மற்ற எபிசோடுகள்
Published:Updated:

பாபாயணம் - 46

பாபாயணம்
பிரீமியம் ஸ்டோரி
News
பாபாயணம்

இதுவரை தரிசித்திராத சாயிபாபா திருவுருவப் படங்கள் புதிய பரிமாணங்களில்.

சச்சிதானந்த சத்குரு ஸ்ரீசாயிநாதரே சரணம்!

ஷீர்டி சென்றால்தான் சாயி அருள் கிடைக்குமா என்கிற கவலை சாயி பக்தர்களுக்குத் தேவையில்லை. தன்னைச் சரணடையும் பக்தர்கள் எங்கிருந்தாலும் சாயி அவர்களைப் பாதுகாத்து அருள்வார் என்பதற்கு சாயி சத் சரிதத்தில் பல்வேறு உதாரணங்கள் உள்ளன. கைகன்சிரி தருவாலா என்பவர் வாழ்வில் நிகழ்ந்த சம்பவம் அவற்றுக்கெல்லாம் மகுடம் வைத்தாற்போன்றது.


கைகன்சிரி தருவாலா பாபாவின் பக்தர். தன் சட்டைப்பையில் எப்போதும் பாபாவின் படத்தை வைத்திருப்பார். கப்பல் ஒன்றில் கேப்டனாகப் பணிபுரிந்தார். ருஷ்ய - ஜப்பானிய யுத்தம் தொடங்கிய காலகட்டம். கைகன்சிரி தருவாலா பயணித்த கப்பல் உட்பட மூன்று கப்பல்கள் எதிரி நாட்டுப்படைகளிடம் சிக்கிக்கொண்டன.

பாபாயணம் - 46

உடன் பயணித்தவர்கள் அனைவரும் பயத்தில் கதறத் தொடங்கினர். ஆனால் கைகன்சிரி தருவாலாவோ தன் சட்டைப் பையிலிருந்து சாயியின் படத்தை எடுத்துப் பார்த்தார். “சாயி, நீங்களே இந்த இக்கட்டிலிருந்து என்னைக் காக்கமுடியும்” என்று வேண்டிக்கொண்டார். அடுத்த கணம் கடல் கொந்தளித்தது.

அதேநேரம், ஷீர்டியில் நடந்து வந்துகொண்டிருந்த சாயி திடீரென்று கீழே விழுந்தார். பார்த்துக்கொண்டிருந்தவர்கள் அவரைத் தூக்க ஓடிவந்தார்கள். என்ன ஆச்சர்யம்... அவர் இருந்த இடத்தில் தண்ணீர் தேங்கி நின்றது. எங்கிருந்து இவ்வளவு தண்ணீர் என்று வியந்தார்கள். சாயியும் தலைமுதல் கால்வரை நனைந்திருந்தார்.

“என்ன ஆனது சாயி...” என்று ஆச்சர்யத்தோடு கேட்டார்கள்.

சாயியோ புன்னகைத்தபடி, “மூழ்க இருந்த கப்பலைக் காக்க வேண்டிய நிர்பந்தம். காத்துவிட்டேன்” என்றார்.

சாயி பேசும் சொற்களின் உள்ளார்ந்த பொருள்களை யார் அறிவார்... மூன்றாம் நாள், ஷீர்டிக்கு ஒரு தந்தி வந்தது. கைகன்சிரி தருவாலாதான் அனுப்பியிருந்தார்.

அந்தத் தந்தியில், “சாயி, தாங்கள்தான் என்னையும் என் கப்பல் சிப்பந்திகளையும் மரணத்தின் பிடியிலிருந்து காத்தீர்கள். எங்கள் கப்பலும் உங்களால் பாதுகாக்கப்பட்டது. அதற்கு மனமார்ந்த நன்றியும் நமஸ்காரங்களும்” என்று இருந்தது.

அற்புதங்கள் மட்டுமே அல்ல சாயி; அவர் தம் பக்தர்களுக்கு மாபெரும் ஆத்ம ஞானத்தைத் திறந்துவைத்தவர். ஆசையே மனிதர்களின் துன்பத்துக்குக் காரணமாக இருக்கிறது. ஆசை நீங்க வேண்டுமானால், ஆத்ம ஞானம் பற்றிய தேடல் வேண்டும். அவற்றை பாபா தன் பக்தர்களுக்கு வாரி வழங்கினார்.

