
சச்சிதானந்த சத்குரு ஸ்ரீசாயிநாதரே சரணம்!
மன அமைதி முக்கியம் என்று சொல்லும் பாபாவே சில வேளைகளில் தன் அமைதி குலைந்து கோபத்தின் உச்சிக்குச் செல்வதை அவர் பக்தர்கள் கண்டிருக்கிறார்கள். அப்போது அதன் காரணம் என்னவென்று தெரியாமல் பக்தர்கள் திகைத்துப் பின்வாங்குவதும் உண்டு. பாபா கோபமாக இருக்கும் வேளையில் அவரை அருகில் நெருங்க யாருக்கும் துணிவு வராது.
ஞானிகளின் கோபம் நேரடியான காரணங்களுக்காக நிகழ்வதில்லை. மனிதர்கள் கண்களுக்குத் தெரிபவற்றையே காண்கிறார்கள். ஆனால் மகான்களோ மனிதர்களைச் சூழ்ந்திருக்கும் தீய சக்திகளையும் காண்கிறார்கள். மனிதர்களின் மீது அவர்கள் கொண்டிருக்கும் அதீத அன்பின் காரணமாக அவற்றை அவர்கள் கோபித்து விரட்டுகிறார்கள். இதைப் புரிந்துகொள்வதற்கு மகான்களின் மீதான பரிபூரண சரணாகதியும் நம்பிக்கையும் அவசியம். நார்கே என்னும் பக்தர், பாபா இப்படி இயல்புக்கு மாறாகக் கோபப்படுவது கண்டு அவரைத் தவறாக நினைத்ததுண்டு. ஆனால் பாபாவைப் புரிந்துகொள்ள ஆரம்பித்தபின் அவரின் கோபங்களில் உள்ள நியாயத்தையும் அன்பையும் புரிந்துகொள்ள ஆரம்பித்தார்.

பி.வி.தேவ் என்பவர் ஒருமுறை பகவத் கீதையின் விளக்கமான ஞானேஸ்வரி என்னும் மராத்திய நூலினைப் பாராயணம் செய்ய விரும்பினார். ஆனால் ஒவ்வொரு முறையும் அமரும்போது ஏதோ ஒரு தடங்கல். அவர் மனதில் ஒரு சலிப்பு. பாபாவிடம் வந்து அவரின் சம்மதம் பெற்றுப் பாராயணம் செய்தால் இந்தத் தடங்கல் நீங்கும் என்று நினைத்தார். அதேபோன்று பாபா இருக்கும் இடம் வந்து பாராயணம் செய்ய முயன்றார், முதல் இரண்டு நாள்கள் பாபா அவரிடம் எதுவும் சொல்லவில்லை. அவரிடம் தினசரி தட்சிணை கேட்டு வாங்கினார். ஒருநாள் பாபா மிகுந்த கோபத்துடன் “ஏன் என் கந்தையைத் திருடுகிறாய்?” என்று கேட்டார். இதைக் கேட்ட தேவ் வியப்படைந்தார். அவருக்கு பாபாவின் இந்தக் கோபமான வார்த்தைக்கு அர்த்தம் என்ன என்று புரிந்துகொள்ள முடியவில்லை. பாபா தன்னைத்தான் அப்படிக் கேட்கிறாரா என்கிற சந்தேகமும் தோன்றியது. பாபா கொஞ்சம் அமைதியாகி மீண்டும் தட்சிணை கேட்டார். தேவ் பணிவுடன் அதை சமர்ப்பித்தார்.
அதை ஏற்றுக்கொண்ட பாபா முதல்முறையாக “ஞானேஸ்வரியைப் பாராயணம் செய்து வா” என்று வாய்மலர்ந்தார். அந்த நிமிடம் முதல் தேவ் மனத்தில் அமைதி கூடியது. பாபா கடிந்துகொண்டது தன்னுள் இருந்து அமைதியைக் கெடுத்த ஒரு தீய சக்தியையே என்று அவர் நம்பினார். அதன்பின் அவரால் ஞானேஸ்வரியை எந்தவிதத் தடங்கலும் இல்லாமல் பாராயணம் செய்ய முடிந்தது.
இதுவரை தரிசித்திராத சாயிபாபா திருவுருவப் படங்கள் புதிய பரிமாணங்களில்.
காக்கிபுவா என்பவர் நாசிக் நகரில் ஒரு தர்ம சத்திரம் கட்டிக்கொண்டிருந்தார். அதற்குத் தேவையான பணம் கிடைக்காமல் கட்டட வேலை நின்றுபோனது. மகான்களின் ஆசி இருந்தால் அந்த வேலை முடிவடையும் என்று தோன்றியது அவருக்கு. ஷீர்டி வந்து சாயியை சந்தித்து ஆசிபெற விரும்பினார். பாபாவை தரிசிக்க மசூதிக்கு வந்தார்.
