மற்ற எபிசோடுகள்
Published:Updated:

பாபாயணம் - 42

பாபாயணம்
பிரீமியம் ஸ்டோரி
News
பாபாயணம்

சச்சிதானந்த சத்குரு ஸ்ரீசாயிநாதரே சரணம்!

விலே பார்லேவைச் சேர்ந்த ராமச்சந்திர போர்க்கர் என்பவரின் மனைவி சந்திராபாய். போர்க்கர் பொறியியல் சம்பந்தமான வேலை செய்பவர் என்பதால் அடிக்கடி வெளியூர்களுக்குச் சென்று வருபவர். அந்த நாள்களில் சந்திராபாய் தன்னை முழுமையாக இறை வழிபாட்டில் ஈடுபடுத்திக்கொள்வார். அப்படி ஒரு முறை போர்க்கர் ஒரு பாலம் கட்டும் வேலை தொடர் பாகப் பண்டரிபுரம் போக வேண்டியிருந்தது.

சந்திராபாய் ஷீர்டியில் வாழும் சாயிபாபாவின் மகிமைகளைக் கேள்விப்பட்டிருந்தார். கணவரிடமும் அனுமதிபெற்று ஷீர்டி புறப்பட்டார். போர்க்கர் சாயி குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறாரே தவிர அவரைப் பார்த்ததில்லை. ஆனாலும் மனைவியின் விருப்பத்துக்கு சம்மதித்தார்.

ஷீர்டி வந்து சாயியை தரிசனம் செய்த உடனேயே ‘இவரே என் தெய்வம்’ என்னும் அற்புத உணர்வினைப் பெற்றார் சந்திராபாய். சாயியின் பார்வையில் இருந்த கருணை அவரைச் சிலிர்க்க வைத்தது. சாயி தன் கரம் நிறைய உதியை அள்ளி சந்திராபாய்க்கு வழங்கினார்.

பாபாயணம் - 42

சந்திராபாய்க்கு அந்த சந்நிதியிலிருந்து புறப்பட மனமேயில்லை. அங்கேயே சில நாள்கள் தங்கலாம் என்று முடிவு செய்தார். அங்கிருந்த ராதாகிருஷ்ணமயியின் வீட்டிலேயே தங்கினார். தினமும் சாயி தரிசனம், பஜனை, தியானம் என அவள் வாழ்க்கை கழிந்தது. ஒரு சில மாதங்கள் சென்றிருக்கும். பாபா, சந்திராபாயை அழைத்து, “நீ உடனடியாக பண்டரிபுரம் போ” என்றார்.

சந்திராபாய்க்கோ சாயியின் சொல்லே வேதம். உடனே பண்டரிபுரம் கிளம்பினார். துணைக்கு இருவரை பாபா அனுப்பிவைத்தார். மூவரும் பண்டரிபுரம் போனார்கள். போர்க்கர் வேலை செய்யும் நிறுவனத்துக்குச் சென்று விசாரித்தனர். ஆனால் போர்க்கர் தன் வேலையை விட்டுவிட்டுச் சென்றுவிட்டதாகச் சொன்னார்கள்.

சந்திராபாயும் அவருக்குத் துணைக்கு வந்தவர்களும் பண்டரிபுரத்தின் ரயில் நிலையத்தில் எங்கு போவது என்று தெரியாமல் திகைத்துப்போய் நின்றனர். அப்போது அங்கு ஒரு பக்கீர் வந்தார். கலங்கிய விழிகளோடு இருந்த சந்திராபாயை நோக்கி, “கலங்காதே மகளே, உன் கணவர் இங்கிருந்து தொண்டில் சென்றுவிட்டார். நீ உடனடியாக அங்கு சென்றால் அவரைச் சந்திக்கலாம்” என்றார்.

பாபாயணம் - 42

சந்திராபாய் அவர் சொல்வதைக் கேட்டதும் புதுத்தெம்பை அடைந்தார். ஆனால் அதேவேளையில் இங்கிருந்து தொண்டில் செல்ல ரயில் கட்டணம்கூடத் தன் கைவசம் இல்லை என்பதை உணர்ந்து வருந்த ஆரம்பித்தார். இதை உணர்ந்துகொண்ட அந்த பக்கீர் தானே தொண்டில் செல்வதற்கான ரயில் டிக்கெட்டை வாங்கி அவர் கையில் கொடுத்தார். பயணத்தின் ஊடாக சந்திரா பாய் நிகழ்ந்தவற்றை அசை போட்டுக்கொண்டே வந்தார்.

