
வி.ஐ.பி ஆன்மிகம் - குமாரி சச்சு பிரேமா நாராயணன்
நான்கு வயதில் அறிமுகமாகி, ஆறு தசாப்தங்களைத் தாண்டி கலைத்துறையில் ஆழமாக வேரூன்றிய பழம்பெரும் கலைஞர் குமாரி சச்சு என்ற சரஸ்வதி. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அன்புக்குப் பாத்திரமானவர். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர் செயலாளராகப் பதவி வகித்தவர்.
மிகவும் ஆசாரமான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் என்பதால், ஆன்மிக ஈடுபாட்டுக்கும் பூஜை புனஸ்காரங்களுக்கும் குறைவே இல்லை. சென்னை அபிராமபுரத்தில் இருக்கும் அவருடைய இல்லத்தில் எல்லா வகையான பூக்களும் பூத்துக் குலுங்குகின்றன. அவற்றைப் பறித்துத் தொடுத்து சுவாமி படங்களுக்குப் போடுவது அவருடைய தினசரி வழக்கம்.
`` எங்களுக்கு கலவை பக்கத்தில் புதுப்பாடி கிராமம்தான் பூர்விகம். என்னுடைய இரண்டு தாத்தாக்களுமே (அம்மாவின் அப்பா, அப்பா வின் அப்பா) ரொம்ப ஆசாரப்படி பூஜை பண்றவங்க. சாளக்ராமம் எல்லாம் வெச்சு பூஜித்தவங்க. எங்கள் கிராமத்தில் தும்பை நிறைய பூக்கும். அந்தப் பூக்கள் சிவனுக்கு விசேஷம். சின்ன வயசில், தாத்தா பூஜை பண்றப்போ, கூடை நிறைய தும்பைப்பூ பறிச்சிட்டு வந்து கொடுப்பேன்.
பக்தின்னா என்னன்னே தெரியாத அந்த வயசில், கோயிலைப் பார்த்தா கன்னத்தில் போட்டுக்கிறதைத் தவிர வேறெந்த ஈடுபாடும் இல்லைன்னு சொல்லலாம். எட்டு வயசில் ‘ஒளவையார்’ படத்தில் நடிச்சப்போ, பிள்ளையாரைப் பத்திப் பாடியதிலிருந்து, அவர் மேல ஈடுபாடு வந்தது. அதனாலேயோ என்னமோ, தாத்தா பூஜித்த பஞ்சலோகப் பிள்ளையார் என்கிட்டயே வந்துட்டார்.
வீட்டில் தினமும் பூஜை உண்டு. முன்னே எல்லாம் மாசாமாசம் சத்ய நாராயணா பூஜை பண்ணுவோம். என் அம்மா ஶ்ரீராஜராஜேஸ்வரி பக்தை. அதனால நானும் ஶ்ரீராஜராஜேஸ்வரி படம் வச்சிருக்கேன். அம்மா இருக்கிறப்போ கண்டிப்பா எல்லோரும் பூஜையில் வந்து உட்காரணும். ஆடிப் பூரம் சமயத்தில் அம்மன் கோயிலில் வளையல், மஞ்சள், குங்குமம் வச்சு சுமங்கலிகளுக்குத் தாம்பூலம் கொடுப்பாங்க அம்மா. அப்போ நாங்களும் கட்டாயம் இருக்கணும். ஷூட்டிங் இருந்தாலும், ‘அஞ்சு பேருக்காவது கொடுத்துட்டுப் போ’ன்னு அம்மா சொல்வாங்க. அவங்க அளவுக்கு இல்லேன்னாலும், ஓரளவுக்கு நானும் பூஜை வழிபாடுகள் பண்ணிட்டிருக்கேன்.
பூஜை அறை எனக்கு பளிச்சுனு இருக்கணும். பூஜை பண்ண முடியாத நேரங்களில், காலையில் பால், பழம் நைவேத்தியம் வெச்சு கும்பிட்டுடுவேன். வீட்டில் நிறைய பூ பூக்கும். நான் உள்ளூரில் இருந்தால் பூக்களைப் பறிச்சு தொடுத்து சாமிக்குப் போட்டுட்டுத்தான் மறுவேலை. நான் வெளியூர் போனாலும் அது மட்டும் தடைபடாது. வீட்டில் இருக்கறவங்க அதைச் செய்திடுவாங்க.’’
இயல்பான புன்னகையுடன் பேசினார் சச்சு.
``? நீங்க அடிக்கடி கோயில்களுக்குப் போறவங்கன்னு தெரியும். சென்னையில் நீங்க விரும்பிப் போகும் கோயில் எது?’’
