
சச்சிதானந்த சத்குரு ஸ்ரீசாயிநாதரே சரணம்!
நானா சாந்தோர்க்கர் வேதாந்தத்தில் மிகுந்த ஈடுபாடுள்ளவர். அவர் கீதையை விளக்கங்களுடன் படித்திருந்தார். அதுகுறித்து அவரிடம் ஓர் அந்தரங்கமான பெருமையும் இருந்தது. நல்லவரும் ஞானியுமான நானாவுக்கு அது தேவையற்ற துர்குணம் என்று நினைத்தார் பாபா. அந்த உணர்வை அவரிடமிருந்து அகற்றி அவரை ஞானத்தின் பாதையில் செலுத்த விரும்பினார். ஒருமுறை நானா பாபாவின் காலைப் பிடித்துவிட்டபடி கீதையின் ஸ்லோகங்களை முணுமுணுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது பாபா, “நானா, நீ என்ன முணுமுணுக்கிறாய்” என்று கேட்டார்.
“கீதையின் ஸ்லோகங்கள்” என்று நானா பெருமையோடு சொன்னார்.
“எங்கே அதைச் சொல்.”
சொன்னார்.
“சரி, அதன் பொருளையும் கூறு நானா.”
“சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து, குருவைக் கேள்வி கேட்டு, அவருக்குச் சேவைபுரிந்து, ஞானம் என்பதைக் கற்றுக்கொள். பிறகு முழுமுதலான உண்மையைப் பற்றித் தத்துவம் அறிந்த ஞானிகள் உபதேசம் செய்வார்கள் என்பதுதான் இதன் பொருள்.”
“நானா, இதன் பொதுவான அர்த்தத்தைக் கேட்கவில்லை. நீ இதைப் பதம்பதமாகப் பிரித்துப் பொருள் கூறலாமே...”
நானாவுக்கு இப்போது பெருமை தலைக்கு ஏறியது. பாபாவுக்கே கீதையின் பொருளை விளக்கப்போகிறோம் என்ற நினைப்பே அவருக்கு மகிழ்வை ஊட்டியது. மேலும் ஷீர்டி போன்ற சின்ன கிராமத்தில் இருக்கும் பாபா சம்ஸ்கிருதத்தின் இலக்கணம் குறித்து அறிந்திருக்க நியாயமில்லை என்பதால் நாம் சொல்வது அவசியம் என்றும் நினைத்தார்.

“பாபா, ப்ரணிபாதம் என்றால் நமஸ்காரம் செய்வது என்று பொருள்.”
“ஓ, அப்படியா... இந்தப் பதத்தில் பாதம் என்றால் என்ன? ப்ரணிபாதம் என்றால் என்ன?”
“பாதம் என்றாலும் ப்ரணிபாதம் என்றாலும் ஒரே பொருள்.”
“ஓ அப்படியா... அப்படி என்றால் வியாசர் ஒரு சொல்லைச் சொல்ல அநாவசியமாகச் சில எழுத்துகளைச் சேர்த்து எழுதுவானேன்...”
நானாவை இந்தக் கேள்வி திடுக்கிட வைத்தது.
“சரி நானா, ‘ப்ரஸ்ன’ என்ப தற்கும், ‘பரிப்ரஸ்ன’ என்பதற்கும் வேறுபாடு உள்ளதா?”
இரண்டுக்குமே ‘கேள்வி கேட்பது’ என்பதுதான் பொருள் என்று நினைத்துக் கொண்டிருந்தார் நானா. ஆனால் அப்படியில்லை என்பது பாபா இப்படிக் கேட்டதுமே புரியத்தொடங்கியது. நானா தன் பெருமையின் உச்சியிலிருந்து சறுக்கத் தொடங்கினார்.
இதுவரை தரிசித்திராத சாயிபாபா திருவுருவப் படங்கள் புதிய பரிமாணங்களில்.
அந்த ஒரே ஒரு ஸ்லோகத்தை மட்டுமே குறித்து பாபா தொடர்ந்து கேள்விகளை எழுப்பிக் கொண்டேயிருந்தார்.