ஒருமுறை ஷீர்டிக்குக் கோடீஸ்வரர் ஒருவர் வந்தார். சாயியைப் பணிந்துகொண்டு, “தனக்குக் கடவுளைக் காண வேண்டும்” என்று விருப்பம் தெரிவித்தார். உண்மையில் அவர் செல்வத்தின்மீது கொண்ட பற்றையோ அதனால் உண்டாகும் பெருமையையோ கைவிடவில்லை. ஆனாலும் பாபாவிடம் இதுபோன்ற உபதேசம் ஒன்றைப் பெற விரும்பினார். பாபா இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தித் தன் பக்தர்களுக்கு பக்தியின் தகுதியை விளக்க விரும்பினார். அவ்வாறு பாபா தெரிவித்த கருத்துகளை, ‘பாபாவின் பத்துக் கட்டளைகள்’ என்று சொல்வார்கள்.

“இறைவனைக் காணவேண்டும் என்னும் விருப்பமே முதல் தகுதி. அந்த விருப்பத்தை ஒருநாளும் கைவிட்டுவிடாதபடி உறுதியோடு விளங்கவேண்டும்.

இரண்டாவது தகுதி: பணம், புகழ், சொத்து ஆகியவற்றில் மனதை இழக்கக்கூடாது. அவற்றின் மேல் விரக்தி கொள்ளவேண்டும்.

மூன்றாம் தகுதி: ஆத்ம விசாரணை. உள்முகமாகப் பார்த்து, தான் யார் என்ற தேடல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

நான்காம் தகுதி: தீமைகளிலிருந்து விலகியிருக்க வேண்டும். செயல்களால் மட்டுமல்ல, மனதாலும் அவற்றை அணுகுதல் கூடாது.

ஐந்தாம் தகுதி: சத்தியமான வாழ்க்கை. போலித்தனமில்லாத உண்மை, நேர்மை ஆகியவற்றைப் பின்பற்றவேண்டும்.

ஆறாம் தகுதி: தியானம், ஆலய வழிபாடு போன்ற நன்மைதரும் செயல்களில் ஈடுபட வேண்டும். செயல்களின் விளைவு, மகிழ்ச்சி தருவதாக இல்லாமல் நன்மை தருவதாக இருக்க வேண்டும்.

ஏழாம் தகுதி: மனதை அடக்கியாளுதல். இந்த உடம்புத் தேருக்கு ஆத்மாவே எஜமானன். அறிவே தேரோட்டுபவன். நம் இந்திரியங்களே குதிரைகள். அந்த இந்திரியங்களைப் பூட்டும் கடிவாளம் மனம். அந்தக் கடிவாளத்தைப் பயன்படுத்தி உணர்வுகளைக் கட்டுப்படுத்திப் பழக வேண்டும்.

எட்டாம் தகுதி: கடமைகளிலிருந்து விலகாமல் மனநிறைவுடன் செய்ய வேண்டும். பலன்களை இறைவனுக்கு அளித்துவிட்டு மனம் தெளிந்த நீரோடை போல இருக்க வேண்டும்.

ஒன்பதாம் தகுதி: தகுதியான குருவை அடைந்து ஆத்ம ஞானத்தைப் பெற வேண்டும்.

பத்தாவது தகுதி: கடவுளின் அனுக்கிரகத்துக்குப் பாத்தி ரமாகுமாறு மேற்சொன்ன ஒன்பது தகுதி களையும் வளர்த்து க்கொண்டால் போதும், இறையருளும் தரிசனமும் தவறாது கிடைக்கும்” என்றார் பாபா.

பாபாயணம் - 46
ஓவியம்: பாலகிருஷ்ணன்

அந்தக் கோடீஸ்வரர் அந்த நிமிடத்தில் தன் செல்வவளம் குறித்த மமதையை இழந்தார்.

கேட்பதற்கும் கடைப் பிடிப்பதற்கும் மிகவும் சிரமமான தகுதிகள்போலத் தோன்றினாலும், சாயியின் பக்தர்கள் இவற்றை இயல்பாக அடைகிறார்கள். காரணம், அவரின் அருள் அவர்களைத் தகுதியுள்ளவர்களாக்குகிறது.நான் அரசு அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவன். என் அப்பா அந்தக் காலத்தில் என் பெயரில் திருச்சி அருகே மூன்று ஏக்கர் நிலம் வாங்கி அதைப் பதிவு செய்திருந்தார்.

(தரிசனம் தொடரும்)

பாபாவும் நானும்....