ரயில், தொண்டில் ரயில் நிலையத்தை அடைந்தது. சந்திராபாயும் ஷீர்டி நண்பர்களும் ரயிலிலிருந்து இறங்கினர். வண்டியிலிருந்து இறங்கியதும் சந்திராபாய் கண்ட காட்சி அவரை ஒருகணம் அசைவின்றி நிறுத்தியது. அவர் கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது. காரணம், எதிரே போர்க்கர் நின்று கொண்டிருந்தார். மனைவியை அன்போடு கரம்பற்றி அழைத்த போர்க்கர், கண்ணீர் சிந்தும் தன் மனைவியைத் தேற்றினார்.

இதுவரை தரிசித்திராத சாயிபாபா திருவுருவப் படங்கள் புதிய பரிமாணங்களில்.

ஏன் வேலையை ராஜினாமா செய்தீர்கள்... ஏன் பண்டரிபுரத்தை விட்டு இங்கு வந்தீர்கள்... நான் இங்கு வருவது தெரிந்தா அல்லது தெரியாமலா இங்கு வந்து நிற்கிறீர்கள் என்று போர்க்கரிடம் கேட்க சந்திராபாய்க்குப் பல கேள்விகள் இருந்தன. ஆனால், கேட்கமுடியாத படிக்கு உணர்வு பூர்வமான நிலையில் இருந்தார் அவர்.

“சந்திராபாய், என்னைக் கண்ட ஆச்சர்யத்தில் அப்படியே நின்றுவிட்டாயா... நான் சொல்லப் போவதைக் கேட்டால் இன்னும் என்ன ஆவாய்...” என்று சொல்லி அவளை அழைத்துக்கொண்டு ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்தார்.

ஓவியம்: பாலகிருஷ்ணன்
ஓவியம்: பாலகிருஷ்ணன்
ஓவியம்: பாலகிருஷ்ணன்

“நேற்று இரவு நான் உறங்கப் போனேன். அப்போது என் முன்பாக ஒரு பக்கீர் தோன்றினார். அவர் என்னிடம் ஆவேசமாக, ‘நீ என் அன்னையை ஏன் உதறிவிட்டு வந்தாய்...’ என்று கேட்டார். என்னால் அவர் சொல்வதன் பொருளை அறிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் அவரே ‘இந்த ரயிலில் இந்தப் பெட்டியில் இந்த நேரத்தில் அவள் வருகிறாள். அவளை நீ வரவேற்கத் தயாராக இரு’ என்று சொல்லிப் போனார். அவர் சொற்படி விடியும்வரை விழித்திருந்து இங்குவந்து காத்திருந்தேன். நீயும் வந்தாய்” என்றார் போர்க்கர்.

பிறகு போர்க்கர் தங்கியிருந்த வீட்டுக்குச் சென்றார்கள். சந்திராபாய் தன் பெட்டியைப் பிரித்து அதில் உள்ளவற்றை வெளியே எடுத்து வைத்தாள். பெட்டியில் சாயியின் படம் ஒன்று இருந்தது. அதை எடுத்து அங்கிருந்த மேடை ஒன்றில் வைத்தாள்.

அதைப் பார்த்துக்கொண்டிருந்த போர்க்கர் அருகில் வந்து அந்தப் படத்தை வாங்கிக் கூர்ந்துபார்த்தார்.அடுத்த கணம், “சந்திரா, யார் இவர்... நேற்று என்முன் தோன்றி உன் வருகையைச் சொன்னவர் இவர்தான்” என்றார்.

சந்திராபாயின் ஆன்மா சிலிர்த்தது. அன்பில் கண்கள் கசிந்தன. சொற்கள் வெளியே வராமல் தடுமாறின. அந்தப் படத்தை வாங்கித் தன் கண்களில் ஒற்றிக்கொண்டார்.

“என்ன ஆனது சந்திரா... யார் இந்தத் துறவி?”

“இவர்தான் நான் வணங்கும் ஷீர்டி சாயிநாதன்” என்று சொல்லி சந்திராபாய் ஷீர்டியின் திசை நோக்கி வீழ்ந்து வணங்கினாள்.

(தரிசனம் தொடரும்)

