மற்ற எபிசோடுகள்
Published:Updated:

பாபாயணம் - 41

பாபாயணம்
பிரீமியம் ஸ்டோரி
News
பாபாயணம்

சச்சிதானந்த சத்குரு ஸ்ரீசாயிநாதரே சரணம்!

ருமுறை பாபா தன் பக்தர் ஒருவரை நோக்கி, “நீ செல்லும் வழியெங்கும் அமைதியை, உற்சாகத்தை, மகிழ்ச்சியை எடுத்துக்கொண்டு போ. உன்னுடன் நான் வந்து எல்லையற்ற அமைதியும் நிறைந்த ஆனந்தமாகிய மோட்சத்தையும் அளிப்பேன்” என்பார். இந்த உபதேசம் ஒருவருக்குச் சொன்னதல்ல. சாயியைச் சரணடைபவர்கள் அனைவருக்குமானது.

சோல்கர், தானேவில் சிவில் கோர்ட்டில் தற்காலிக ஊழியர். சொற்ப சம்பளம், மிகவும் எளிமையான வாழ்க்கை. ஆனாலும் பக்திமான். தனக்கு ஒரு நாள் நல்வாழ்க்கை உண்டாகும் என்று நம்பிக்கையோடு வாழ்ந்தார்.

தானேவில் உள்ளது கௌபீனேஷ்வர் திருக்கோயில். ஒருமுறை சாயியின் பரம பக்தரும் சாயியின் புகழைப் பரப்புவதைத் தன் வாழ்வாகவும் கொண்ட தாஸ்கணு மகராஜ் அங்கு விஜயம் செய்தார். சோல்கர் அன்று கோயிலுக்கு வழிபாடு செய்யச் சென்றார். தாஸ்கணு சாயியின் புகழைப் பாடுவதைக் கேட்டவர் அங்கேயே மெய்ம்மறந்து உட்கார்ந்துவிட்டார். பாபாவை இதுவரை தரிசித்திராத சோல்கருக்கு பாபாவின் மீது பக்தி உண்டாயிற்று. ஷீர்டியில் வாசம் செய்யும் அந்த மகான் தன் துயர்களை நிச்சயம் நீக்குவார் என்று நம்பத் தொடங்கினார். அந்தக் கணத்திலேயே சாயியை மனதில் இருத்திப் பிரார்த்தனை செய்துகொண்டார்.

“பாபா, நான் என் குடும்பத்தைச் சரியாகப் பராமரிக்க முடியாத நிலையில் உள்ளேன். இலாகாவுக்கு உரிய தேர்வுகளை எழுதி, நான் தேர்ச்சி அடைந்து, நிரந்தர உத்தியோகம் பெற்றால் என் பொருளாதாரம் உயரும். என் குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற முடியும். சாயி, நீங்கள்தான் அந்தத் தேர்வுகளை நல்ல முறையில் நான் எழுதி வெற்றிபெற அருள வேண்டும். அவ்வாறு நிகழ்ந்தால், நான் ஷீர்டி வந்து உங்கள் பாதங்களைப் பணிந்துகொள்கிறேன். உங்கள் நாமத்தைச் சொல்லிக் கற்கண்டு விநியோகம் செய்கிறேன்” என்று பிரார்த்தனை செய்து கொண்டார்.

பரிபூரணமாக சரணாகதி அடைந்து தொழுது கொண்டவர்களுக்கு பாபாவின் அருள் எப்போதும் கிடைக்கும். சோல்கரும் பாபாவின் அருளுக்குப் பாத்திரமானார். முயன்று கற்று, தேர்வு எழுதினார். தேர்வில் வெற்றி பெற்றார். அவருக்குப் பணி நிரந்தரம் ஆனது.

பிரார்த்தனை செய்து கொண்டபடி ஷீர்டிக்குச் செல்ல வேண்டும் என்று தீர்மானித்தார் சோல்கர். ஆனால் சோல்கரின் வருமானம் வீட்டின் செலவுகளுக்கே சரியாக இருந்தது. சோல்கர் எங்கெல்லாம் சிக்கனமாக இருந்து பணத்தைச் சேர்க்கலாம் என்று யோசிக்கத் தொடங்கினார். அவசியச் செலவுகளுக்கே பற்றாக்குறை இருக்கும்போது சிக்கனம் என்று எதில் கைவைப்பது என்று தெரியாமல் திண்டாடினார்.

