
இதுவரை தரிசித்திராத சாயிபாபா திருவுருவப் படங்கள் புதிய பரிமாணங்களில்.
சச்சிதானந்த சத்குரு ஸ்ரீசாயிநாதரே சரணம்!
பாபாவோடு இருந்த பக்தர்களுள் மகல்சாபதி குறிப்பிடத்தக்கவர். அவர் ஒருபோதும் பாபாவிடம் எதையும் வேண்டியதே இல்லை. பாபாவே அவரிடம், ‘உனக்கு என்ன வேண்டும் பகத்...” என்று கேட்டபோதுகூட, “எனக்கு என்ன தேவை என்று உங்களுக்குத் தெரியும். நீங்கள் தருவதை நான் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறேன்” என்னும் மகல்சாபதியின் பரிபூரண சரணாகதி மனோபாவம் பலருக்கும் வாய்ப்பதில்லை.
கந்தேஷ் என்னும் ஊரைச் சேர்ந்தவர் மத்துஷா. பக்கீரான இவர் பல இடங்களில் பாபாவைப் பற்றிக் கேள்விப்பட்டு தரிசனம் செய்வதற்காக ஷீர்டி வந்தார். மிகவும் துக்கத்துடனும், வேதனையுடனும் இருந்த அவர், பாபாவிடம் அவசரச் செலவுக்காக 700 ரூபாய் தேவை என்று கேட்டுக் கண்ணீர் விட்டு அழுதார்.

இளகிய மனம் கொண்டவர் அல்லவா பாபா... பக்கீரிடம் ஏன் எதற்கு என்று கேட்கவில்லை. மாறாக, அங்கிருந்த பாபு சாகேப் ஜோஷிடம் பக்கீர் கேட்ட தொகையைக் கொடுக்கும்படி கூறினார். பாபு சாகேப், பாபா கொடுக்கச் சொன்ன தொகைக்கு ஈடான வெள்ளி நாணயங்களைக் கொண்டு வந்து பாபாவின் முன் வைத்தார். அப்போது அங்கிருந்த குலாப் மற்றும் லட்சுமண் பாலா பார்கர் சிம்பி ஆகிய இரு சிறுவர்களிடம் பாபா, அந்த வெள்ளி நாணயங்களைத் தந்து மசூதியின் முன் மண்டபத்தில் அமர்ந்திருந்த பக்கீரிடம் கொடுக்கச் சொன்னார். ஆனால், சிறுவர்களோ 200 ரூபாய் மதிப்பிலான நாணயங் களைத் தாங்கள் வைத்துக்கொண்டு மீதியை பக்கீரிடம் தந்தார்கள்.
பக்கீருக்கோ தான் கேட்ட தொகை கிடைக்க வில்லையே என்று வருத்தம். அவருக்குக் கட்டாயம் 700 ரூபாய் தேவையாக இருந்தது. சிறுவர்கள் செய்த செயல் பாபாவுக்குத் தெரியும் என்றாலும் அவர் அவர்களைக் கூப்பிட்டுக் கண்டிக்கவில்லை. பக்கீருக்கு அங்கு வேறெந்தப் பணமும் அளிக்க முயலவில்லை. பக்கீர் பாபாவிடம் சென்று இரண்டுநாள் புலம்பினார். ஆனால் பாபா பதில் சொல்லாமல் மௌனமாக இருந்துவிட்டார். அதற்கு உதவ மனமில்லை என்று பொருளல்ல; வேறு வழிகளில் உதவத் தீர்மானம் செய்தி ருந்தார் என்பதுதான்.

இரண்டு நாள் ஷீர்டியில் இருந்த பக்கீர், பின் பாபாவிடம் உதியைப் பெற்றுக்கொண்டு தன் கிராமம் நோக்கி நடக்க ஆரம்பித்தார். அவர் நிம்காம் என்னும் ஊருக்கு அருகில் செல்லும்போது ஒரு குதிரை வண்டி ஒன்று அருகில் வந்து நின்றது. அதிலிருந்து இர்ருஸ் ஷா என்பவர் இறங்கிவந்தார். இர்ருஸ், நிஜாம் சமஸ் தானத்தில் தாசில்தாராகப் பணிபுரிபவர். அவர் பக்கீரை வணங்கி அவருக்கு உணவு அளித்தார். அவர் உண்டு முடித்ததும் கையில் 200 ரூபாய் பணமும் கொடுத்தார். பக்கீருக்குள் மகிழ்ச்சியும் ஆச்சர்யமும் இணைந்து தோன்றின. ஆனாலும் என்ன நடக்கிறது என்பது மட்டும் அவரால் புரிந்துகொள்ள இயலவில்லை.
பக்கீரின் கண்களில் நிறைந்து ததும்பிய கேள்விகளுக்கு இர்ரூஸ் ஷா விடையளிக்கத் தொடங்கினார்.
“நேற்று இரவு ஒரு கனவு தோன்றியது. அதில் அருள்ததும்பும் முகத்தோடு பாபா தோன்றினார். மனம் மகிழச்செய்த அந்தக் காட்சியைக் கண்டு வணங்கி மகிழ்ந்தபோது பாபா, ஓர் உத்தரவும் இட்டார். உடனடியாக ஒரு குதிரை வண்டியில் ஷீர்டிக்கு வர வேண்டும். வரும் வழியில் நிம்காம் அருகே ஒரு பக்கீரைக் காண்பாய். அவருக்கு உணவும் 200 ரூபாய் பணமும் தர வேண்டும் என்று கூறி மறைந்தார். பாபா மறைந்ததும் உறக்கம் கலைந்துவிட்டது. கனவோ நினைவோ, பாபா சொல்வன அனைத்தும் சத்தியம். அதை ஒருபோதும் தவிர்க்க முடியாது என்பதும் எனக்குத் தெரியும். எனவே அதை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக ஷீர்டி கிளம்பிவிட்டேன். பாபா சொன்னதுபோலவே உங்களையும் நிம்காம் அருகே கண்டுவிட்டேன். பாபாவின் உத்தரவை நிறைவேற்றியும்விட்டேன். இதைவிட வாழ்வில் வேறென்ன பாக்கியம் வேண்டும்” என்று பெருமை பொங்கக் கூறிய இர்ரூஸ் ஷாவை வியப்போடு பார்த்தார் பக்கீர். பின்பு ஷீர்டியின் திசை நோக்கி வணங்கி, ஷாவிடம் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டார்.
- (தரிசனம் தொடரும்)
வாசகர் அனுபவம்
நான் திருச்சியில் சிறிய உணவகம் நடத்திக்கொண்டிருந்தேன். தொழில் மிகவும் நொடிந்து கடனாளி ஆகிவிட்டேன். வாழ்க்கையில் எந்தப் பிடிப்பும் இல்லாமல் விரக்தி மனோபாவத்தோடு வாழ்ந்தேன். 2016-ம் ஆண்டு என் அண்ணன் முதன்முதலாக சாயியை தரிசனம் செய்துவரலாம் வா என்று என்னை ஷீர்டி அழைத்தார். அவர் சாயி பக்தர். அப்போது எனக்கு சாயி மேல் பெரிய நம்பிக்கை இருக்கவில்லை. சுற்றுலா செல்லும் உணர்வோடுதான் சென்றேன். ஷீர்டி சென்று பாபாவை தரிசித்த தருணம் மனத்தில் இனம்புரியாத ஓர் உணர்வு ஏற்பட்டது.

