
சச்சிதானந்த சத்குரு ஸ்ரீசாயிநாதரே சரணம்!
“இந்த வலியை என்னால் தாங்க முடியவில்லை. இதற்குப் பதிலாக நான் இறந்தே போய்விடலாம் போலிருக்கிறது. முன்வினைகளின் பயனாக இதை நான் அனுபவிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் பாபா நினைத்தால் இந்த வலியைப் போக்க முடியும். அவரிடம் சென்று என் வேதனையைக் கூறுங்கள்” என்று தீட்ஷித்திடம் புலம்பினார் டாக்டர் பிள்ளை.

டாக்டர் பிள்ளை, பாபாவின் விருப்பமான அடியவர். அவருக்கு நரம்புச் சிலந்தி நோய் வந்து வாட்டியது. பார்க்காத வைத்தியம் இல்லை. ஆனாலும் குணமாகவில்லை. அப்போதுதான் அவர் இவ்வாறு புலம்ப ஆரம்பித்தார். டாக்டர் பிள்ளையின் கோரிக்கையை தீட்ஷித் பாபாவின் முன் சமர்ப்பித்தார். பாபா ஒரு கணம் சிந்தனையில் ஆழ்ந்தார். பின்பு தன் திருவாய் மலர்ந்தார்.
“அவர் ஏன் அப்படிப் புலம்ப வேண்டும்... மனிதர்களின் முன்வினைகளைத் தீர்க்கத்தானே நான் இங்கு இருக்கிறேன்... யார் என்னைச் சரணடைந்து வேண்டுகிறார்களோ அவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நலன்களை அளிப்பதுதானே என் வேலை. அப்படியிருக்க, என்னை அறிந்தும் அவர் தன் சாவை விரும்புவது ஏன்... யாராவது அவரை முதுகில் சுமந்து இங்கே கொண்டு வாருங்கள். வினைகளின் தொல்லைகளைக் கட்டாயம் களைந்துவிடலாம்” என்றார் பாபா.
பாபாவின் சொற்கள், செயல்கள் சில சமயங்களில் புரிந்துகொள்ள முடியாதவை; மறைபொருளானவை. அவரிடம் தம் நோய் தீர வேண்டிக்கொண்டவர்களுக்கு அவர் தரும் சிகிச்சைகள் மாறுபட்டவை. சில விநோதமாகவும் இருக்கும். ஆனால், அவற்றால் அவரின் பக்தர்கள் மிரள்வது இல்லை. டாக்டர் பிள்ளையைச் சுமந்துகொண்டுவந்து அங்கு போட்டார்கள். டாக்டர் எப்போது வந்தாலும் அமரும் இடத்தில் அவர் அமர வைக்கப்பட்டார்.
“பாவ், நீ இங்கேயே அமைதியாக இரு. உனக்கு ஒரு ரகசியம் சொல்கிறேன். உண்மையான சிகிச்சை என்பது என்ன தெரியுமா... அது நம் முன்வினைகளின் பலனை அனுபவித்துத் தீர்ப்பதாகும். இப்போது அதைத் தீர்க்காவிட்டால் மற்றுமொரு பிறவியில் நீ இதைவிட அதிகமாக அனுபவிக்க வேண்டியிருக்கும். எனவே நமக்கு விதிக்கப்பட்ட இன்பதுன்பங்களை நாம் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால், உன்னை அப்படியே நான் கைவிடவும் போவதில்லை. இறைவனின் கருணை உன்மேல் விழும்வரை பொறுத்திரு” என்றார் பாபா. பிள்ளை மீண்டும் தன் நோய் குறித்தே பாபாவிடம் பேசினார். “பாபா, நானா சாகேப் ஒரு பேண்டேஜ் போட்டார். ஆனால் அது எந்தப் பலனையும் தரவில்லை. எனக்கு எவ்வித நிவாரணமும் கிடைக்கவில்லை” என்றார் டாக்டர் பிள்ளை.
“பிள்ளை, நான் உனக்குச் சொல்கிறேன், நானா போட்ட பேண்டேஜை அவிழ்த்துவிடு. அது உனக்குப் பயன்படாது. நீ இவ்வளவு தூரம் புலம்புவதால் உனக்கான சிகிச்சை ரகசியத்தைச் சொல்கிறேன். உன் வினைகளைக் கொத்திப் போகும் காகம் இன்னும் கொஞ்சநேரத்தில் வந்து உன் புண்ணைக் கொத்திப்போகும். அதன்பின் நீ குணமடைவாய்” என்றார் பாபா.
