மற்ற எபிசோடுகள்
Published:Updated:

பாபாயணம் - 45

பாபாயணம்
பிரீமியம் ஸ்டோரி
News
பாபாயணம்

இதுவரை தரிசித்திராத சாயிபாபா திருவுருவப் படங்கள் புதிய பரிமாணங்களில்.

சச்சிதானந்த சத்குரு ஸ்ரீசாயிநாதரே சரணம்!

“எது மனிதனின் லட்சியம்?” என்று தீட்ஷித் ஒருமுறை பாபாவிடம் கேட்டார். இது தீட்ஷித்தின் கேள்வி மட்டுமல்ல, ஆன்மிகத்தில் சாதிக்க விரும்பும் அநேகரின் கேள்வி. பாபா இதுபோன்ற கேள்விகளுக்கு எளிமையான பல பதில்களைச் சொல்லியிருக்கிறார்.

பாபாயணம்
பாபாயணம்

“மனிதனின் லட்சியம் என்பது தற்போது இருக்கும் நிலையிலிருந்து மேலாக உயர்வது. இருக்கும் இந்த இடமே போதும் என்று லௌகிக விஷயங்களில் திருப்தி அடைவது அல்ல மனித வாழ்க்கை. சம்சார துக்கத்தைக் கடந்து, உயர்ந்த நிலைகளை நோக்கிச் செல்வதே மனித வாழ்வின் பொருளும் பேரின்பமுமாகும். அதை நமக்கு அளிக்கக்கூடிய குருவைத் தேடுவதே வாழ்க்கையின் தேடலாக இருக்க வேண்டும்” என்பார் பாபா.

குருவை அடைவது மட்டுமல்ல, அவரைப் பரிபூரணமாக ஏற்று சரணாகதி செய்வதும் சீடனின் கடமை. நல்ல சீடனை குரு எப்போதும் கைவிடுவதில்லை. மேலும் சீடன் குருவின் மேல் நம்பிக்கை இழந்தாலும் குரு ஒருபோதும் அவன்மேல் கொண்ட அன்பைத் துறப்பதில்லை.

பாபாவின் பக்தர்கள் சிலரும் இதுபோன்ற உணர்வுகளுக்கு ஆட்பட்டனர். அதன் காரணங்கள் பலவாக இருந்தன. பாபா தாங்கள் விரும்பியதை ஆசீர்வதிக்கவில்லை என்று கோபம் கொண்டு பாபாவின் சிலையையே உடைத்தவர்களும் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள், தன்மேல் வெறுப்படைந்து விலகிப் போனாலும் தக்க தருணத்தில் அவர்களுக்கு வேண்டியதை பாபா செய்யத் தவறியதே இல்லை. இது அவரின் தாயன்பு. அவர்களின் ஆழ்மனதில் சென்று தாங்கள் செய்வது தவறு என்று உணர்த்துவார் பாபா. பின்னர் அவர்களும் மனம் திருந்தி பக்தியில் மேலும் உறுதியாவர்.

பாபாயணம் - 45
ஓவியம்: பாலகிருஷ்ணன்

புனேவைச் சேர்ந்த பக்தர் கோபால் நாராயண் ஆம்படேகர். ஷீர்டிக்கு அடிக்கடி வந்து பாபாவை தரிசனம் செய்து செல்பவர். சுங்க இலாகாவில் பணிபுரிந்து ஓய்வு பெற்றார். அதன்பின் ஓய்வூதியம் போதவில்லை. வேறு வேலையும் கிடைக்கவில்லை. வறுமை அவரை வாட்டியது. வாழ்வில் துயரங்கள் துரத்தும்போது மனிதர்கள் தங்களின் புகலிடம் எது என்பதையே மறக்கிறார்கள். அதனால் அவர்கள் உணர்வுகளின் பாதையில் பயணிக்கிறார்கள்.ஆம்படேகரும் அவ்வாறே தன் வாழ்வை முடித்துக்கொள்வது என்ற முடிவுக்கு வந்தார். சாவதற்கு முன்பாக ஷீர்டி சென்று தரிசனம் செய்து, பின் தன் முடிவைத் தேடிக்கொள்ளலாம் என்று தீர்மானம் செய்தார். ஷீர்டி சென்றவர் இரண்டு மாதங்கள் வரையில் அங்கேயே தங்கினார். ஆனாலும் அவர் மனதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஒருநாள் தன் வாழ்வை முடித்துக்கொள்ளத் தீர்மானம் செய்தார். ஷீர்டியில் இருக்கும் கிணறு ஒன்றை நோக்கிப் போனார் ஆம்படேகர். கிணற்றில் குதிக்கலாம் என்று நினைத்த கணத்தில், அங்கே ஷீர்டியைச் சேர்ந்த சகுணன் என்பவர் வந்தார்.