``நாங்கள்லாம் மயிலாப்பூரிலேயே இருந்தவங்க. அதனால முண்டகக் கண்ணி அம்மன் கோயில் எனக்கு ரொம்பப் பிடிக்கும். தாத்தா - பாட்டி காலத்திலிருந்து நாங்க போற கோயில் அது. ரொம்ப சக்தியான அம்மன். கபாலீஸ்வரர் கோயிலுக் கும் மாங்காடு கோயிலுக்கும் அடிக்கடி போக விரும்புவேன்.
நவராத்திரி காலத்தில் கருமாரி அம்மன் கோயிலுக்குப் போவேன். மனசு சரியில்லாத போது, வீட்டி லேயே பூஜை அறையில் அமைதியா உட்கார்ந்துடுவேன்.
எங்களுக்குத் திருத்தணி முருகனும் திருப்பதி வேங்கடாசலபதியும் குலதெய்வங்கள். திருத்தணிக்குக் குடும்பத்தோடு அடிக்கடி போயிருக் கோம். ஆனால், திருப்பதிக்குப் போறதுக்கு அவர் உத்தரவு கொடுத் தால்தான் முடியும். திருப்பதியில் சகஸ்ரகலச அபிஷேகம், வெள்ளிக் கிழமை அபிஷேகம் எல்லாம் செய்ய எனக்கு பகவான் அனுக்கிரஹம் பண்ணியிருக்கார்!’’
``? சாமி சென்டிமென்ட் ஏதாவது..?’’
``உண்டு! எந்தவொரு புது விஷயம் ஆரம்பிக்கும் போதும் அல்லது எங்கேயாவது போறதாக இருந்தாலும், வாரன் ரோடு பிள்ளையாருக்கு ஒரு தேங்காய் உடைச்சுடுவேன். புதுக் காரியமோ, பயணமோ எந்தத் தடையும் இல்லாம வெற்றிகரமா நடக்கும். இது நீண்ட காலமாக இருக்கும் நம்பிக்கை!’’ என்று புன்னகைக்கிறார் சச்சு.
``?குரு வழிபாடு, ஆலயத் திருப்பணிகளில் பங்களிப்பு குறித்து..?’’
``காஞ்சி மகா பெரியவரை நேரில் தரிசித்து நமஸ்காரம் பண்ணிருக்கேன். நாங்க சங்கர மடத்தைச் சேர்ந்தவங்க. வேற எந்த குரு வழிபாடும் கிடையாது’’ என்றவர், தொடர்ந்து பேசினார்.
``புதுப்பாடி கிராமத்தில் எங்கள் முன்னோர் கட்டிய கோயில் இருக்கு. அருள்மிகு வைத்திய நாத சுவாமி - திரிபுரசுந்தரி அம்மன் கோயில். மகா பெரியவர் வந்து தியானம் செய்த இடம் அது. தாத்தாவுக்கு அப்புறம் யாரும் திருப்பணி பண்ணாமலேயே இருந்தது. நான் என்னால முடிந்த அளவுக்கு நிதி திரட்டிக் கொடுத்துத் திருப்பணிக்கு உதவினேன். நல்லபடியா கும்பாபிஷேகம் முடிஞ்சு, இப்போ எல்லா நல்ல நாள், பெரிய நாள்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடக்குது. அதேபோல் ஊரில் உள்ள பெருமாள் கோயிலையும் நல்லா பண்ணிட்டோம். அந்த வகையில் மனசுக்கு ரொம்ப திருப்தி!
இன்னொரு கோயில் பற்றியும் அவசியம் சொல்லணும். காஞ்சிபுரம் பக்கத்தில் திருப் புலிவனம்னு ஒரு கோயில் இருக்கு. பல்லவர் கட்டியது. மயிலை கபாலி கோயிலை விடப் பெரியது. அந்தக் கோயிலில் சிம்மத்தின் மேல குரு உட்கார்ந்திருப்பதால், ஜாதகத்தில் சிம்ம ராசியில் குரு இருக்கிறவங்களுக்கு எல்லாம் ரொம்ப விசேஷமான கோயில் அது. அந்தக் கோயில் கும்பாபிஷேகத்துக்கும் என்னால் முடிந்த அளவு நிதி திரட்டிக் கொடுத்தேன்.