நானாவுக்கு ஒருபுறம் தன் ஆணவம் குறித்த அவமானமும் பாபாவின் சம்ஸ்கிருத ஞானம் குறித்த பெரும் ஆச்சர்யமும் ஏற்பட்டது.

“நானா, இந்த ஸ்லோகம் எப்படி ஒரு சீடன் மெய்யனுபவத்தை அறியத் தன் குருவை அணுக வேண்டும் என்பதை விளக்குகிறது. ஒரு சீடன் தனது உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் முழுதுமாக அர்ப்பணித்து குருவை அணுக வேண்டும். அதுவும் முழுமையான சமர்ப்பணம். இதையே ‘ப்ரணிபாதம்’ என்று குறிப்பிடுகிறது. அடுத்த பதம் ‘பரிப்ரஸ்னா.’ சீடன், குருவிடம் கேள்வி கேட்க வேண்டும். தேவையற்ற, முக்தியடைவதற்கு உதவாத கேள்விகளை குருவிடம் கேட்கத் தேவையில்லை. அவரிடம் கேட்டுத் தெளிவு பெற வேண்டிய மெய்ஞ்ஞானம் குறித்த கேள்விகளை மட்டுமே கேட்க வேண்டும். அதுவும் நன்கு தெளிவு பெறும்வரை கேட்க வேண்டும். இதுவே அதன் பொருள்.”
பாபா அந்த அத்தியாயத்தை விரிவாக விளக்க, அதில் மெய்ம்மறந்துபோனார் நானா. தனக்குச் சகலமும் தெரியும் என்ற அவரின் செருக்கு அன்றோடு அகன்றது.
(தரிசனம் தொடரும்)
வாசகர் அனுபவம்
எங்கள் குடும்பமே பாபா பக்தர்கள். 20 வருடங்களுக்கு முன்பு ஒரு நிலம் வாங்கலாம் என்று முடிவுசெய்தோம். அப்போது தொலைக்காட்சியில் வந்த ஒரு ரியல் எஸ்டேட் விளம்பரம் பார்த்து அவர்களைத் தொடர்புகொண்டோம். ஊருக்கு வெளியே, ஆனால் மிகவும் கம்மியான விலை. வழக்கமாக வீட்டில் ஒரு பெரியவரிடம் சொல்வதுபோல சாயியிடம் சொல்லிவிட்டுத்தான் எதையும் செய்வோம். ஆனால் எப்படியோ இந்தமுறை மறந்துவிட்டோம். பத்திரப் பதிவு நாளும் வந்துவிட்டது. பத்திரப் பதிவுக்குக் கிளம்பும்போது சாயியை வணங்கிவிட்டுப் புறப்பட்டோம். செல்லும் வழியில் ஆட்டோ விபத்துக்குள்ளாகிவிட்டது. உடன் வந்த எங்கள் மாமாவுக்குக் கையில் காயம் ஏற்பட ஆஸ்பத்திரிக்கு ஓடினோம். பத்திரப்பதிவு அன்று கேன்சலானது. பிறகு ஒரு நல்ல நாள் பார்த்து முடிவுசெய்யலாம் என்று சொல்லிவிட்டோம். அடுத்தவாரமே அந்த நிறுவனம் மீது புகார் ஒன்று செய்தித்தாளில் வந்தது. உஷார் ஆனோம். நிலம் வாங்குவது குறித்துப் பிறகு சொல்கிறோம் என்று சொல்லிவிட்டோம். அடுத்த ஆறுமாதத்தில் அந்த நிறுவனம் வாடிக்கையாளர்களை ஏமாற்றிவிட்டு இழுத்து மூடிவிட்டார்கள். ஆயிரம் ரூபாய் அட்வான்ஸோடு போனது. அது நாங்கள் சாயியிடம் உத்தரவு கேட்காமல் செய்ததற்கான அபராதம் என்று நினைத்துக்கொண்டோம். அடுத்த ஆறுமாதத்தில் தெரிந்தவர் மூலம் நல்ல இடம் கிடைத்தது. சாயி நமக்கு வரும் தீமைகளைத் தடுப்பதோடு நல்லவற்றையே நமக்குத் தருவார் என்பதற்கு நாங்களே சாட்சி.