கிணற்றடியில் நிற்கும் ஆம்படேகரை, என்ன செய்கிறீர்கள், என்ன வேண்டும் என்றெல்லாம் விசாரிக்காமல், “ஆம்படேகர் சாப், இது அக்கல்கோட் மகராஜ் பற்றிய புத்தகம். படித்துப் பாருங்கள்” என்று தந்துவிட்டு விறுவிறு என்று போய்விட்டார்.

சாவின் விளிம்பில் இருக்கும் ஒருவரை நாடிவந்து கையில் புத்தகம் ஒன்றையும் தந்துவிட்டு பதில் எதிர்பாராமல் போகும் சகுணனை ஆம்படேகர் ஆச்சர்யமாக நோக்கினார். கையில் புத்தகம், எதிரே கிணறு. ஆம்படேகருக்குத் தலைசுற்றியது. கையிலிருந்த புத்தகத்தை மெள்ளப் புரட்டினார். அதன் பக்கம் ஒன்றை விரித்தார். தன்னையறியாமல் அதை வாசிக்கவும் தொடங்கினார்.

அக்கல்கோட் மகராஜின் பக்தர் ஒருவரின் கதை அதில் இருந்தது. அந்த பக்தருக்குத் தீராத நோய். பொறுத்துக்கொள்ள முடியாத வலியில் தவித்தார். வலியைவிட சாவு இனிமை யானது என்று அவருக்குத் தோன்றியது. தன் குருவை மனதார வணங்கிவிட்டுத் தன் வீட்டின் அருகிலிருந்த கிணற்றில் விழ முயன்றார். அப்போது அக்கல்கோட் மகராஜ் அவர் முன் தோன்றித் தடுத்துக் காத்தார்.

மேலும், “உன்னை நீ அழித்துக்கொள்வது தவறு. முந்தைய பிறவிகளில் செய்த கர்மங்களின் பலனை இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறாய். அதைக் கழித்துத் தீர்த்துவிட்டால் நிம்மதி தானாக வந்துவிடும். யாருடைய வாழ்க்கையும் எப்போதும் இருட்டாகவே இருப்பதில்லை. ஒருநாள் விடிந்துவிடும் என்று கூறி ஆசி வழங்கினார்” என்று அந்தப் பக்கத்திலிருந்தது. ஆம்படேகருக்கு உடல் சிலிர்த்தது. இது தனக்கான செய்தி என்று தோன்றியது. அக்கல்கோட் மகராஜ் நேரில் தோன்றித் தடுத்தாட் கொண்டதுபோல சகுணன் மூலமாக இந்த நூலைத் தன்னிடம் தந்து பாபாவே தன்னைக் காத்தார் என்று தோன்றியது.

மசூதியை நோக்கி ஓடினார். அங்கே பாபா புன்னகையோடு அமர்ந்திருந்தார்.

“என்ன ஆம்படேகர் உன் தற்கொலை எண்ணத்தைக் கைவிட்டுவிட்டாயா...” என்று சிரித்துக்கொண்டே கேட்டார். ஆம்படேகர் கண்களில் நீர் துளித்தது. சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து பாபாவின் பாதங்களைப் பற்றிக்கொண்டு அழுதார். அவர் பாதங்களைத் தன் கண்ணீரால் கழுவினார்.

(தரிசனம் தொடரும்)

பாபாவும் நானும்....

