்கள். ஆம்புலன்ஸில் சுயநினைவோடு பயணிப்பது எவ்வளவு வலிமிகுந்தது என்று அன்று புரிந்துகொண்டேன். ஆஸ்பத்திரி சென்றதும் பரிசோதனை செய்து ஹார்ட் அட்டாக் என்றார்கள். அறுவை சிகிச்சை செய்து பேஸ் மேக்கர் வைக்க வேண்டும் என்றார்கள். என்னருகே இருந்த கணவர் மற்றும் என் சிறு மகளைப் பார்த்தேன். அவர்கள் முகத்தில் கவலை படிந்திருந்தது. நான் மனதார சாயியை வேண்டினேன். “சாயி எப்படியாவது வீட்டுக்குக் கொண்டு சேர்த்துவிடு” என்று வேண்டிக்கொண்டேன். அதன்பின் கவலைப் படுவதை விட்டுவிட்டேன். 5 நாள் ஆஸ்பத்திரி வாசம். ஆபரேஷன் எல்லாம் முடிந்ததும் புதிதாகப் பிறந்துபோல இருந்தது. ஆட்டோவில்தான் வீட்டுக்குத் திரும்பினேன். சாயிநாதனே வைத்தியராய் வந்து என் நோய் தீர்த்ததாக நம்புகிறேன். சாயி ஒருபோதும் நம்பியவர்களைக் கைவிடமாட்டார்.
- ஜெயந்தி சுந்தரம், சென்னை
பாபாவும் நானும்
``சினிமாவில் வாய்ப்பு கிடைத்து நல்ல பெயர் எடுப்பது என்பது அவ்வளவு ஈஸியான விஷயம் கிடையாது. எனக்கு முதல் படத்திலே அந்த வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதற்குப் பிறகு நிறைய போராட்டங்கள். நான் நடித்த 'குத்தூசி' எனும் இயற்கை விவசாயம் பற்றிய படம் பல சிரமங்களுக்குப் பிறகு கடந்த ஆண்டு வெளியானது.

என் நண்பர் வீரமணி என்பவர்தான் முதன்முதலாக என்னை வளசரவாக்கத்திலிருக்கும் `விஸ்வரூப தரிசன சாயிபாபா' கோயிலுக்கு அழைத்துக் கொண்டு போனார். 'உன் மனத்திலிருக்கும் குழப்பங்கள் கவலை களையெல்லாம் என்னிடம் விட்டுவிடு' என்கிற மாதிரி பாபா என்னைப் பார்த்தார். ஒவ்வொரு வியாழக்கிழமையும் பாபா கோயிலுக்குப் போக ஆரம்பித்தேன். அங்கு மூன்று வேளை நடைபெறும் பூஜைகளிலும் நான் கலந்துகொண்டிருக்கிறேன்.
ஒரு முறை பாபா கோயிலுக்குப் போயிருந்தபோது பிரசாதக் கூடையைச் சுமந்து வந்து எல்லோருக்கும் விநியோகம் செய்யும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. பாபா கோயிலில் வழங்கப்படும் பிரசாதம் ரொம்பப் பிரமாதமாக இருக்கும். பாபா உணவு பரிமாறுவதிலும் மற்றவர்களின் பசியை ஆற்றுவதிலும் மிகுந்த ஆர்வம் உள்ளவர். அதைச் செய்யக்கூடிய ஒரு பாக்கியம் எனக்குக் கிடைத்தது. பாபாவுக்கு மனதார நன்றி சொன்னேன்.
மறுநாள் `காலா' படத்தில் ரஜினி சாருக்கு மகனாக நடிக்கக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இது முழுக்க முழுக்க பாபாவின் அருள்தான். அந்தப் படத்தின் கேரக்டர் எனது திரையுலக வாழ்வில் ரொம்ப முக்கியமானது. இன்னொரு நல்ல பெரிய பிரேக்குக்காகக் காத்திருக்கிறேன். பாபா அருள் கண்டிப்பாக என்னை நல்ல இடத்தில் உட்கார வைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
சாயிபாபா உங்கள் வாழ்க்கையில் நிகழ்த்திய அற்புதங்களை உங்கள் புகைப்படத்துடன், ஆனந்த விகடன், 757 அண்ணாசாலை, சென்னை-2 என்ற முகவரிக்கோ, saibaba@vikatan.com மின்னஞ்சலுக்கோ எழுதி அனுப்புங்கள். சிறந்த அனுபவங்கள் வெளியிடப்படும்.