மற்ற எபிசோடுகள்
Published:Updated:

பாபாயணம் - 9

sai baba
பிரீமியம் ஸ்டோரி
News
sai baba

சச்சிதானந்த சத்குரு ஸ்ரீசாயிநாதரே சரணம்!

வானம் உன்மீது விழுந்தாலும் சலிப்படையாதே.

உன்னைக் காப்பாற்ற நான் இருக்கும்போது

இந்தக் கவலை எதற்கு?

கலங்குவதால் என்னிடமிருந்து தூரமாகிறாய்.

- பாபா

ஞானிகளின் வருகை என்பது எளியவர்களின் லௌகீக ஆசைகளை நிறைவேற்றவும், அவர்கள் தம்மை உணர்ந்துகொள்ளவும் உதவுவது. எவர் ஒருவர் தன்னை நாடிவரும் குருவின் பாதங்களில் சரணாகதி அடைகிறாரோ, அவர்களின் துன்பங்களையெல்லாம் குரு ஏற்றுக்கொள்கிறார்.

பாபாயணம் - 9

அப்படி பாபாவால் தேடிச்சென்று ஆசீர்வதிக்கப்பட்டவர் சாந்த்பாய் பாட்டீல். பாபா மீண்டும் ஷீர்டி வர சாந்த்பாய் பாட்டீல் முக்கிய காரணம்.

சாந்த்பாய் பாட்டீல் ஔரங்காபாத் மாவட்டத்தைச் சேர்ந்த தூப்கேடா என்ற கிராமத்தின் நிர்வாக அதிகாரி. போக்குவரத்து வசதி இல்லாத அந்தக் காலத்தில் குதிரைகளையே அதிகம் பயன்படுத்தினார்கள். அரசு அலுவல் காரணமாக ஒளரங்காபாத் செல்ல பாட்டீலும் ஒரு குதிரையைப் பயன்படுத்தினார். பிஜிலி என்ற அந்தப் பெண் குதிரையின் மேல் அவருக்கு அதிக பிரியம். அழகும் கம்பீரமும் நிறைந்த பிஜிலியை அந்தக் காலத்திலேயே நூறு ரூபாய் கொடுத்து வாங்கியிருந்தார் சாந்த்பாய்.

பாபாயணம் - 9
பாபாயணம் - 9

ஒருநாள் அவர் ஔரங்காபாத் சென்றுவிட்டு கிராமத்திற்குத் திரும்பும்போது ஓரிடத்தில் பிஜிலியைப் புல்மேய விட்டுவிட்டு ஒரு மரத்தடியில் அமர்ந்து களைப்பு காரணமாக அப்படியே தூங்கிவிட்டார். சில மணி நேரம் கழித்து விழித்துப் பார்த்தபோது பிஜிலியைக் காணவில்லை. அந்தப்பகுதி முழுதும் தேடியும் குதிரை கிடைக்கவில்லை. மனச்சோர்வுடன் குதிரைச் சேணத்தைத் தோளில் போட்டபடி கிராமத்தை நோக்கி நடந்து சென்றுகொண்டி ருந்தார் சாந்த்பாய். அப்போதுதான், வழியில் அமர்ந்திருந்த பாபா அவரை அழைக்கிறார்.

“சாந்த்பாய் இங்கு வாருங்கள்.” பாட்டீலுக்கு ஆச்சர்யம். ‘யார் இவர்... இவருக்கு எப்படி என் பெயர் தெரியும்...’ என்று பாபாவை நோக்கினார்.

பாபா அப்போது கப்னி என்ற நீண்ட ஆடை அணிந்து தலையில் ஒரு குல்லாய் அணிந்திருந்தார். அவர் அருகில் சட்கா எனும் குட்டையான கைத்தடியும் ஹூக்கா ஒன்றும் இருந்தது. “நீங்கள் யார்? என் பெயர் எப்படி உங்களுக்குத் தெரியும்?” என்று பல கேள்விகளை பாபாவிடம் கேட்டார். ஆனால் அவர் கேட்ட எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாமல் பாபா புன்னகையோடு, “ஏன் சேணத்தைச் சுமந்து செல்கிறீர்கள்?” என்று கேட்டார். பாட்டீலால் பதில் சொல்லாமல் இருக்கமுடியவில்லை.