1996-ம் ஆண்டு என் சகோதரி மும்பையிலிருந்தார். “குடும்பத்தோடு ஷீர்டி போய் வரலாமா?’’ என்று கேட்டார். எனக்கு பாபாவைப் பற்றி அப்போது அதிகம் தெரியாது. ஒரு பிக்னிக் போல் ஜாலியாகத்தான் போய் வந்தேன். அடுத்த பத்தாண்டுகளில் என் வாழ்க்கையில் என்னென்னவோ நிகழ்ந்துவிட்டன. அதுவரை நான் செய்துவந்த தொழில்கள் எல்லாமே என் கையைவிட்டுப் போய்விட்டன.

பாபாயணம் - 45

2006-ல் தனியாக பாபாவை தரிசிக்க மீண்டும் ஷீர்டி பாபாவை தரிசனம் செய்துவிட்டு வந்தேன். அடிவயிற்றில் சொல்லிவிட முடியாத ஒரு வலி. பாபா கோயில் வாசலுக்கு அருகிலிருந்த ஓர் இடத்தில் வலியுடன், பாபாவைப் பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தேன். நேரம் செல்லச் செல்ல அந்த வலி குறைந்தது. மனம் லேசானது. கவலைகளையெல்லாம் பாபாவின் காலடியில் வைத்துவிட்டு, வீட்டுக்கு வந்தேன்.

அதன்பின்பு வாழ்க்கையின் அத்தனை கஷ்டங்களும் ஒவ்வொன்றாக விலகத் தொடங்கின. திரைப்படத் தயாரிப்பாளராக இருந்த என்னை, இயக்குநர் சேரன் ‘மாயக்கண்ணாடி’ படத்தில் நடிப்பதற்காக அழைத்தார். தயாரிப்பாளராக இருந்த நான் நடிகராக அவதாரம் எடுத்தேன். மெள்ள மெள்ள படங்கள் வர ஆரம்பித்தன. எனக்கான ஓர் இடம் சினிமாவில் கிடைத்தது.

- எஸ்.கதிரேசன்

வாசகர் அனுபவம்

பாபாயணம் - 45

என் இளவயதுமுதலே நான் சாயிபக்தன். என் வாழ்வில் பல துன்பங்களிலிருந்து சாயி என்னைக்காப்பாற்றியிருக்கிறார். அதில் மிகவும் முக்கியமானதாக நான் கருதுவது என் பேரன் சம்பந்தப்பட்டது. 2007ம் ஆண்டு என் மகளுக்குத் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை உடல் நிலை மோசமானது. வயிற்றில் இருக்கும்போது தண்ணீர் குடித்துவிட்டது என்று சொல்லி உடனே எழும்பூர் மருத்துவமனை கொண்டு செல்லச் சொன்னார்கள். நாங்களும் ஓடினோம். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பிழைப்பது கஷ்டம் என்று சொல்லிவிட்டுதான் சிகிச்சையே ஆரம்பித்தார்கள். ஆனால் நான் மன உறுதியோடு சாயியை வேண்டிக்கொண்டேன். பேரன் பிழைத்துவிட்டால் ஷீர்டி வந்து தரிசனம் செய்வதாக வேண்டிக்கொண்டேன். அதேபோன்று பேரன் விரைவில் சுகமாகிவிட்டான். இன்று நலமுடன் இருக்கிறான். வேண்டிக்கொண்டபடி நானும் ஷீர்டி சென்று தரிசனம் செய்துவந்தேன். அதற்கும் சாயியே உதவி செய்தார். எல்லாம் சாயியின் கருணை.

சாயி ஈஸ்வரன், சென்னை 19

சாயிபாபா உங்கள் வாழ்க்கையில் நிகழ்த்திய அற்புதங்களை உங்கள் புகைப்படத்துடன், ஆனந்த விகடன், 757 அண்ணாசாலை, சென்னை-2 என்ற முகவரிக்கோ, saibaba@vikatan.com மின்னஞ்சலுக்கோ எழுதி அனுப்புங்கள். சிறந்த அனுபவங்கள் வெளியிடப்படும்.