மற்ற எபிசோடுகள்
Published:Updated:

பாபாயணம் - 8

sai baba
பிரீமியம் ஸ்டோரி
News
sai baba

சச்சிதானந்த சத்குரு ஸ்ரீசாயிநாதரே சரணம்!

அகங்காரம் என்பது அகப்பகைவன். அவன் என்னுடைய

இரக்கத்தைப் பெற முடியாது. அகங்காரமின்மையே என் வடிவம்.

- பாபா

பாபாயணம் - 8

குருவின் ஆசீர்வாதமே பலம். பாபாவும் தன் குருவை மீண்டும் தரிசிக்க விரும்பினார். எனவேதான் அவர் ஷீர்டியை விட்டுக் கிளம்பினார்.

ஷீர்டியை விட்டுக் கிளம்பியவர் அங்கிருந்து திரயம்பகேஸ்வரம் மலையை அடைந்தார். ஓராண்டுக்காலம் அங்கு தங்கியிருந்தார். அங்கு அவர் உணவு உறக்கமின்றி தியானம் செய்தார். அவர் கைவசம் இருந்தது, வெங்கூசா தந்த செங்கல்லும் ரத்தக்கறை படிந்த அவரின் துண்டும் மட்டுமே. ஓராண்டுக்காலமும் அவர் தன் குருவின் நாமத்தைச் சொல்லிக் கொண்டேயிருந்தார். அதுவே அவரை உய்விக்கும் உணவாக இருந்தது.

குரு பக்திக்கு மகாபாரதத்தில் பல கதைகள் சொல்லப்படுகின்றன. அதில் ஒன்று உபமன்யு கதை. தௌமியர் நிறைய சோதனைகள் வைத்து குருகுலத்தில் இருந்த சிஷ்யர்களின் குரு பக்தியைச் சோதிப்பது வழக்கம். குருகுலத்தில் உபமன்யு என்னும் சீடனுக்கு மாடுகளைக் காடுகளில் மேய்த்து வரும் பணி. பாட நேரம்போக மீதி நேரங்களில் உபமன்யு காடுகளில் அலைந்து திரிந்து மாடு மேய்ப்பான். குருகுலத்தில் மாணவர்கள் உணவுக்காக பிச்சை எடுத்துதான் உண்ண வேண்டும் என்பது விதி. உபமன்யு தான் எடுக்கும் பிச்சையைக் கொண்டுவந்து குருவிடம் கொடுத்துவிடுவான். குரு அவனுக்கு அதிலிருந்து கொஞ்சத்தைக் கொடுப்பார். கடின உழைப்பாளியாக இருந்த உபமன்யு குறைந்த உணவால் வாட்டம் கொள்ளவேயில்லை.

குரு தன் சோதனையைக் கடுமையாக்கினார். பகிரும் குறைந்த உணவைப் பகிர்வதையும் நிறுத்திவிட்டார். சில நாள்கள் சென்றபின்னும் உபமன்யு அதே தேஜஸுடன் விளங்கினான். ‘எப்படி உணவின்றி நீ உற்சாகமாக இருக்கிறாய்?’ என்று உபமன்யுவிடம் கேட்டார் குரு. ‘நான் இரண்டாம் முறையும் பிச்சைக்குச் சென்று உணவு தேடுகிறேன்’ என்றான் உபமன்யு. ‘இரண்டாம் முறை பிச்சைக்குச் செல்வது சாஸ்திர விரோதம். அதைச் செய்யாதே’ என்று அதைத் தடுத்தார் குரு.

பாபாயணம் - 8

அடுத்து வந்த நாள்களிலும் உபமன்யு உற்சாகமாகவே இருந்தான். குரு அழைத்து விசாரித்தபோது, ‘மாடுகளை மேய்க்கும்போது அவற்றின் பாலை அருந்துகிறேன்’ என்றான். மாடுகள் என்னைச் சார்ந்தவை. அதனால், எனக்குத் தெரியாமல் அதன் பாலை நீ அருந்துவது திருடுவதற்குச் சமம். எனவே அந்தப் பாவத்தைச் செய்யாதே’ என்றார். தன் கட்டளையை உபமன்யு ஒருபோதும் மீறமாட்டான் என்பதை குரு அறிவார்.