- சந்தோஷ், சென்னை
பாபாவும் நானும்
பவானி அருகே இருக்கும் குமாரபாளையம் கிராமம் எங்கள் சொந்த ஊர். அப்பாவுக்கு வட இந்தியா சென்று ஜவுளி விற்பனை செய்வதுதான் தொழில். ராஜஸ்தான், பீகார், ஒடிசா, மகாராஷ்டிரா என்று பல மாநிலங்களுக்கும் செல்வார். அப்படி அவர் சென்றுவரும்போதெல்லாம், காசி அன்னபூரணி படம், பூரி ஜெகந்நாதர் படம், பண்டரிபுரம் பாண்டுரங்கன் படம் என, போகும் ஊர்க் கோயில்களின் படங்களை வாங்கி வந்து வீட்டில் மாட்டுவது வழக்கம்.

நான் மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, ஷீர்டி சாயி பாபாவின் படத்தை வாங்கி வந்து மாட்டினார். பல சுவாமிகளின் படங்களுக்கு மத்தியில் சாயிபாபாவின் படமும் இருந்தது. இதை எங்கள் வீட்டுக்கு வந்தவர்கள் பார்த்துவிட்டு, ஊர் முழுவதும் சொல்லிவிட்டார்கள். ‘இந்து தெய்வங்களுக்கு மத்தியில் ஓர் இஸ்லாமியப் பெரியவரின் படத்தையும் வைத்து, இவர் வழிபடுகிறார். இது சரியல்ல' என்று ஊர்ப் பஞ்சாயத்தைக் கூட்டி `இப்படி பூஜை அறையில் ஓர் இஸ்லாமியரின் படத்தை வைக்கலாமா' என்று சர்ச்சையைக் கிளப்பினார்கள். அதில் அப்பாவுக்கு ஐந்து ரூபாய் அபராதம் விதித்தார்கள். அந்தக் காலத்தில் ஐந்து ரூபாய் என்பது இப்போது கிட்டத்தட்ட ஆயிரம் ரூபாய் மதிப்பு. அப்பா அபராதம் கட்டிவிட்டார். சாயிபாபாவின் படத்தை எடுக்கும்படி கூறினார்கள். `நான் அபராதத் தொகையைக் கட்டிவிட்டேன். அதனால் எடுக்கமுடியாது' என்று கூறிவிட்டார். அப்படி வைராக்கியமாக எங்கள் இல்லத்திலும் உள்ளத்திலும் வந்து குடியமர்ந்தவர் ஷீர்டி சாயிபாபா.
நான் வளர்ந்து பெரியவனானதும் அப்பாவுடன் தொழிலைக் கற்பதற்காக ஒரு முறை பண்டரிபுரம் சென்றேன். அப்படிப் போகும்போது சாயிபாபா கோயிலுக்குக் கூட்டிக்கொண்டு போகும்படி கேட்டேன். அங்கிருந்து 60 கி.மீ தொலைவில் இருக்கிறது என்று கூறி அழைத்துச் சென்றார். அப்போது ஷீர்டி மிகச் சிறிய கிராமம். பெரிய அளவில் பக்தர்கள் கூட்டம் இல்லை. ஆனாலும் நம்பிக்கையோடு வரக்கூடிய மனிதர்கள் இருந்தனர்.
இப்போதும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள பாபா கோயிலுக்குப் போவது வழக்கம். நடிகரான பின் ஷீர்டிக்கு நான் பலமுறை சென்று வந்திருக்கிறேன்.”
சாயிபாபா உங்கள் வாழ்க்கையில் நிகழ்த்திய அற்புதங்களை உங்கள் புகைப்படத்துடன், ஆனந்த விகடன், 757 அண்ணாசாலை, சென்னை-2 என்ற முகவரிக்கோ, saibaba@vikatan.com மின்னஞ்சலுக்கோ எழுதி அனுப்புங்கள். சிறந்த அனுபவங்கள் வெளியிடப்படும்.