“பாய், கவலை வேண்டாம். மேற்குத் திசையில் செல்லுங்கள். அங்குள்ள ஓடை அருகில் ஒரு தோட்டத்தில் உங்கள் குதிரை மேய்ந்து கொண்டிருக்கிறது” என்றார். அடுத்த கணம் பாட்டீல் அங்கு நில்லாது மேற்குத் திசை நோக்கி ஓடினார். ஆச்சர்யம், பிஜிலி அங்குதான் மேய்ந்து கொண்டிருந்தது. கண்ணீர் தாரை தாரையாக வழிய பாட்டீல் குதிரையை அன்போடு அணைத்துக்கொண்டார். அதேவேளையில் தன்னைப் பெயர்சொல்லி அழைத்த அந்த பாபா ஒரு தெய்வாம்சம் பொருந்திய மனிதர் என்று உணர்ந்துகொண்டு குதிரையுடன் பாபாவிடம் வந்து நன்றி கூறினார்.

சச்சிதானந்த சத்குரு ஸ்ரீசாயிநாதரே சரணம்!
சச்சிதானந்த சத்குரு ஸ்ரீசாயிநாதரே சரணம்!

“இப்போது மகிழ்ச்சிதானே... என்னோடு அமர்ந்து புகைபிடிக்கத் தடை இல்லையே?”என்று பாபா கேட்க, சம்மதிக்கிறார் சாந்த்பாய் பாட்டீல். ஆனால் நெருப்பும், தண்ணீரும் இல்லாமல் எப்படிப் புகைபிடிக்க முடியும்?

இதுவரை தரிசித்திராத சாயிபாபா திருவுருவப் படங்கள் புதிய பரிமாணங்களில். வாரந்தோறும் பாதுகாக்கத் தயாராகுங்கள்!

பாபா தன் கையில் வைத்திருந்த கைத்தடியால் பூமியில் ஓங்கித் தட்டினார். உடனே அந்த இடத்தில் தீ உண்டானது. அந்தத் தீயில் புகையிலையை எடுத்துப் பற்ற வைத்தார். மீண்டும் வேறு ஓர் இடத்தில், அந்தத் தடியால் அடிக்க அங்கு தண்ணீர் பொங்கியது. இப்போது அதில் துணியை நனைத்துப் புகைக்குழாயைச் சுற்றினார். புகைபிடிக்கத் தயாரானார்.

இவற்றையெல்லாம் கண்ட பாட்டீல் வியப்பில் மூழ்கினார். அந்த விநாடியே அவர் பாபாவின் காலில் விழுந்து அன்போடு வணங்கினார். பிரியமும் அன்பும் பொங்க அவர் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார். எப்போதும் அவருடனேயே இருக்க பாட்டீலின் மனம் விழைந்தது. அவரைத் தன்னுடன் தன் ஊருக்கு அழைத்துச் செல்ல விருப்பம் தெரிவித்தார் பாட்டீல். “உன் சுமைகளை இறக்கிவைக்கவே நான் வந்திருக்கிறேன். நீ ஆழ்மனதில் நினைத்து மனப்பூர்வமாகப் பிரார்த்தனை செய்தால் நிச்சயம் நான் அங்கு வருவேன்” என்கிறார் பாபா.

கிருஷ்ணனும் அதையேதான் சொல்கிறான். ஒருமுறை கோபிகை ஒருத்தி கிணற்றில் நிறைய தண்ணீர் இறைத்துப் பானைகளை அடுக்கி எடுத்துச் செல்ல உதவிக்குக் கண்ணனைக் கூப்பிடுகிறாள். ஆனால் அவனோ வர மறுத்து விடுகிறான். மிகுந்த சிரமத்துடன் பானைகளைத் தலையில் அடுக்கி எடுத்துச் செல்கிறாள். வீட்டை அடைந்ததும் அங்கு கிருஷ்ணன் ஓடி வந்து அந்தப் பானைகளை இறக்க உதவி செய்கிறான்.

“கண்ணா, தண்ணீர்ப் பானைகளைத் தலையில் ஏற்ற உன்னைக் கூப்பிட்டேன். நீ வரவில்லை. இப்போது இறக்கி வைக்க நான் அழைக்காமல் வருகிறாயே...” என்று கோபிகை கேட்க, கிருஷ்ணன் சொல்கிறான். “நான் சுமைகளை ஏற்றுபவன் அல்ல. அவற்றை இறக்கி வைப்பவன்” என்கிறான்.

பாபாவும் நம் சுமைகளை இறக்கிவைக்கவே வந்தவர்.