அவர் உள்ளே நுழைந்ததும், பாபா அவரைத் தகாத வார்த்தைகளால் கடுமையாகத் திட்டினார். அவரிடம் கோபப்பட்டார். அங்கு இருந்தவர்கள் கொஞ்சம் வியப்படைந்தனர். ‘யாரோ ஒரு புதுமனிதன், அவரை பாபா இப்படித் திட்டுவானேன்’ என்று குழம்பினர். ஆனால் காக்கிபுவா அப்படி நினைக்கவில்லை. பாபாவின் சொற்கள் அவருள் பெரிய நிம்மதியைக் கொடுத்தன. அவர் தன்னோடு கொண்டுவந்த பெரும் பாரம் நீங்குவதைப் போல நினைத்தார். தன்னைப் பிடித்திருந்த துரதிர்ஷ்டம் நீங்குவது போன்ற எண்ணம் மனதில் உருவானது. பாபாவை வணங்கி, பின் ஊர் போய்ச் சேர்ந்தார். ஊருக்குப் போனதுமே அவருக்கு வரவேண்டிய பணம் மொத்தமும் வந்து சேர்ந்தது. கட்டட வேலை நிறைவாக முடிந்தது.
பாபாவின் கோபங்களெல்லாம் தன் பக்தர்கள் மீது அல்ல, அவர்களைச் சுற்றிச் சூழும் தீய சக்திகளின் மீதுதான் என்பதை ஆணித்தரமாக நிரூபித்தது ஷாமாவிடம் அவர் கோபப்பட்ட நிகழ்வு.
ஒருமுறை ஷாமா நந்தவனத்தில் பூக்கள் பறித்துக்கொண்டிருந்தபோது ஒரு நாகம் தீண்டியது. விஷப்பூச்சிகள் தீண்டினால் கண்டோபா ஆலயத்திற்கு எடுத்துச் செல்வதுதான் அப்போதைய வழக்கம். ஆனால் ஷாமா ‘என்னை பாபாவிடம் கொண்டு போங்கள்’ என்று கூற, அவரைக் கொண்டுவந்து பாபாவின் முன்னால் கிடத்தினார்கள்.
பாம்புக் கடியோடு வந்து கிடத்தப்பட்டிருக்கும் தன் பக்தனைக் கண்டு பாபா கடுமையாகத் திட்ட ஆரம்பித்தார். வசவுகளினூடே, “மேலே இருந்து கீழே இறங்கி வா, ம் உடனடியாக வெளியே போ” என்ற சொற்கள் வந்து கொண்டிருந்தன.
பாம்பு தீண்டி மரணத்தின் வாசலில் நிற்கும் ஒருவனைப் பார்த்து யாரேனும் இப்படிப் பேசினால் அவர் மனம் என்ன நினைக்கும்... ஆனால் ஷாமா அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவேயில்லை. ‘சாயி நீயே கதி’ என்று மனத்தில் சாயி நாமம் சொல்லிக்கொண்டிருந்தார்.

சிறிது நேரத்தில் பாபாவின் கோபம் தணிந்ததுபோல் தோன்றியது. அமைதியானவர் ஷாமா அருகே வந்து அமர்ந்து அவர் வாயில் உதியைப் போட்டார். “இனி உனக்கு ஒன்றும் இல்லை. நீ பிழைத்துவிட்டாய்” என்றார்.
“வீட்டுக்குச் செல். படுத்துத் தூங்காதே, நடமாடிக்கொண்டு இரு” என்று அறிவுரைகள் கூறி அனுப்பிவைத்தார். ஷாமாவுக்கு அன்று மாலைக்குள் அனைத்தும் சரியாகிவிட்டது. பின்னாளில் ஷாமா, `‘அன்று `மேலிருந்து கீழிறங்கி வெளியே போ’ என்று திட்டியது என்னை அல்ல, என் உடம்பில் ஏறியிருந்த விஷத்தைத்தான் பாபா அவ்வாறு கடிந்துகொண்டார்’’ என்று கூறி மகிழ்ந்தார்.