பாபாயணம்
பாபாயணம்

கடைசியாக ஓர் உபாயத்தைக் கண்டுபிடித்தார். ‘உயிர்வாழ உணவு அவசியம். ஆனால் சுவை அவசியமில்லையே.’ சோல்கர் ஓர் இனிப்புப் பிரியர். இந்தச் சூழலில் இனிப்பு ஆடம்பரமானது என்று நினைத்தார். தன் உணவிலும் தேநீரிலும் இனி சர்க்கரை சேர்த்துக்கொள்ள வேண்டாம் என்று தீர்மானித்தார். சர்க்கரைக்கு ஆகும் பணத்தைச் சேமிக்கத் தொடங்கினார். சீக்கிரமே ஷீர்டி பயணம் மேற்கொள்வதற்கான பணம் சேர்ந்துவிட்டது. சாயியை தரிசனம் செய்யும் ஆவலோடு புறப்பட்டு ஷீர்டி வந்து சேர்ந்தார்.

இதுவரை தரிசித்திராத சாயிபாபா திருவுருவப் படங்கள் புதிய பரிமாணங்களில்.

பாபா பாதங்களில் விழுந்து பணிந்துகொண்டார். தான் காணிக்கையாகக் கொண்டு வந்திருந்த தேங்காயை சமர்ப்பித்தார். எடுத்துவந்திருந்த கற்கண்டுகளை அங்கிருந்த வர்களுக்கு, சாயியின் நாமத்தைச் சொல்லிக்கொண்டே விநியோகித்தார். பின்பு பாபாவுக்கு அருகே வந்தார். ‘சாயியின் தரிசனத்தால் தன் வாழ்க்கையே மாறியது’ என்று மகிழ்ச்சியுடன் கூறி அவரை வணங்கினார்.

அனைத்தையும் புன்னகையோடு பார்த்துக்கொண்டிருந்த பாபா, தன் அருகில் இருந்த உதவியாளரை அழைத்து,

“சோல்கருக்கு சர்க்கரை அதிகமாகச் சேர்க்கப்பட்ட ஒரு தேநீரைக் கொடுங்கள்” என்று கூறினார்.

பாபாயணம்
பாபாயணம்
ஓவியம்: பாலகிருஷ்ணன்

சோல்கர் மனமுருகிப்போனார். தனக்கு மட்டுமே தெரியும் என்று நினைத்துக்கொண்டிருந்த ஒரு ரகசியத்தை பாபா குறிப்பால் உணர்த்தியதும் அவரால் கண்ணீர் சிந்தாமல் இருக்க முடிவில்லை. ‘சாயி அறியாத ரகசியம் என்று ஒன்று இருக்க முடியாது’ என்பதையும் ‘தன் பக்தர்கள் படும் கஷ்டங்களை அவர்கள் சொல்லித்தான் அறிந்துகொள்ள வேண்டும்’ என்கிற அவசியமும் அவருக்கு இல்லை என்பதையும் புரிந்து கொண்டார்.

“என்முன் பக்தியுடன் உங்கள் கரங்களை நீட்டினால் அதை நான் விடாமல் பற்றிக் கொள்வேன். நான் இங்கே இருந்தாலும் ஏழ்கடலுக்கு அப்பால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்பதை என்னால் அறிய முடியும். உங்களது இதயமே எனது இருப்பிடம். சகல ஜீவராசிகளின் இதயத்துள்ளும் நான் இருக்கிறேன். நீங்கள் கவலைப்படாது அனைவரையும் நேசியுங்கள்” என்ற பாபாவின் சொற்களைக் கேட்டு பக்திப்பரவசத்தில் நெகிழ்ந்தார் சோல்கர்.

சோல்கருக்கு மட்டுமல்ல, அவரைச் சரணடையும் அனைவரின் துன்பங்களையும் அவர் தீர்க்கிறார். அப்போது மட்டுமல்ல, இப்போதும் அவர் அப்படியே செய்கிறார். நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்று மட்டுமே, அது பரிபூரண சரணாகதி.