அதேபோல், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர் செயலாளராகப் பதவி வகித்தபோது, அங்கு சிறியளவில் ஒரு விநாயகர் கோயில் அமைத்தேன். இன்று அந்த விநாயகர் ரொம்ப பிரபலமாயிட்டார். ஆண்டவன் அருளால் இந்தப் பிறவியில் இந்தத் திருப்பணிகள் செய்யும் பாக்கியம் கிடைச்சிருக்கு. அதுவே போதும்’’ என்று கரம் கூப்பினார்.

``உங்களைச் சிலிர்க்க வைத்த இறை அனுபவம்?’’
``நாம் நினைக்கும் விஷயங்களை எல்லாம் ரொம்ப அற்புதமா ஸ்வாமி நடத்தி வைக்கிறாரே... அப்படி நடந்த ஒண்ணொண்ணுமே சிலிர்ப்பானதுதான்.
ஜெயலலிதாம்மா எனக்கு ரொம்ப க்ளோஸ்; நல்ல தோழி. ஆனால் அவங்ககிட்ட நான் எதுவுமே கேட்டதில்லை. அவங்களாகக் கூப்பிட்டுப் பதவி கொடுத்தபோது, அதைக் கடவுள் செயல்னுதான் நினைச்சேன். வாழ்க்கையில் நிறைய சவால்களைத் தனியாக ஜெயிச்சு வந்திருக்கேன். எந்தச் சமயத்திலும் பயந்ததில்லை. ‘நீ இருக்க. பார்த்துக்குவ!’ன்னு சொல்லிட்டுத்தான் ஒவ்வொரு காரியத்திலும் இறங்குவேன். அந்த நம்பிக்கை பொய்த்ததே இல்லை!
மறக்க முடியாத அனுபவம் ஒண்ணு இருக்கு. என் அனுபவம் என்பதைவிட, என் அம்மாவின் இறை நம்பிக்கையை நிரூபித்த அனுபவம்னு சொல்லலாம்.
1960-ம் வருஷம்னு நினைக்கிறேன். அப்போ நானும் எங்க அக்காவும் மேடை நிகழ்ச்சிகளில் பரதம் ஆடிட்டிருந்தோம். கோவையில் நிதி வசூலுக்கான ஏதோ ஒரு நிகழ்ச்சிக்காக எங்களை அழைச்சிருந்தாங்க. நாங்களும் வர்றதா அம்மா வாக்குக் கொடுத்துட்டாங்க.
ஆனால் சரியா அந்த நேரத்தில் எனக்கு அம்மை போட்டுடுச்சு. விழாக் குழுவினருக்கு அம்மா போனில் விஷயத்தைச் சொன்னாங்க. ஆனா அவங்க நம்பலை; கோபத்தில் சத்தம் போட ஆரம்பிச்சுட்டாங்க. ‘இந்த சினிமாக்காரங்களே இப்படித்தான்’னு ஒரு மாதிரியா பேசினதும் அம்மாவுக்குப் பொறுத்துக்க முடியலை.
எனக்குத் தலைக்கு தண்ணியை விட்டு, விறுவிறுன்னு முண்டகக்கண்ணி அம்மன் கோயிலுக்கு என்னைக் கூட்டிட்டுப் போனாங்க. விபூதியை என்மேல விசிறி விட்டு, ‘தாயே. உன்னை நம்பிக் குழந்தையை அழைச்சுக்கிட்டுப் போறேன். நீ இருக்க பார்த்துக் குவ!’ன்னு அம்மனிடம் சொல்லிட்டு, அதே வேகத்தில் என்னைக் கூட்டிட்டு கோவைக்குக் கிளம்பிட்டாங்க.
நிகழ்ச்சி அமைப்பாளார்கள் ஸ்டேஷ னில் என்னைப் பார்த்ததும் ஆடிப் போய்ட்டாங்க. ‘உண்மை தெரியாம தப்பா பேசிட்டோம்’னு பதறி, அம்மாவிடம் வருத்தப்பட்டாங்க. ஆனாலும் அம்மா, ‘சினிமாக் காரங்கன்னா பொய் சொல்ல மாட்டோம். கடமையும் வார்த்தையும் எங்களுக்கும் முக்கியம்’னு சொல்லிட்டு, அந்த ஆத்தா மேல பாரத்தைப் போட்டுட்டு என்னை ஆடச் சொன்னாங்க. நிகழ்ச்சியில் நான் நல்ல விதமாக ஆடினேன். 60 வருஷங்கள் ஆனாலும் மறக்க முடியாத அற்புதம் அது!’’ பரவசத்தில் உருகியிருந்தது அவர் குரல்.
தெய்வ அனுக்கிரஹத்தைப் பரிபூரணமாகப் பெற்றவர் அம்மா நீங்கள். இதைவிட வேறு என்ன வேண்டும்!