வாசகர் அனுபவம்
என் வீட்டை ஒரு வணிக நிறுவனத்திற்கு வாடகைக்கு விட்டிருந்தேன். அவர்கள் அந்த வீட்டைச் சரிவரப் பராமரிக்கவில்லை. மேலும் பக்கத்து வீடுகளிலிருந்தும் புகார்கள் வந்தன. இந்த நிலையில் என் மகன் குடும்பத்தோடு வெளிநாட்டிலிருந்து வரவிருந்தான். நான் அந்த வணிக நிறுவன உரிமையாளரைச் சந்தித்து எனக்கு வீடு தேவைப்படுவதைச் சொல்லி வீட்டைக் காலி செய்து தருமாறு கேட்டேன். ஏறக்குறைய ஆறு மாதங்கள் ஆகியும் அவர்கள் காலி செய்யவில்லை. ஒரு வியாழக்கிழமை சாயி கோயிலுக்குச் சென்றுவிட்டு அந்த அலுவலகத்திற்குச் சென்றேன். அன்று அதிசயமாக அலுவலக வரவேற்பரையில் மிகப்பெரிய சாயி படம் இருந்தது. நான் உள்ளே சென்று அவரைச் சந்தித்து, “சார், உங்கள் அலுவலக வரவேற்பரையில் சாயியின் படம் பார்த்தேன். பாபாவின் வாசகம் ஒன்று உங்களுக்குச் சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. ‘நம்பிக்கையோடு கேளுங்கள், பொறுமையோடு காத்திருங்கள், கேட்டது கிடைக்கும், கிடைத்தது நிலைக்கும்’ என்கிறார் சாயி என்றேன். சிறிது நேரம் என்னையே பார்த்துக்கொண்டிருந்த அவர், என்ன தோன்றியதோ, எனக்குக் கைகொடுத்து விட்டு, ‘சார், இந்த மாதம் கடைசி நாள் காலி செய்கிறேன்’ என்று சொல்லி, மேலாளரை அழைத்து ஆவன செய்யுமாறு கூறிவிட்டு எனக்கு நன்றி கூறினார்.
- எம் .டி. கிருஷ்ண மூர்த்தி. பாண்டிச்சேரி
பாபாவும் நானும்
ஷீர்டி சாயி பாபாவுக்கும் எனக்குமான தொடர்பு முப்பது ஆண்டுகளாக இருந்துவருகிறது. என்னுடைய சகோதரி ஒருவர் பாபா கோயிலுக்கு என்னை முதன்முதலில் அழைத்துச் சென்றார். உண்மையில் என் தாயாருக்கு அடுத்த இடத்தில் வைத்து ஷீர்டி சாயியைப் பார்க்கின்றேன்.

நிகழ்ச்சிக்காக வெளியூர்களுக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கும்போது டிராஃபிக் ஜாம், கார் பிரச்னை எனப் பல காரணங்களால் விமானப் பயணம் கேள்விக்குறியாவதுண்டு. அதுபோன்ற வேளைகளிலெல்லாம் நான் ‘சாயி ராம்’ என பாபாவை பிரார்த்தனை செய்வேன். அன்றைய தினம், அந்த விமானம் இரண்டு மணி நேரம் தாமதமாக வந்து புறப்படும் என்று விமான நிலையத்திலிருந்து அறிவிப்பு வெளியாகும்.
சமீபத்தில் பாபா நிகழ்த்திய முக்கியமான அற்புதத்தைப் பாருங்கள். நூறு ஆண்டுகளில் ஒருமுறைகூட சாத்தப்படாத ஷீர்டி பாபா கோயில் நடை கடந்த ஜனவரி 18 - ம் தேதி ஒரு பிரச்னையால் மூடப்பட்டது. அதேநாள் காலை 10.00 மணிக்கு திருச்சி, சமயபுரம் அருகில் இருக்கும் அக்கறைப்பட்டியில் புதிதாகக் கட்டப்பட்ட ஷீர்டி சாயிபாபா கோயிலில் பாபாவின் கண்கள் திறக்கப்படுகின்றன. ஜனவரி 20 - ம் தேதி காலை 10.15 மணிக்கு அங்கு கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது. சரியாகக் காலை 11 மணிக்கு ஷீர்டியில் பக்தர்களுக்காகக் கோயில் மீண்டும் திறக்கப்படுகிறது.
எப்படிப்பட்ட அதிசயம் பாருங்கள். அங்கு கோயில் பூட்டப்படும் நிலையில் இங்கு அவரின் கண்கள் திறக்கப்படுகின்றன. கும்பாபிஷேகமும் நடந்து முடிந்தது என்றால் என்ன பொருள்... தென்மாவட்டங்களில் இருப்பவர்களுக்காக ஷீர்டி பாபா பிரத்யட்சமாக இங்கு எழுந்தருளியிருக்கிறார் என்பதுதானே. ஜனவரி 20-ல் இருந்து சரியாக 48 நாள் மண்டல பூஜை நடைபெற்று முடிந்ததும் இங்கே லாக்டௌன் தொடங்குகிறது. எந்தவிதத் தடையும் இல்லாமல் கும்பாபிஷேகப் பணிகள் முடிவடைந்தன. இவையெல்லாம் பாபாவின் ஆசி இல்லாமல் முடியாது
சாயிபாபா உங்கள் வாழ்க்கையில் நிகழ்த்திய அற்புதங்களை உங்கள் புகைப்படத்துடன், ஆனந்த விகடன், 757 அண்ணாசாலை, சென்னை-2 என்ற முகவரிக்கோ, saibaba@vikatan.com மின்னஞ்சலுக்கோ எழுதி அனுப்புங்கள். சிறந்த அனுபவங்கள் வெளியிடப்படும்.