இதுவரை தரிசித்திராத சாயிபாபா திருவுருவப் படங்கள் புதிய பரிமாணங்களில்.
டாக்டருக்கு பாபாவின் சொற்கள் விளங்கவில்லை. ஆனாலும் அவர் சொன்னபடி அந்த பேண்டேஜைக் கழற்றி வீசினார். அவரால் அதற்கு மேல் புலம்பவும் முடியாமல் அப்படியே சாய்ந்து படுத்தார்.
அப்போது அப்துல்லா என்பவர் அங்கு வந்தார். பாபாவின் மீது கொண்ட பக்தி காரணமாக தினமும் வந்து மசூதியைத் துடைத்துச் சுத்தம் செய்வார். பாபாவின் பிரியமான விளக்குகளைச் சரிசெய்து ஒழுங்குபடுத்தி வைப்பார். வந்த கணத்திலிருந்து எந்தச் சிந்தனையுமின்றிப் பரபரப்பாக வேலையில் இறங்கினார் அப்துல்லா.

ஓடியாடி வேலை செய்துகொண்டிருந்த அப்துல்லா, படுத்திருந்த டாக்டர் பிள்ளையின் வீங்கியிருந்த கால்களை, தன்னையறியாமல் மிதித்து விட்டார். அடுத்த கணம் டாக்டர் பிள்ளை மரண ஓலம் போன்ற ஒரு பெருங்குரலில் அலறினார். அப்துல்லா அப்படியே தன் பிழை உணர்ந்து ஒடுங்கிப்போய் நின்றார். அப்போதுதான் கவனித்தார்கள். டாக்டரின் புண்ணிலிருந்து ஏழு நரம்புச் சிலந்திப் புழுக்கள் வெளி யேறியிருந்தன, கூடவே சீழும் ரத்தமும் சிதறியிருந்தன.
பாபா, அப்போது அங்கே வந்தார்.
“அடடே, காக்கை வந்து போய்விட்டதா...” என்று கேட்டார்.
எல்லோரும் புரியாமல் விழித்தனர்.
“யார் உன் கால்களை மிதித்து உன் நோயின் தீவிரத்தைக் குறைத் தாரோ அவரே உன் வினைகளைக் கொத்திக்கொண்டு போன காக்கை. புரியவில்லையா, அப்துல்லாதான் உன் பிணியைப் போக்கினான்” என்று சொல்லிச் சிரித்தார்.
பிறகு, “பாவ், உன் நோயின் தீவிரம் குறைந்துவிட்டது. இப்போது நீ வார்தாவுக்குப் போய் ஓய்வெடுத்துக்கொள். விரைவில் நீ பூரண குண்மடைவாய்” என்று சொல்லி, சிறிது உதியை எடுத்துத் தண்ணீரில் கலந்து கொடுத்தார். அதை அருந்திய டாக்டர், வார்தாவுக்குச் சென்றார். அவரின் வலி கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து இல்லாமற்போனது.
(தரிசனம் தொடரும்)
வாசகர் அனுபவம்
நான் வங்கித்துறையில் பணிபுரிகிறேன். 2002-ம் ஆண்டு அலுவல் காரணமாக மும்பை சென்று அங்கிருந்து ஷீர்டி சென்றேன். ஷீர்டியில் நல்ல கூட்டம். ஓர் அறைகூட காலியில்லை. ஒரு ஹோட்டல் நிர்வாகி பரிதாபப்பட்டு தன் அறையைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதித்தார். அடுத்த பிரச்னை தரிசனம். அன்று குருபூர்ணிமா. இந்தக் கூட்டத்தில் தரிசனம் செய்ய முடியாதோ என்ற கவலை ஏற்பட்டது. சாயிநாதா உன் தரிசனம் கிடைக்காதா என்று மனதுக்குள் அழுது புலம்பினேன். அப்போது என்னை எழுபது வயது முதியவர் ஒருவர் அழைத்தார். ‘சார்! நான் மஹாராஷ்டிரா மாநிலத்தில் முதல் நிலைப் பொறியாளராக இருந்து ஓய்வுபெற்றவன். என்னிடம் இரண்டு வி.ஐ.பி பாஸ்கள் உள்ளன. நான் ஒருவன்தான்... என்னுடன் நீங்கள் வேண்டுமானால் வரலாம்’ என்றார். கரும்பு தின்னக் கூலியா... அவரோடு வி.ஜ.பி பாஸில் நேராக பாபாவின் சந்நிதிக்குள்ளேயே செல்லமுடிந்தது. ஒரு கணம் கண்கலங்க நன்றியோடு தரித்து முடித்ததும், என்னைக் கூட்டிவந்த பெரியவருக்கு நன்றி சொல்லத் திரும்பினால் அவரைக் காணவில்லை. கண்ணுக்கு எட்டிய தொலைவுவரை அவரைக் காணவில்லை. அந்த நொடி வந்தது யார் என்று உணர்ந்துகொண்டேன். அவரின் கருணையை இப்போது நினைத்தாலும் சிலிர்க்கிறது.