இதுவரை தரிசித்திராத சாயிபாபா திருவுருவப் படங்கள் புதிய பரிமாணங்களில். வாரந்தோறும் பாதுகாக்கத் தயாராகுங்கள்!

உபமன்யு கடின உழைப்பால் சோர்வுற்றான். பசி அவனை வாட்டியது. அப்போது அந்தப் பகுதியில் எருக்கஞ்செடிகளே நிறைந்திருந்தன. வேறு வழியின்றி உபமன்யு அவற்றைப் பறித்து உண்டான். எருக்க இலைகளின் விஷத்தன்மை அவன் பார்வையைப் பறித்தது. நடை தடுமாறினான். வழியில் இருந்த பாழுங்கிணறு ஒன்றில் விழுந்தான்.

இப்போது அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இவற்றையெல்லாம் தன் மனக் கண்ணில் கண்ட குருதேவர், அவன் மனத்தில் தோன்றி, அஸ்வினி தேவர்களைத் துதிக்கச் சொன்னார். அஸ்வினி தேவர்களே தேவலோக வைத்தியர்கள். உபமன்யுவும் அவர்களைத் துதிக்க ஆரம்பித்தான். அஸ்வினி தேவர்கள் அவன் முன் தோன்றினர். பசியால் வாடும் அவன் உண்ண இரண்டு அப்பங்கள் தந்து உண்ணச் சொல்கிறார்கள்.

பாபாயணம் - 8

ஆனால் அவன் குருவின் உத்தரவு இல்லாமல் அதை வாங்க மறுத்தான். இவ்வளவு துயரத்திலும் அவனது குருபக்தியைக் கண்டு மகிழ்ந்தனர் அஸ்வினி தேவர்கள், அவனுக்கு மீண்டும் கண் பார்வையை தேவ மூலிகை கொண்டு சரி செய்தனர். பார்வை மீண்ட உபமன்யு குருவை அடைந்து அவர் காலில் விழுந்து வணங்கினான். குருவும் சகல வித்தைகளையும் அவன் அடையுமாறு ஆசீர்வாதம் செய்தார்.

பாபாவும் தன் குருவின் உத்தரவையே பின்பற்றினார். குருவின் நாமத்தையே ஜெபித்துக் கொண்டிருந்தார். ஷீர்டியை விட்டுக் கிளம்பிய அவர் எந்த இடத்தில் தன் குருவைப் பிரிந்தாரோ அதே இடத்துக்கு வந்து சேர்ந்தார். குருதான் அவருக்குத் தாய் தந்தை எல்லாம் என்றிருந்தார். அவர் இல்லாததால் அடையும் துயரம் பாபாவைத் துன்புறுத்தியது. அங்கேயே அமர்ந்து தியானம் செய்தார்.

பாபாவின் கடும் தியானம் கண்ட, அவருடைய குரு வெங்கூசா, அவர் முன் தோன்றினார்.

“இனி சூட்சும உடலுடன் உன்னுடன் இரண்டு வருடங்கள் இருப்பேன். தொடர்ந்து தியானம் செய்” என்று கூறினார். தியானம் செய்யும்போது வெங்கூசா அசரீரியாகச் சில உத்தரவுகளை இட்டார். ஒரு பௌர்ணமி அன்று பாபாவின் எதிரில் தோன்றி ‘‘மீண்டும் ஷீர்டி நோக்கிப் போ’’ என்கிறார். ‘‘அங்குள்ள வேப்ப மரத்தடியில் ஒரு ஜோதி வடிவமாக வந்து நான் உன்னுடன் இருப்பேன்’’ என்றார். தீபங்கள் என்றால் பாபாவுக்கு அதிக விருப்பம். அந்த தீபச் சுடர்களில் அவர் தன் குருநாதரை தரிசித்தார். அதற்காகவே அவர் நிறைய தீபங்களை ஏற்றியபடி இருந்தார்.