என்னை வழிநடத்தும் குரு கிடைத்ததுவிட்டார் என்று தோன்றியது. அன்று சாயிபாபாவிடம் சரணடைந்தவன்தான். இந்த நொடிவரை என்னை வழிநடத்தி என் ஞானகுருவாகவே இருந்து அருள் செய்கிறார் சாயிநாதன். ஷீர்டி சென்று திரும்பியதும் திருச்சியில் புதிய இடத்தில் உணவகம் தொடங்கினேன். தொழில் விருத்தியானது. கடன்கள் அடைந்தன. இன்று நிம்மதியாக வாழ்கிறேன். எல்லாம் சாயியின் கருணையே.
- பாஸ்கர், திருச்சி
பாபாவும் நானும்....
கிருஷ்ணரும் சாயிபாபாவும் என் இரண்டு கண்கள். என் வீடு முழுவதும் கிருஷ்ணரின் படங்களும் சாய்பாபாவின் படங்களும்தான் இருக்கும். இருபது ஆண்டுகளுக்கு முன்பாகவே மும்பைக்கு படப்பிடிப்புக்காகச் சென்றபோது எல்லோரும் ஷீர்டி பற்றிப் புகழ்ந்து கூறியதால், ‘சரி அங்கு போய்விட்டு வருவோம்’ என்று சென்று வந்தேன். அப்போதெல்லாம் பாபாவின் மீது எனக்குப் பெரிய ஈடுபாடு இல்லை. இப்போது நான்கு ஆண்டுகளாக பாபாவின் தீவிர பக்தையாக மாறிவிட்டேன். வியாழக்கிழமைதோறும் விரதம் இருக்கிறேன்.

காலையில் எழுந்ததும் தொலைக்காட்சியில் சாயிபாபா கோயிலில் நடைபெறும் ஆரத்தி, சிற்றாரத்தி ஆகிய நிகழ்ச்சிகளைப் பார்த்துதான் என் ஒரு நாள் தொடங்கும். என் குழந்தைகள் ஆதவ், மாதவ் இரண்டு பேருக்குமே சாயிபாபா ஸ்லோகங்களைச் சொல்லித்தருவேன். எந்த ஒரு வேலையைச் செய்வது என்றாலும் எப்போது படப்பிடிப்புக்குக் கிளம்பினாலும் கண்களை மூடி தியானித்து, புருவமத்தியில் பாபாவைக் கொண்டுவருவேன். அவரின் புன்னகை கிடைத்த பிறகே புறப்படுவேன். கோடம்பாக்கத்தில் இருக்கும் சாயிபாபா கோயிலுக்கு வாரம்தோறும் செல்வேன். ஷீர்டிக்கு வருடம் தவறாமல் சென்று வருவேன். இந்த வருடம்தான் போக முடியவில்லை. ஒருமுறை என் மகன் ஆதவுக்கு அறுவை சிகிச்சை நடந்தது. அப்போது கிருஷ்ணரையும் பாபாவையும் தொடர்ந்து வணங்கினேன். மகன் நல்ல முறையில் குணமாகி வீடு திரும்பினார். இப்படி என் வாழ்க்கை முழுவதும் சாயியே நிறைந்து வழிகிறார்.
- எஸ்.கதிரேசன்
சாயிபாபா உங்கள் வாழ்க்கையில் நிகழ்த்திய அற்புதங்களை உங்கள் புகைப்படத்துடன், ஆனந்த விகடன், 757 அண்ணாசாலை, சென்னை-2 என்ற முகவரிக்கோ, saibaba@vikatan.com மின்னஞ்சலுக்கோ எழுதி அனுப்புங்கள். சிறந்த அனுபவங்கள் வெளியிடப்படும்.