- வெ.இராஜகோபாலன் திருச்சி-6
பாபாவும் நானும்
எழுபதுகளில் ஸ்கூல் பையைத் தலையில் மாட்டிக்கொண்டு ஆழ்வார்பேட்டையிலிருந்து மயிலாப்பூரில் இருக்கும் என்னுடைய பள்ளிக்குச் செல்வேன். அப்போதெல்லாம் பாபா கோயிலைப் பார்த்துக்கொண்டேதான் செல்வேன். ஆயிரம் தடவைக்கு மேல் தாண்டிச் சென்றிருப்பேன். ஆனால் ஒருநாள்கூட உள்ளே சென்று பிரார்த்தனை செய்ததில்லை.
பாபாவை நான் முதன்முதலில் தரிசனம் செய்ததே ஷீர்டியில்தான்.

2006-ம் ஆண்டில் ஒரு நாள் என் அண்ணன் போன் செய்து, “அப்பா ஷீர்டிக்குப் போகணும்னு சொல்றார். தனியாகக் கிளம்பிப் போறேங்கிறார். என்னவென்று கேள்’’ என்றார்.
அப்போது அப்பாவுக்கு 86 வயது. பொதுவாகவே அப்பா ரொம்ப ஆக்டிவ்வாக இருப்பார். எங்கே செல்ல வேண்டுமென்றாலும், வீட்டிலிருப்பவர்களிடம் தகவல் சொல்லிவிட்டு, தனியாகக்கூடச் சென்று வருவார். இந்தமுறை எனக்கு மனதில் அவருடன் போக வேண்டும் என்று தோன்றியது. புறப்பட்டுப் போனேன். அதுவே அப்பாவுக்கு முதலில் இன்ப அதிர்ச்சி.
ஷீர்டியில் முதல்முறை ‘காக்கடா ஆரத்தி’யுடன் பாபாவை தரிசனம் செய்தேன். அன்றைக்கே அவர்தான் இனி என் வாழ்க்கை என முடிவு செய்தேன். ‘கண்டதும் காதல்’ என்று சொல்வார்களே, அப்படியாகிப்போனேன். ‘சிட்டுக்குருவியை நூலில் கட்டி இழுப்பதுபோல் உன்னை என் பக்கம் இழுத்துக்கொள்வேன்’ என்று பாபா கூறியதுபோன்று என்னை, அவர் பக்கம் இழுத்துக் கொண்டார். நல்ல தரிசனம் முடித்து, சென்னை வந்தோம். அடுத்த ஆண்டு என் தந்தை காலமானார். தன்னுடைய மறைவுக்கு முன் என்னை பாபாவிடம் கொண்டுபோய் அவர் ஒப்படைத்துவிட்டதாகவே நினைக்கிறேன்.
‘சகலமும் சாய் பிரியதாம்’ - நமக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பதும், எப்போது கொடுக்க வேண்டும் என்றும், எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதும், அவருக்குத் தெரியும். சாயிபக்தரான பிறகுதான் நான் நிறைய கோயில்களுக்குச் செல்ல ஆரம்பித்திருக்கிறேன். என்னை வழிநடத்தும் குருவும் அவர்தான், சத்குருவும் அவர்தான், சர்வ குருவும் அவர்தான். அதனால்தான் என்பெயரோடு சாய் என்பதை இணைத்துக்கொண்டேன்.
- எஸ்.கதிரேசன்
சாயிபாபா உங்கள் வாழ்க்கையில் நிகழ்த்திய அற்புதங்களை உங்கள் புகைப்படத்துடன், ஆனந்த விகடன், 757 அண்ணாசாலை, சென்னை-2 என்ற முகவரிக்கோ, saibaba@vikatan.com மின்னஞ்சலுக்கோ எழுதி அனுப்புங்கள். சிறந்த அனுபவங்கள் வெளியிடப்படும்.