(தரிசனம் தொடரும்)

களுக்கு அதிக ஜூரம். பள்ளிக்குச் சென்றவள், "அம்மா! என்னால் நிற்கவே முடியவில்லை. உடனே வா" என பொதுத்தொலைபேசியில் இருந்து பேசினாள். ‘பள்ளியிலேயே இரு! வருகிறேன்’ என்றேன். ‘ஆசிரியையிடம் சொல்லிவிட்டு வெளியே வந்து விட்டேன்’ என்றாள். வீட்டிலிருந்து பள்ளி செல்ல குறைந்தது அரைமணிநேரமாகும்.நிற்கவே முடியாத குழந்தை, போக்குவரத்து அதிகமாக இருக்கும் சாலையில் உதவியின்றி தனியாக... நினைக்கவே பயமாக இருந்தது. 'பாபா! பாபா!" என வேண்டிக்கொண்டே ஓடினேன். ‘அந்த பொண்ணு நம்ம கடையிலிருந்துதான் போன் செஞ்சது. வீட்ல இருந்து வந்துட்டிருப்பாங்கன்னு சொன்னேன்’ என்றார் காவலாக அருகிலிருந்த கடைக்காரர். நன்றியுடன் அவர் கடையை நிமிர்ந்து நோக்கினேன். "பாபா பழ அங்காடி."

- மல்லிகா குரு, சென்னை

பாபாவும் நானும்...

“நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னை மயிலாப்பூர்தான். சாந்தோம் ஹையர் - செகண்டரி ஸ்கூல்லதான் படிச்சேன். அப்பா சிவக்கொழுந்து காவல்துறையில் அதிகாரியாக இருந்தவர்.

மயிலாப்பூர்ல இருக்கிற பாபா கோயிலுக்கு அப்பா அடிக்கடி போவார். அப்போ அவர்கூட நானும் போவேன். பாபாவை வணங்கும் போது ‘கவலைப்படாதே, நான் இருக்கிறேன்’னு அவர் சொல்ற மாதிரி இருக்கும். எப்படிப்பட்ட பிரச்னையென்றாலும் அதிலிருந்து அவர் நம்மைக் காப்பாத்திடுவார். குறிப்பா சினிமாவில் இருக்குறவங்களுக்கு தினமும் ஏதோ ஒரு வித்தியாசமான பிரச்னை வந்துகிட்டு தானிருக்கும். அதைத்தாண்டி ஒருவர் படம் பண்ணி ஜெயிக்கிறதுங்கிறது அவ்வளவு ஈஸியான விஷயமில்ல.

ஷூட்டிங் ஸ்டார்ட் பண்ணியதிலிருந்து சின்ன பிரச்னைகளிலிருந்து பெரிய பிரச்னைகள் வரை எத்தனையோ வரும். ஆனால் அதையெல்லாத்தையும் எதிர்கொண்டு வெற்றிபெறுவதறகுப் பெரிய மன வலிமையும் உறுதியான நம்பிக்கையும் நம்மகிட்ட இருந்தாதான் முடியும். அந்த நம்பிக்கை பாபாவை வணங்கும்போது எனக்குக் கிடைக்குது. நான் விரும்பிப் போகக்கூடிய இடங்கள் திருப்பதியும் ஷீர்டியும்.

விக்னேஷ்சிவன்
விக்னேஷ்சிவன்

முன்பெல்லாம் ஒவ்வொரு வியாழக்கிழமையும் பாபா கோயிலுக்குப் போவேன். போக முடியலைன்னா மனசுலயே வேண்டிக்குவேன். வியாழக்கிழமை நான்வெஜ் சாப்பிட மாட்டேன். சில சமயம் எதுவுமே சாப்பிட மாட்டேன். அன்னதானத்துக்கு அவ்வப்போது முடிந்த உதவிகள் செய்வேன். சில சமயம் இரவு பத்துமணியிலிருந்து பதினொரு மணிக்குள்ள போவேன். அப்போ இரவு ஹாரத்தியுடன் பூஜை நடக்கும், அதில் கலந்துக்குவேன். கூட்டமும் குறைவா இருக்கும். மனசுக்கு மிகவும் நிறைவாக இருக்கும்.’’

வாசகர்களே!

சாயிபாபா உங்கள் வாழ்க்கையில் நிகழ்த்திய அற்புதங்களை உங்கள் புகைப்படத்துடன், ஆனந்த விகடன், 757 அண்ணாசாலை, சென்னை-2 என்ற முகவரிக்கோ, saibaba@vikatan.com மின்னஞ்சலுக்கோ எழுதி அனுப்புங்கள். சிறந்த அனுபவங்கள் வெளியிடப்படும்.