வாசகர் அனுபவம்

நான் மும்பையில் பணிசெய்துகொண்டிருந்தபோது அங்கிருக்கும் சாயிபாபா கோயில் வழியாகத்தான் தினமும் போய்வருவேன். ஆனால் உள்ளே போக மனம் வராது. ஒருமுறை தமிழ்நாட்டிலிருந்து என் ஆசிரியை ஒருவர் மும்பை வந்திருந்தார். ‘ஷீர்டி போக வேண்டும், துணையாக வரமுடியுமா?’ என்று கேட்டார். ஆசிரியை என்பதால் மறுக்க முடியவில்லை. உடன் சென்றேன். தரிசனமும் முடிந்தது. அப்போதே மனதில் ஏதோ ஒரு மாற்றம் நிகழ்ந்தது. திரும்பிவரப் பேருந்துக்காகக் காத்திருந்தோம். அப்போது ஒரு சிறுமி என் அருகே வந்து சாயி படம் ஒன்றைக் காட்டி ‘20 ரூபாய்தான் அண்ணா, வாங்கிக்கொள்’ என்றாள். நான் ‘வேண்டாம்’ என்றேன். சிறிது தூரம் போன அந்தப் பெண் மீண்டும் திரும்பிவந்து என்கையில் அந்தப் படத்தைத் தந்துவிட்டுக் காசுகூட வாங்காமல் போய்விட்டாள். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. மும்பை வந்து அந்தப் படத்தை ஃப்ரேம் செய்து என் பூஜை அறையில் வைத்தேன். அன்று முதல் என் வாழ்க்கையே மாறிவிட்டது. ஏராளமான நன்மைகள் நடக்க ஆரம்பித்தன. இன்று நான் இருக்கும் நல்ல நிலைக்கு சாயியின் அருளாசியே காரணம்.

- சீனிவாசன், திருநெல்வேலி

பாபாவும் நானும்

“வத்தலக்குண்டுக்குப் பக்கத்தில் நிலக்கோட்டைதான் என் சொந்த ஊர். சினிமா ஆசையில் ஊரை விட்டுச் சென்னைக்கு வந்துட்டேன். பல சினிமா கம்பெனிகள் ஏறி இறங்கினேன். கிட்டத்தட்ட பன்னிரண்டு வருடங்கள். எங்கேயும் வாய்ப்பு கிடைக்கலை. வயிற்றுப் பிழைப்புக்காக கார் கழுவுவது முதல் மூட்டை தூக்குவதுவரை என்னென்ன வேலைகள் உண்டோ அத்தனையையும் செய்தேன். கையில் காசில்லாமல் பலமுறை கோயம்பேட்டு மார்க்கெட்டில் தங்கியிருக்கிறேன். வீட்டில் உள்ளவர்கள் எவ்வளவோ சொல்லிப் பார்த்தாங்க. எனக்கொரு பிடிவாதம் சினிமாதான்னு இருந்துட்டேன்.

பாபாயணம் - 42

இந்த நேரத்துலதான் ‘முண்டாசுப்பட்டி’ டைரக்டர் அறிமுகமானார். அப்போ அவர் திரைப்படத்துக்கு முயற்சி பண்ணிக்கிட்டிருந்தார். அவரை அடிக்கடி போய்ப் பார்ப்பேன். சாலிகிராமத்தில் அவர் தங்கியிருந்த அறைக்குப் பக்கத்தில்தான் ஷீர்டி சாயிபாபா கோயில் இருக்கு. அவரைப் பார்க்கப் போகும்போதெல்லாம் பாபாவை தரிசனம் பண்ணிட்டு, கொஞ்சநேரம் உட்காந்திருப்பேன். அப்போதெல்லாம் மனம் கொஞ்சம் அமைதி அடையும். சீக்கிரம் நாமும் நல்ல நிலைக்கு வருவோம்ங்கிற நம்பிக்கை ஏற்படும்.

முண்டாசுப்பட்டியில் நல்ல ரோலில் நடிக்க வாய்ப்பு கிடைச்சுது. அந்தப்படம் வெற்றிபெறணும்னு பாபாவை வேண்டிக்கிட்டேன். படமும் வெற்றிபெற்றதுடன் எனக்கும் நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது.

அதிலிருந்து பாபா கோயிலுக்கு வியாழக்கிழமைதோறும் போக ஆரம்பிச்சேன். பாபாவின் அருளால் கிட்டதட்ட நான் 30 படங்கள் வரைக்கும் நடிச்சிட்டேன். பாபாவை யார் வேண்டுமானாலும் வணங்கலாம். பக்தி செய்யலாம். அந்த எளிமை பாபா கோயிலில் எனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயம். அதுதான் என்னை அவரிடம் கொண்டு போய்ச் சேர்த்தது. எப்போதுமே அவர் ஏழைகளிடம் கலந்து இருப்பார். ஏழைகளுக்கு எது செய்தாலும் அது பாபாவுக்கு செய்வதுதான். பாபாவை நாம் உண்மையாக நம்பினால் அவர் நம் கூடவே இருந்து சின்னச்சின்ன பிரச்னைகளைக்கூடத் தீர்த்து வைப்பார்.

- எஸ்.கதிரேசன்

சாயிபாபா உங்கள் வாழ்க்கையில் நிகழ்த்திய அற்புதங்களை உங்கள் புகைப்படத்துடன், ஆனந்த விகடன், 757 அண்ணாசாலை, சென்னை-2 என்ற முகவரிக்கோ, saibaba@vikatan.com மின்னஞ்சலுக்கோ எழுதி அனுப்புங்கள். சிறந்த அனுபவங்கள் வெளியிடப்படும்.