தொண்ணூறுகளின் மத்தியில் ஒருமுறை என் முதுகுத் தண்டுவடத்தில் தாளமுடியாத வலி இருந்தது. மருத்துவர்களிடம் காண்பித்தும் சரியாகவில்லை. 'தாம்பத்யம் ஒரு சங்கீதம்' பட இயக்குநர் வெங்கட், அடையாறு, இந்திரா நகரில் நடைபெற்ற ஷீர்டி சாயிபாபா பிரார்த்தனைக் கூட்டத்துக்கு என்னை அழைத்துச்சென்றார்.

பாபாயணம் - 46

வி.ஐ.பி ஒருவர் ஷீர்டியிலிருந்து நேராக அங்கு வந்திருந்தார். அவரின் கார் இருக்கைகளில் விபூதி கொட்டிக் கொண்டிருந்தது. இதுபோன்ற சின்னச் சின்ன அற்புதங்களை பாபா நிகழ்த்துவது வழக்கம். அந்த விபூதியை எடுத்து, என் முதுகின் தண்டுவடப் பகுதியில் தடவினார்கள். எந்தவித மருந்தும் இல்லாமல் காலப்போக்கில் முதுகுவலி சரியானது. பாபாவின் மகிமைக்கு நான் உயிர்சாட்சி. அதிலிருந்து நான் ஷீர்டி சாயிபாபாவின் தீவிர பக்தனாக மாறிப்போனேன். என் வீட்டு ஜன்னல் வழியாக ஷீர்டி சாயி பாபாவின் படம் ஒன்று வந்து விழுந்தது. இதில் வேடிக்கை என்னவென்றால், அந்தப் படம் ஜன்னல் வழியாக வருவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. அந்த ஜன்னல் இருக்கும் இடம் மிகவும் குறுகலான ஒரு சுற்றுப்புறச் சுவரைக் கொண்டது. அந்த இடத்திற்கு மனிதர்கள் சென்று அந்தப் புகைப்படத்தை வீசி எறிவதற்கும் வாய்ப்புகள் இல்லை. மேலும், காற்றில் வரும் பொருள்களை உள்ளே வராதபடி தடுக்க எக்ஸாஸ்டர் ஃபேன் ஒன்று எப்போதும் அந்த அறையில் ஓடிக்கொண்டிருக்கும். ஆனால், இதையெல்லாம் தாண்டி அந்த சாயி பாபாவின் புகைப்படம் என்னுடைய அறைக்குள் வந்து கிடந்தது. அதை நான் என் பூஜை அறையில் வைத்துப் பூஜித்துவருகிறேன்.

- எஸ்.கதிரேசன்

வாசகர் அனுபவம்

நான் அரசு அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவன். என் அப்பா அந்தக் காலத்தில் என் பெயரில் திருச்சி அருகே மூன்று ஏக்கர் நிலம் வாங்கி அதைப் பதிவு செய்திருந்தார். நான் வேலை மும்முரத்தில் அதைக் கவனிக்கவேயில்லை. ஓய்வுபெற்றபின் அந்த இடத்துக்குச் சென்று பார்த்தபோது அந்த இடத்தை யாரோ விஷமிகள் போலிப் பத்திரம் தயாரித்து விற்றுவிட்டார்கள் என்பது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்தேன்.

பாபாயணம் - 46

உள்ளூர்க் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். வழக்கில் பெரிய முன்னேற்றமேயில்லை. மன அமைதிக்காக சாயியைத் தரிசனம் செய்துவரலாம் என்று குடும்பத்தோடு ஷீர்டி சென்றோம். அங்கு எங்கள் கவலைகள் எல்லாம் மறைந்தன. ஐந்து நாள் தங்கிவிட்டுத் திரும்பினோம். மீண்டும் வீட்டுக்குள் நுழையும்போதே தொலைபேசி ஒலித்தது. மறுமுனையில் எங்கள் வழக்கறிஞர். போலிப்பத்திரம் தயாரித்து விற்றவர்களைக் கைது செய்து விட்டதாகவும், நீதிமன்றம் அவர்கள் செய்த பத்திரப் பதிவுகளை ரத்து செய்துவிட்டதாகவும் தெரிவித்தார். எல்லாம் சாயியின் அருட்கடாட்சமன்றி வேறில்லை.

- P. சுந்தரம், திருச்சி

சாயிபாபா உங்கள் வாழ்க்கையில் நிகழ்த்திய அற்புதங்களை உங்கள் புகைப்படத்துடன், ஆனந்த விகடன், 757 அண்ணாசாலை, சென்னை-2 என்ற முகவரிக்கோ, saibaba@vikatan.com மின்னஞ்சலுக்கோ எழுதி அனுப்புங்கள். சிறந்த அனுபவங்கள் வெளியிடப்படும்.