(தரிசனம் தொடரும்)

வாசகர் அனுபவம்

நான் வேலை தேடி அலையும் காலத்தில்தான் பாபாவைப் பற்றித் தெரிந்துகொண்டேன். என் நண்பன் பாபாவின் தீவிர பக்தன். பாபா கோயிலுக்கு வரும்படி என்னை அழைத்துக்கொண்டேயிருப்பான். பல நாள்கள் மறுத்துவந்த நான், ஒரு நாள் அவன் திருப்திக்காகப் போய்வருவோம் என்று போனேன். அன்று வியாழக்கிழமை. கோயிலில் நல்ல கூட்டம். நூற்றுக்கணக்கான மக்கள் வந்து சாயியைத் தொட்டு வணங்கிச் செல்வதைக் கண்டேன். இதுபோன்று வேறு எந்தக் கோயிலிலும் நான் கண்டதில்லை. அவர்கள் அவரை தெய்வம் என்று எண்ணாமல் தங்கள் வீட்டுப் பெரியவர்போல நடந்துகொள்வதைக் கண்டேன்.

sai baba
sai baba

அந்த நிமிடம் நாமும் ஏன் சாயியை மனதார வணங்கக் கூடாது என்று தோன்றியது. மனதார வேண்டிக்கொண்டேன். அடுத்த வாரமே எனக்கு நல்ல வேலை கிடைத்தது. அன்று முதல் இன்றுவரை சாயியே என்னை வழிநடத்துகிறார்.

- நந்தகுமார், விருகம்பாக்கம்.

பாபாவும் நானும்

ஷீர்டி சாயிபாபா கோயிலுக்கு நான் சிறுவயதில் என் அம்மா அப்பாவுடன் போயிருக்கிறேன். தரிசனம் முடித்த பிறகு, அன்றைய இரவு ஷீர்டியிலேயே தங்கினோம். அது விவரிக்க முடியாத அழகான அனுபவம். பிறகு ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பாபா கோயிலுக்குப் போனேன். சென்னையிலிருக்கும்போது வியாழக்கிழமை இரவு நேரங்களில் பக்தர்களுக்குத் தொந்தரவு இல்லாத வகையில் மயிலாப்பூர் சாய்பாபா கோயிலுக்குச் சென்று பாபாவை வணங்கிவிட்டு வருவேன். பாபாவின் தரிசனம் ஓர் அழகான, அற்புதமான, பரவசமான அனுபவம். மனதில் இருந்த கவலைகள், குழப்பங்களெல்லாம் அந்த நிமிடத்தில் காற்றாகப் பறந்துபோய்விடும். 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26-ம் தேதி மயிலாப்பூரில் இருக்கும் பாபா கோயிலுக்குச் சென்று என்னுடைய எதிர்கால வாழ்வை எண்ணி பாபாவை வணங்கினேன். ``பணம், புகழ் எல்லாம் ஓரளவு வந்துவிட்டன.

நடிகை நமீதா
நடிகை நமீதா

இனி நல்ல கணவர் வாழ்க்கைத் துணையாக அமைய வேண்டும். இந்தப் பொறுப்பு முழுவதும் உங்களுடையது. அதனால் நீங்கள்தான் அவரை எனக்கு அடையாளம் காட்ட வேண்டும்'' என்று அவரிடம் ஒப்படைத்துவிட்டேன். அன்றிலிருந்து சரியாகப் பத்தாவது நாள் செப்டம்பர் மாதம் 6-ம் தேதி என் நண்பரின் வீட்டு விழாவில் வீரேந்திர சௌத்ரி என்னும் வீராவைச் சந்தித்தேன். பிறகு இருவரும் பழகி நல்ல நண்பர்களாகி அவரே என் வாழ்க்கைத் துணையாகவும் ஆனார். பாபாவிடம் வைக்கும் பிரார்த்தனைகளின் மகிமையே இப்படித்தான். தாய் தன் குழந்தைகள் கேட்பதைப் பரிவோடு நிறைவேற்றுவதுபோல் அவற்றை நிறைவேற்றுவார். இப்போதுகூட அரசியலில் எனக்குப் புதிய பொறுப்புகள் கிடைத்திருக்கின்றன. எல்லாம் பாபாவின் அருள்தான். `மனிதநேயம் எங்கும் மலரச் செய்யும் வகையில் சிறப்பாகப் பணிபுரிவதற்கு பாபா எனக்கு அருள்புரிவார்' என்று பெரிதும் நம்புகிறேன். ஓம் ஸ்ரீ சாய்ராம்.

சாயிபாபா உங்கள் வாழ்க்கையில் நிகழ்த்திய அற்புதங்களை உங்கள் புகைப்படத்துடன், ஆனந்த விகடன், 757 அண்ணாசாலை, சென்னை-2 என்ற முகவரிக்கோ, saibaba@vikatan.com மின்னஞ்சலுக்கோ எழுதி அனுப்புங்கள். சிறந்த அனுபவங்கள் வெளியிடப்படும்.