(தரிசனம் தொடரும்)

ன் மகள் படிக்கும் கல்லூரியில் விடுதிக்கான கட்டணத்தைச் செலுத்த மறந்துவிட்டோம். இறுதித் தேதியும் கடந்துவிட்டது. விடுதி அறைகள் இல்லை என அறிவிப்பு வந்துவிட்டது. என் பணிச்சூழல் காரணமாக அங்கு நேரடியாகச் செல்லவும் முடியவில்லை. பாபாவை வேண்டிக்கொண்டு கல்லூரி டீனுக்கு எந்த நம்பிக்கையுமில்லாமல் மெயில் ஒன்று அனுப்பினேன். என்ன ஆச்சர்யம், அடுத்த 30 நிமிடங்களில், மின்னஞ்சல் வந்தது. ‘மூன்று நாள்களுக்குள் 500 ரூபாய் அபராதத்துடன் கட்டணத்தைச் செலுத்துங்கள்’ என டீன் பதில் அனுப்பியிருந்தார். ஏழுமணி நேர மன உளைச்சலுக்கு ஒரு மணி நேரத்தில் முடிவு சொன்னார் பாபா!

-TVK சங்கரன்

பாபாவும் நானும்...

``1984-ம் ஆண்டுன்னு நினைக்கிறேன்... மயிலாப்பூர் பாபா கோயில் பக்கம் போயிருந்தேன். அப்போ பாபாவைப் பற்றியெல்லாம் எனக்குப் பெருசா எதுவும் தெரியாது. `சரி உள்ளே போய்ப் பார்ப்போமே'ன்னு சொல்லிட்டு திடீர்னு கோயிலுக்குள் போனேன். அங்கே தூண்கிட்ட நின்றுகொண்டிருந்த 50 வயது மதிக்கத்தக்க பெண் என்னைக் கூப்பிட்டாங்க. அவங்க யாருன்னுகூட எனக்குத் தெரியாது. `யாரோ வாசகராக இருக்கும்'னு நினைச்சுத்தான் போனேன்.

எழுத்தாளர் இந்துமதி
எழுத்தாளர் இந்துமதி

`வீடுதானே தேடிக்கிட்டிருக்கே. அடுத்த ஞாயிற்றுக்கிழமைக்குள் உனக்கு வீடு அமையும் போ' அப்படின்னு சொன்னாங்க. என்னடா இது... நம்ம வீடு வாங்கப் போறது இந்த அம்மாவுக்கு எப்படித் தெரியும்னு யோசிச்சுக்கிட்டே பாபா கோயிலைச் சுத்தி சாமி கும்பிட்டுட்டு வந்துட்டேன். கரெக்டா அந்த ஞாயிற்றுக்கிழமை, இப்ப நான் குடியிருக்கிற வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுத்தேன்.

இத்தனைக்கும் இந்த வீட்டை வாங்குவதற்குப் பலரும் போட்டி போட்டாங்க. ஆனால், ஹவுஸ் ஓனர் `நான் இந்துமதிக்குத்தான் கொடுப்பேன்'னு சொல்லி எனக்குக் கொடுத்தார்.

சொந்தமாக சீரியல் தயாரித்தேன். அதுல கொஞ்சம் கடன் ஆயிடுச்சு. குறிப்பிட்ட தேதிக்குள் பணத்தைக் கட்டித்தான் ஆகணும்கிற நிலைமை. ஆனால், என் கையில பணம் இல்லை. பாபாவை மனசுக்குள்ள நினைச்சு வேண்டிக்கிட்டேன்.

நாளைக்குப் பணம் கட்டணும்னா, இன்னிக்கு சாயங்காலம் ஒருத்தர் வந்தார். ஒரு குறிப்பிட்ட சீரியலின் புரொடக்ஷன் மேனேஜர்னு சொன்னார். ``இன்னொரு சீரியல் பண்ணப்போறோம். அதுக்கு நீங்கதான் கதை, டயலாக் எல்லாம் பண்ணணும்னு சொல்லி ஒரு தொகையைக் கொடுத்துட்டுப் போனார். எந்தவித ஒப்பந்தமோ, கையெழுத்தோ கிடையாது. ஆனால் அதன்பிறகு அவர் எங்களிடம் வரவே இல்லை. கொடுத்த பணம் என்ன ஆச்சுன்னு கேட்கவும் இல்லை. எனக்கு ரொம்பவும் ஆச்சர்யமா இருந்துச்சு. அவர் சொன்ன ஆபீஸில் போன் பண்ணிக் கேட்டால் அப்படியெல்லாம் எதுவும் ஐடியா இல்லீங்களேன்னு சொன்னாங்க.

அன்றைக்கு வந்தது பாபாதான்கிறது எனக்கு அப்புறம்தான் புரிஞ்சது.’’

வாசகர்களே!

சாயிபாபா உங்கள் வாழ்க்கையில் நிகழ்த்திய அற்புதங்களை உங்கள் புகைப்படத்துடன், ஆனந்த விகடன், 757 அண்ணாசாலை, சென்னை-2 என்ற முகவரிக்கோ, saibaba@vikatan.com மின்னஞ்சலுக்கோ எழுதி அனுப்புங்கள். சிறந்த அனுபவங்கள் வெளியிடப்படும்.